உதய ராகம் – 20 (2)

மறுநாள் விடியலில் கதவை தட்டிய கணவனுக்குக் கதவை திறக்கவில்லை ராகவி.

அவனும் வெகு நேரம் கெஞ்சி, அதட்டி எனப் போராடி பார்த்து விட்டு, திரும்பிச் சென்று விட்டான்.

அன்று மாலையே தோழியோடு பெங்களூர் கிளம்பி விட்டாள் ராகவி.

“எனக்குத் தனியா இருந்து யோசிக்கணும். நீங்க எல்லோரும் உதய்கு சப்போர்ட்டா தான் பேசுறீங்க. எனக்கு என்ன பண்ணனு தெரியல. யோசிக்கணும். தெளிவா, சரியான முடிவு எடுக்கணும்…”

கண்ணதாசன், சிதம்பரம் இருவரும் அதற்குச் சம்மதிக்கவே இல்லை. யார் போக விட மாட்டார் என்று அவள் நினைத்தாளோ, அவர் தான், “போய் வா” என்றார். ஆம், விசாலாட்சி தான் போக அனுமதித்தார்.

“நல்ல முடிவா எடு செல்லம். வாழ்க்கை இன்னைக்கு ஒரு நாளில் முடியறது இல்ல. இன்னும் வரப் போற முப்பது, அம்பது வருஷத்துக்கும் சேர்த்து முடிவெடு. உன் மேல அன்பா இருக்கவங்களைக் கோபத்தால உதாசீனப்படுத்தாத. குழந்தைகளைப் பத்தி யோசி. உன்னைப் போலவே அவங்களும் குடும்பத்தில் வாழனும். அந்தக் குடும்பம் மாப்பிள்ளையும், நீயும் மட்டுமா இருந்தாலும், சரி தான். அதை மனசில வச்சுக்கோ.”

சொல்லிக் கொண்டே போனார் விசாலாட்சி. மௌனமாய்க் கேட்டுக் கொண்டாள் ராகவி.

இறுதியாய்,

“ராகவனைக் கூடக் கூட்டிட்டு போ” என்றார். ஆக, அவனையும் சேர்த்துக் கொண்டாள்.

சுஹாசினி, ராகவன் உடன் வர காரை அவளே ஒட்டிக் கொண்டு பெங்களூர் கிளம்பினர்.

காரை அதிவேகத்தில் செலுத்தும் போது மன அழுத்தமும், கோபமும் குறைவது போலிருந்தது அவளுக்கு.

ராகவன் எச்சரித்துக் கொண்டே வந்தான். கவனமாக, சாலையின் ஓரமாக அதே நேரம் வேகமாகச் செலுத்தினாள். அவள் மனம் சற்றே சரியானதும் ராகவன் வசம் போய் இருந்தது ஓட்டுநர் இருக்கை.

பெங்களூர் சென்று அங்குப் பனிமலரின் அபார்ட்மெண்ட்டில் இரவை கழித்து விட்டு, மறுநாள் சுஹாசினி கொடுத்த ஐடியாவின் படி அங்கிருந்து மங்களூர் சென்றனர்.

கதையைச் சொல்லி முடித்து விட்டு எச்சில் கூட்டி விழுங்கினாள் ராகவி.

அனைத்தையும் சொல்லி முடித்ததும் மனம் இறகை போல லேசாகி இருந்தது.

மனம் விட்டு பேச, மனப் பாரம் குறையும் என்பது இது தான் போல என்று நினைத்துக் கொண்டாள்.

பக்கத்து இருக்கையில் இருந்த ராஜாவை திரும்பிப் பார்த்தாள். அவன் உடல் மொழியே சரியில்லை. தொட்டால் வெடித்து விடுபவன் போல அமர்ந்திருந்தான். கண் இமைக்காமல் எதிரில் இருந்த நீச்சல் குளத்தை வெரித்திருந்தான்.

ராகவியின் அலைபேசி அழைத்தது.

“பேசுங்க” என்று விட்டு எழுந்து போனான் ராஜா.

