வெளியில் காவ்யா கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.
“சொல்லுங்க காவ்யா அண்ணி” என்றாள் ராகவி, அழுத்தமான நிதானத்துடன்,
“என்ன அண்ணி? கால் பண்ணா என்னனு கூடக் கேட்காம கட் பண்றீங்க?” என்று அவள் தயங்கி தயங்கி ஆரம்பிக்க,
அந்தத் தயக்கத்தை ஆச்சரியமாய்ப் பார்த்த ராகவி, “என்ன வேணும் அண்ணி?” என்றாள்.
“போன் பண்ணேன்.. நீங்க…” மீண்டும் அவள் அதையே தொடங்க,
ராகவிக்குக் கோபம் மெல்ல தன் இருப்பைக் காட்டத் துவங்கியது.
“எப்படியும் ஏதாவது கடையில உட்கார்ந்துட்டு என்னைக் கிளம்பி வரச் சொல்ல போறீங்க அண்ணி. அதான், எடுத்ததும் நான் பிஸின்னு உங்களுக்குப் புரிய வைக்கறதுக்காக அப்படிப் பண்ணேன். ஆனா, அப்படியும் புரியலை போலயே?” என்றாள் ராகவி.
“இல்ல அண்ணி, நான் உங்ககிட்ட பேச தான் கால் பண்ணேன். ஆனா, நீங்க பேசவே விடாம கட் பண்ணிட்டீங்க. நான் அதே பழைய காவ்யா தான். அப்போ என்கிட்ட எவ்ளோ பாசமா இருப்பீங்க. இப்போ மட்டும்…” கெஞ்சல் குரலில் அவள் பேசிக் கொண்டே போக, ராகவி அவளை விநோதமாய்ப் பார்த்தாள்.
‘இன்றைக்கு இவளுக்கு என்னவாயிற்று? திடீரென்று புது அவதாரம் எடுக்க முயல்கிறாள். எதுவும் பெரிதாகத் திட்டம் போடுகிறாளா?
இல்லை, இதை அனுமதிக்கக் கூடாது. இதை இப்படியே போக விடக் கூடாது. பணம் பெரிதல்ல, இவளுக்குக் கொஞ்சமாவது அண்ணன், அண்ணி மேல் பாசமும் இருக்க வேண்டும். அதற்கு இதை மேலும் வளர விடக் கூடாது’
ஒரு முடிவுடன் காவ்யாவை நேராகப் பார்த்த ராகவி,
“ஒரு விஷயம் ஞாபகத்தில் வச்சுக்கோங்க காவ்யா அண்ணி. உங்களுக்கு எது வேணும்னாலும் நீங்க நேரா வந்து, என்கிட்டயோ, உங்க அண்ணா கிட்டயோ நேரடியா கேட்கலாம். எங்களால முடிந்தா வாங்கித் தர போறோம். ஆனா, அதை விட்டுட்டு, இப்படி அசிங்கமா இந்தக் குறுக்கு வழியை எல்லாம் யூஸ் பண்ணி… உங்களுக்கே அசிங்கமா இல்ல? சொந்த அண்ணா, வைஃப் கிட்ட அண்ணி கிட்ட ஏமாத்தி வாங்க உங்களுக்குக் கூசலையா?…” என்று சொல்லிக் கொண்டே போன ராகவியை, முடிக்க விடவில்லை காவ்யா.
“நான், ஏன் அசிங்கப்படனும்? எனக்கு ஏன் கூசனும்? இல்ல தெரியாம தான் கேட்கறேன், அண்ணா கிட்ட ஏன் கேட்கணும்? நான் எதுக்குப் போய் உதய் அண்ணா கிட்ட கேட்கணும்? உன்னால தானே எனக்குப் பிரச்சனை? அப்போ உன்கிட்ட தானே கேட்பாங்க?” மரியாதை மறைந்திருந்தது. அவமானத்தில் முகம் சிவக்க அவளை முறைத்தாள் ராகவி.
காவ்யா சொல்ல வருவது புரியவும் இல்லை.
