அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனைத் தொடர்ந்து ஒலித்த அழைப்பு மணியோசை கலைக்க, மெல்ல புரண்டு படுக்க முயன்றான். கழுத்தை சுற்றியிருந்த மெல்லிய கரமும், மார்பில் புதைந்திருந்த முகமும் அவனை நகர விடவில்லை. சிறு குழந்தை போல் அவன் மேல் படர்ந்து கிடந்த மனைவியின் முகத்தை, கண்களைத் தாழ்த்தி பார்த்தான். அவள் முகம் மறைத்த முடிக் கற்றைகளைத் தன் சுண்டு விரலால் காதுக்குப் பின் தள்ளி விட்டான்.
உறக்க கலக்கமும், அவன் வாசமுமாக இருந்தவள், தொடர்ந்து ஒலித்த அழைப்பு மணி சத்தத்தில், நெளிந்து மேலும் அவனை இறுக்கினாள். அவளைப் பொறுமையாக ரசிக்க விடாமல் தொல்லை செய்த அழைப்பு மணியை மனதினுள் திட்டுக் கொண்டு, மனைவியின் உறக்கம் கலையாமல் அவளது தலையைத் தலையணைக்கு மாற்றி விட்டு, கதவை திறக்க எழுந்து போனான் உதய்.
கதவை திறந்ததும் உதய் கண்டது, ஒரு கையால் இரு கண்களையும் மூடியபடி வெளியில் நின்றிருந்த ராகவனைத் தான்.
“ஹேப்பி வெட்டிங் அனிவர்சரி அக்கா அண்ட் மாமா” என்று கத்தினான்.
“கண்ணைத் திறந்து பாரு டா. உங்க அக்கா கூட இப்படி வெட்கப்பட மாட்டா” சிரித்துக் கொண்டே சொன்னான். உதய் அவசரத்தில் சட்டை அணியாமல் சென்று கதவை திறந்திருக்க, அதற்குத் தான் அப்படி ஒரு நடிப்பை கொடுத்துக் கொண்டிருந்தான் ராகவன்.
“தேங்க்ஸ் ஃபார் தே விஷ்ஷஸ் ராகவ். அவ தூங்கறா. எழுந்ததும் வர்றோம். நீ அவ ரூமில் இரு.” என்றவன்,
“ஆமா, எப்போ வந்த நீ?” விசாரித்தான்.
“இப்ப தான் மாமா, நேரா உங்க ரூமுக்கு தான் வரேன்.” என்ற ராகவன், “சரி, நான் போய்க் குளிச்சு கிளம்பி, அப்புறமா உங்களைப் பார்க்க வரேன்” என்று விட்டு, ராகவியின் அறையை நோக்கி நடந்தான்.
அறைக்குள் வந்த உதய், படுக்கையில் அமர்ந்து, குனிந்து மனைவியின் முகத்தைக் கைகளில் அள்ளினான். அவள் நெற்றியில் செல்லமாக முட்டி, “திருமணநாள் வாழ்த்துகள் பட்டே” கிசுகிசுத்தான்.
அதில் உறக்கம் கலைய, மெல்ல விழிகளைப் பிரித்த ராகவி, கணவனையும் அவன் தலைக்குப் பின் தெரிந்த கடலையும் மாறி மாறிப் பார்த்தாள்.
இடையில் இருந்த கண்ணாடி சுவர் அவள் கண்களுக்குப் புலப்படவே இல்லை. கடலின் முன் கட்டில் போட்டுப் படுத்திருப்பது போலிருந்தது. லேசாக விலகி இருந்த தீரைச்சீலையின் பின்னே அழகிய சித்திரமாக வானமும், கடலும், பக்கத்தில் கணவனுமாக இருந்த காட்சி அவள் மனதை கொள்ளைக் கொண்டது.
மெல்ல இதழ் பிரித்துப் புன்னகைத்து, “உங்களுக்கும், திருமணநாள் வாழ்த்துகள் உதய்” என்றாள்.
ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படியே இருந்தனர். அவள் முகத்தைப் பற்றியிருந்த அவன் கரங்களில் அழுத்தம் கூடிக் கொண்டே போனது.
இருவருக்கும் சிரிப்பு வரும் போலிருந்தது, சட்டென்று ஒன்றாக, சத்தமாகச் சிரிக்கத் தொடங்கியிருந்தனர்.
“சாரி..”
