உதய ராகம் – 19 (1)

ராகவி தன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவள் கண்களில் பட்டது சோஃபாவில் அமர்ந்திருந்த மலரும், அவள் மடியில் படுத்து அழுது கொண்டிருந்த சுஹாசினியையும் தான்.

“இப்ப எப்படி இருக்கா?”

மலரைப் பார்த்துச் செய்கையில் கேட்டாள் ராகவி.

“இப்ப தான் ரொம்ப அழுதுட்டு இருக்கா. நேத்து எல்லாம் நல்லா தான் இருந்தா. வீடியோவை நியூஸ்ல பார்த்துட்டு ஃபேமஸ் ஆகிட்டேன்னு சிரிச்சுட்டு இருந்தா. அப்புறம் அப்பா ரூம்குள்ள போய்க் கதவை அடைக்கவும் பயந்துட்டா. “ரெண்டு பொண்ணுங்களைப் பெத்து, ரெண்டு பேர் கல்யாணத்தையும் எனக்குப் பார்க்க குடுத்து வைக்கலன்னு” அப்பா ஒரே புலம்பல்.

நம்ம தெரு, ஏரியா ஆளுங்க வேற கூட்டமா வந்து துக்கம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் என்ன, மேடமுக்கு தான் பண்ண மடத்தனம் இப்ப தான் ரியலைஸாகி இருக்கு. அழுதுட்டு இருக்காங்க. ஏன் இப்படிப் பண்ணனு கேள்வி கேட்டா பதில் தான் இல்ல”

மலர் சொன்னதைக் கேட்டபடியே சுஹாசினியின் அருகில் அமர்ந்தாள்.

ராகவி, ஆறுதல் என்ற பெயரில் அவளுக்கு எதையும் சொல்லவில்லை. அவளைப் பொறுத்தவரை தோழி செய்தது தவறு. அதை அவளே உணர்ந்து தெளியட்டும் என்று அமைதியாக இருந்து விட்டாள். எல்லாத் தவறுக்கும் ஒரு தண்டனை உண்டு தானே! அதையும் அவளே அனுபவிக்கட்டும் என்று அமைதியாய் இருந்து விட்டாள்.

சுஹாசினி அழுது கரைகையில் துணையாக அவளின் பக்கத்திலேயே இருந்தாள். நேரத்திற்கு அவளை உண்ண வைத்தாள். அவ்வளவு தான்.

உதய் முழுதாக நான்கு நாட்கள் செலவழித்து இன்டர்நெட் முழுவதும் இருந்த அந்த வீடியோவை நீக்கி இருந்தான்.

“நிறையப் பேர் மொபைல்ல வீடியோ டவுன்லோட் செய்து வச்சிருப்பாங்க பட்டே. அதை ஒண்ணுமே பண்ண முடியாது. என்னால முடிஞ்சதை செஞ்சிட்டேன் மா” என்று ராகவியிடம் சொல்லிக் கொண்டே சோஃபாவில் அமர்ந்தான்.

“சுஹாசினி எப்படி இருக்கா?” என்றான்.

“இப்போ ஓரளவு ஓகே. அவ மண்டையில் என்ன ஓடுதுன்னு தெரியல உதய். ரொம்பக் குழம்பிப் போய் இருக்கா” என்றாள் ராகவி.

“ம்ம், நாம வெளில எங்கேயாவது போய்ட்டு வரலாமா பட்டே. ஒரு ரெண்டு நாள் ட்ரிப் போல. எனக்கு உன்கிட்ட சில முக்கியமான விஷயங்கள் பேசணும். ம்ம்ம் சொல்லணும். அப்புறம் உன் கூடவும், குழந்தைங்க கூடவும் தனியா இருக்கணும்..”

“உங்களோட, வயித்துல இருக்கக் குழந்தைகளை… ஷப்பா..” செல்லமாக அலுத்து கொண்டவள்,

“எங்க வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்க,

“யாரும் இல்லாத இடம் பட்டே. நீயும், நானும் மட்டும்..” என்றான் அழுத்தமாக.

“சரி, நீங்களே பிளான் பண்ணுங்க. ஆனா, அதென்ன முக்கியமான விஷயம்? இப்பவே சொல்லலாம், இல்ல?”

