கார் அவள் கைகளில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. இரவு நேர போக்குவரத்து நெரிசலற்ற சாலை என்பதால் தப்பித்தாள் ராகவி.
அவள் கர்ப்பம் என்றதும், உதய் உடைந்து அழுதது நினைவில் வந்தது.
“இனி எனக்கு நீங்க இருக்கீங்க” என்று அவளையும், குழந்தைகளையும் குறிப்பிட்டது காதில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.
இப்போது அவளால் அவனது மனதை புரிந்து கொள்ள முடிந்தது. அவள் மேல் அவன் காட்டிய அதீத அன்பையும், உரிமை உணர்ச்சியையும் இப்போது தவறென எடுத்துக் கொள்ள இயலவில்லை.
“உன் பார்வையில் நான் கீழிறங்க விரும்பல”
அவள் எந்த ஒரு நிலையிலும் அவனைக் கீழாகப் பார்க்க மாட்டாள் என்பதை உதய் ஏன் புரிந்துக் கொள்ளவில்லை.
தன் குடும்பத்தை விட்டு கொடுக்காத சராசரி ஆண்மகனாகத் தான் நடந்து கொண்டிருக்கிறான்.
“இல்லை” என்றது அவன் வார்த்தைகள்.
“என் வீட்ல எனக்குக் கிடைக்காத அன்பு. உனக்குக் கிடைக்கணும்னு நினைச்சேன்”
அந்த வீட்டில் அனைவருமே அவளிடம் அன்பாகத் தான் இருந்தார்கள். சில சில தருணங்கள் தவிர…
இதோ, இன்று ஆவேசமாக அவளை இல்லாமல் ஆக்கப் போவதாகச் சொன்ன மாமனார் உட்பட.
மனதை அழுத்திய எண்ணங்களோடு வீடு வந்து சேர்ந்தாள்.
கேட்டை விரிய திறந்து வைத்து, அதில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் ராகவன். காரை அதனிடத்தில் நிறுத்தி விட்டு, இறங்கினாள்.
வீட்டில் அனைவரும் அவளுக்காகக் காத்திருப்பது தெரிந்தது.
“குட்டிமா, வாடா” என்று வந்து அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டார் விசாலாட்சி.
பேத்தியின் பக்கத்தில் வந்து தலைக் கோதி கொடுத்தார் கண்ணதாசன்.
சிதம்பரம் கையில் இருந்த ஜூஸை, கட்டாயப்படுத்தி மகளுக்குப் புகட்டி விட்டார். அவளுக்குக் கண்கள் கலங்கியது.
“அப்பா, நான்.. நான் அம்மாவை கொன்னதா நினைக்கிறீங்களா பா? நானா?” மகளின் வாயை அழுந்த மூடினார் சிதம்பரம்.
“அம்மாக்கு சேலை கால்ல பின்னிடுச்சு ராகவி. அவளால நீச்சல் அடிக்க முடியல. நானும், அங்கிருந்த இன்னும் சிலரும் உங்களைப் பிடிச்சு வெளில கொண்டு வந்துட்டு திரும்பி போனா. அம்மா.. இல்லடா. நானும் அதை எதிர்பார்க்கலை. இது தான் நடந்தது. இதுல உன் தப்பு எதுவும் இல்ல டா”
“கோபத்தில் நம்மை நோக்கி வீசப்படுற வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடக் கூடாது செல்லம்” சொன்னார் விசாலாட்சி.
மறுகணம் அனைவரையும் கேள்வியாகப் பார்த்தாள். அவள் விழிகள் ராகவனைத் தொட்ட போது எல்லாம் விளங்கியது.
“மாமா கால் பண்ணார் கா” சொன்னான் ராகவன்.
சிறு குழந்தை போல உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தாள்.
அவளைத் தன் மடி சாய்த்துக் கொண்டார் விசாலாட்சி. கவலை தோய்ந்த முகத்துடன் அவளைச் சூழ்ந்தனர் மற்றவர்கள்.
“எனக்குத் தெரியாம, என்கிட்ட மறைச்சு, வரதட்சணை கொடுத்து இருக்கீங்க. மாமா கல்யாணத்தை நிப்பாட்ட பார்த்து இருக்கார். உதய்கு என்னை விட அவங்க அப்பா, அவரோட குடும்பம் தான் முக்கியம். அவங்க மேல தான் அன்பு அவருக்கு. அவங்க அப்பா கிட்ட தன்னை நிரூபிக்கப் போராடி இருக்கார். நான் முக்கியமில்லை அவருக்கு. என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சுட்டார்” அழுகையில் திக்கிக் கொண்டே சொன்னாள்.