“சாரி..” ஒன்று போல மன்னிப்பையும் கேட்டனர். அதற்கும் சிரித்தனர்.
“அன்னைக்கு என்னைப் பார்த்து, என்ன சொன்ன பட்டே நீ? “சார்” ஹெல்ப் பண்ணாருன்னு தானே சுஹாசினி கிட்ட சொன்ன? ம்ம்? நான், உனக்குச் சாரா? சார்?” பொய்க் கோபத்துடன் உதய் கேட்க,
“நீங்க மட்டும்? என்னைப் பார்த்து, “நீங்க” ஓகேவா தானே கேட்டீங்க? அடி எதுவும் படலையே ராகவி தானே கேட்டு இருக்கணும்? அதோட நிக்காம, என்னைப் பார்த்து, பேர் என்னனு வேற கேட்கறீங்க. அதுவும் மேம் சொல்லி கூப்பிட்டு. அப்புறமும் சும்மா இருப்போமா நாங்க..” நாக்கை துருத்தி, கண் சிமிட்டி கேட்டாள் ராகவி.
பொய் கோபத்தைக் கூட, இழுத்து பிடிக்க முடியவில்லை அவனால். சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
“நீங்க தான் தொடங்கி வச்சீங்க. எனக்கு இருந்த கோபத்துக்கு உங்களை யாரோ தெரியாத ஆள் மாதிரி கண்டுக்காம போறதா தான் இருந்தேன். ஆனா, இப்படிப் புது ஆள் மாதிரி பேச கூட நல்லா தான் இருந்தது. அதான், அதையே கன்ட்டினியூ பண்ணேன்” என்றாள் குறும்பாகப் புன்னகைத்து,
அவள் முகத்தை இழுத்து, தன் நெற்றியோடு பதித்தவன், “என்னைப் பார்த்த, உன் பார்வையே சொல்லுச்சு. எடுத்ததும், யார் நீன்னு கேட்பன்னு. அதான், நான் அப்படி ஒரு டெக்னிக்கை ஃபாலோ பண்ணேன்.” தயக்கத்துடன் இழுத்தான்.
“மைண்ட் ரீடர் போலீஸ். நிஜமா அப்படிக் கேட்கணும்னு தான் இருந்தேன். நான் கீழ விழப் போகும் போது, நீங்க கையைப் பிடிக்கவும், கையை எடுடான்னு சொல்ல தான் இருந்தேன். ஆனா..”
“டா வா? ஆனாலும், எனக்கு இவ்ளோ மரியாதை, நீ தரக் கூடாது பட்டே”
“மத்த நேரம் டா சொன்னா மட்டும் பிடிக்குது” என்றவளின் இதழ்களை, பட்டென்று இரு விரலால் மூடினான்.
உடல் குலுங்க சிரித்துக் கொண்டே, “ஐயோ, சோதிக்காத பட்டே” முணுமுணுத்தான்.
“வெட்கப்பட்டா அழகா இருக்கீங்க உதய்” ஒற்றைக் கண் அடித்துச் சொன்னாள் ராகவி.
“ஆனா, நீ வெட்கப்பட மாட்டேங்கறியே” பொய்யாகச் சலித்துக் கொண்டான்.
“என்னை வெட்கப்பட வைக்கறது, உங்க கைல தான் இருக்குப் போலீஸ்” என்றவளை மறுநொடியே, அவளின் காதோரம் கிசுகிசுத்து வெற்றிகரமாக வெட்கப்பட வைத்திருந்தான்.
அறையின் கண்ணாடி சுவரை ஒட்டியிருந்த காஃபி டேபிளின் முன் அமர்ந்து இருவரும் காலை உணவை உண்டு கொண்டிருந்தனர்.
“ஹனிமூன் சூட். அதுவும், நாம போன முறை வந்ததே. சேட்டை உங்களுக்கு” அறையைச் சுற்றி பார்வையை ஒட்டியபடி சொன்னாள் ராகவி.
“நீயில்லாமா இந்த ரூம்குள்ள வரவே பிடிக்கல. அவ்வளவு கொடுமையா இருந்தது பட்டே” அவன் குரலில் இருந்த கனம், அவளைக் கலங்க வைத்து, மனம் இளக வைத்தது.
