உதய ராகம் – 19 (4)

“ரோஜா குட்டி, ரோஜா குட்டி.. நீ என்னை ஒன்னும் பண்ணல குட்டிமா” அவளின் அம்மாவின் குரல், காதில் கேட்பது போல இருந்தது.

“ஜாடிக்கேத்த மூடி தான். ரெண்டும் அம்மாவை கொன்னதுங்க. ரெண்டுக்கும் ரொம்பப் பொருத்தம் தான்னு நினைச்சு தான், உங்க வீட்ல திரும்பப் பேசி.. ஆனாலும்….” சட்டென்று உயர்ந்தது அவர் குரல். வீடு அதிர கத்தினார்.

“ஆனா, உனக்கும் இவனைப் பிடிச்சது. இவனும் ரொம்பச் சந்தோசமா இருந்தான். கூடாதே.. கூடாதே.. இவன் எப்படிச் சந்தோசமா இருக்கலாம்? என் பொண்டாட்டியை இல்லாம பண்ணவன். அதான் கல்யாணத்தை நிறுத்த முடிவு பண்ணேன்.

கல்யாணத்தன்னைக்கு, அஞ்சு மணிக்கு, அம்பது லட்சம் எடுத்து வச்சா தான் கல்யாணம் நடக்கும்னு சொன்னேன். ஆனா… உன் குடும்பம். உங்கப்பன் அறிவில்லாதவன். தன் பொண்டாட்டியை கொன்னவளுக்காக அம்பது லட்சத்தைத் தாலி கட்டும் முன்ன கொண்டு வந்து நீட்டுறான். அறிவு கெட்ட கழுதைங்க..”

“அப்பா…” கத்தினான் உதய்.

“ஓ, மாமனார் குடும்பத்தைச் சொன்னா கோபம் வருதோ.. போலீஸ், நீயெல்லாம் என் பொண்டாட்டியை கொன்னதுக்கு இந்நேரம் ஜெயில்ல இருக்கணும் டா..”

“அப்பா, என்னப்பா பேச்சு இது? நிறுத்துங்க பா?” கெஞ்சினான் பிரபாகரன்.

“என்னடா நிறுத்த சொல்ற? இவன் பொண்டாட்டி கிட்ட கார் கேட்டு வாங்கினான்னு என் மகளை மிரட்டி இருக்கான்டா. இனி நான் அண்ணியைத் தொல்லை பண்ண மாட்டேன்னு அழறா உன் தங்கச்சி…”

தன் மகள் என்று வரும் போது மட்டும் வலித்தது போல அவருக்கு.

“பளார்” என்று கேட்ட சத்தத்தில் தலையைத் திருப்பினாள் ராகவி.

யசோதா, தனது மகள் காவ்யாவை ஓங்கி அறைந்திருந்தார்.

“பாவி மகளே, உன்னை இப்படியா வளர்த்தேன் நான். அண்ணா, அண்ணி வாங்கிக் கொடுத்தாங்க. கிஃப்ட் மா, அப்படினு தானே என்கிட்ட சொன்ன. நான் ராகவி கிட்ட நன்றி எல்லாம் சொன்னேன் டி.. மருமக என்னை என்ன நினைச்சு இருப்பா. ஒரு வார்த்தை சொல்லலை அந்தப் பொண்ணு. அது தான்டி வளர்ப்பு. காசு, பணம் இருந்து என்ன? குணம் தான் முக்கியம். எனக்குத் தெரியாம இன்னும் என்ன எல்லாம் உங்கப்பா கூடச் சேர்ந்து செய்த நீ? சொல்லித் தொலை..”

மீண்டும் விழுந்தது ஒரு அறை.

வாங்கிய அறையில் கன்னம் பற்றிக் கொண்டு அழுதாள் காவ்யா. இதுவே வேறு நேரம் என்றால் ராகவி இளகி இருப்பாள். இன்று அதிர்ச்சியில் சுண்டு விரலை கூட அசைக்க இயலவில்லை அவளால்.

“ஏய், என் பொண்ணை ஏன் அடிக்கற? எல்லாம் இந்தக் கொலைகாரன்…”

“மாமா போதும். நிறுத்துங்க. அவர் குழந்தை அப்போ..”

கணவனுக்காகப் பரிந்து கொண்டு போனாள் ராகவி.

“சரி குழந்தை. ஆனா நீ? பதினஞ்சு வயசுல உங்க அம்மாவை சாகடிச்சு…”

“அப்பா…” நொடியில் அவர் முன் வந்து நின்றான் உதய்.

