உதய ராகம் – 20 (3)

“இன்னும் எத்தனை வருஷம், அவங்க இறப்பை ஏத்துக்க முடியாம இருக்கப் போறீங்க?

அழுங்க. வாய் விட்டு கதறி அழுங்க. எத்தனை வயசானா என்ன? துக்கம், இழப்பு எல்லோருக்கும் ஒன்னு தானே? கத்தி அழுங்க. அன்னைக்கு அழ முடியலைன்னா என்ன? இன்னைக்குச் சேர்த்து வச்சு அழுங்க.

அவ போனதை என்னால தாங்கிக்க முடியலைனு அழுங்க. அவ இல்லாத இந்த உலகத்தில் என்னால வாழ முடியலனு கதறுங்க. நாங்க, இங்க நிக்கிற எல்லோருமே உங்களை நேசிக்கறவங்க தான். நீங்க ராஜாத்தியை நேசிச்ச அளவுக்கு இல்லைனாலும், இங்க இருக்க எல்லோருக்கும் உங்க மேல அன்பு இருக்கு, அளவு கடந்த பாசம் இருக்கு. அப்பாவா, மாமாவா, கணவனா ஒவ்வொருத்தரும் உங்களை ஒவ்வொரு விதமாக நேசிக்கிறோம்.

நீங்க கதறி அழுகிறதால, மனம் விட்டு பேசுறதால, இங்க யாரும் உங்களை வெறுக்கப் போறதில்லை. அழுங்க. உங்களை, நீங்க செய்ததை, பேசினதை, மறக்க தயாரா தான் இருக்கோம்.

உங்களால ராஜாத்தியை நேசிச்ச அளவு இந்த உலகத்தில, யாரையும் நேசிக்க முடியலனு ஒத்துக்கோங்க. அதுல அசிங்கப்பட, அவமானப்பட ஒன்னுமே இல்ல.

இங்க யாரும் உங்களை அதுக்காக எதுவும் சொல்லப் போறதில்ல. அழுங்க, அந்தத் துக்கத்தை இன்னும் மனசுல போட்டு வச்சு அழுத்தி, உங்களை மட்டும் இல்ல, எங்க எல்லோரையும் கஷ்டப்படுத்தாதீங்க. ஒருமுறை கதறி அழுதுடுங்க. சரியா போய்டும்”

யசோதா அவரின் கையைப் பிடித்து உலுக்கினார்.

யசோதாவின் பேச்சு பாறையாய் இறுகி இருந்த அவரது மனதின் ஒரு பகுதியை அசைத்துப் பார்த்திருக்க, பொத்தென்று தரையில் அமர்ந்தார்.

அவருக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்தார் யசோதா.

அவர் முகத்தைப் பார்த்ததும் வெடித்து, கதறி அழுதார் சிதம்பரம்.

“என்னால அவளைக் காப்பாத்த முடியல. என்னால அவளைப் பத்திரமா பார்த்துக்க முடியல. அந்தக் குற்ற உணர்ச்சியை.. பழியை மகன் மேல போட்டு.. இத்தனை வருஷம், இப்படியே….” சொல்லி, சொல்லி அழுதார்.

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் இறந்த மனைவிக்காக, அன்று உடைந்து, கதறி அழுதார் சோமசுந்தரம்.

“அவ எப்படி, என்னைத் தனியா விட்டுட்டுப் போகலாம் யசோ. வயித்துல புள்ளையோட… போனாலே… அவ இல்லாத இந்த உலகத்தில வாழவே வெறுத்து போகுதே யசோ. என் சொந்த இரத்தத்தைக் கூட என்னால அன்பா பார்க்க முடியல. நான் என்ன மனுஷன்… ஐயோ, யசோ… என்ன காரியம் செய்துட்டேன் யசோ.. எப்படிப் பேசிட்டேன்..ஐயோ…” தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

உதய் எழுந்து அறைக்குச் சென்று விட, யசோதா, பிரபாகரன், காவ்யா, விஜி அவருடன் அமர்ந்திருந்தார்கள்.

அன்று நடந்ததைச் சொல்லி முடித்தான் பிரபாகரன்.

“அப்பா, உதய் கிட்ட மன்னிப்பு கேட்டார் ராகவி”

என்றதில் மீண்டும் அதிர்ந்தாள் ராகவி.

“ஆமா, காலைல உங்க வீட்டுக்கு உதய் கிளம்பும் போது, ராஜான்னு கூப்பிட்டு நிறுத்தி பேசினார். அம்மா அவனை அப்படித் தான் கூப்பிடுவாங்க.

“ராஜா, நில்லு” அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றான் உதய்.

“என்னால தான் என் ராஜாத்தி போனா….” பேச விடாமல் அழுகை முந்திக் கொண்டு வர, அவரின் பக்கத்தில் வந்து கைப் பிடித்து நின்றாள் விஜி.

“என் ராஜாத்தியை நான் தான்.. இல்ல.. அவளுக்கு விதிச்சது. அவ்ளோ தான். என்னால அவளைப் பத்திரமா பார்த்துக்க முடியல. இந்நேரம் அவ இங்க இருந்திருந்தா இப்படி எதுவும் நடந்து இருக்காது.

