உதய ராகம் – 16 (2)

அன்றைக்குக் கடையில் பெரிதாகக் கூட்டமில்லை.

ராகவி கடைக்குள் நுழையவும், ராகவன் தன் பணி முடித்து, நேராகக் கடைக்கு வரவும் சரியாக இருந்தது.

பல நாட்கள் கழித்து, இருவரும் ஒன்றாக அமர்ந்து இல்லாத கதைகளைப் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

“உன் போன் அடிக்குது குட்டிமா” என்று அவளின் அலைபேசியை எடுத்து வந்து நீட்டினார் விசாலாட்சி.

அலைபேசி திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் உள்ளுக்குள் லேசாக உதறல் எடுக்கவே செய்தது. இம்முறை இவளால் என்ன பிரச்சினை வரக் காத்திருக்கிறதோ என்று சிந்தனை ஒடுகையிலேயே, மனதில் பயக் காளான் ஒன்று முளைப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

“சொல்லுங்க, காவ்யா அண்ணி”

“………’

“இதோ வரேன். ஒரு அரை மணி நேரம் டைம் கொடுங்க” என்றாள்.

ராகவனிடம் என்ன காரணம் சொல்லி விடை பெறுவது என்று யோசித்தபடி அவள் திரும்ப, “காரை பார்த்து ஒட்டு. கவனம்” என்று எழுந்து கடைக்குள் நுழைந்த வாடிக்கையாளரை கவனிக்கப் போனான் அவன்.

அடுத்த இருபதாம் நிமிடம் காவ்யா குறிப்பிட்ட அந்த ஷோரூம் முன் இருந்தாள் ராகவி.

“வாங்க அண்ணி” என்று வரவேற்றவளுடன் உள்ளே நடந்தாள் ராகவி.

காவ்யா, புதிதாகக் கார் வாங்க தான் அவளை அழைத்திருந்தாள். கார் பற்றிய விவரங்கள் அவளுக்குத் தான், நன்றாகத் தெரியும், நல்ல காரை தேர்ந்தெடுக்க, அவள் தான் உதவ வேண்டும் என்று காவ்யா கேட்டுக் கொள்ளவே, மறுப்புச் சொல்லாமல் வந்திருந்தாள் ராகவி.

முழுதாக இரண்டு மணி நேரங்கள் செலவழித்து, மாருதி வேகன் ஆர் வாங்குவது என்று முடிவெடுத்திருந்தனர்.

ராகவி இம்முறையும் கேள்விகள் எதுவும் கேட்கவில்லை.

காவ்யா மற்றும் அவளின் கணவரின் பேச்சுகளைச் சிறு புன்னகையுடன் கேட்டுக் கொண்டாள்.

காரை அவளே டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து, சுளையாக ஆறு லட்சத்திற்குச் செக் எழுதி கொடுத்து விட்டு வந்தாள் ராகவி.

கடந்த முறை போல் அல்லாது, இம்முறை காவ்யாவின் முகத்தில், சிறிதே குற்ற உணர்ச்சி போல ஏதோ ஒன்று மின்னல் வேகத்தில் வந்து விட்டுப் போனதை ராகவி கண்டு கொள்ளவேயில்லை.

“வாழ்த்துகள், காவ்யா அண்ணி. மத்த பார்மலிடீஸ் நீங்களே முடிச்சுடுங்க. நான் கிளம்பறேன். நேரமாகுது” என்று, உடனே அங்கிருந்து கிளம்பியும் விட்டாள் ராகவி.

அவளுக்குத் தான் காரணம் காட்ட வேலையும், கடையும் காத்திருந்ததே!

காரை மீண்டும் கடையை நோக்கி செலுத்துகையில் மனம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.

இது, இது தான் நடந்து விடக் கூடாது என்று அவள் நினைத்தது. சில ஆயிரங்களில் தொடங்கி, லட்சத்தைத் தொட்டு, இன்று லட்சங்களில் வந்து முடிந்திருக்கிறது.

ஆறு லட்சம்!!!

அந்தக் காரை வாங்குகையில் காவ்யா தலையைத் திருப்பி ராகவியின் காரைப் பார்த்தது நினைவில் வந்தது.