“இவளுக்காக, என்னை மிரட்டி காசை வாங்கிட்டு போய் ஐம்பது லட்சத்தைத் திருப்பிக் கொண்டு போய்.. உன் வீட்ல கொடுத்துட்டான். சும்மா விடுவேனா நான்? அதுக்கு அப்புறமும் உங்களை இங்க நிம்மதியா இருக்க விட்டுடுவேனா?”

இத்தனை வெறுப்பும் தங்களை நிம்மதியாக வாழ விடுமா? இவரை எப்படிக் கண்டுகொள்ளாமல் நான் இருந்தேன். பாம்பை போலப் பளபளவென்று வெளியில் காட்டிக் கொண்டு, உள்ளே அத்தனையும் நஞ்சு.

“என் பொண்டாட்டி இல்லாம…” அவர் மீண்டும் தொடங்க,

அவள் அதிர்ந்து போய் யசோதாவை பார்த்தாள். அந்த நேரத்திலும் அவருக்காகப் பாவப்பட்டது அவள் மனது. அவரும் கண்கள் வெளியில் வந்து விழுந்து விடும் போல, அதிர்ச்சியில் விழி விரித்துக் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“மாசமா இருந்தா அவ… பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டேன். இவனுங்க ரெண்டு பேரும் பசங்களா போய்ட்டானுங்க, என் ராஜாத்தியை போலப் பொண்ணு பொறக்கும்னு கனவு கண்டுட்டு இருந்தேன். ஆனா, இவன்.. இவன்… அவளை இல்லாம பண்ணிட்டான். என் கண் முன்னாடி இல்லாம இருந்தா கூடப் பரவாயில்ல. தினம் தினம் இவன் முகத்தில் முழிச்சு…. போன வருஷம் வரை ஏக்கத்தோடு என்னைப் பார்ப்பான். என்கிட்ட தன்னை நிரூபிக்கப் பார்ப்பான். ஆனா, நீ வந்ததும், அதுவும் போச்சு. உன் பிச்சைக்கார குடும்பம்…”

அவ்வளவு தான், ராகவியால் அதற்கு மேல் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை.

“இவரை, உங்க சொந்த மகனை, என்னை, என் குடும்பத்தைப் பத்தி பேச உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது மாமா” கண்களைத் துடைத்துக் கொண்டு, அழுத்தமாகச் சொன்னாள். குரலை உயர்த்தவில்லை, கத்தவில்லை. ஆனால், வார்த்தைகளைத் தெள்ள தெளிவாக உச்சரித்து அவர் முகம் பார்த்து சொன்னாள்.

அவளின் உள்மனம் எச்சரித்துக் கொண்டே இருந்தது. எதுவும் பேசாதே ராகவி. அவர் தெளிவான மனநிலையில் இல்லை. எதையும் பேசி தூண்டி விடாதே என்று. ஆனால், அவளால் அதற்கு மேல் அவர் கக்கிக் கொண்டிருக்கும் விஷத்தை தாங்க முடியும் என்று தோன்றவில்லை.

மொத்த வீடும் அவரின் கோபத்தைத் தூண்டி விடக் கூடாது என்று தான் அமைதிக் காக்கிறது என்பது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.

அவளை, அவள் குடும்பத்தை, கணவனை அவர் பேசிக் கொண்டே போவதை அவளால் அதற்கு மேல் அனுமதிக்க முடியாது என்றே தோன்றியது. அதனால் தான் பட்டென்று பதில் கொடுத்து விட்டாள். அதற்காக வருந்தவும் செய்தாள்.

“ஏய், யாரைப் பார்த்து, என்ன சொல்ற?” அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு வந்தார் அவர்.

படக்கென்று அவரின் கையைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தான் பிரபாகரன். உதய் சட்டென அவள் முன் வந்து கேடயமாக நின்றான்.

“நீயும் மாசமா தானே இருக்க, இன்னைக்கு உன்னைத் தள்ளி விட்டா, என்ன சொல்லுவ மருமகளே? கொலைகாரன்னு தானே? அப்போ உன் புருஷனும்” ஒரே எட்டில் அவரின் சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான் உதய்.

ராகவியின் கரங்கள் இரண்டும் அனிச்சையாக அவளின் வயிற்றில் பதிந்தது.

அவ்வளவு அதிர்ச்சியை ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள இயலாது தவித்தது அவள் மனம்.

‘தன்னை, குழந்தைகளைக் கொன்று விடுவேன் என்றா சொல்கிறார் இவர்? எப்படி மனம் வந்தது?’

