“சத்தியமா தெரியாது கா” என்ற விஜியின் வார்த்தைகள் இப்போது நினைவில் வந்தது. அதை உதயிடம் கேட்காமல் மறந்த தன் மடத்தனமும் அப்போது தான் உரைத்தது.
சுஹாசினி, பனிமலர் என்று அவர்களின் பிரச்சினை ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் வேலையில் மூழ்கி இருந்த உதய் சில மணி நேர உறக்கதிற்காகவும், குளித்து, உடை மாற்றிச் செல்லவுமே வீட்டிற்க்கு வந்தான். அப்படி இருக்கையில் அவளால் எப்படி இது குறித்துப் பேசி இருக்க முடியும்.
இப்படிச் சப்பைக் கட்டு கட்டும் தன் மனதையே நொந்தபடி கண்களைத் திறந்தாள் ராகவி.
எதிரே நின்று, அவளின் தோளை பற்றி உலுக்கிக் கொண்டிருந்தாள் காவ்யா.
“என்ன பண்ணுது அண்ணி? சாரி, நீங்க இப்படி இருக்கும் போது, நான் இதைப் பத்தி பேசி இருக்கக் கூடாது…” மன்னிப்பை வேண்டும் குரலில் பேசினாள் காவ்யா.
“அப்பா, ஒவ்வொரு டைமும் உங்களுக்குச் செலவு வைக்கச் சொன்ன போது, அது சரின்னு பட்டுச்சு. உங்களால தானே எங்க மாமியார் அப்படிக் கேட்கறாங்கன்னு. ஆனா, அப்புறமா யோசிக்கும் போது ரொம்பக் கஷ்டமாவும் இருந்தது. ஆனா, நான் பண்ணது தப்புன்னு, அன்னைக்கு அண்ணா வந்து திட்டும் போதே உணர்ந்துட்டேன்” கை நீட்டி அவளை மேலே பேச விடாமல் தடுத்தாள் ராகவி.
“உதய் திட்டி..??” கேள்வியை முழுதாகக் கூட அவளால் கேட்க முடியவில்லை.
“ஆமா, கார் கேட்டு வாங்கினதுக்குச் சத்தம் போட்டார். மெடிக்கல் மாதிரி எமர்ஜென்சி, பசங்களுக்கு ஏதாவது படிப்புச் செலவு. இது போலனா மட்டும் தான் காசு கேட்கணும். சேலை, கார் எல்லாம் இனி கேட்டது தெரிந்தா, பிச்சுடுவேன்னு மிரட்டினார். அதுவும் அண்ணாக்கு தெரியாம உங்களுக்குக் கால் பண்ணா கொன்னுடுவேன், சொன்னார்” அவள் குரலில் அழுகை எட்டிப் பார்த்தது.
ராகவி, மெல்ல அவளின் கைப் பிடித்து, “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல காவ்யா அண்ணி..” என்று அவள் தொடங்கும் போதே…
“என்னை என்ன வேணாலும் பண்ணிக்கோங்க. ஆனா, அவளை ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை தப்பா பேசினீங்க நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். இது தான் லிமிட் உங்களுக்கு.. இதுக்கு மேல என்னால…” என்ற உதயின் கத்தல் வீட்டையே நிறைத்துக் கொண்டிருந்தது.
“என்னடா பண்ணிடுவ? என்ன பண்ணுவ? உங்கம்மாவை கொன்ன மாதிரி என்னையும் கொன்னுடுவீயா?” மாமனாரின் குரலை விட அவர் சொன்ன செய்தியில் ராகவியின் இதயம், நொடியில் தொண்டைக்கு வந்து விட்டிருந்தது.
“அச்சோ அண்ணி. கீழ ஏதோ பிரச்சனை போல. அண்ணா குரல் போல…” ராகவியின் கையைப் பிடித்து இழுத்தாள் காவ்யா.
ஒவ்வொரு படியையையும், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் வெகு கவனமாக எடுத்து வைத்தாள் ராகவி. அவள் உடல் அவளின் வசத்தில் இல்லை. அப்படி ஒரு அதிர்ச்சி உடல் முழுவதையும் தாக்கி இருந்தது.
“அப்பா, என்ன பேசுறீங்க? அவனுக்கு அப்போ நாலு வயசு பா. குழந்தை அவன், அவன் மேல என்ன மாதிரி பழியைப் போடுறீங்க?” மாமனாரை அதட்டும் பிரபாகரனின் குரல் கேட்டது.
“நீ முதல்ல இவனுக்குத் துணையா நிக்குறதை நிறுத்து டா. உன் அம்மாவை கொன்னவன் இவன்.” பெருங்குரலில் கத்தினார் சோமசுந்தரம்.
அவளுக்குக் காதுகளை மூடிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
அவள் கடைசிப் படியில் கால் வைக்கும் போது, அவளைப் பார்த்து விட்டார், அவளின் மாமனார் சோமசுந்தரம்.
“இதோ, இதோ வர்றாங்களே மகாராணி. அவங்களை ஒரு வார்த்தை சொன்னேன்னு என்கிட்ட மல்லுக்கு நிக்கறான். ஆனா, இவன் என்ன பண்ணான்.. என் பொண்டாட்டியை, அஞ்சு மாச கருவை சுமந்துட்டு இருந்த என் ராஜாத்தியை இதே மாடி படிக்கட்டில் இருந்து….”
