“போன் பேசிட்டு இருந்தீங்களே? நாங்க வரும் போது, பிஸியா?” என்றாள்.
“ஆமா, அப்போ… இப்போ இல்ல. அஃபிஸியல் கால். பேசியாச்சு. இப்போ ஃப்ரீ தான். நீங்க சொல்லுங்க” என்றான்.
அவனிடம் சொல்லத் தொடங்கிய கதையை, சொல்லி முடித்து விட வேண்டும் என்று உந்துதலில், விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள் ராகவி.
“உதய், எப்பவுமே என்னை நல்லா தான் பார்த்துப்பார். நான், கர்ப்பம்னு தெரிஞ்சதும், உறுதியானதும் இன்னும் அதிக அக்கறை எடுத்து பார்த்துக்கிட்டார். வீட்டுக்குச் சீக்கிரம் வந்தார். வெளில கூட்டிட்டுப் போனார். ஒரு வாரம் எங்க வீட்ல போய் இருந்தோம். அப்புறம்…”
மெல்ல அவனையும் இழுத்துக் கொண்டு, கடந்த காலத்திற்குள் நுழைந்தாள்.
ராகவி தன் கர்ப்பம் உறுதியான செய்தியை சொல்லியதுமே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர் அவளின் வீட்டில்.
சிதம்பரம் மருமகனுக்குக் கைக் கொடுத்து, வாழ்த்து தெரிவிக்க, கண்ணதாசன் அவனை இழுத்து அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார்.
ராகவனை விட்டால் உதய்கு முத்தமே கொடுத்து இருப்பான்.
“மாமா” என்று கைப் பிடித்தவன், சிரிப்பும், கண்களில் மெல்லிய நீர் படலத்துடனும் அவனை ஏறிட்டான்.
சாதாரணமாகவே ராகவியைக் கொண்டாடும் அவளின் குடும்பம், இப்போது கர்ப்பம். அதுவும் அவளைப் போலவே, அவள் கருத்தரித்து இருப்பதும் இரட்டை குழந்தைகள் என அறிந்ததும் அவர்களின் மகிழ்வுக்கு அளவே இல்லாமல் போனது.
விசாலாட்சி பேத்தியின் கன்னம் வழித்து, நெட்டி முறித்தார்.
அவளைக் குனிய செய்து, நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டார்.
விசாலாட்சி, உதயிடம் ஆசையாக, ஏக்கத்துடன் வற்புறுத்தி கேட்டு அவளை அங்கேயே ஒரு வாரம், வைத்திருந்து தான் உதயின் வீட்டிற்கு அனுப்பினார்கள். அவளைச் சிறு துரும்பை கூட நகர்த்த விடவில்லை அவர்கள்.
வீட்டில் இருந்து கிளம்பும் போதும் அவள் வாய்க்குப் பிடித்ததாக, அவள் சாப்பிட வேண்டும் என, புளி காய்ச்சல், தக்காளி தொக்கு, மா, நாரத்தை உப்பு ஊறுகாய் எனப் பல பொருட்கள் அடங்கிய பைகளைக் கொண்டு வந்து காரின் பின் பகுதியை நிறைத்து விட்டனர்.
உதய் ஒன்றுமே சொல்லவில்லை. ராகவி தான், “டெய்லி காலைல, மதிய சாப்பாடு, இங்க, உங்க கூடத் தான் சாப்பிடுறேன். எதுக்கு இத்தனையைப் பேக் பண்ணி அனுப்பறீங்க?.” என்று ஆட்சேபித்தாள்.
ஆனால், அதற்கும் விசாலாட்சியிடம் பதில் இருந்தது.
“நடு ராத்திரி பசிக்கும் குட்டிமா. உங்க அம்மா எல்லாம், பூதம் மாதிரி நைட் தான் எழுந்து சாப்பிடுவா, நீங்க ரெண்டு பேரும் வயித்துல இருக்கும் போது. உங்க அப்பா கிட்ட வேணும்னா கேட்டுப் பாரு” என்றார்.
அந்த வயதிலும் மனைவியின் நினைவில் வெட்கப் புன்னகை பூத்தார் சிதம்பரம்.
அங்கிருந்து திரும்பி வந்த அவளைப் புகுந்த வீட்டிலும் ஓரளவு நன்றாகவே பார்த்துக் கொண்டனர்.
என்ன இருந்தாலும், பெண்களுக்குப் பிறந்த வீடு போல் வராது இல்லையா?
அன்று கடையில் வேலையாய் இருந்த ராகவி கை உயர்த்தி மணி பார்த்தாள். ஏழு என்றது கடிகாரம்.
இன்னும் பத்து நிமிடத்தில் உதய் வந்து விடுவதாகச் சொல்லி இருக்க, பார்த்துக் கொண்டிருந்த வேலையை வேக வேகமாக முடிக்கத் தொடங்கினாள் ராகவி.
அவள் வேலையை முடிக்கும் நேரம் உள்ளே வந்தான் உதய்.
அவளைப் பார்த்ததும் பெரிதாகப் புன்னகைத்தான்.