“உன் பொண்டாட்டின்னா வலிக்குதாடா…” மாமனாரின் குரல், எங்கோ தொலைவில் இருந்து கேட்பது போல இருந்தது.

பயத்தில், பதட்டத்தில், அதிர்ச்சியில் உடல் வியர்த்து, கால்கள் வலுவிழந்து தொய்ந்து போக, கண்கள் இருண்டு, அதற்கு மேல் நிற்க இயலாமல் மயங்கி சரிந்தாள் ராகவி.

மெல்ல கண் விழித்தாள் ராகவி. படுக்கையில் இருப்பது தெரிந்தது.

பக்கத்தில் கண்கள் மூடி, முகத்தைக் கைகளில் தாங்கிக் கொண்டு கணவன் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும், நடந்தவை அனைத்தும் கண் முன் காட்சியாக ஓடியது.

கணவனைக் கண்ணசைக்காமல் பார்த்தாள்.

“சாரி, ராகவி” என்றான்.

பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் ராகவி.

“என்கிட்ட ஏன் சொல்லலை?” உணர்ச்சி துடைத்த குரலில் கேட்டாள்.

அவனிடம் பதிலில்லை. அவள் முகம் பார்த்தபடி மௌனமாய் அமர்ந்திருந்தான்.

“எவ்வளவு நடந்து இருக்கு. என்கிட்ட ஏன் சொல்லலை. மாமா பத்தி, உங்கம்மா பத்தி ஏன் சொல்லலை? நான் எல்லாத்தையும் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட சொன்னேன் இல்ல? எங்கம்மா ஆக்சிடென்ட், அதுல நானும் இருந்தேன் முதற்கொண்டு… ஆனா, நீங்க… ஏன் சொல்லலை?” எழுந்து நின்று அவன் முகம் பார்த்து அழுத்தமாகக் கேட்டாள் ராகவி.

உதய் அவளின் கண்களைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்து கொண்டான்.

அங்கே மெல்லிய ஏஸியின் ஒலி கூடத் துல்லியமாய்க் கேட்டது. அப்படி ஒரு அமைதி.

“உதய், பதில் சொல்லுங்க…”

மௌனமே பதிலாக வந்தது.

“உதய்…” மீண்டும் அழைத்தாள்.

“எனக்குத் தெரியல ராகவி. எதையும் உனக்குத் தெரியாம மறைக்க நான் என்னைக்குமே நினைக்கல. ஐ வான்டட் டு புரோடக்ட் யூ ஃப்ரம் ஆல் திஸ்”

“புல்ஷிட்..” என்றாள்.

“உன்னைப் பார்த்ததில் இருந்து உன்னை மட்டுமே உலகமா ஆக்கிக்கிட்டேன். உன் பார்வையில் நான் கீழிறங்க விரும்பல. உனக்குத் தெரியாம எல்லாத்தையும், எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்க விரும்பினேன். உன்னை என் குடும்பத்துக்குப் பிடிக்கணும்னு நினைச்சேன். எனக்குக் கிடைக்காத அன்பு, உனக்குக் கிடைக்கணும்னு ஆசப்பட்டேன். என் வேலையில், என்னால எதையும் சரியா செய்ய முடியல. சொதப்பிட்டேன், என் உலகமே நீ தான் ராகவி…”

“பொய்… பொய் சொல்றீங்க. உங்களுக்கு நான் தான் முக்கியம்னா என்கிட்ட உண்மைகளைச் சொல்லி இருக்கணும், நீங்க.”

“சொல்லனும்னு தான் ட்ரிப் பிளான் பண்ணேன்..”

“நவ் இட்ஸ் டூ லேட் உதய்” என்றாள் தோள்களை அலட்சியமாகக் குலுக்கி,

“ராகவி… பிளீஸ்… நீயாவது என்னைப் புரிஞ்சுக்கோ. நான் என்னைக்குமே காசு, பணம், பொருளை மதிச்சது இல்ல. மனுஷங்களைத் தான் பொக்கிஷமா பார்த்தேன். அப்பா, காவ்யா, விஜின்னு உனக்குத் தொல்லை கொடுக்கும் போது, அவங்களை நிதானமாகக் கையாளனும்னு நினைச்சேன். ஆனா, ஐ ஃபெயில்டு யூ.” உடைந்து போன குரலில் சொன்னான்.

