உதய ராகம் – 16 (3)

நினைவு தெரிந்த நாளில் இருந்து சிறுக சிறுக சேர்த்த பணம், அதை அப்படியே தூக்கி கொடுக்கையில்… கொஞ்சமே கொஞ்சம் பெயர் தெரியா ஏதோ ஒரு உணர்வு அவளின் மனதை அழுத்த தான் செய்தது.

இதை எப்படிக் கணவனிடம் சொல்வது? சொல்லவா, வேண்டாமா? மீண்டும் ஒரு சண்டைக்கு அவள் தயாரா? என்ற யோசனையுடன் அவள் நிமிர,

“சொல்லிடு கா, அது தான் பெட்டர்.” என்றான் ராகவன், அவளின் மனதை படித்தவன்.

“ம்ம்”

என்னமோ தாங்கள் தான் ஏதோ தவறு செய்து விட்டு, அதை மறைக்க முயல்வது போல அவளும், ராகவனும் பேசிக் கொண்டிருப்பது அவளுக்குச் சிரிப்பை மூட்டியது.

அவள் இருந்த நிலையில் காவ்யா மேல் அவளுக்குக் கோபமே வரவில்லை. அது அவளுக்கே ஆச்சரியமாகக் கூட இருந்தது.

அன்றிரவு கணவனிடம், “உதய்…” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.

“சொல்லு பட்டே” என்றான். லேப்டாப்பை அணைத்து வைத்து விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

“காவ்யா, கார் கேட்டா….” செக் எழுதி நீட்டும் போது இல்லாத தயக்கம் இப்போது மெல்ல எட்டிப் பார்த்தது.

“என்கிட்ட ஏன் சொல்லலை. உனக்கு எப்போ கால் பண்ணா? அவ, வர வர ரொம்பப் பண்ணிட்டு இருக்கா. அதென்ன என்கிட்ட கேட்காம, உன்கிட்ட கால் பண்ணி கேட்கறது. அவ கால் பண்ணதும் உடனே என்கிட்ட சொல்றதுக்கு என்ன பட்டே? எப்போ போன் பண்ணா உனக்கு? என் போனை எடு, அவகிட்ட என்னனு கேட்கறேன்”

அவனுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. அவன் அலைபேசியை எடுக்கக் கை நீட்ட,

“உதய்…” மெல்ல அழைத்தாள்.

“என்ன பட்டே..?”

“நான்.. நான் வாங்கிக் கொடுத்துட்டேன்.” திக்கினாள்.

“என்ன? எதுக்கு? எவ்ளோ ஆச்சு? என்கிட்ட கேட்காம எதுக்கு அவளுக்கு…” பேசிக் கொண்டே போனவனை, கைப் பிடித்து அவனின் பேச்சை நிறுத்தினாள்.

“அவங்க, நீங்க வாங்கிக்கச் சொன்னதா தான் சொன்னாங்க உதய்” அந்தப் பதிலில் வாயடைத்துப் போனான். செய்தி தந்த அதிர்ச்சியுடன் விழி விரித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவருக்குமே இதற்கு முந்தைய சண்டை நினைவில் வந்து சென்றது.

“என்ன கார்? எப்படிப் பே பண்ண? எவ்ளோ ஆச்சு?” அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கவும் தெம்பில்லாமல் கேட்டான்.

“மாருதி வேகன் ஆர், ஆறு லட்சம் ஆச்சு”

“ஏன் பட்டே? ஆறு லட்சம் மா. முடியாது சொல்லி இருக்கலாம் இல்ல. அங்க இருந்தே எனக்குக் கால் பண்ணி இருக்கலாம் இல்ல. ஐ ஆம் சாரி, பட்டே”

சங்கடத்துடன் தலையைக் குனிந்து கொண்டான். அவனால், அவளை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.

மீண்டும் மீண்டும் சேலை சம்பவம் தான் இருவருக்கும் கண் முன் வந்து நின்றது.

அன்றைக்கு ராகவி இதற்காகத் தானே அத்தனை பேச்சு பேசினாள். அவனுக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாள்.

ஆனால், உதய் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லையே.

