உதய ராகம் – 18 (1)

மருத்துவரின் முன்பு அத்தனை இறுக்கமாக அமர்ந்திருந்தான் உதய்.

அவனது கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள் ராகவி. ஆனாலும், இறுக்கம் சற்றும் குறையாமல் அமர்ந்திருந்தான் அவன். அவள் பேச முயற்சித்தும் பலனில்லை.

அவர்கள் மருத்துவர் சொன்னபடி, ஸ்கேன் எடுத்து, ரிபோர்ட் வாங்கி மீண்டும் மருத்துவரை பார்த்து, அவர் பரிந்துரைத்த மருந்துகளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.

“இரட்டை குழந்தைகள், 8 வார கர்ப்பம்” என்றது ஸ்கேன் ரிப்போர்ட்.

வீட்டை நோக்கிய அரை மணி நேர பயணத்தில் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை உதய். மௌனத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருந்தான்.

ஸ்கேன் அறையில், மருத்துவரின் முன் என அங்கேயும் ராகவியின் கைகளை இறுக பற்றிக் கொண்டு, அவள் கண்களையும், முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, ஒன்றுமே பேசவில்லை.

வீட்டை அடைந்து, அறைக்குள் நுழைந்தது தான் ராகவிக்குத் தெரியும். அடுத்த நிமிடம் அவள் கண்டது அவள் மடியில் தலை வைத்திருந்த கணவனைத் தான்.

உதய் உடைந்து அழுவான் என்று ராகவி எதிர்பார்க்கவேயில்லை.

படுக்கையில் அவளை அமரச் செய்து, அவளைச் சுற்றி கைகளைக் கோர்த்து இறுக்கி, வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டு அழுவான் என்று அவள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருந்தான்.

“உதய், உதய், என்னாச்சு?”

என்று பதறி அவள் தான், அவன் முகம் பற்றி வலுக்கட்டாயமாக அவன் தலையை நிமிர்த்த வேண்டியிருந்தது. ஆனாலும், முகம் காட்ட மறுத்தான் அவன்.

“உதய், ஐ ஆம் சாரி. நான் சத்தியமா கவனிக்கலை. எனக்குத் தெரியலை உதய். உங்க கூடப் பேசாம இருந்ததுல, உங்களைத் தவிர எதுவுமே மனசுல பதியல. எனக்குப் பிரக்னன்ஸி சிம்டம்ஸ் எதுவுமேயில்லை. அதான், சந்தேகமும் வரல. சாரி உதய். நீங்க இவ்ளோ ஹர்ட்டாவீங்கன்னு….”

சட்டென்று நிமிர்ந்து கண்ணீருடன் அவளை முறைத்தான்.

“ஏன்? ஏன் அழறீங்க உதய்?” அவன் முகம் பார்த்து, அவன் கண்ணீர் பார்த்து, அவளுக்கும் கண் கலங்கியது.

“நிஜமா நாள் தவறினதை, நான் நோட்டீஸ் பண்ணலை உதய். சாரி, ப்ளீஸ்”

விசாலாட்சி கேட்கும் வரை நாட்கள் தவறி இருந்ததை அவளும் தான் கவனித்திருக்கவில்லையே.

இந்தச் செய்தி அறிந்ததும், கணவன் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பான் என்று எதிர்பார்த்தாள் தான். ஆனால், அவனது அழுகை, அவளுக்கு அதிக அதிர்ச்சியை, வியப்பை ஏற்படுத்தியது.

“உதய்..”

மெல்ல நிமிர்ந்து, “தேங்க்ஸ் பட்டே. லவ் யூ பட்டே.” என்றான்.

அவள், அவனை இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தாள்.

இருவரும் ஒன்றாக மீண்டும் ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்துப் படங்களைப் பார்க்க ஆரம்பித்தனர்.

“ட்வின்ஸ், பட்டே” சத்தமாகச் சொல்லிக் கொண்டான் உதய். அவன் குரலிலும், மனதிலும் நிரம்பி வழிந்தது மகிழ்ச்சி.

“உன்னையும், ராகவனையும் போல வருவாங்க இல்ல பட்டே. இன்னும் எட்டு மாசம் வெயிட் பண்ணனுமா?” என்றவனைச் சிரிப்புடன் ஏறிட்டாள்.

“கண்டிப்பா ஒரு பெண் குழந்தை வேணும். இல்லனா, ரெண்டும் பெண் குழந்தையா இருந்தாலும் எனக்கு ஓகே தான்” என்றான்.

“ஒருவேளை ரெண்டும் பையனா பொறந்தா?” என்று புருவம் உயர்த்தினாள் ராகவி.

“அடுத்து திரும்பவும் பெண் குழந்தைக்கு டிரை பண்ணுவோம் பட்டே” என்று ஒற்றைக் கண் சிமிட்டியவனை, விழி விரித்துப் பார்த்தாள் ராகவி.

இருவரும் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தனர்.