“அம்மா கால் தவறி கீழ விழுந்தாங்க பா. அதுக்கு அவனைச் சொல்றீங்க? இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதையே சொல்லிட்டு இருக்கப் போறீங்க?” பிரபாகரனின் அதட்டலை, அவர் கண்டு கொள்ளவேயில்லை.
“ஒரு இடத்தில நிக்காம, ஓடி.. அவளை ஓட வச்சு, இவனால தான் அன்னைக்கு என் பொண்டாட்டி போனா. இவனைக் கொன்னா அவ வந்திடுவான்னா, அதையும் செய்திருப்பேன் நான்…”
மளுக்கென்று கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறி சரசரவென்று ராகவியின் கன்னம் தொட்டது.
அதே ஹாலின் மற்றொரு பக்கம் நின்றிருந்த கணவனைப் பார்த்தாள். அவன் வார்த்து வைத்த இரும்பு சிலையைப் போல இறுக்கமாக நின்றிருந்தான்.
எத்தனை முயன்றும் அடக்க முடியாமல் கேவி விட்டாள் ராகவி.
சடக்கென்று தலையைத் திருப்பி அவளைப் பார்த்தார் சோமசுந்தரம்.
“ம்ம்” என்று நக்கல் சிரிப்பொன்றை உதிர்த்தார்.
“உன் அத்தை எப்படி இருப்பா தெரியுமா மருமகளே? ராஜாத்தி அவ. அவளைக் கொன்ன இவனுக்குப் பொண்ணு பார்க்க சொல்லி இந்த யசோதா கேட்கும் போது, நான் பார்த்த பொண்ணு எல்லாம் சாருக்கு பிடிக்கல.. பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட பொண்ணுங்களைத் தான், நான் தேடி பொறுக்கி அவனுக்குக் கொண்டு வந்தேன்.
ஆனா, ஒருத்தியை கூடத் திரும்பி பார்க்கல இவன். ஆனா, நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத, விரும்பாத உன்னைப் பார்த்துட்டு வந்து பேசி முடிங்கன்னு இவகிட்ட சொல்லி இருக்கான். ஹா, விட்டுடுவேனா? சொந்த கடை, வக்கீல் படிப்பு, சொத்து, அறிவு, அழகுன்னு எதுலயும் குறை இல்லாத உன்னை… இவனுக்கு… ம்ஹூம்.. கூடவே கூடாதுன்னு முடிவு பண்ணேன்”
‘இவர் மனதில் இத்தனை கசடு இருந்ததா? தான், தான் இவரைக் கண்டு கொள்ளவேயில்லையா? “ராகவி மா, காஃபி கொடு”, “ராகவி மா, நீ வாங்கித் தந்த இந்த வாட்ச் நல்லா இருக்கு”, “இன்னும் கொஞ்சம் குழம்பு விடு மா, நல்லா இருக்கு” என்று பேசியது எல்லாம் இவர் தானா? இல்லை, அவர் வேறு யாரோவா?’
நடப்பதை கிரகிக்க முடியாமல் அதிர்ச்சியில் திணறியது அவள் மனம். ஆனால், அவரோ பேசிக் கொண்டே போனார்.
“உங்க கல்யாண விஷயத்தில் அத்தனை குளறுபடி பண்ணேன். பயந்து நீங்களே நிறுத்துவீங்கன்னு எதிர்பார்த்தேன். அதே நேரம் இந்தக் கொலைகாரனுக்கு…”
அந்த வார்த்தையைக் கேட்கும் போது அவளுக்கு அத்தனை வலித்தது. அங்கிருந்து ஓடி விட வேண்டும் போலிருந்தது. கால்கள் வேர் முளைத்தது போல நகர மறுத்தது.
கணவனுக்குப் பக்கத்தில் சென்று விட மாட்டோமா என்று அவனைப் பார்க்க, அவனோ சிலை போல நின்று, அவனுக்கு எதிரில் இருந்த சுவரை வெறித்துக் கொண்டிருந்தான்.
“இவனுக்கு வெளியூரில் முக்கியமான வேலை வந்தது. தமிழ்நாட்டையே உலுக்கின கேஸ், ரகசியமா இவனை விசாரிக்கப் போட்டாங்க. கண்டிப்பா, உன் கூடப் பேச மாட்டான்னு. அதுக்கு நேரம் இருக்காதுன்னு, நான் நினைச்சது தான் நடந்தது. ம்ம், வேலை மயிரு அவ்ளோ முக்கியம். ஆனா, ஒரு நாள் வந்தான். ஏன் என்னை இப்படி உயிரோடு கொல்றீங்கன்னு கத்தினான்…” சொல்லிக் கொண்டிருந்த வேகத்திலேயே சிரித்தார், சத்தமாக.
அவளுக்கு உள்ளுக்குள் அத்தனையும் நடுங்கியது.
“உடனே வந்து உன்னைப் பேசி முடிச்சேன். இந்தப் பயலுக்குப் பயந்துட்டேன்னு நினைச்சு இருப்பான். ஹா… இந்த நாய் வர்றதுக்கு முன்னாடி தான்… நீயும்..” அவளை நோக்கி இரண்டு எட்டு எடுத்து வைத்தார். பெரு முயற்சி செய்து அசையாமல் நின்றாள் ராகவி. கால்கள் நடுங்கியது. ஆனாலும், அசையவில்லை அவள்.
“இவன் வர்றதுக்கு முன்னாடி தான், நீயும்.. உங்கம்மாவை கொன்னவன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.” அதைக் கேட்டதும் கண்களை இறுக மூடிக் கொண்டாள் ராகவி.