அவர்களுக்குள்ளும் பல குழப்ப அலைகள் அடித்துக் கொண்டேயிருந்தது. ஆனால், அதை எல்லாம் காட்டிலும் காதல் அலை பெரிதாக எழுந்து மற்றதை பின்னுக்குத் தள்ளியது.
“உதய்…” மெல்ல அவனைச் சுரண்டினாள் ராகவி.
“என்ன பட்டே..?” அவளை மேலும் நெருக்கமாக இழுத்துக் கேட்டான் அவன்.
“என் ரூமில் இருந்து, சுஹா கிட்ட கேட்டு என் பேக் வாங்கிட்டு வாங்களேன். என் டிரஸ் எல்லாம் அதுல தான் இருக்கு. எவ்வளவு நேரம் இப்படியே இருப்பேன்” என்று கேட்டவளை தலை முதல் கால் வரை நிதானமாகப் பார்வையால் வருடினான்.
அவனது டி-ஷர்ட்டை அணிந்திருந்தாள். அது அவளின் தொடையைத் தொட்டுக் கொண்டிருக்க, கண் சிமிட்டி நீண்டதொரு விசிலடித்தான்.
“என் டி-ஷர்ட் என்னை விட உனக்குத் தான் ரொம்ப சரியா பொருந்தி, அழகா இருக்கு பட்டே. அதனால, இப்படியே இருப்பியாம்” அவள் கன்னம் பற்றிக் கொஞ்சினான்.
“உதய், வெளில போக வேணாமா?”
“வேணாமே. இன்னைக்கு நம்ம கல்யாண நாள் பட்டே. இப்படியே கொண்டாடுவோம்” அவளைத் தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டு கிசுகிசுத்தான்.
“ம்ப்ச், உதய்…” சிணுங்கினாள்.
“ஓகே, ஓகே. கண்ணை மூடு. நான் ரெண்டே நிமிஷத்தில் வரேன்” என்றவனை, இழுத்து தன் பக்கத்தில் மீண்டும் அமர்த்த முயன்றாள் ராகவி.
அவள் கைகளில் சிக்காமல் பட்டென்று நகர்ந்து, “கண்ணை மூடு, பட்டே. நோ, சீட்டிங்” என்றான் அழுத்தமாக.
“ஓகே” கண்களை மூடினாள் ராகவி.
மூன்றாம் நிமிடம், அவள் நெற்றியில் அழுத்தமாக உதடு பதித்து, “ஹேப்பி அனிவெர்சரி பட்டே” என்று வாழ்த்தி, அவள் விரல்களைக் கண்களில் இருந்து பிரித்து, கைகளில் பரிசு காகிதம் சுற்றப்பட்ட நீண்ட பெட்டியை வைத்தான்.
“வாவ் உதய், தேங்க்ஸ். கேடி போலீஸ். எல்லாம் முன்னாடியே பிளான் பண்ணி வாங்கிட்டு வந்தீங்களா?” முகம் நிறைத்த புன்னகையுடன் கேட்டாள் ராகவி. அவள் கண்களில் மின்னிய நட்சத்திரங்களை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.
“உதய்…” கைப் பிடித்து உலுக்கினாள்.
“முன்னாடி ட்ரிப் பிளான் பண்ணும் போதே வாங்கினேன். அனிவெர்சரிக்கு கொடுக்க” அவளின் விரலோடு, விரல் கோர்த்துச் சொன்னான்.
“பிரிச்சு பாரு, பட்டே” மென்மையாகச் சொன்னான்.
பதட்டமும், ஆர்வமுமாகக் கை நடுங்க, பெட்டியை சுற்றியிருந்த வண்ண காகிதத்தைப் பிரித்தாள். அவளை விட, ஆர்வமாய் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் உதய்.
பெட்டியை திறந்தாள். இதழ்கள் இன்ப அதிர்ச்சியில் பிரிய, விழிகள் விரிய திறந்து கொண்டது. “வாவ்” தன்னிச்சையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
மெல்ல பரிசை கைகளில் ஏந்தியவள், கண்கள் மின்ன கணவன் முகம் பார்த்து சிரித்தாள்.
“உதய், அழகா இருக்கு” மகிழ்ச்சியில் முகம் மலர சொன்னாள்.
உள்ளே மென்ரோஜா வண்ண, மென்மையான லினன் சேலை இருந்தது. அதற்குப் பொருத்தமாக ரோஜா நிற கற்கள் பதித்த கழுத்தை ஓட்டிய ஆரமும், அதே போல ஜிமுக்கி என ஒரே செட்டாக இருந்தது. கூடவே கண்ணாடி வளையல்கள்.
இந்தக் கண்ணாடி வளையல்கள் பற்றின அவனது மயக்கம் தான் அவளுக்குத் தெரியுமே. அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, கண் சிமிட்டி சிரித்தான் உதய்.
இம்முறை வெள்ளியில் மெல்லிய கொலுசு. அதில் முத்தும் இருந்தது.
“இப்போ சத்தம் வேணும் போல இருக்கு, பட்டே” கிசுகிசுத்து அவள் முகத்தைச் சேலையின் நிறத்திற்கு மாற்றினான்.
“உதய்..” சிணுங்கினாள்.
“பிடிச்சிருக்கா பட்டே?” ஒற்றை விரலால் அவள் முகம் நிமிர்த்திக் கேட்டான்.