“என்ன உளறிட்டு…”
“ஓ, ஜவுளி கடை ஒனரம்மா. நாங்க பேசுறது, உங்களுக்கு உளர்ற மாதிரி தான் இருக்கும்.” என்று நக்கலாகச் சொன்ன காவ்யா, அடுத்துச் சொன்னதில் ராகவி அதிர்ந்து, நிலையாக நிற்க முடியாமல் பின்னால் இரண்டு எட்டுத் தன்னிச்சையாக வைத்து, சுவரில் சாய்ந்து நின்றாள்.
“நீ வரதட்சணை கொடுத்ததால தானே, இப்போ எங்க மாமியார் என்னை வரதட்சணை கேட்டு தொல்லை பண்ணுறாங்க. உன்கிட்ட பணம் இருக்குன்னா அதை நீயே வச்சுக்கணும். பெருமை காட்டனுமா… காட்டிக்கோ. ஆனா, அதுனால எனக்குப் பிரச்சனை ஆகும் போது, அதுக்குக் காரணமான உன்னைத் தானே கேட்க முடியும்?” தீர்க்கமாகக் கேட்ட காவ்யாவை, மலங்க மலங்க விழித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி.
அவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. வரதட்சணை கொடுத்தார்களா? யார் கொடுத்தார்கள்? யாருக்கு கொடுத்தார்கள்? உதயிடமா? ஆனால்…. ஆனால், கணவன் வாங்கியிருக்க வாய்ப்பேயில்லையே.
அவள் அறிந்த அவளின் கணவன் லஞ்சம் என்ற சொல்லை, வாய் வார்த்தையாகச் சொன்னால் கூட முகத்தைச் சுளிப்பவன் ஆயிற்றே.
‘என்னைச் சுற்றி என்ன நடக்கிறது?’ அவளுக்குப் பதட்டத்தில் உடல் வியர்த்து, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. கண்களை இறுக மூடித் திறந்து, காவ்யாவை கண்களில் கேள்வியுடன் பார்த்தாள்.
“என்ன பண்ணுது அண்ணி? அண்ணி.. சாரி.” ராகவியின் கையைப் பிடிக்க முயன்றாள். சட்டென்று தனது கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் ராகவி.
“உங்ககிட்ட சாரி கேட்க தான் கால் பண்ணேன் அண்ணி. ஆனா, நீங்க, என் போனை கட் பண்ணவும், ஒரு மாதிரி ஆகிடுச்சு. இப்போ நீங்க இன்சல்ட் பண்ற மாதிரி பேசவும்… சாரி.. இதை, இப்போ.. நான் சொல்லியிருக்கக் கூடாது. சாரி” என்றாள் மெலிதான குரலில்.
“நீங்க என்ன சொல்றீங்க காவ்யா அண்ணி? எனக்கு எதுவுமே புரியலை? உதய், அவருக்கு இதெல்லாம் தெரியுமா?” அவளுக்குக் குரலே எழும்பவில்லை.
ஏதோ யோசனையுடன் மெல்ல தலையசைத்து, “தெரியும்னு தான், அப்பா சொன்னாங்க” என்றாள் காவ்யா.
ராகவிக்கு அழ வேண்டும் போலிருந்தது. தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டு காவ்யா முன் நின்றாள். தன்னை அவள் பலவீனமானவளாகப் பார்த்து விடக் கூடாது என்று உணர்வு உள்ளே ஓடிக் கொண்டேயிருக்க, வெளியில் எதுவும் நடக்காதது போல முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு நின்றாள்.
“அத்தனை பவுன் நகையும், ரெண்டு மூணு வைர செட்டும் போட்டது கூடச் சரி தான். ஆனா, ஐம்பது லட்சம் பணத்தைக் கொடுத்தீங்க இல்ல. அதுவும் என் மாமியார் முன்னாடி வச்சு, அப்பா கையில் கொடுத்து இருக்காங்க…” சொல்லிக் கொண்டே போனவளை உணர்ச்சிகள் அற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி.