பிரபாகரன் அழைத்துக் கொண்டிருந்தார், சிறிய தயக்கத்திற்குப் பின்னே அழைப்பை ஏற்றாள்.

“ராகவி மா, எப்படி இருக்க? என் மேலயும் கோபமா இருக்கியா?” என்று கேட்க, என்ன சொல்வாள் ராகவி.

இப்போது கணவனைத் தவிர யார் மேலும் அவளுக்குக் கோபம் பெரிதாக இல்லை தான். வானளவு அவன் மேலிருந்த கோபமும் இப்போது குறைந்து தரையைத் தொட்டிருந்தது.

“இல்ல, அத்தான். கோபம் எல்லாம் இல்ல. சொல்லுங்க” என்றாள்.

“அப்பா, உன்கிட்ட மன்னிப்பு கேட்க விருப்பப்பட்டார்.”

“என்ன?” கத்தினாள்.

“அன்னைக்கு நீ மயங்கினதும்…” நடந்ததைச் சொல்லத் தொடங்கினார் பிரபாகரன்.

மயங்கிய ராகவியை அங்கிருந்து தூக்கிக் கொண்டு போய் அறையில் படுக்க வைத்தான் உதய். ராகவனிடம் பேசி, அதிர்ச்சியினால் வந்த மயக்கமாகத் தான் இருக்கும் என்று உறுதிப்படுத்திக் கொண்டு, அவளுடன் விஜியை அமர வைத்து விட்டு கீழே சென்றான். ராகவி கண் விழித்து மீண்டும் உறங்கிப் போய் இருந்தாள்.

“இன்னும் என்னப்பா வேணும் உங்களுக்கு? நடந்தது எனக்கு நினைவில் கூட இல்லப்பா? என்னை வேணும்னா கொல்லு…”

உதயின் சட்டையைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தார் யசோதா. கணவனின் முன் வந்து நின்றார். சோமசுந்தரம் அவரைக் கண்களில் பயத்துடன் பார்த்தார்.

“இந்நேரம் உங்க ராஜாத்தி இருந்திருந்தா, தன் புள்ளைங்க உங்ககிட்ட படுற கொடுமையைப் பார்த்து உயிரோட செத்து போய் இருப்பாங்க. இது தான் நீங்க அவங்களுக்குக் கொடுக்க விரும்பறதா? பதில் சொல்லுங்க. அவங்க ராஜா குட்டி, ராஜா குட்டின்னு கொஞ்சி, கொண்டாடின ஒருத்தனை நீங்க வாழ்நாள் முழுக்க வெறுத்தீங்கன்னு தெரிஞ்சா அவங்க என்ன பண்ணுவாங்க யோசிச்சீங்களா? இன்னைக்கு நடந்ததை அவங்க நேர்ல பார்த்திருந்தா, இதைப் பார்த்து அவங்க சந்தோஷப் பட்டிருப்பாங்களா? யோசிங்க”

அவரின் ஒவ்வொரு வார்த்தையும் உறைந்து, ஸ்தம்பித்துப் போய் இருந்த அவரின் மனதில் மெல்ல இறங்க ஆரம்பித்தது.

ஒருகணம் கண்கள் அலைபாய, என்ன செய்து விட்டோம் என்று மெல்ல மெல்ல அவருக்குப் புரிபட, தான் செய்ததைத் தானே நம்ப முடியாதவராய் அனைவரின் முகத்தையும் ஒரு முறை கண்களால் தொட்டு விட்டு தலை குனிந்து நின்றார் சோமசுந்தரம்.

“ஏன் தலையைத் தொங்கப் போடுறீங்க. பேசுங்க, கொஞ்ச நேரம் முன்னாடி எவ்ளோ பேசினீங்க? சொந்த வீட்ல ஒருத்தருக்கு தெரியாம, இன்னொருத்தர் வாழ்க்கையில் எவ்வளவு விளையாடி இருக்கீங்க. இப்போ பேசுங்க.” கத்தினார். சோமசுந்தரம் சிலையாய் நின்றார்.

error: Content is protected !!
Scroll to Top