பூங்காற்றும் போர்வை கேட்கும் அவ்விரவில், குளிரை பொருட்படுத்தாமல் தன் கைகளைத் தன்னைச் சுற்றி படர விட்டு, தன்னைத் தானே அணைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ராகவி.
மெல்ல தலை உயர்த்தி வானம் பார்த்தாள். நடைப் பழகும் குழந்தை போல இருளுக்குள் தத்தி தத்தி ஒளிர்ந்து கொண்டிருந்தது நட்சத்திரம்.
அதைக் கண்டதும் சற்று முன்பு உதயிடம் மின்னி மறைந்த கோபம் தான் நினைவில் வந்தது.
திருமணமாகி இத்தனை மாதங்களில் எத்தனையோ சண்டைப் போட்டிருக்கிறார்கள். எதற்கேதற்கோ சண்டைப் போட்டிருக்கிறார்கள். ஆனால், இன்று போல என்றுமே வார்த்தைகள் தடித்துப் போனதில்லை.
அனைத்திற்கும் அடுத்தக் கட்டம் என்ற ஒன்று உண்டல்லவா? அதை நோக்கித் தான் போகிறார்கள் போலும்.
அவளால் கோர்வையாய் எதையும் யோசிக்க முடியவில்லை. பல்வேறு எண்ணங்கள் அவளை ஆக்கிரமித்திருக்க, அதன் நாயகனே அவளது பக்கத்தில் வந்து நின்றதை அவள் உணரவேயில்லை.
“ஐ அம் சாரி ராகவி” என்றான் மெலிதான குரலில். அவள் பதிலே பேசவில்லை.
அது தான், ஏற்கனவே அதிகமாகப் பேசி விட்டோமே என்று அமைதிக் காத்தாள் அவள்.
“இனி… இனி, இது போல…”
“நடக்காது? அது தானே?” என்றாள் அவனைத் திரும்பியும் பாராமல்,
“இல்ல..”
“இந்த வசனம் கேட்டு, கேட்டு எனக்கு அலுத்து போச்சு.
அரசியல்வாதிகள் கொடுக்கற வாக்கு போலவே இருக்கு. இன்னொரு முறை சொல்லாதீங்க, பிளீஸ்” என்றாள் உணர்ச்சிகள் துடைத்த குரலில்.
“சாரி, ராகவி..”
“ம்ம்”
“ராகவி, என் குடும்பம் பத்தி எனக்கு நல்லா தெரியும். இவங்க மைண்ட் செட் நல்லா தெரிந்தவன் நான். அது தெரிஞ்சு தான், வேலைக்குப் போகாத… வீட்ல இருக்கா பொண்ணா…” அவள் முறைப்பில் அப்படியே வாயை மூடிக் கொண்டான் உதய்.
“இனி போய் வீட்ல இருக்கப் பொண்ணு தேட முடியாது. இட்ஸ் டூ லேட்.” என்றாள் நக்கலாக,
“ஆமா, இவ்வளவு நேரம் தூங்கிட்டு தானே இருந்தீங்க? அதையே கண்டினியூ பண்ண வேண்டியது தானே? அதை விட்டுட்டு வந்து பெரிய அறிவு போலீஸ் மாதிரி பேசி என்னைக் கடுப்பாக்கிட்டு இருக்கீங்க”
“தூக்கம் வரல பட்டே. சும்மா தூங்கற மாதிரி….” அதற்கும் முறைப்பையே பதிலாக்கினாள்.
“வீட்ல இருக்கப் பொண்ணு வேணும். ஹ்ம்ம், வேலைக்குப் போனாலும், போகலைன்னாலும் அந்தப் பொண்ணுக்கு தேவையான ரெஸ்ட் வேணும் தானே? அதை நீங்க கொடுக்கணும் தானே? பொண்ணுங்க, நாங்க மட்டும் என்ன ஸ்பெஷல் மேடா? ரோபோட் மாதிரி வேலை செய்ய?”
அழுத்தமாகக் கேட்டாள்.
“தப்பு தான்”
“எது?”
“எல்லாமே…”
“சிறப்பு” என்றாள் ராகவி.
“என் பேரை சொல்லி பேசு பட்டே” கெஞ்சினான்.