“உன்னைப் பக்கத்திலேயே வச்சுட்டு, யாரோ மாதிரி பேச அவ்வளவு கொடுமையா இருந்தது. அதுல தெரியாம உன் மேல என் கைப் பட்டா, சண்டைக்கு வர்ற, ஒரு வார்த்தை சொன்னா முறைக்கற, என்னை அவ்வளவு கேலி பண்ணி, கலாய்ச்சு தள்ற.. “கல்யாணத்தை நிறுத்த சொன்னேன்” இதை மட்டும் வம்புக்குன்னு என்னைக் கோபப்படுத்த, பத்து, பதினைஞ்சு டைம் சொல்லி இருப்ப.. அப்பல்லாம் வந்தது பாரு ஒரு…” அவள் சட்டென்று கண்களைச் சுருக்கி அவனைப் பார்க்க,
“உன் தாலியை வெளியில எடுத்து, உனக்கே காமிக்கணும் போல இருந்தது” என்று அவன் சொல்லவும் சிரித்தாள் ராகவி.
“ப்ளடி போலீஸ் சொல்ற, கேடி போலீஸ் சொல்ற. இன்னும் எத்தனை, எத்தனை. என்ன அப்பப்போ கொஞ்சம், கொஞ்சம்.. கருணை காட்டி, உனக்கு என் மேல இருந்த காதலை சொன்னியா, அதுல சமாதானமாகிட்டேன்” சிறு புன்னகையுடன் சொன்னான்.
அவன் பேச்சை வேண்டுமென்றே கவனிக்காதது போல உணவில் கவனமாகக் காட்டிக் கொண்டு, சக்கரை பொங்கலை அவள் வாயில் போட்டுக் கொள்ள, மறுநொடி அந்தப் பொங்கலை விழுங்கி இருந்தான் உதய்.
“உதய்….”
“சக்கரை பொங்கல், ஓவர் சுவீட்டா இருக்கு பட்டே” என்று கண்ணடித்தான் அவன். சிரிப்பை அடக்கி, அவனை முறைத்தாள் ராகவி.
“என் பட்டு இல்ல. கொஞ்சம் கோபப்படாம, என் பேச்சை கேளு பட்டே” கெஞ்சினான்.
அவன் பக்கமாகத் திரும்பி, நிமிர்ந்து அவனைப் பார்த்து,
“தேங்க்ஸ் உதய். ஒருவேளை நீங்க இங்க வராம போய் இருந்தா, உங்ககிட்ட பேசாம இருந்திருந்தா, நமக்குள்ள நடந்த அத்தனை பிரச்சனைகளையும் மனசு விட்டு, உங்ககிட்ட சொல்லாம இருந்திருந்தா, நான் இன்னைக்கு என்ன முடிவு எடுத்திருப்பேன்னு எனக்குத் தெரியல உதய்.
அன்னைக்கு முதல் நாள் உங்களைப் பார்த்ததும், உங்களைக் கோபப்படுத்த சொன்னேனே, பிரிவு, டைவோர்ஸ். அந்தத் தப்பான முடிவை கூடக் கோபத்தில் இந்நேரம் எடுத்து இருப்பேன்னு நினைக்கறேன்.”
ஆதூரமாக அவளின் தலைக் கோதி விட்டான் அவன். புரிதலோடு அவளைப் பார்த்தான்.
“ஆனா, இப்போ, இந்த நொடி உங்க மேல கோபத்தை விடக் காதல் தான் அதிகமாக இருக்கு உதய். அந்தக் காதல், என் கோபத்தை இல்லாம பண்ணிடும் தானே?” விழி விரித்துக் கேட்டவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் உதய்.
“கண்டிப்பா பட்டே, என் காதலும் சேர்ந்து, இனி உன் கோபத்தை ஒன்னுமில்லாம பண்ணிடும். அப்படியும் உனக்குக் கோபம் குறையலைனா, எப்பவும் போல எனக்குப் பனிஷ்மென்ட் கொடு வாங்கிக்கறேன், பட்டே” என்றவனை, மலர்ந்த முகத்துடன் பார்த்தாள் ராகவி.
“ஐயோ, இப்பவே பிளான் பண்ண ஆரம்பிச்சுட்ட போல” என்று அவன் பயந்து கொண்டே கேட்க, ராகவி சத்தமாகச் சிரித்தாள்.
காலை உணவை முடித்து விட்டு, நெருக்கமாக அமர்ந்து அலையடித்துக் கொண்டிருந்த கடலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.