அதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டே வந்த உதய், “அவங்க அக்கா, மாமா டீட்டேயில்ஸ் வாங்கி எனக்கு மெயில் பண்ணு பட்டே. அவங்களோட ரெண்டு, மூணு ஃபோட்டோ. அப்புறம் கடைசியாக எந்த ஊர்ல இருந்தாங்க. அட்ரஸ், போன் நம்பர் இப்படி ஒன்னு விடாம அனுப்பணும். ஓகே?” என்றான்.
“சரிங்க, ஏசிபி” என்றாள் சிரித்துக் கொண்டே,
“நீ அப்படிக் கூப்பிடும் போது ரொம்பப் பிடிக்குது பட்டே” என்றான் உதய்.
ராகவி சிரித்துக் கொண்டே, கணவன் கேட்ட தகவல்களை அனுப்ப சொல்லி, சுஹாசினிக்கு செய்தி அனுப்பினாள்.
கர்ப்பகாலத்தில் பொதுவாகப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி, மயக்கம் போன்ற எந்தவித தொந்தரவும் ராகவிக்கு இல்லை. அவளுக்கே அது ஆச்சரியமாகக் கூட இருந்தது. மருத்துவரிடம் கேட்ட போது, சிலருக்கு அப்படியும் இருக்கும் என்று அவர் சொல்லி விட, அவள் பெரிதாக வருந்திக் கொள்ளவில்லை. அவளுக்கு அவ்வப்போது உடல் சோர்வு மட்டும் எட்டிப் பார்த்து தொல்லை கொடுத்த படி இருந்தது.
தொடர்ந்து அரை மணி நேரம் கூட நிற்க முடியாமல் இருக்கை தேடி அமர்ந்து விடுவாள்.
அன்றைக்குச் சுஹாசினிக்குத் திருமணம்.
அன்று தான் ராகவிக்கும் நான்காம் மாதம் தொடங்கியிருந்தது.
கல்யாண மண்டபத்தை நிறைத்திருந்த கூட்டமும், கலவையான பூக்கள் மற்றும் வாசனை திரவியங்களின் மணமும் சேர்ந்து, முதல் முறையாக அவளுக்கு அடி வயிற்றைப் பிரட்டியது. ஆனால், சுஹாசினி தன் பக்கத்திலேயே ராகவி இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டதால் வேறு வழியின்றிச் சமாளித்து நின்றுக் கொண்டிருந்தாள்.
மணமேடையை ஒட்டி இடப்பக்கமாக இருந்த சுவரில் சாய்ந்து நின்று கொண்டு, ராகவன் மற்றும் வேறு சிலருடன் பேசிக் கொண்டிருந்த உதய், அவ்வப்போது மனைவியைக் கண்களால் தொட்டு, நலம் விசாரித்துக் கொண்டிருந்தான்.
அவளும், “ஐ ஆம் ஓகே” என்று அவனுக்குக் கண்களாலேயே பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
முகூர்த்த நேரம் நெருங்கியிருந்தது. மாப்பிள்ளை திருமாங்கல்யத்தைக் கையில் எடுத்த நொடி, சரட்டென்று எழுந்து நின்றாள் சுஹாசினி.
“சுஹா, என்னாச்சு? என்ன பண்ற, உட்காரு” பின்னிருந்து அவளின் தோளை பற்றி அழுத்தினாள் ராகவி. அவளை மீண்டும் அமரச் செய்து விடும் வேகம் அந்த அழுத்தலில் இருந்தது.
அவளுக்குப் பதட்டத்தில் வியர்க்க ஆரம்பித்தது.
மணப்பெண் தாலி கட்டப் போகும் நேரத்தில் எழுந்து நிற்கவும், மண்டபம் முழுவதும் ஒரே சலசலப்பு.
சுஹாசினியின் அப்பா, ராகவி வீட்டுப் பெரியவர்கள், உதய், ராகவன் என்று அனைவரும் அவர்களின் பக்கத்தில் வந்து விட்டனர்.
“சுஹா, பிளீஸ் உட்காரு, ஏன் இப்படி எழுந்து நிக்கற?” பதறினாள் ராகவி.
“சுஹாசினி மா? என்னாச்சு? என்னனு சொல்லு, நான் பார்க்கறேன்.” உதய்.
“பாப்பா, என்னம்மா ஆச்சு?” சுஹாசினியின் அப்பா.
அனைவருக்கும் பொதுவான பதிலாக ராகவியைப் பார்த்து,
“நான், அவன்கிட்ட போகனும், ராகவி” என்றாள் சுஹாசினி.
ஒரு நொடி யாரிடம் என்று புரியாமல் விழித்த ராகவி, பின்னர்ச் சுதாரித்து,
“சரி, போகலாம். இப்போ உட்காரு. மணமேடையில் இருந்து இப்படி எழுந்துக்கக் கூடாது சுஹா. எல்லாரும் பார்க்கறாங்க பார். பிளீஸ், உட்காரு சுஹா” கெஞ்சினாள் ராகவி.
மாப்பிள்ளை வீடு, முதலில் என்ன, என்ன என்று பதறி, சிறிது நேரத்தில் எல்லாம் கொந்தளிக்க ஆரம்பித்தது.
“எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை” பொதுவாகக் கூட்டத்தைப் பார்த்து சொல்லி விட்டு, மணமேடையை விட்டு கீழிறங்கினாள் சுஹாசினி.
