அவர்கள் அறைக்குள் நுழைந்ததும், “ராகவி, நான் பார்த்துக்கறேன். நீ ரெஸ்ட் எடு. இந்த வீடியோவை இருந்த இடம் தெரியாமல் அழிச்சுட்டு வரேன்” என்று விட்டு, காக்கி உடைக்கு மாறத் துவங்கினான் உதய்.
“அம் சாரி, உதய்” குற்ற உணர்ச்சியுடன் சொன்னாள் ராகவி.
“சுஹாசினி இப்படிப் பண்ண போறான்னு உனக்கு மட்டும் தெரியுமா என்ன? நீ ஏன் சாரி சொல்ற? இன்ஃபேக்ட் அவளே அந்த நொடியில் தான், அப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பா. நீ தேவையில்லாம வொர்ரி பண்ணிக்காம, ரெஸ்ட் எடு. நான் வந்துடுறேன்.” என்றவன், அடுத்த இரண்டாம் நிமிடம் தன் ராயல் என்ஃபீல்டில் பறந்திருந்தான்.
ராகவி தோழியின் திருமணத்திற்காகத் தான் கட்டியிருந்த கனமான பட்டுச் சேலையை மாற்ற கூடத் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அந்நேரம் அறைக் கதவு தட்டப்பட்டது.
ஏற்கனவே தோழியைக் குறித்த கவலையில் அமர்ந்திருந்தவள், எரிச்சலுடன் போய்க் கதவை திறந்து, “உதய் அத்தான், ஸ்டேஷன் கிளம்பிட்டார் விஜி. அவர் வந்ததும், நானே வந்து உன்னைக் கூப்பிடுறேன்” என்றாள் முகத்தில் அடித்தார் போல்.
நொடியில் வெளிறி விட்டது விஜியின் முகம்.
“அக்கா…” என்று அழைத்தவளை, கை நீட்டி தடுத்தாள் ராகவி.
“இன்னைக்கு ஒருநாள் மட்டும் என்னை விட்டுடு விஜி, உனக்குப் புண்ணியமா போகும்” என்று கண்களை மூடித் திறந்து கடுமையான குரலில் சொன்னாள் ராகவி.
“அத்தை, உங்களுக்கு ஜுஸ் கொடுத்துட்டு வர சொன்னாங்க கா” என்று கையில் இருந்த பழச்சாறு அடங்கிய கிளாஸை அவளிடம் நீட்டினாள்.
“சாரி விஜி. தேங்க்ஸ்” என்று அதைக் கையில் வாங்கிக் கொண்டாள் ராகவி.
வேண்டாம் என்று மறுத்தால், அது மாமியாரிடம் போகும். பின்னர் அவருக்கு வேறு விளக்கம் கொடுக்க வேண்டும், எதற்கு வம்பு, இருக்கும் மனநிலையில் எதையும் சமாளிக்க முடியாது என்று தோன்ற ஜூஸை கையில் வாங்கிக் கொண்டாள் ராகவி.
“அக்கா…” என்று விஜி மீண்டும் அழைக்க, அவளை நிமிர்ந்து பார்த்தாள் ராகவி.
“நீங்க என்னை ரொம்பத் தப்பா நினைச்சு இருப்பீங்க. உங்களையும் தப்பு சொல்ல முடியாது. உங்க இடத்தில நான் இருந்திருந்தா, அது யாரா இருந்தாலும், மொகரையிலயே நாலு சாத்து, சாத்தி இருப்பேன். ஆனா, பாருங்க. நான் இதை விரும்பி பண்ணலை கா” என்ற அவள், தொடர்ந்து சொன்ன செய்தியில் தலை சுத்திப் போனது ராகவிக்கு.
தனக்குத் தான் காது கேளாமல் போய் விட்டதோ என்று கூட ஒரு நிமிடம் யோசிக்கவே செய்தாள்.
ஒரு கணம் அதிர்ந்து போய் விஜியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
“சாரி கா” என்றாள் மீண்டும்.
“பரவாயில்ல..” அதற்கு மேல் அவளால் நிற்க முடியும் என்று தோன்றவில்லை.
“ஆனா, ஏன் விஜி?” கேட்டாள்.
“தெரியாது கா. கேட்டா என்ன சொல்லுவாங்களோன்னு. நானும் கேட்டது இல்ல கா” என்றாள்.
“யார் விஜி? யார் என்ன சொல்லுவாங்க?” என்று புருவம் குவிய கேட்டாள் ராகவி.
“அத்தை…” என்று மெல்லமாக இழுத்தாள் விஜி.
சில விநாடிகள் அமைதியாக இருந்த ராகவி, “சரி விஜி, எனக்குப் படுக்கணும் போல இருக்கு. அப்புறம்… அப்புறம் பார்க்கலாம்..” என்று விட்டு, அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.
எப்போது கணவன் வருவான், அவனிடம் எப்படி இதைச் சொல்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தவள், அப்படியே உறங்கியிருந்தாள்.
மறுநாள் காலையில் அவள் கண் விழித்து, காஃபி போடும் போது தான் வீட்டிற்கு வந்தான் உதய்.
“போன், டிவி எதையும் தொடாத, பட்டே” என்றான்.