“நான் எப்பவும் உங்ககிட்ட இது ஒன்னை தான் கேட்டேன் உதய். நான் தான் உங்க ஃபர்ஸ்ட் பிரையாரிட்டியா இருக்கணும்னு.. ஆனா, நீங்க அதை மதிக்கவேயில்ல” கோபம், வருத்தம், அழுகை என அனைத்தும் இருந்தது அவள் குரலில்.

“ராகவி பிளீஸ், ஐ ஆம் சாரி”

ராகவி தன் கைப் பையைத் தேடி எடுத்தாள். கார் சாவி, மொபைல் இருக்கிறதா என்று சரி பார்த்தாள். அறை வாயிலை நோக்கி நடந்தாள்.

பட்டென்று எழுந்து அவள் கையைப் பிடித்து, அவளைத் தடுத்தி நிறுத்தினான் உதய்.

“இப்ப என்ன நடந்திடுச்சுன்னு உங்க வீட்டுக்கு கிளம்பற நீ?”

கெஞ்சலும், சீறலுமாய் ஒலித்தது அவன் குரல்.

“இன்னும் என்ன நடக்கும்னு எதிர்பார்க்கறீங்க?” பதிலுக்குக் கத்தினாள்,

“ராகவி, ஐ லவ் யூ. டிரஸ்ட் மீ. நான் உன்னைப் பார்த்துப்பேன். அப்பா, அவர் சொன்னதை எல்லாம்….”

“நோ உதய். லவ் இஸ் அப் பவர்ஃபுல் புராமிஸ். அண்ட், நீங்க அந்தச் சத்தியத்தைக் காப்பாத்தலை. காதலை வெறும் சொல்லில் இல்ல, செயலில் காட்டணும். வார்த்தையில் இல்ல, வாழ்ந்து காட்டுறதில் தான் இருக்கு காதல். இது எதையுமே நீங்க சரியா செய்யலை. இனி, என் அன்பும், காதலும் உங்களுக்கு இல்ல. என்னைக்கு என்னை உங்க வாழ்க்கையில் முதல் இடத்தில் வைக்க முடியும்னு தோணுதோ, அன்னைக்குச் சேர்ந்து வாழுறதை பத்தி யோசிப்போம். இப்ப என்னைப் போக விடுங்க” இறுக பற்றியிருந்த அவனது கையை உதறி விட முயன்றாள்.

அவள் சிந்திய வார்த்தை சிதறல்களில் சிக்கி தவிக்கலானான் அவன்.

மனதின் வலியை கண்களில் காண்பித்து அவளைப் பார்த்தான்.

“நீ இல்லாம, என்னால வாழ முடியாது பட்டே. நான் இல்லாம நீ வாழ்ந்திடுவியா?” தொண்டையடைக்கக் கேட்டான்.

உணர்ச்சி மிகுதியில் அவளுக்கும் தொண்டை அடைத்து, வார்த்தைகள் வர மறுத்தது.

சற்று முன் வரை பிரிவு என்னும் முடிவை எடுப்போம் என்று அவள் நினைத்திருக்கவில்லை. ஆனால், இனி கணவனோடு, அவன் குடும்பத்தோடு ஒரே வீட்டில் இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அவர்கள் முகம் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. அப்பா, ஐயா, ஆயாவை தேடியது அவள் மனம்.

அவர்கள் எல்லோரையும் விட, அவளின் இரட்டை சகோதரன் ராகவனை அதிகம் தேடியது.

அப்பா, வீட்டுக்கு போய் விட வேண்டும் என்று அழுத்தி சொல்லியது அவள் மனம். மனதும், உடலும் பாதுகாப்பை தேடியது. அது இங்கில்லை என்று பயந்தது அவள் மனம்.

“நான் இல்லாம இருந்திடுவியா ராகவி? பட்டே..” மீண்டும் அழுத்திக் கேட்டான் உதய்.

“இவங்க தான் இனி, நமக்கு எல்லாம்னு நம்பின கையை உதர்றது தான் கஷ்டம் உதய். அவங்க இல்லாம வாழ்றது ஒன்னும் கஷ்டமான விஷயமில்ல…”

அவ்வளவு தான், கிளம்பி விட்டாள் ராகவி.

அவன் முன் காட்டிக் கொள்ளா விட்டாலும் கணவனுக்காக மனம் துடிக்கவே செய்தது. இதயம் கண்ணீராகக் கரைந்து வழிந்தது. அவனைக் கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்ல ஏங்கியது மனது. நாலு வயது உதய்காக இரக்கப்பட்டது மனது.

ஆனால், இப்போது அவளால் எதுவுமே முடியாது.

error: Content is protected !!
Scroll to Top