“அது.. அது… இங்க வச்சு வேணாம் பட்டே” என்று அவன் முடிவாகச் சொல்லிட,

“ஓகே” என்றாள் அவளும்.

வாழ்வில் சில முக்கிய நிகழ்வுகளுக்கு நேரம் காலம் பார்க்கக் கூடாது என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை. தக்க சமயத்திற்க்காக காத்திருக்கையில் காலம் கடந்து, அதைச் சொல்ல நமக்குச் சரியான சந்தர்ப்பம் அமையாமலேயே போய் விடும் என்பதையும் அவன் உணரவில்லை.

எல்லோருக்கும் காலம் கடந்து தானே ஞானோதயம் பிறக்கிறது.

சுஹாசினி கல்லூரிக்கு கிளம்பி விட, பனிமலர் அவளது வேலையைப் பார்க்க பெங்களூர் கிளம்பினாள். கடந்த சில மாதங்களாக அவள் அங்குத் தான் வேலை செய்து கொண்டிருக்கிறாள்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கோர விபத்தில் கண் முன்னே கணவனை இழந்திருந்தாள் அவள்.

தற்போது, அவளை விரும்பி மணக்க கேட்டவனுக்கு அவள் சரி என்று சொல்ல நினைத்த வேளையில், இரு வீட்டினரும் அந்தக் காதலுக்கு மறுப்பு சொல்லி விட, அவளும் மனம் உடைந்து தான் பெங்களூர் திரும்பிச் செல்கிறாள்.

அவளைக் காதலித்த வீராவிடம் தெளிவாக, இனி தங்களுக்குள் எவ்வித உறவும் சாத்தியமில்லை என்று சொல்லி விட்டே சென்றாள் பனிமலர்.

ராகவி தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி இருந்தாள்.

அன்று கடையில் வாடிக்கையாளரை கவனித்துக் கொண்டிருந்தவளின், அலைபேசி ஒலியெழுப்பி அவளின் கவனத்தை அதன் புறமாகத் திருப்பியது.

திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும், அதிருப்தியுடன் புருவம் நெரித்தாள்.

மெல்ல அங்கிருந்து விலகி, அழைப்பை ஏற்று, “காவ்யா அண்ணி, நான் வேலையா இருக்கேன். என்னால நீங்க இப்ப எங்க கூப்பிட்டாலும் வர முடியாது. புரிஞ்சுக்கோங்க. பிளீஸ்” என்று விட்டு, மேலே அவளைப் பேச அனுமதிக்காமல் அழைப்பை துண்டித்தாள்.

கார் வாங்கிக் கொடுத்து முழுதாக ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் அடுத்ததா என்ற எரிச்சல் தான் அவளுக்கு வந்தது.

‘வேறு எதற்கும் அழைத்திருப்பாளோ? என்னவென்று கேட்டிருக்க வேண்டுமோ?’ என்ற எண்ணத்தை, அது தோன்றிய வேகத்தில் கிள்ளி எறிந்து விட்டு, தனது வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

மாலை ஆறு மணியளவில் அவளுக்கு அழைத்த உதய், “நாளைக்குப் பாண்டிச்சேரி போகலாமா பட்டே?” என்று கேட்டான்.

“ஓகே” என்றவள், “எப்போ வீட்டுக்கு வருவீங்க?” என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பினாள்.

“ம்ம், ஒரு மணி நேரம் ஆகும் பட்டே” என்றான்.

“ஓகே, உதய்.” அலைபேசியை அணைத்துப் பையில் போட்டு விட்டு, காரை நோக்கி நடந்தாள்.

“இன்று” கையில் இருக்கும் போது “நாளைக்காக” காத்திருந்தவனுக்கு, நாளை வரப் போவதில்லை என்று தெரிந்திருக்கவில்லை.

ராகவி வீட்டுக்குள் நுழையும் போதே ஹாலில் அமர்ந்திருந்த காவ்யாவை பார்த்து விட்டாள். மெலிதாக அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு, மாடியேறி அவர்களின் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

சரியாக அரை மணி நேரம் கழித்துக் கதவு தட்டப்பட்டது. ராகவி எழுந்து செல்லவேயில்லை. அமைதியாய் கண்களை மூடி படுத்திருந்தாள். அறைக் கதவு மீண்டும் மீண்டும் தட்டப்படவும், வேறு வழியின்றி எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top