இப்போது அதை உணர்ந்தவனாக, “என் தப்பு தான் பட்டே. என்னால தான். நான் கேட்க மாட்டேன். தலையிட மாட்டேன்ற தைரியம் தானே, அவளை இப்படி உன்னை மிரட்டி வாங்க வைக்குது…”

“என்னை மிரட்டலை உதய். அப்படி மிரட்டி கேட்டு இருந்தா… என்கிட்ட இருந்து அவ ஒரு ரூபா கூட வாங்க முடியாது. இது நான், உங்களுக்காகப் பண்ணது. விடுங்க. உங்க தங்கை தானே. அவளுக்குத் தானே செய்தோம். அதுவும் ரொம்ப உபயோகமா கார் தானே வாங்கி இருக்கா. நம்ம வீட்ல பிரபா அத்தான், நம்ம கார்னு ரெண்டு கார் நிக்குது. பார்க்கும் போது அவளுக்கும் ஆசை இருக்கும் தானே? அதான், கேட்டு இருக்கா. இருக்கட்டும் விடுங்க.” என்று முடித்து விட்டாள் ராகவி.

“என்னை, அவ்ளோ பிடிக்குமா பட்டே, உனக்கு?” குழைந்தான்.

“உங்ககிட்ட சண்டை போட பிடிக்காது. தெம்பும் இல்ல. அதுக்காக வாங்கிக் கொடுத்தா…”

“பட்டே…” என்று அவளை நோக்கி நீண்ட கரங்களில் பட்டு விடாமல் தப்பித்து ஓடினாள் ராகவி.

அந்நிகழ்வை அத்துடன் மறந்து விட்டனர் இருவரும். ஆனால், இதற்காகப் பின்னால் தான் மிகவும் வருந்த போவதை உதய் அறிந்திருந்தால் அன்றைக்கே, தங்கையை அழைத்துக் கண்டித்து இருப்பானோ? ராகவியும் சற்றே சுதாரித்து இருப்பாளோ? மனம் சுக்கு நூறாக உடைய வேண்டும், அவர்கள் இருவரும் பிரிய வேண்டும் என்று இருக்கையில், எத்தனை குட்டிக் கரணம் அடித்தும் அதை அவர்களால் மாற்ற முடிந்திருக்க முடியுமா என்ன?

விதியை மதியால் வெல்ல முடியும் தானே? ஆனால், இங்கே அவர்கள் தான் மதியை மூட்டை கட்டி மூலையில் எரிந்து இருந்தார்களே. பின்னே எங்கிருந்து வந்து அது உதவப் போகிறது.

“ஆக, காவ்யா தான் வில்லி?” என்ற ராஜாவின் கேள்வி, ராகவியைக் கலைக்கவேயில்லை.

“ராகவி…” ஒற்றை விரல் கொண்டு அவள் தோள் தொட்டான்.

“ஆ… என்ன?” தூக்கத்தில் இருந்து விழித்தவளை போல விழித்தாள்.

“காவ்யா வில்லியா…” அவன் கேட்டு முடிப்பதற்குள்,

“உதய் தான் வில்லன்” பட்டென்று பதில் சொன்னாள்.

“எப்படி?”

“தன் வாழ்க்கையில் என்ன நடக்குது, தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சும் முட்டாளா இருந்தா, மூக்கு மட்டுமில்ல, மனசும் உடைஞ்சு தான் போகனும்” என்றாள் கடலைப் பார்த்துக் கொண்டே.

“புரியுது, அதை விடுங்க. இதைப் பத்தி சொல்லுங்க. கதைக்கு நடுவுல, ஒரு விடியலில் வாழ்க்கை எப்படி வண்ணமயமா மாறிச்சு? அங்க.. அந்த இடத்தில் என்ன நடந்ததுனு சொல்ல மறந்துட்டீங்க. கதையில் ஃப்ளோ முக்கியமில்லயா?” ஆர்வமாகக் கேள்வி கேட்டான்.

“ம்ம், எங்க தோட்டத்தில் ரோஜா செடிகள் கலர், கலரா பூ பூத்து, குலுங்கி, வீடே வண்ணமயமாய் ஆச்சு” இப்போது வானம் பார்த்தபடி கிண்டலாகச் சொன்னாள்.

error: Content is protected !!
Scroll to Top