“நாளைக்கு நாமளும் அப்படித் தான் இருக்கணும் பட்டே” சுண்டு விரலால், அவள் முகத்தில் விளையாடிய முடிகளைக் காதுக்குப் பின் தள்ளி விட்டு, காதில் கிசுகிசுத்தான்.
ராகவி சிலிர்த்து, சிரித்துக் கொண்டே, “நான் இங்க வரப் போறேன்னு, உங்களுக்கு எப்படித் தெரியும்? ராகவன் சொல்லி இருக்க மாட்டானே?” என்றவள், அவனை முறைத்துக் கொண்டே, “அப்போ உங்க காதலி தான் சொன்னானா?” கேட்டாள்.
“இல்லை” என்று தலையசைத்தான்.
“அப்புறம் எப்படித் தெரியும்?” என்று யோசித்தவள்,
“யோவ், போலீஸ். அவன் போனை ஹேக் பண்ணிட்டீங்களா?” அதிர்ச்சியுடன் கேட்டாள்.
சிரித்துக் கொண்டே, “அடுத்து அதைத் தான் செய்து இருப்பேன். ஆனா, அதுக்கு முன்னாடி, சுஹாசினி எங்க இருக்கீங்க, எப்படி இருக்கீங்க, அடுத்து எங்கப் போகப் போறீங்க, எல்லாத்தையும் சொல்லிட்டா” என்றான்.
அவன் சொன்னதையும் கேட்டதும், மீன் குஞ்சை போல வாயை திறந்து, திறந்து மூடினாள் ராகவி.
“சுஹா, சுஹா சொன்னாளா?” மெல்லிய அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“ம்ம், என்னை மிரட்டி, சத்தியம் வாங்கி, ஒரு வழியாக்கி தான் கொடுத்தா. என்னையே அப்படி மிரட்டுறா” என்று அவன் சொல்லவும் அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
நொடியில் முகத்தைக் கடினமாக்கி கொண்டு, “அவளே நாங்க இங்க இருக்கோம்னு சொல்லி, உங்களை இங்க வர வச்சு இருக்கா.
ஆனா, ரூம் ராகவ் தான் போட்டான். நம்ம ஹனிமூன் வந்தது இந்த இடம்னு பிளான் பண்ணி செய்து இருக்காங்க. முதல் கல்யாண நாள் வரப் போறது யோசிச்சு.. கூட்டுக் களவாணிங்க. மலர், சுஹா, ராகவ் இதுங்க மூனும் சேர்ந்து பிளான் பண்ணி இருக்குதுங்க” பொய் கோபத்துடன் பல்லைக் கடித்தாள். சத்தமாகச் சிரித்தான் உதய்.
“இதுல மேடம் என்ன நடிப்பு. உங்க மேல கோபம் மாதிரியும், நான் உங்ககிட்ட பேசக் கூடாதுன்னு… இந்தச் சுஹாக்கு, இருக்கு. நல்லா.. கொடுக்கணும்”
“அது, என் மேல நிச்சயம் கோபம் இருந்து இருக்கும் பட்டே. என்னைத் திட்டி, மிரட்டினா சொன்னேனே.”
“ம்ம், ஆனாலும், உலக மகா நடிப்பு அவளுக்கு. என்னை உங்க கூடப் பேசக் கூடாதுன்னு அப்படி மிரட்டினா. உங்களைப் பார்க்கும் போதெல்லாம் முறைச்சா. அப்பாடா, இந்தச் சுஹா…”
“அவளுக்கு நிஜமா உன் மேல அக்கறை பட்டே”
“அது எனக்குத் தெரியும்” சிரித்துக் கொண்டே சொன்னாள் ராகவி.
மெல்ல ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியிட்டாள்.
இதுவரை பேசினது எல்லாம் அவர்களுக்கானது. இனி பேச வேண்டியவை அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் உறவுகளைப் பற்றி… அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ, எது எதெல்லாம் தேவை என்பதை இப்போது அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
மெல்ல, “உதய்” என்று அழைத்தாள்.
அத்தனை நேரம் இருந்த இலகுத் தன்மை மறைய, தீவிரமான முகத்துடன் அவளைப் பார்த்தான் உதய்.
“ஒரு குடும்பத்தில் ஒரு பிரச்சினைனா, அதுல நாலு பேர் நாலு விதமா அட்வைஸ் சொல்லுவாங்க. ஆனா, நமக்கு எது சரின்னு படுதோ அதைத் தானே, நாம எடுத்துக்க முடியும்?” அழுத்தமாகக் கேட்டாள்.
“நீ என்ன முடிவு எடுத்தாலும், எனக்கு ஓகே தான் பட்டே” கண் மூடி, அவளிடம் மொத்தமாகத் தன்னை ஒப்புக் கொடுத்தான் உதய்.
அவள் இதழ்கள் மெல்ல மலர்ந்தது. அவள் கையை எடுத்து, தன் கைகளுக்குள் பொதிந்து வைத்துக் கொண்டான் உதய்.
“சொல்லு பட்டே” என்றான்.
