மனம் அவளை அறியாமல் கடந்த காலத்தில் போய் நின்றது.
“குட்டிமா, குல தெய்வம் கோவிலுக்குப் போகனும். நாள் எல்லாம் முடிஞ்சதா?” என்று விசாலாட்சி கேட்க, கணினி முன் அமர்ந்து கடைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஆர்டர் செய்து கொண்டிருந்தவள், ஒருநொடி அப்படியே திகைத்து விழித்தாள்.
“என்ன குட்டிமா? கோவிலுக்குப் போகத் தோது படுமா? ஐயாவை வெளில டிரைவருக்குச் சொல்லி வைக்கச் சொல்லவா?” என்று கேட்டுக் கொண்டே போனார்.
“அவர்கிட்ட, உதய் கிட்ட பேசிட்டு சொல்றேன் ஆயா” என்றாள்.
அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே அருகில் வந்த கண்ணதாசன், “அப்படியே மாப்பிள்ளை போகாத சொல்லிடப் போறார் பாரு. இதோ வந்துட்டேன்னு, உன் கூடவே வரப் போறார். இல்ல விசாலம்?” என்றார், மனைவியையும் கூட்டு சேர்க்க முயன்று.
தலையை மறுப்பாக அசைத்த ராகவி, “அவருக்கு லீவ் கிடைக்கணும். சும்மா, சும்மா அவரால…” அவள் சொல்லி முடிக்கும் முன்பே, குறுக்கிட்டார் விசாலாட்சி.
“ஏதாவது நம்புற மாதிரி சொல்லு குட்டிமா” என்றார். அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
கண்ணதாசன் ஒரு படி மேலே போய், விசாலாட்சியின் சேலையை எடுத்து, உதய் செய்வது போலவே தன் சுண்டு விரலில் சுற்றிக் கொண்டார்.
“உங்க ரெண்டு பேருக்கும் சேட்டை கூடிப் போச்சு” பொய்யான கோபத்துடன் சொன்னாள். பெரியவர்கள் அதற்கும் சிரிக்கவே செய்தனர்.
கணினியில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை முடித்து எழுந்து கொண்டாள்.
“மணி நாலு தான் ஆகுது. எங்க கிளம்பிட்ட குட்டிமா?” என்றார் விசாலாட்சி.
“வீட்டுக்கு” என்றாள் ஒற்றை வார்த்தையில்.
“என்னடா செல்லம்? என்ன பண்ணுது?” அவள் முகம் வருடி கேட்டார்.
“ம்ப்ச், ஒன்னுமில்ல ஆயா. அவர்கிட்ட ஒழுங்கா பேசியே ஒரு மாசத்துக்கு மேல ஆகுது. அவரும் ரொம்பப் பிஸி. அதான், வீட்டுக்கு போய்ட்டு அவருக்குக் கால் பண்ணலாம்னு…” என்று இழுத்தாள்.
“நல்லது, நல்லது. செய், செய். ஓடு.” என்று இப்போது, அவரே அவளை அனுப்பி வைத்தார்.
அவள் கைப் பையை எடுத்துக் கொண்டு வெளியில் வர, காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான் ராகவன்.
அவளைப் பார்த்ததும், “ஆல் ஓகே?” என்றான்.
“இவனோட…” பல்லைக் கடித்தாள் ராகவி.
“என்ன பாப்பா?” என்றான்.
“ராகவின்னு கூப்பிடு ராகவ். நான் என்ன சின்னப் பாப்பாவா?” முகம் சுளித்தபடி கேட்டாள்.
“என்ன விஷயம் பாப்பா? ஏன் இப்படிப் பதட்டமா இருக்க?” என்று அவன் கேட்க, மேலும் அவன், அவளைக் கேள்விகளால் நிரப்பும் முன் அங்கிருந்து நகர்ந்து விட்டாள் ராகவி.
“வீட்டுக்கு போறேன். அப்புறம் பார்க்கலாம். பை” என்றாள், தன் காரை நோக்கி நடந்த படி,
“ஓகே. ஆனா, நைட் மறக்காம என்னனு சொல்லணும். சரியா?” என்றான்.
அவனுக்குப் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே காரில் ஏறினாள்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்தாள்.
அவர்களின் அறைக் கதவை படாரென்று திறந்து, அதே வேகத்தில் கதவை அடைத்து விட்டு, அவள் முன் வந்து மூச்சு வாங்க நின்றான் உதய்.
அவளுக்கு மிக நெருக்கத்தில் வந்து நின்றான்.
இருவரும் ஒரே நேரத்தில் கையை, அடுத்தவரை நோக்கி நீட்டினர்.
அவன் கையில் அலைபேசி… அவள் கையில்…
அவனது அலைபேசியில், அவள் கைகளில் இருந்தது புகைப்படமாக இருந்தது.
“இப்படியா அனுப்புவாங்க, பட்டே?” என்றான் நடுங்கும் குரலில், மேலும் அவளை நெருங்கி நின்றான்.
“வேற வேற, எப்படி.. எப்படி உங்ககிட்ட, சொல்றதுன்னு தெரியல உதய்” என்றாள், தவிப்புடன் அவன் முகம் பார்த்து,
அவள் நெற்றியில் செல்லமாக முட்டியவன், “தேங்க்ஸ் பட்டே” என்றான். கண்களில் மெல்லிய நீர்ப்படலம்.
இரு கோடுகள் பளிச்சென்று தெரிந்த, கர்ப்பத்தைப் பரிசோதிக்கும் கருவியை அவன் கையில் வைத்து அழுத்தினாள் ராகவி.
“தேங்க்ஸ் பட்டே. ஐ லவ் யூ, சோ, சோ, சோ மச். இனி நீ, நான், நாம் ஆகப் போறோம், பட்டே” என்றான் கண்களில் நீரும், உதட்டில் மந்தகாச புன்னகையுமாக.
அவர்களின் ஒரு மாதத்திற்கும் மேலான விலகலை, ஒற்றை நாளில் தீர்த்து வைத்தது அவளுக்குள் உதித்திருந்த சின்னதொரு உயிர்.