“சட்டம் படிச்ச நீங்க, வரதட்சணை கொடுத்து இருக்கக் கூடாதில்ல அண்ணி. உங்க வீட்டு ஆளுங்களைத் தடுத்து இருக்கணும் இல்ல? தப்பு உங்க பக்கம் தானே? இந்த வரதட்சணை கொடுக்கறது மூலமா, இன்னும் எத்தனை பேரை தப்புச் செய்யத் தூண்டறீங்க..” என்று கேட்ட காவ்யாவிடம், ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் ராகவி.
“எங்க மாமியார் என்னை, உங்களோட கம்பேர் பண்ணி, கம்பேர் பண்ணி, குத்திக் காட்டி… குறை சொல்லி பேசும் போதெல்லாம் அப்படி ஒரு கோபம் வரும். அப்பா கிட்ட சொன்னா, உங்க அண்ணி தானே காரணம். அவளையே கேட்டு வாங்கி…” என்று விட்டு, நாக்கை கடித்துப் பேச்சை நிறுத்தினாள் காவ்யா.
ராகவிக்கு ஏதோ புரிவது போல இருந்தது. ஆனால், சரியான காரணம் தான் விளங்கவில்லை.
நாலைந்து நாட்களுக்கு முன்பு விஜி சொன்னது நினைவில் வந்து போனது.
“யார் விஜி?” என்று ராகவி கேட்க,
“அத்தை சொன்னதா சொல்லி மாமா தான் செய்யச் சொன்னாங்க கா. “அத்தை கூப்பிடுறான்னு போய்ச் சொல்லு, இதை அத்தை கொடுத்தாங்கன்னு போய்க் கொடுன்னு”… சாரி கா. என்னால மாமாவை மீறி செய்யாம இருக்க முடியல கா. நான் அனாதையா… நின்ன போது மாமா தானே கா, என்னை எடுத்து ஆதரவு கொடுத்து வளர்த்தார். அவருக்கு, நான் நன்றி கடன்….” என்றவளை இடைமறித்து ராகவி,
“நன்றியை இப்படித் தான் காட்டணும்னு அவசியம் இல்ல விஜி” என்றாள் பட்டென்று.
“தெரியும் கா. ஆனா, மாமா இங்க படியில நின்னுட்டு இருப்பார்… அப்போ முடியாதுனு சொல்ல முடியாம தான். இனி, இப்படி நடக்காது கா. குழந்தையில் இருந்தே உதய் அத்தானை மாமாக்கு அவ்வளவா பிடிக்காது. நான் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து பார்க்கறேன். இத்தனை வருஷத்தில் ரெண்டு பேரும் சிரிச்சு, பேசி நான் பார்த்ததே இல்லை கா.”
“ஆனா, ஆனா விஜி. இதே மாமா தானே உதய் அத்தானை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தார். அவரைப் பிடிக்காதுன்னா..” ராகவியால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“உதய் அத்தானை தானே பிடிக்காது. மாமாக்கு என்னை ரொம்பப் பிடிக்கும் இல்ல கா. அதான், அந்த முடிவு.
மாமா எப்பவும் சொல்வார், “பாசத்துக்கு ஏங்கின பய, கட்டுறவளை நல்லா பார்த்துப்பான்னு..”..ஆனா, உதய் அத்தான் என்னைச் சின்னதில் இருந்தே பாசமா தான் பார்த்துப்பார். என்னைக் கல்யாணம் பண்ண முடியாது. தங்கச்சி போலனு அவர் சொல்லும் போது, அப்படி ஒரு நிம்மதியா இருந்துச்சு கா. ஏன்னா, அத்தான்னு கூப்பிட்டேனே தவிரப் பிரபா, உதய் அத்தான், ரெண்டு பேருமே எனக்கு அண்ணன் போலத் தான்..”
கேட்பதற்கு நாடக வசனம் போல இருந்தாலும், ராகவிக்கு அவளின் வார்த்தைகள் அப்படி ஒரு இதத்தைக் கொடுத்தது.
“உதய்கும், மாமாக்கும் என்ன பிரச்சனை?” கேட்டாள்.