உதய ராகம் – 17 (2)

அவளை நெருங்கியிருந்தவன் ஒரு கையில் மனைவியையும், மறு கையில் பாடலையும் அணைத்திருந்தான்.

“மனோ, ஏன் பிடிக்கும்?” கேட்டாள் ராகவி.

“ராகவியை, என் பட்டை, ஏன் பிடிக்கும்னு கேளு, சொல்றேன்” என்றான் கிறக்கத்தோடு.

இப்போது அவர்களுக்கு நடுவே உதயமாகி இருந்த ராகத்திற்கு ஏற்ப இசைந்தார்கள் இருவரும்.

அங்கே காதலின் ராகம் ஒன்று உதயமாகி இருந்தது. அவள் உதயின் ராகமாகி இருந்தாள்.

ராகவி எனும் ராகத்தை இனிமையாக உதயமாக்கத் துவங்கினான் உதய்.

சிறகு முளைத்த அவன் விரல்களுக்கு வானம் ஆனாள் ராகவி.

அவர்களின் வானத்தில் உதயராகம் வெகு நேரம் மென்மையாக ஒலித்துக் கொண்டேயிருந்தது.

படக்கென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் ராகவி. காலை பதினோரு மணி தான் ஆகியிருந்தது. நினைவுகளால் நிறைந்திருந்த மனதை மெல்ல நிஜத்திற்க்கு கொண்டு வர முயன்றாள்.

மெதுவாக எழுந்து சென்று திரைசீலைகளை விலக்கி விட்டு, கடலைப் பார்க்க ஆரம்பித்தாள்.

இப்போது, “சுஹாசினியை ஏன் பிடிக்கும்?” என்ற ராஜாவின் கேள்வி காதுக்கு மிக நெருக்கத்தில் கேட்டது. அவனே பக்கத்தில் நிற்பது போன்ற பிரம்மை.

இதே கேள்வியை உதய் கேட்டது அவளின் கண் முன் வந்து நின்றது.

அன்று கடையில் ஓரளவு கூட்டம் இருந்தது. ராகவி, ராகவன், கண்ணதாசன், விசாலாட்சி என்று அனைவரும் கடையில் இருக்க, ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செய்து கொண்டிருந்தனர்.

திடீரென்று கடைக்குள் வேக வேகமாக நுழைந்தாள் சுஹாசினி. கண்கள் சிவந்து, முகமே வீங்கியிருந்தது.

“என்ன சுஹா? என்னாச்சு?” என்று கேட்ட ராகவியைக் கண்களில் நீர் கோர்க்கப் பார்த்தாள் சுஹாசினி.

“வா, வா, உள்ள வா, சுஹா” என்று அவளின் கைப் பிடித்து ட்ரையல் அறைப் பக்கம் அழைத்துக் கொண்டு போனாள் ராகவி.

“அக்கா, அக்கா இறந்து ரெண்டு மாசம் ஆச்சாம் ரா…” உடைந்து அழத் தொடங்கினாள்.

“என்ன சொல்ற சுஹா? எப்படி? மாசமா இருந்தாங்க வேற… குழந்தை..??” ராகவி அதைக் கேட்ட நொடி, கதறி அழ துவங்கினாள் சுஹாசினி.

“ஆக்சிடென்ட் ரா. என்னை.. எதுவும் கேட்காத. பிளீஸ்” அழுகையின் ஊடே கதறினாள்.

அவளைத் தன் தோள் மேல் சாய்த்து, அழுகையில் குலுங்கும் அவளின் முதுகை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்து கொண்டேயிருந்தாள் ராகவி.

துக்கத்தை முழுதாக அழுது கரைத்து விட்டு, பின்னர் நடந்ததைச் சொல்லட்டும் என்று அமைதி காத்தாள் ராகவி. ஆனால், சுஹாசினி அழுது கரைந்தாலே தவிர வாயை திறந்தபாடில்லை.

இதற்கு மேல் இவளை கடையில் வைத்து சமாளிக்க முடியாது என்று மெதுவாக, “சுஹா, வா. வீட்டுக்குப் போவோம்” என்று அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

ராகவன் ஓடி வந்து அவனது கார் கதவுகளைத் திறந்து விட்டான்.

ராகவியின் வீட்டில் இருந்து, மூன்றாவதாக இருந்தது சுஹாசினியின் வீடு.

தங்களின் வீட்டின் முன் காரை நிறுத்தி, இறங்கி கேட்டை திறந்து, மீண்டும் காரை உள்ளே சென்று நிறுத்தினான் ராகவன்.

வீட்டுக்குள் வந்தும் கூட அழுது கரைந்தாலே தவிர, ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை சுஹாசினி.

தோழியைக் குறித்த கவலை கழுத்தை நெரிக்க, என்ன செய்வதென்று தெரியாமல் விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ராகவி. அப்படியே உறங்கி இருந்திருக்க வேண்டும்.

மாலை ஏழு மணி அளவில் உதய் வந்து தான், அவளின் தோளை தொட்டு மெல்ல உலுக்கி எழுப்பி விட்டான்.