அங்கிருந்த அவளுக்கு நெருக்கமான அத்தனை பேரின் பேச்சையும் அவள் காது கொடுத்து கேட்பதாகவே இல்லை.
ராகவிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.
“சுஹா, நில்லு” சேலையை லேசாக உயர்த்திப் பிடித்து, அவளின் பின்னேயே ஓடினாள் ராகவி. அவளின் கைப் பிடித்து நிறுத்தினாள்.
“என்ன பண்ணிட்டு இருக்க?. கல்யாணம் விளையாட்டு இல்ல. இப்ப, இவ்வளவு வேகமா எங்க போற நீ?” கத்தினாள்.
“பிளீஸ் ரா, நான் நல்லா யோசிச்சு தான்…” என்று தொடங்கிய சுஹாசினியை,
“வாயை மூடு” என்று அவளை அதட்டி அடக்கினாள் ராகவி.
“உனக்குக் கல்யாணம் வேண்டாம்னா, முன்னாடியே மாப்பிள்ளை கிட்ட பேசி நிறுத்தி இருக்கணும். இப்படிக் கடைசி நேரத்தில் ஆயிரம் பேர் முன்னாடி அவரை அசிங்கப்படுத்தி இருக்கக் கூடாது. கல்யாணம் கடைசி நேரத்தில் நின்னா, பெண்களுக்கு மட்டுமில்ல. ஆண்களுக்கும் அவமானம் தான். உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை சுஹா. யூ டிஸ்ஸபான்டட் மீ டுடே. நீ இப்படிப் பண்ணி இருக்கக் கூடாது.” கடுமையான குரலில் சொன்ன ராகவியைக் கண்களில் கண்ணீருடன் ஏறிட்டாள் சுஹாசினி. ஆனாலும், ராகவியின் கெஞ்சலுக்கும், அதட்டலுக்கும் எந்த ஒரு பயனும் இல்லை.
சுஹாசினியின் திருமணத்தை அவளே வெற்றிகரமாக நிறுத்தி இருந்தாள்.
கார் பயணம் முழுவதும் கணவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே வந்தாள் ராகவி.
உதய் தான் சுஹாசினி கேட்ட, தகவலை மூன்று நாட்கள் முன்பு கண்டுபிடித்துக் கொடுத்து இருந்தான். சுஹாசினியின் அக்கா மற்றும் அவரின் குழந்தை பற்றிய தகவல்கள்.
அவளின் அக்கா மகன், அவனது சித்தப்பாவிடம் வளர்வதாகச் சொன்ன சுஹாசினி, “பேசிட்டேன் ரா. அவன் நல்லா இருக்கான் அங்க. நல்ல வசதியான வீடு தான்” என்று முடித்திருந்தாள்.
கணவனும் அதையே சொன்ன ஞாபகம் இருக்கவும், அதை அப்போதைக்கு மறந்து விட்டு சுஹாசினியின் திருமண வேலைகளில் கவனமானாள் ராகவி.
இன்று அதே குழந்தைக்காகச் சுஹாசினி திருமணத்தை நிறுத்தியது, அவளுக்கு அதிர்ச்சி தான். அதிர்ச்சியை மீறிய எரிச்சல், கோபம், ஏமாற்றம் எனப் பலவகை உணர்ச்சிகள் அவள் மனதை அழுத்தியது.
லேசான தலைவலியின் அறிகுறி தென்பட, கண் மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.
வீடு வரவும் அவளை மெல்ல எழுப்பினான் உதய்.
“பட்டே வீடு வந்தாச்சு. வா” அவளுக்காகக் கதவை திறந்து விட்டான்.
இருவரும் வீட்டிற்குள் நுழைந்ததும் தொலைக்காட்சி சத்தம் தான் வரவேற்றது. ஹாலில் யாரும் இல்லாதிருக்க, தொலைக் காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
அவள் முன் வந்து நின்று, “வா, மேல போகலாம்” என்ற கணவனை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டே படியேற போனவள், சுஹாசினியின் குரல் தொலைக்காட்சியில் இருந்து ஒலிக்கவும், அடுத்த அடி எடுத்து வைக்க இயலாமல் உறைந்து போனவளாய் செய்தியை வெறித்தாள்.
“மணமேடையில் வைத்துத் திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண். காதலனிடம் போக வேண்டும் என்று சொல்லி திருமணத்தை நிறுத்தினார்” என்ற செய்தியை தொடர்ந்து ஒளிபரப்பட்ட காணொளியில், சுஹாசினி, ராகவியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“நான், அவன்கிட்ட போகனும்”
என்ற சுஹாசினியின் வார்த்தைகள் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
சுஹாசினி, ராகவி, மலர், ராகவன், சுஹாசினிக்கு தாலி கட்ட இருந்த மாப்பிள்ளை என்று அனைவரின் முகமும் தெள்ளத் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
உதய் கோபத்தில் தொலைக்காட்சியின் ரிமோட்டை எடுத்து ஓங்கி சுவரில் அடித்தான்.
“வா, பட்டே. அதைப் பார்க்காத…” உள்ளே அழைத்துக் கொண்டு போனான்.
காலையில் நடந்த சம்பவம், மாலையில் தலைப்புச் செய்திகளில் ஒன்றாகி இருந்தது.
தானே தலைப்புச் செய்தியானதை அறியாமல், அறைக்குள் முடங்கிக் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள் சுஹாசினி.