அவளது கார் அவளது சுய சம்பாத்தியத்தில், சேமிப்பில் வாங்கியது.

காவ்யா முறையாக உதயிடமும், அவளிடமும் கேட்டிருந்தால் மகிழ்ச்சியுடன் செய்திருப்பாள் அவள். ஆனால், இப்படி அவளைக் கார் ஷோரூமில் சென்று நின்று கொண்டு, அலைபேசியில் உதவி செய்ய வா, என்று அழைத்து, பணத்தைக் கட்ட வைத்தது தான் வலித்தது.

அவள் ஏதோ பணம் காய்க்கும் மரம் போல, ஒவ்வொரு முறையும் காவ்யா அவளை நடத்துவது சொல்லொண்ணா கோபத்தைத் தந்தது.

காரை அவர்களின் கடையின் முன் நிறுத்தி விட்டு உள்ளே போனாள்.

அவளது மோசமான மனநிலையை உணர்ந்து கொண்டவனாக, அவள் உள்ளே நுழையும் போதே, அவளுக்குப் பிடித்த சாக்லேட் பிரவுனிஸ் நிறைந்த சிறிய அட்டைப் பெட்டியை அவள் கையில் திணித்தான் ராகவன்.

சட்டெனப் புன்னகையில் மலர்ந்தது அவள் முகம்.

கடையின் ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்டனர் இருவரும்.

“உதய்காக…”

“மாமாக்காக…” இருவரும் ஒன்று போலத் தொடங்கி விட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்.

“காவ்யா, உதய் தங்கை தானே ராகவ். அவர் செய்தா என்ன, நான் செய்தா என்ன? உரிமையா கேட்கறான்னு எடுத்துக்கிட்டேன்.” என்றாள், ஒரு சாக்லேட் பிரவுனியை எடுத்து வாயில் திணித்தபடி. தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள் அவள். வருந்தி மட்டும் என்னவாகி விடப் போகிறது என்ற எண்ணம் தான்.

“நாளைக்கு, நானும் இதே போல உனக்குச் செய்யத் தானே, செய்வேன் பாப்பா? சோ, நீ செய்ததில் தப்பு எதுவும் இல்ல. ஃப்ரீயா விடு” என்றான் ராகவன்.

தன் மனதின் ஓரத்தில் அரிக்கும் பெயர் அறியா உணர்ச்சியை அறிந்தவனாக அவன் பேசியது அவளுக்கு ஆறுதலையும், புன்னகையையும் ஒருங்கே தந்தது.

அவள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே கடைக்கு வருகிறாள். முதல் முறை அவள் கடையைக் கவனித்துக் கொண்ட போது, இருநூறு ரூபாய் கொடுத்தார் விசாலாட்சி. பின்னர், அது இரண்டாயிரம் ஆனது. அதுவே கல்லூரி நாட்களில் இருபது ஆயிரம் ஆனது. இப்போது கடையின் லாபத்தில் இருந்து அவளுக்கென்று மாதாமாதம் ஒரு தொகையைத் தனியாகத் தந்து விடுகிறார்கள்.

ராகவனோ, அவளோ எத்தனை நாட்கள் வேலை பார்க்கிறார்கள் எனக் கணக்கிட்டு அதற்கான தொகையை அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவார்கள். காசு விஷயத்தில் அவளின் ஐயா, ஆயா இருவரும் வெகு கறார்.

பள்ளி, கல்லூரி நாட்களில் அவளுக்குத் துணையாக வந்து நிற்கும் சுஹாசினி, மலருக்கு கூட வற்புறுத்தி பணத்தைக் கையில் கொடுப்பார் விசாலாட்சி. இன்று வரையும் கூட அதுவே தொடர்கிறது.

“கையில செலவுக்குக் காசில்ல. ரெண்டு நாள் கடைக்கு வேலைக்கு வந்தா, ஒரு ரெண்டாயிரம் தேரும்” என்று இன்றைக்கும் சுஹாசினி கடைக்கு வருகிறாள் தான். வேலையில் அவளைக் குறை சொல்லவும் முடியாது.

error: Content is protected !!
Scroll to Top