“ஏன் உதய்?” சோர்ந்து போய் இருந்த அவன் முகத்தை ஏறிட்டாள்.
எப்போதும் கம்பீரமாக, போலீஸ் உடைக்கே உரித்தான மிடுக்குடன் இருக்கும் கணவன் அன்று மிகவும் சோர்ந்து தெரிய, அவனைக் கரிசனத்துடன் பார்த்தாள் ராகவி.
“நியூஸ் சேனல்ஸ் வீடியோவை எடுக்க முடியாது சொல்லிட்டாங்களா?” அப்பாவியாகக் கேட்ட மனைவியை மென்மையான புன்னகையுடன் பார்த்த உதய்,
“வீடியோ வைரல் ஆகிடுச்சு. தமிழ்நாடு என்ன, உலகம் முழுக்க, தமிழ் தெரிந்த எல்லோரும் பார்ப்பான். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா, யூடியூப் எல்லாப் பக்கமும் சுஹாசினி வீடியோ தான் பரவிட்டு இருக்கு. போஸ்ட், ஷேர்ன்னு லட்ச கணக்கில்.. ம்ப்ச், அதுல உன் முகமும் இருக்கு” என்றான் கவலையுடன்.
அதிர்ச்சியில் கையில் இருந்த கண்ணாடி கோப்பையைத் தவற விட்டாள் ராகவி.
அவளைச் சட்டென்று கைப் பிடித்துக் கவனமாகத் தன் பக்கமாக இழுத்து நிறுத்தினான் உதய்.
“வீடியோ யார் எடுத்து இருப்பா உதய்? எப்படி நியூஸ் வரைக்கும் போச்சு?” மெல்ல கேட்டாள்.
“எவனாவது கல்யாணத்துக்கு வந்தவன் தான் பண்ணி இருக்கணும். எல்லாம் பப்ளிசிட்டி பைத்தியங்க. ஒரு பொண்ணு வாழ்க்கைன்னு யோசிக்க மாட்டனுங்க. தன்னோட சேனல் வியூஸ் தான். ம்ப்ச், அதை விடு மா” என்றவன், அவள் கண்களைப் பார்த்து,
“என் டீம் வொர்க் பண்ணிட்டு இருக்காங்க மா. வீடியோவோட மெயின் சோர்ஸ் கண்டுபிடிச்சு அதை நெட்டில் இருந்து நிரந்தரமாக நீக்கிடுவாங்க. என்ன ஒன்னு, இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கணும்னு தான் தெரியல” என்றான், இயலாமை தந்த கோபத்துடன்.
“இதுவரை கண்ணில் பட்ட, எல்லாத்தையும் நீக்கிட்டாங்க. ஆனா, நம்ம மக்கள் புதுப் புதுத் தலைப்பு கொடுத்து ஷேர் பண்ணிட்டே இருக்காங்க. “கல்யாண மேடையில் வைத்து இந்தப் பெண் செய்த காரியத்தைப் பாருங்க மக்களே”
******* இடியட்ஸ். வியூஸ், காசு இதுக்காக என்னென்ன பண்ணுறானுங்க பார்” அவனது கோபத்தையும் கவலையுடன் பார்த்தாள் ராகவி.
“உதய், இப்ப என்ன பண்ணுறது? என்ன இருந்தாலும் சுஹா பண்ணது ரொம்பத் தப்பு. அவ இப்படிப் பண்ணியிருக்கக் கூடாது”
“ஒன்னும் பண்ண வேணாம். நீ கிளம்பு. இன்னைக்குக் கடைக்குப் போக வேணாம். போய்ச் சுஹாசினி கூட இரு. நான் குளிச்சிட்டு வரேன், உங்க வீட்ல உன்னை ட்ராப் பண்றேன் வா. அங்க போய் அவகிட்ட தப்பு, தப்புன்னு பேசாத. ஏதோ பண்ணிட்டா. இனி, அதை மாத்தவா முடியும். விடு, பார்த்துக்கலாம்” என்றான், அவளின் தலைக் கோதி விட்டு.
“ம்ம்ம், சரி” என்றவள்,
“நீங்க தூங்கவே இல்ல உதய்” கவலையுடன் சோர்ந்திருந்த அவன் முகம் பார்த்து சொன்னாள்.
“வேலையை முடிச்சுட்டு சேர்த்து வச்சுத் தூங்கிக்கலாம், பட்டே. இப்போ கிளம்பு. போகலாம். சுஹாசினி பாவம், தனியா என்ன பண்றாளோ”
“அவ, நம்ம வீட்ல தான் இருக்கா உதய்”
“ஓ, அப்ப சரி. ஆனா, நீயும் போய் அவ கூட இரு. வா” என்று மனைவியை இழுத்துக் கொண்டு போனான் உதய்.
ஒரு மணி நேரம் கழித்து அவள் வீட்டின் முன் இறக்கி விட்டு விட்டு, உடனே ஸ்டேஷனுக்குக் கிளம்பி விட்டான் அவன்.
ராகவி அவனிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று நினைத்திருந்ததை, அழுது, ஓய்ந்து, துவண்டு போய் இருந்த சுஹாசினியை பார்த்ததும், சுத்தமாக மறந்து விட்டிருந்தாள்.