அவளைச் சிறிது நேரம் அழவும், புலம்பவும் விட்டனர். தானே ஓய்ந்து, நிமிர்ந்து அமர்ந்தவளின் முகம் பற்றி,
“இப்ப உன் கோபம் என்ன குட்டிமா?” கேட்டார் சிதம்பரம்.
“அவருக்கு நான் தானே எல்லாமா இருந்து இருக்கணும். என்னை விட வேற யாரும் எப்படி அவருக்கு முக்கியமா போகலாம்?”
“அப்போ மாமனார் பேசினதுக்கு நீ அழல?”
“ஆ… அதுக்கும்.. வந்து… எப்படி அவர் உதயை அப்படிப் பேசலாம்? பாசமே இல்ல” கோபத்துடன் சொன்னாள்.
“இப்பவும் மாப்பிள்ளைக்காகத் தானே பேசுற செல்லம்?” கேட்டார் விசாலாட்சி.
பதில் சொல்ல முடியாமல் திணறினாள் ராகவி.
“அப்பா கிட்ட தன்னை நிரூபிக்கப் போராடுறார்னு கோபமா? இல்ல, எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லாதது கோபமா?” மீண்டும் கேட்டார் விசாலாட்சி.
“என்கிட்ட சொல்லாதது தான். நான் தானே அவருக்கு எல்லாமா..” கை நீட்டி தடுத்த விசாலாட்சி.
“உங்க அப்பா, இதே போல உங்கம்மா மரணத்துக்கு உன்னைக் குற்றம் சொல்லி இருந்தா, என்ன பண்ணி இருப்ப?”
அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு தந்தையைத் திரும்பி பார்த்தாள் ராகவி.
“அவர் பின்னாடியே ஓடி, இல்லைனு புரிய வைக்க டிரை பண்ணி, அவரோட அன்பை திரும்பப் பெற முயற்சித்து இருப்ப. இல்லையா?” அவள் தலை மெல்ல ஆடியது.
“அதைத் தான் மாப்பிள்ளையும் செய்து இருக்கார்” என்றவர்,
“உனக்கு அப்பா முக்கியமா, உதய் முக்கியமா? உதய்காக அப்பாவை விட்டுக் கொடுத்துடுவியா? சொல்லு?”
பதிலில்லை அவளிடம். ஆனாலும், அவரது பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் முரண்டியது.
“எல்லோரும் சேர்ந்து எனக்கு எதிரா நிக்கிறீங்க. நான்.. நான்..” பேச்சுக்கு பதிலாக, அழுகை தான் வந்தது அவளுக்கு.
“புள்ளைத்தாச்சி இப்படி அழ கூடாது செல்லம். நாங்க எல்லோரும், எப்பவும், நீ நல்லா இருக்கணும்னு மட்டும் தான்டா நினைப்போம்.” என்றார்.
“நான், நான் என்ன பண்ணட்டும்? எனக்கு உதய் மேல கோபமா வருது ஆயா. என்கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருந்தா, இத்தனை பிரச்சனையும் வந்து இருக்காது, இல்ல..” கேவி அழுதாள்.
பேத்தியின் முதுகை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தார் கண்ணதாசன்.
அவர்களால் முடிந்த வரை பேசி அவளுக்கு நிலைமையைப் புரிய வைக்க முயன்றனர். அவர்களைப் பொறுத்தவரை அவள் நன்றாக வாழ வேண்டும். கணவன் மேல் இத்தனை அன்பை வைத்துக் கொண்டு, கர்ப்பமாக இருக்கும் போது பிரியக் கூடாது. மருமகன் நல்லவன். எல்லாம் சரி செய்து விடுவான். இது தான் அவர்களின் எண்ணமாக இருந்தது.
அவளுக்குத் தனக்குச் சாதகமாகப் பேச ஆள் தேடியது மனது.
அந்நேரம் அங்கு வந்த சுஹாசினியை இறுக கட்டிக் கொண்டாள்.
அன்றிரவு அழுது கொண்டே உறங்கி போனாள்.