“எல்லோரும் அவங்க, அவங்க பார்வையில் பிரச்சனைக்குத் தீர்வு சொல்றாங்க. பிரபா அத்தான், பிரியதர்ஷினி அக்காக்குக் கவுன்சலிங் கொடுத்தது போல, அப்பாக்கும் கொடுத்தா சரி ஆகிடுவார்னு நினைக்கிறதை நான் தப்புனு சொல்ல மாட்டேன். ஆனா, அவரைப் பொறுத்தவரை அது சரி. ஒருவேளை உங்க அப்பாக்கு நிஜமா மனதில் பாதிப்பு இருந்து.. இருக்குது தான். அதில் இருந்து அவர் மீண்டு வந்தா சந்தோசம் தான். ஆனா… ஆனா, என்னால அவரை மன்னிக்க… நோ வே, உதய். என்னால முடியாது” என்றாள் தலையை இட வலமாக அசைத்து,
“அதே போல ராகவ். அவன் ஒரு டாக்டரா சொல்றது சரியா கூட இருக்கலாம். அவன் எல்லாத்தையும் மெடிக்கல் டெர்மில் பார்க்கறான். நாம தும்மினா, இருமினா கூட அதுக்கு ஒரு மெடிக்கல் டெர்ம் சொல்லி, மருந்து எழுதி கொடுத்துடுவான். என் வாழ்க்கைக்காக, நம்ம வாழ்க்கைக்காக, அவன் மாமா சரியாகனும்னு, அதுக்கு ஒரு மெடிக்கல் டெர்ம் வச்சு ட்ரீட்மென்ட் கொடுக்கறது போலத் தான் எனக்குப் படுது” என்றவள்,
“நல்லவேளை மேல அவன் அனஸ்தீசியா தான் படிக்கப் போறான். ஒருவேளை சைக்காலஜி எடுத்தான்னு மட்டும் வைங்க. நம்ம ரெண்டு பேர் தான் அவனோட முதல் கேஸ் ஆகி இருப்போம். கப்புள் கவுன்சிலிங் கொடுக்கறேன்னு நம்மை முதல் பேஷண்ட் ஆக்கியிருப்பான்” என்று அவள் சொன்ன விதத்தில், தலையைப் பின்னுக்கு இழுத்துச் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான் உதய்.
“உண்மை தான் பட்டே” என்று சிரித்துக் கொண்டே, அவள் சொன்னதை அவனும் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டியிருந்தது.
“பிரபா அத்தான், ராகவ், ரெண்டு பேரும் சொல்றது அவங்களுக்கு சரியா இருக்கலாம். ஆனா, என்னால அதை ஏத்துக்க முடியல உதய்”
ஒன்றும் சொல்லாமல், அவள் முகம் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து அவளை மேலே பேச ஊக்கினான் உதய்.
“பழி தீர்த்துக் கொள்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால், அது அர்த்தமற்றது.
இது எப்பவோ நீங்க சொன்ன புத்தக மேற்கோள் தான். மாமா பண்ண மாதிரியே நானும், உங்களுக்காகப் பழி வாங்க கிளம்பினா, அதுல ஒரு நியாயம் நிச்சயம் இருக்கும். என் உதய்காக, என் குழந்தைகளுக்காகனு, நியாயமான காரணம் இருக்கும்.
ஆனா, நான் அதை அர்த்தமற்றதா தான் பார்க்கறேன்.
வாழ்ந்து காட்டுதலை விட, ஆகச் சிறந்த பழி வாங்குதல் என்ன இருந்திட முடியும் சொல்லுங்க. அவருக்கு முன்னாடி, உங்க கூடச் சந்தோசமா பல வருஷம் வாழ்ந்து காட்டுவேன். ஆப்டர் ஆல், நம்ம நிம்மதி, நம்ம சந்தோசம், நம்ம கையில தானே இருக்கு? அவர் யார் அதைத் தட்டிப் பறிக்க?”
“எஸ், நம்ம சந்தோசம், நம்ம கையில தான் இருக்கு பட்டே.” அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான் உதய்.
“யசோதா அத்தை, அவங்க இன்னசென்ட்டா கூட இருக்கலாம். காவ்யா உங்க அப்பா சொல்லி செய்திருக்கலாம். ஆனா, காவ்யாக்கு நான் செய்தது உங்க மேல இருக்க அன்புல. ஆனா, இனியும் செய்வேனா தெரியல உதய். அன்னைக்கு இதே பிரேக்னென்சி ஹார்மோன்ஸ் தான் அவளுக்குச் சாதகமா யோசிக்க வச்சது. ஆனா, இன்னைக்கு அதே ஹார்மோன்ஸ் தான், அவ மேலே அப்படி ஒரு கோபத்தைத் தூண்டி விடுது. ஒரு அம்மாவா, அத்தை அன்னைக்கு அவளைக் கண்டிச்சு இருக்கணும். சரியா கேட்டு இருக்கணும்” சொல்லிக் கொண்டே போனவள், சட்டெனப் பேச்சை நிறுத்தினாள்.
“அது எதுக்கு, இப்போ தேவையில்லாத பேச்சு. நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் உதய். என்னால உங்க அப்பாவை இன்னைக்கு நிச்சயமாக மன்னிக்க முடியாது. ஒருவேளை நாளைக்கு என் மனசு மாறலாம். ஆனா, இன்னைக்கு என்னால முடியாது உதய்.
நீங்க, குழந்தைங்க.. உங்க மூனு பேர் சார்பிலும் எனக்கு அவர் மேல அவ்வளவு கோபம் இருக்கு. அந்தக் கோபம் போகப் பல நாள் ஆகலாம். சில வருஷங்கள் ஆகலாம். சினிமா மாதிரி ஒரே காட்சியில் என்னால அவரை மன்னிக்க முடியாது உதய். பிளீஸ், டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ.
அது வரைக்கும்….” அவள் தயங்கி, தயங்கி இழுக்க,
“நாம உங்க வீட்ல இருப்போம் பட்டே” பட்டென்று சொன்னான் அவன்.
“எங்க வீட்ல வந்து இருக்க, உங்களுக்கு ஒன்னும்…” அவள் சொல்லி முடிக்கும் முன் இடைப் புகுந்தான் அவன்.