மூன்று மாதமே ஆகியிருந்த அவளின் வயிற்றில் கை வைத்து,
“என் குட்டீஸ் என்ன சொல்றாங்க பட்டே.?” என்றான்.
“வெளியில் வந்ததும், நீங்களே கேட்டு தெரிந்துக்கோங்க”. என்றாள், அவனைப் பார்த்து நாக்கை துருத்தி காட்டி. அவன் கையைத் தன் வயிற்றில் இருந்து எடுத்து தன் கரத்துடன் கோர்த்துக் கொண்டாள்.
“வா, கிளம்பலாம் பட்டே” என்றவன், திரும்பி அங்கு அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த சுஹாசினியை பார்த்தான்.
“யார் கிட்ட பேசுறா? அவளைப் பார்த்தா கல்யாண பொண்ணு மாதிரியா இருக்கு? என்ன பிரச்சினை அவளுக்கு?” என்று கேட்க,
“உங்களுக்கு என்ன அவ மேல திடீர் அக்கறை?” என்று புருவம் உயர்த்திய ராகவி, “அவ கிட்ட அடுத்த வாரம் மாட்டப் போறவன் கிட்ட தான் பேசுறா” என்றாள்.
“பார்த்தா, அப்படித் தெரியலையே. முகம் டல்லடிக்குது. என்னமோ சரியில்ல. அவ வெறுமே ம்ம்ம் கொட்டிட்டு இருக்கா. இஸ் எவெரிதிங் ஆல்ரைட்?” உண்மையான அக்கறையுடன் கேட்டான் உதய்.
“அவ இன்னமும் அவளோட அக்கா விஷயத்தை மனசுல போட்டு குழப்பிக்கறா உதய்.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த கண்ணதாசன், உதயிடம் பேசத் தொடங்கினார்.
ராகவி, சுஹாசினி முன் சென்று நின்றாள்.
“என்ன சுஹா?” என்றாள், அவளின் தோளில் கைப் போட்டு, அலைபேசியை அணைத்து மேஜையின் மேல் வைத்தாள் சுஹாசினி.
“குட்டீஸ் எப்படி இருக்காங்க? எப்போ வெளில வருவாங்க ரா? பத்து மாசம் எல்லாம் லாங் வெயிட்டிங் பீரியட் தெரியுமா? இன்னும் ஏழு மாசம் இருக்கே. முன்னாடியே வர மாட்டங்களா?”
சுஹாசினி சொல்ல, ராகவி அதிர்ச்சியில் கண்களை விரித்தாள்.
காலையில் தான் இதே வசனத்தை உதயும், வார்த்தை மாறாமல் அப்படியே சொல்லி இருக்க, அவளால் அதிராமல் இருக்க முடியவில்லை.
“எனக்கு வாய்க்கறது எல்லாம் ஒரே மாதிரி பீஸா இருக்கு.” பொய் கோபத்தோடு முணுமுணுத்தாள்.
“என்ன ரா…” என்று மீண்டும் சுஹாசினி தொடங்க,
“உன் அக்கா குழந்தையை என் வயித்துல தேடாத சுஹா.” என்றதும் அவள் முகம் அப்படியே வாடி விட்டது.
“சாரி” என்றாள் ராகவி.
“ம்ப்ச், நீ சொல்றது சரி தான் ராகவி. நம்ம அக்கா குழந்தை ராகவி அது. அக்கா நம்ம மேல பெருசா பாசம் காட்டலைன்னா கூட, அவ நமக்கு அக்கா, இல்லைனு ஆகிடுமா? எனக்குக் குழந்தையை ஒரே ஒரு முறை பார்த்தா போதும். அப்புறம்.. அப்புறம்…” மேலே சொல்ல முடியாமல் திணறினாள்.
“தேடலாம் சுஹா.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த உதய், “ஹாய் கல்யாண பொண்ணே, எப்படி இருக்கீங்க?” என்று சுஹாசினியிடம் விசாரித்தான்.
“நல்லா இருக்கேன் ண்ணா” என்றாள் சுஹாசினி.
“சரி மா” என்றான்.
“சரி சுஹா, நாங்க கிளம்பறோம். ஓகே?” என்று சொல்லி விட்டு, கணவனுடன் வெளியில் வந்து காரில் ஏறினாள் ராகவி.
“அவளுக்கு, என்ன பிரச்சனை?” காரை செலுத்திக் கொண்டே உதய் கேட்க,
“அவளோட, அக்கா குழந்தை உயிரோட இருக்குன்னு சொன்னேன், இல்ல. மூனு மாச குழந்தை. அவங்க மாமாவோட தம்பி கிட்ட வளருது. ஆனா, அவங்க எங்க இருக்காங்கன்னு இவளால கண்டுபிடிக்க முடியல. இவ எவ்வளவோ டிரை பண்ணிட்டா. குழந்தையை ஒரே ஒரு முறை பார்க்கணும்னு ஆசைப்படுறா. இவ நாளைக்குக் கல்யாணமாகி போய்ட்டா, குழந்தையைத் தேடி போக முடியாதுன்னு நினைக்கிறா போல..” நீண்டதாக விளக்கம் சொல்லி முடித்தாள்.