“பட்டே, என்னம்மா பண்ணுது?” என்றான் கரிசனத்துடன்,

‘கணவன் எதற்காக இங்கு வந்தான்?’ என்ற கேள்வியுடன் அவனை ஏறிட்டாள் ராகவி.

அவளின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த சுஹாசினியையும், அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.

“ஒன்னும் பண்ணலையே” என்று இயல்பாகப் பதிலளித்த மனைவியை விநோதமாகப் பார்த்து விட்டு, “வீட்டுக்குப் போகலாம், வா” என்றான்.

அவர்களின் பேச்சுச் சத்தத்தில் லேசாக அசைந்த சுஹாசினியிடம் மெலிதான குரலில், “தூங்கு சுஹா” என்ற ராகவி, அவளின் தலையைத் தன் மடியில் இருந்து மெதுவாக நகர்த்தித் தலையணையில் வைத்தாள்.

கணவனைத் தொடர்ந்து வெளியில் வந்து, ராகவனைத் தேடினாள். அவன் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்து அவனது அலைபேசிக்கு அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு கணவனுடன் காரில் ஏறினாள்.

அவர்களின் கார் தெரு முனையைக் கடந்தது தான் தாமதம், கோபத்தில் பொங்கத் துவங்கினான் உதய்.

“சுஹாசினி, ஏன் உன் மடியில் தலை வச்சு தூங்கறா? என்னைக் கண்டுக்காத. அவளை மடியில் போட்டு நல்லா தாலாட்டு. அவ மட்டும் உனக்கு ஏன் இவ்வளவு ஸ்பெஷல்? என்னை நீ…?”

“உதய்…” என்று அழுத்தமாக அழைத்து, அவனது பேச்சை நிறுத்தினாள்.

“என் கேள்விக்குப் பதில் சொல்லு பட்டே”

“எனக்கு அவளும், நீங்களும் ஒன்னா உதய்?” என்ற கேள்வியில் அமைதியானான். சாந்தமானான் உதய்.

இதே கேள்வியை இது வரை மூன்று, நான்கு முறை கேட்டு விட்டான். அவள் மீதான அதீத உரிமை உணர்வு தான் அவனை இப்படிக் கேள்வி கேட்க வைக்கிறது என்று அவளுக்கு நன்றாகத் தெரியும்.

இன்றைக்கு அவனுக்குப் பதில் கொடுத்தே ஆக வேண்டும் என்று முடிவுடன் வீடு சென்றாள் ராகவி.

இரவு உறங்க தயாராகும் போது, “உதய், எங்கம்மா கடல்ல மூழ்கின ஆக்சிடென்ட் சொன்னேன் இல்ல. அதுல சுஹா, சுஹாவும் இருந்தா.” என்றாள் மெல்ல.

உதய் கையில் இருந்த அலைபேசியை அதிர்ச்சியில் தவற விட்டான்.

நல்லவேளையாக அவன் படுக்கையில் இருந்ததால் அலைபேசி தப்பித்தது.

“என்ன, என்ன சொன்ன பட்டே?” அவனால் நம்பவே முடியவில்லை.

மெல்ல தலையசைத்தாள் ராகவி.

திருமணத்திற்கு முன்பு இதைக் குறித்துப் பேசும் போது, தானும், அம்மாவும் மட்டுமே கடலில், அலையில் மாட்டிக் கொண்டு… என்பதாகத் தான் சொல்லி இருந்தாள். ஆனால், இன்று நடந்ததை அப்படியே சொன்னாள் ராகவி.

அவர்கள், அதாவது ராகவி, ராகவன், சுஹாசினி, பனிமலர் அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்கள்.

பொதுத் தேர்வுக்குப் படித்து, படித்து மூளை சூடாகி இருந்தது. தேர்வு முடிந்த மறுநாளே அவர்களைத் திருவான்மியூர் பீச்சிற்கு அழைத்துச் சென்றார் தெய்வநாயகி.

அவர்கள் நால்வருக்கும் நன்றாக நீச்சல் தெரியும். அந்தத் தைரியத்தில் அவர்களைக் கடலில் இறங்க விட்டார் ராகவியின் அம்மா தெய்வநாயகி.

ராகவன், மலர் இருவரும் கரையில் அமர்ந்து விட்டனர். அவர்களுடன் அமர்ந்திருந்தார் அவளின் அப்பா சிதம்பரம்.

லேசாக அலைகள் கால் நனைக்கும் இடத்தில் நின்று தான் பெற்ற மகளையும், பெறாத மகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் தெய்வநாயகி.

கடலுக்குள், அலைகளுக்குள் விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்கு உலகம் நீருக்குள் சுருங்கி இருந்தது.

அனைத்தையும் மறந்தவர்களாக நீரோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள் ராகவியும், சுஹாசினியும்.

முழுதாக அரை நிமிடம் தண்ணீருக்கு அடியில் மூச்சை அடக்கி இருந்து விட்டு மேல வந்த ராகவி, சுஹாசினியை காணாது பதறிப் போனாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீரை தவிர எதுவும் தட்டுப்படவில்லை.

error: Content is protected !!
Scroll to Top