“ரொம்ப ரொம்ப அழகா இருக்கு உதய். தேங்க்ஸ், தேங்க்ஸ். ஆனா, உங்களுக்குக் கொடுக்க என்கிட்ட எதுவும் இல்லையே?” உதடு பிதுக்கினாள்.
அவன் பார்வை அவளில் பதிய, “கேடி போலீஸ், நான் போய்ச் சேலையைக் கட்டிட்டு வரேன்” பட்டென்று அவனிடம் இருந்து விலகி ஓடினாள்.
ஆனாலும், அவன் சிரிப்பு பின்னே துரத்தியது.
“எனி ஹெல்ப் பட்டே?” வேண்டுமென்றே சீண்டினான்.
“கையைக் கட்டிட்டு உட்காருங்க, போதும்” உள்ளிருந்து பதில் குரல் கொடுத்தாள் ராகவி. சத்தமாகச் சிரித்துக் கொண்டான் உதய்.
ஒரு மணி நேரம் கழித்து ராகவன் மற்றும் தோழிகளின் முன் போய் நின்றார்கள் இருவரும்.
ராகவன் வேகமாக எழுந்து ஓடி வந்து இருவரின் கரத்தை அழுத்தமாக பற்றி, “கங்கிராட்ஸ்” என்றான்.
“தேங்க்ஸ் ராகவ்” என்றாள். மெலிதாகப் புன்னகைத்தான் உதய்.
சுஹாசினி, பனிமலர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மீண்டும் திரும்பி தோழியைப் பார்த்தனர். புதுச் சேலையில், அதற்குப் பொருத்தமான நகையில், கர்ப்பிணிக்கே உரிய பொலிவுடன், மிக அழகாக, ஜொலித்துக் கொண்டு நின்றவளை பார்த்து, கேலியாக உதடு சுளித்துக் கண்ணடித்தனர்.
ராகவி சிரிப்புடன் திரும்பி கணவனின் முகம் பார்த்தாள். அவன் முகத்தில் அப்பட்டமான மகிழ்ச்சியின் ரேகைகள்.
தோழிகள் இருவரும் அவளின் பக்கத்தில் வந்து நின்று, அவள் கரம் பற்றி, “உன்னை இப்படிப் பார்க்க, அவ்வளவு சந்தோசமா இருக்கு ரா” என்றாள் சுஹாசினி.
“ஐ ஆம் ஹேப்பி ஃபார் யூ ரா” தோளோடு சேர்த்து அணைத்தாள் மலர்.
இருவரும் ஒன்றாக உதயின் பக்கம் திரும்பி, “கங்கிராட்ஸ் அண்ணா” என்றனர்.
“நான் உங்க ரெண்டு பேருக்கும் தான் நிறைய நிறைய நன்றி சொல்லணும் மா. நீங்க ரெண்டு பேரும் இல்லனா, இவளை யாரு இப்படி நல்லா பார்த்துப்பா, தேங்க்ஸ் மா” நெகிழ்ந்த குரலில் சொன்னான்.
அங்கிருந்த ஐந்து பேரின் முகமும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
அவர்கள் மங்களூர் சிட்டி செல்வதாகச் சொல்லி சென்று விட, தம்பதிகள் இருவரும் தங்களின் ஜாகைக்குச் சென்றனர். அது தான், நீச்சல் குளம். அங்கே இருந்த அவர்களின் நீள்இருக்கை.
நீச்சல் குளத்தை ஓட்டிய இருக்கையில் எப்போதும் போல அமர்ந்தார்கள். ஆனால், இம்முறை ஒரே இருக்கையில், ஒட்டிக் கொண்டு அமர்ந்தார்கள்.
அவன் தோள் சாய்ந்து கொண்டாள் ராகவி.
“இந்த ஐடியா எப்படி வந்தது உதய்? என்கிட்ட வந்து பேச?” மெல்லக் கேட்டாள்.
“உங்க ஆயா, ஐயா கொடுத்தது தான்” என்றான், சிரித்துக் கொண்டே,
“என்ன?” என்று அவள் அலற,
“அச்சோ, அவங்க என்கிட்ட எதுவும் சொல்லலை பட்டே. ஆடி மாசம் உங்க வீட்ல இருந்தேனே, அப்போ ஒருநாள் அவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ சண்டை போல, உங்க ஆயா, உங்க ஐயா கிட்ட பேசாம மூஞ்சி தூக்கி வச்சுட்டு இருந்தாங்க. அப்போ டைனிங் டேபிள்ல நானும் இருந்தேன். உங்க ஐயா, ஒரு கதை கேளுங்க மாப்பிள்ளைன்னு ஆரம்பிச்சு, அவங்க எப்படி முதல்ல பார்த்தாங்க, எப்படிப் பேசினாங்க. எப்படிக் கல்யாணம் நடந்ததுன்னு சொல்லிட்டே போனார்.
கொஞ்ச நேரத்தில முகம் சிவந்து, இடுப்புல கையை வச்சுட்டு வந்து அவர் முன்னாடி நின்னாங்க உங்க ஆயா. அப்புறம் என்ன ரெண்டு பேருக்கும் ஒரே சிரிப்பு தான். அவங்க பண்ணது அவ்வளவு அழகா இருந்தது” ரசனையுடன் சொன்னான் உதய்.
“அவங்க எப்பவும் அப்படித் தான்” சொன்னாள் ராகவி.