என் தப்புக்கு இத்தனை வருஷம் உன்னைப் பழிச்சுட்டேன்‌. நீ அப்போ குழந்தை. உங்க அம்மாவை காப்பாத்த முடியாம போனது என்னோட தப்பு. நீயும் அம்மாவுக்காக ஏங்கி இருப்ப. அந்நேரம் நானும் உன்னைக் கொடுமைப் படுத்தி…” வாய் மூடி உடல் குலுங்க அழுதார்.

“அவளை நினைக்கும் போதெல்லாம் கோபம் வருது. அதை உன் மேல திருப்பறேன். என்னால என்னைக் கன்ட்ரோல் பண்ண முடியல.

இனி.. இனி.. அவ இல்லாததை ஏத்துக்கறேன்.

ஆனா, நான் உன் மேல வச்ச கோபம் உடனே போகுமா தெரியல. அந்த வெறுப்பு.. அது மனசுல இருந்து உடனேயும் மறையாது. ஆனா, இனி முன்ன மாதிரி நடந்துக்க மாட்டேன் பா. முயற்சி பண்றேன். என்னை நம்பு” அப்படினு சொல்லி அவன் கையைப் பிடிச்சார் ராகவி மா.”

குரல் உடைய சொன்னான் பிரபாகரன்.

ராகவிக்குத் தான் கேட்பதை நம்புவது அத்தனை கடினமாக இருந்தது. கண் முன் கண்டது வேறாக இருக்க, காதில் விழுவதை நம்ப முடியாது திணறினாள். ஓரிரவில் எப்படி மாறினார்? தன் சுயரூபம் வெளியில் தெரிந்ததில் மாற வேண்டிய கட்டாயமா?

அவர் திருந்தினார், திருந்தவில்லை என்பதைக் காட்டிலும், கணவனுக்காகச் சுயநலமாக மகிழ்ந்தது அவள் மனது.

இனி பழி சொல் இல்லாமல், குற்ற உணர்ச்சியில்லாமல் நிம்மதியாக இருப்பானே என்று ஆசுவாசமாக இருந்தது அவளுக்கு.

“ராகவி…”

“சொல்லுங்க, அத்தான்”

“அப்பாவை… அப்பாவை… ட்ரீட்மென்ட் கூட்டிட்டு போறோம். ராகவன் வேலை செய்யற கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்குத் தான். அது தானே மனநலத்துக்குப் பெயர் போனது. ஒரு சிட்டிங் பார்த்திட்டு வந்துட்டோம். அம்மாவையும் டாக்டர் கிட்ட காட்டி இருக்கு.

இத்தனை நடந்து இருக்கு. நான் எப்படிக் கவனிக்காம விட்டேன்.

என்ன புள்ளை வளர்த்தேன். என் வீட்டுக்கு வந்த ரெண்டு மருமகளும் நிம்மதியா இல்ல. நான் எல்லாம் என்ன மனுஷி. என் பொண்ணு இவ்வளவு மோசமாகப் போய்ட்டா.. இவர் பேச்சை கேட்டு… இவர் சொன்னதை எல்லாம் அப்படியே நம்பினேன். இத்தனை வருஷம் கூடவே இருந்தும் இவருக்குள்ள இப்படி ஒரு ஆள் இருக்கறது தெரியாம.. நான், என்ன குடும்பம் நடத்தினேன்னு ஒரே அழுகை, புலம்பல்.

ராகவன் தான் அவங்களையும் கவுன்சலிங் கூட்டிட்டு வர சொன்னான். டாக்டர் கிட்ட காட்டி இருக்கு. ம்ப்ச், அடுத்து என்ன நடக்கும்னு தெரியல. நம்ம வீடு, ஒரு வருஷத்துக்கு முன்னாடி வரை இப்படி இருந்தது இல்ல ராகவி. “

அந்தக் கடைசி வார்த்தையில் கோபத்தோடு இடைப் புகுந்தாள் ராகவி.

“அப்போ.. அப்போ, நான் வந்து தான் அவரோட கோபத்தைத் தூண்டி விட்டேன்னு சொல்றீங்களா?”

“இல்ல மா. உதய் மேல இருந்த கோபம், வெறுப்பு அவரை இத்தனையும் செய்யத் தூண்டினதுன்னு டாக்டர் பார்க்க போகும் போது அப்பாவே சொன்னார். அது கூட எப்படி இவன் என்னை மீறி போய்டலாம்னு…”

“என்னமோ சொல்றீங்க. எனக்கு எதையும் நம்புற மாதிரி இல்ல. இத்தனை வருஷம் சத்தமில்லாமல் அவரை மட்டும் கொடுமை பண்ணி இருக்கார்.. இப்போ.. வெளில தெரிஞ்சுடுச்சு.”

கசப்புடன் சொன்னாள் ராகவி.

“மன்னிச்சிடு ராகவி. அப்பாக்காக நான்…”

“வேணாம் அத்தான். நான் வைக்கறேன்” அலைபேசியை அணைத்து ஓரமாக வைத்தாள்.

மெல்ல பிரபாகரனின் வார்த்தைகளை அசைப் போட்டது மனது. அவளால் எதையும் நம்ப இயலவில்லை.

மாமியாருக்குத் தெரியாமல் மாமனார் அனைத்தையும் செய்தார் என்று வைத்துக் கொண்டால் கூட மாமியாரின் மேல் இப்போது பரிதாபம் வர மறுத்தது.

சிறிது நேரத்தில் மீண்டும் அலைபேசி அடிக்க, எரிச்சலுடன் அதைக் கையில் எடுத்தாள்.

error: Content is protected !!
Scroll to Top