“நீங்க “ஏய், ராகவி” சொன்னது மறக்கட்டும், அப்புறம் பேரை சொல்றேன். இல்லனா, அத்தான், பொத்தான்னு ஏதாவது சொல்றேன்.” என்றாள் பார்வையை வானில் பதித்து,
“அதான், சாரி சொன்னேனே மா?”
“சொன்னீங்க, அதுக்கு? உடனே, அச்சோ, நீங்க தப்பே பண்ணல. ஏன் சாரி சொல்றீங்கன்னு உங்களைக் கொஞ்சனுமா?
தப்பு உங்க பேர்ல இருக்கு. நீங்க அதை ஒத்துக்கிட்டாலும், இல்லைனாலும்… சோ, உங்களை மன்னிக்கறதும், கோபத்தை அப்படியே பிடிச்சு வைக்கறதும் என் விருப்பம் தான்”
பால்கனி சுவரில் சாய்ந்து, சரிந்து, தரையில் அமர்ந்தாள்.
அவளோடு கால் நீட்டி அவனும் அமர்ந்தான்.
“நிமிஷத்துக்கு ஒரு முகம் காட்டுறீங்க. நீங்க மட்டுமில்ல. உங்க குடும்பமே. எனக்குத் தான் மண்டை குழம்பி பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு. சரியான டிராமா கம்பனி. அந்நியன் தோத்தான் உங்க எல்லோர் கிட்டயும். குடும்பமே மல்ட்டிபில் பர்சனாலிட்டியோட சுத்துறாங்க பா” களைப்புடன் முணுமுணுத்தாள்.
மெல்ல எழுந்து அறைக்குள் சென்றாள். உதயும் பின்னோடு வந்தான். அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது கெஞ்சல் பார்வையை வேண்டுமென்றே கொஞ்சல் பார்வையாக அர்த்தப்படுத்திக் கொண்டாள் ராகவி.
“கூடல், யுனிவர்சல் சமாதான கொடியா இருக்கலாம். ஆனா, நாட் ஃபார் மீ. அது உங்களுக்கே தெரியும். ஒற்றைக் கூடலில் எல்லாம் என்னால எதையும் மறக்க முடியாது. சோ…” என்று வெகு இயல்பாக அவனைத் தூர தள்ளி வைத்து விட்டு, படுத்தவள் சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள்.
மனைவியின் வார்த்தைகள் அவன் மனதை தைக்க, அவளை எப்படிச் சமாதானப் படுத்துவது என்ற சிந்தனையுடன் விழி மூடாமல் அவளையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் உதய்.
சின்ன, சின்ன வார்த்தைகள் தான், பெரிய பெரிய பிளவுகளை ஏற்படுத்தும் காரணியாக அமைந்து விடுகிறது.
அன்றைய வாக்குவாதத்திற்குப் பிறகு, அவர்களுக்கு நடுவே அவர்கள் அறிந்தே மிகப்பெரிய இடைவெளி விழுந்து விட்டிருந்தது.
உதய் தன் பலம் கொண்ட மட்டும் அவளைத் தன் பக்கமாக இழுத்து, இடைவெளியை குறைக்க முயன்றான். ராகவிக்குள் மரமாகி வளர்ந்து நின்ற வீம்பு அவளைக் கணவன் பக்கம் சாய விடவில்லை.
கணவன் உண்மை பேசாத வரை தன் மனம் இளகாது என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.
இருவரும் ஒன்றாக அமர்ந்து, பேசி, சிரித்த காலங்கள் மாறி ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி நின்றார்கள். தங்களுக்குள் குறைந்த காதலை ஒத்துக் கொள்ள மனமின்றி, பிரிந்து நின்றதற்கு வேலையைச் சாக்காகக் கைக் காட்டினார்கள்.
இப்படியே ஒரு மாதம் கடந்திருந்தது.
அவர்கள் எதிர்பாராத, ஒரு அழகான விடியல் அவர்கள் வாழ்வை மீண்டும் தலை கீழாகப் புரட்டிப் போட்டு வண்ணமயமாக்கியது. அதுவரை திருமண வாழ்வில் நிகழ்ந்த அத்தனை கசப்பான சம்பவங்களையும் அதன் சுவடின்று மறந்து போகத் தயாரானாள் ராகவி. ஆனால், காலம் அவளை அப்படி எளிதாக மறக்க விடாதே!!