“இனி, எனக்காக நீ மட்டுமில்ல. நம்ம குட்டிங்களும் இருப்பாங்க.” என்றான், கரகரத்த குரலில்,

“ம்ப்ச், உதய். உங்களுக்காக இங்க எல்லோரும் இருக்காங்க. ஏன் இப்படிப் பேசறீங்க?” அதட்டினாள்.

“எல்லாருக்கும், எல்லாரும் இருக்காங்க பட்டே. ஆனா, எனக்கு, எல்லாமே நீ தான். இனி நம்ம குழந்தைங்களும் இருப்பாங்க. இல்ல? நமக்கே நமக்கான உலகம். தேங்க்ஸ் பட்டே” என்றான் அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி,

“தேங்க்ஸ் உதய்” என்றாள் அவளும், இருவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகள் மட்டுமே ஓடியது.

அந்த இரட்டையர்கள் பூமியில் கால் பதிக்கும் முன்னே, தாய், தந்தையின் வாழ்வில் மகிழ்ச்சியை மீட்டுத் தந்திருந்தனர். ராகவிக்கு வாழ்க்கை மீண்டும் வண்ணமயமாகியது.

அவள் நினைவுகளை மீட்டி முடிக்கும் வரை காத்திருந்தது போல, சரியாக அந்நேரம் கதவு தட்டப்பட்டது.

தட்டில் இருந்த உணவும், அவளின் கையும் காய்ந்திருக்க, “இதோ, வரேன்” என்று குரல் கொடுத்து விட்டு, எழுந்து போய்க் கை கழுவி, பின் கதவை திறந்தாள் ராகவி.

சுஹாசினி, பனிமலர் வெளியில் நின்றிருந்தார்கள்.

“என்ன ரா, முகம் ஜொலிக்குது?” என்ற சுஹாசினியை சட்டை செய்யாமல் உள்ளே நடந்தாள் ராகவி.

அவர்கள் இருவரும் வெளியில் சென்று விட்டு வந்த களைப்பில் நேராகச் சென்று படுக்கையில் விழுந்தார்கள். ராகவியும் படுத்து விட்டாள்.

மூவரும் நன்றாகத் தூங்கி, எழுந்து வெளியில் வரும் போது மணி மாலை ஐந்தை நெருங்கி இருந்தது.

அவர்கள் நீச்சல் குளத்தைக் கடக்கையில் அங்கே, ராஜா அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. இவர்களைப் பார்த்ததும் கையசைத்தான்.

“ஹலோ சார், நலமா?” என்றாள் சுஹாசினி.

அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் ராகவி. அதே தான் அவனுக்கும் போல, “நல்லா இருக்கேன் சிஸ்டர்” என்றான், லேசாகச் சிரித்து.

“நாங்க பீச் ஓரமா வாக் போறோம். நீ, இங்கேயே ரிலாக்ஸ் பண்ணு ரா.” என்று விட்டு, மலருடன் கைக் கோர்த்துக் கொண்டு கடற்கரையை நோக்கி நடந்தாள் சுஹாசினி.

“வா, உலா போகலாம், கூடல் கூடும் வேளையில்…” பாடிக் கொண்டே போனாள் சுஹாசினி.

அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே திரும்பிய ராகவியிடம், “என்ன முகம் எல்லாம் ரொம்பப் பிரகாசமா இருக்கு. ரொம்பப் பிடிச்சவங்க யாருகிட்டயாவது பேசினீங்களா?” கேட்டான் ராஜா.

“பிடிச்சவங்க கிட்ட பேசினா தானா? பேசனும்னு எந்த அவசியமும் இல்ல. அவங்களை நினைச்சா கூடப் போதுமே” என்றாள். சொல்லி விட்ட பின்னே, சொல்லி இருக்க வேண்டாமோ என்றும் நினைத்துக் கொண்டாள்.

“ஆஹா” என்றவன், “உட்காருங்க” என்று நீச்சல் குளத்தை ஒட்டிப் போடப்பட்டிருந்த நீள்இருக்கையைக் காண்பித்தான்.

கால்களை நன்றாக நீட்டி அமர்ந்தாள். பக்கத்து இருக்கையில் அமர்ந்தவன், “இந்த இடத்துக்கு இதுக்கு முன்னாடியே வந்திருக்கீங்களா?” விசாரித்தான்.

“வந்திருக்கேன்” என்றாள்.

“எப்போ?”

“பதினொரு மாசத்துக்கு முன்னாடி..” என்றாள்.

“ஓ, வித் சேம் ப்ரெண்ட்ஸ்?” என்ற அவனின் கேள்வியில் கண்ணை உருட்டினாள்.

“இல்ல, வித் உதய். ஹனிமூன்..” ராகம் இழுத்தாள்.

அதைக் கேட்டதும் உதடு குவித்து நீண்டதொரு விசிலடித்தான் அவன்.

“செம்ம லொகேஷன் தான்.” என்றான். அவனைத் திரும்பி பாராமல் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் ராகவி.

“அப்புறம், என்னாச்சு? மீதி கதையைச் சொல்லுங்க. கேட்போம்” என்றான்.

error: Content is protected !!
Scroll to Top