“யா, எனக்கும் தான். இன்னொரு முறை நாம ரூமில் இருக்கும் போது வந்து கதவை தட்டட்டும், எப்படி இருக்கேனோ, அப்படியே போய்க் கதவை திறப்பேன்” என்றவளை அதிர்ந்து போய்ப் பார்த்தான் உதய்.
“இப்படிப் பேச உனக்கு அசிங்கமா…”
“இல்ல” என்றாள் தீர்க்கமாக,
“நீங்க அவளுக்கு அத்தான், பொத்தான் என்னவாவேனா இருங்க. ஆனா, இப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. நாம ரூமில் இருக்கும் போது, அதுவும் நைட்… நமக்குனு ஒரு பிரைவசி இருக்கு. அதைக் கொடுக்க அவளுக்கே தெரியாத போது, நான் மட்டும் ஏன் நாசூக்கு பார்க்கணும்? கொஞ்சம் கூட விவஸ்த்தை இல்லாம, பாலு வேணுமா, மோரு வேணுமா? அத்தை கூப்பிட்டாங்க, மாமா கூப்பிட்டாங்கன்னு வந்திடுவா… ஏன் இப்படிப் போய்ப் பிரபா அத்தான் கதவை தட்ட சொல்லுங்க, பார்ப்போம். கொஞ்சம் கூட அறிவு இல்லாம…”
“ஏய், சின்னச் சின்ன விஷயத்தை ஏன் இப்படி ஊதி பெருசாக்கிட்டு இருக்க ராகவி?”
“எது சின்னது உதய்? வாரத்தில் ஒரு நாள் இது போலப் பண்றா. அவ்ளோ எரிச்சலா வருது. மூஞ்சிக்கு நேரா ஒரு நாள் சொல்லத் தான் போறேன்”
“என்னமோ பண்ணித் தொலை” என்றான் எரிச்சலுடன்,
“காவ்யா..” என்று அவள் தொடங்க,
“பேசாம படுக்கப் போறியா இல்லையா? எனக்குக் கோபத்தைக் கிளப்பாத…”
“இப்ப மட்டும் அப்படியே சாந்தமா இருக்கார்”
“ராகவி…”
“இங்க பாருங்க உதய். இந்த முறை வேணும்னா பொய்யை திறமையா நீங்க மறைக்கலாம். ஆனா, அடுத்த முறை…”
“என்ன சொன்ன? என்ன சொன்ன?” அவளுக்கு நெருக்கத்தில் வந்து நின்றவனை, கையைக் கட்டிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். அது இன்னும் அவனது கோபத்தைக் கிளற,
“இன்னொரு முறை பொய் சொல்றேன்னு சொல்லிப் பார்…”
“இதோ, இதோ உங்க கோபமே சொல்லுது, உங்க பதட்டம் சொல்லுது.. உங்க உளறல் சொல்லுது, நீங்க உண்மை பேசலைன்னு…” படபடவென்று அடுக்கினாள்.
“ராகவி என் பொறுமையைச் சோதிக்காத.. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு… எனக்கேத்..”
“ஓஹோ, என்ன பண்ணுவீங்க? என்ன பண்ணிடுவீங்க? இதோ இப்ப பண்றீங்களே மிரட்டல், அதுவா? இல்ல அடியா? ஆனா, எது பண்றதா இருந்தாலும் ஒரு முறைக்கு நாலு முறை யோசிச்சு பண்ணுங்க போலீஸ். கோபத்தில் என் மேல.. உங்க சுண்டு விரல் பட்டா கூட அடுத்த நிமிஷம் நீங்க ஒத்த குரங்கா தான் இங்க இருக்கணும். ஞாபகத்தில் வச்சுக்கோங்க” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள்.
உடல் இறுக, கண்கள் சிவக்க, கை முஷ்டி மடக்கி, கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.
“காலையில் போன் அட்டெண்ட் பண்ணதும்… “என்ன உளருற” சொன்னீங்க. இப்போ கேட்கும் போது, “நான் எங்க துணி எடுக்கச் சொன்னேன்?” கேட்டீங்க. ஆனா, கடைசியில் அப்படியே மாத்தி பேசுறீங்க. என்னமோ நீங்க சொல்லி தான் அவ சேலை வாங்கின மாதிரி என்னை நம்ப வைக்கப் பார்க்கறீங்க.
எதுக்கு உண்மையை மறைக்கறீங்கன்னு எனக்குப் புரியல. காசை ஆத்துல போட்டாலும் அளந்து தான் போடணும்னு ஆயா சொல்வாங்க. காவ்யா, இப்படி வீண் செலவு பண்றதுக்குத் தான் சொல்றேன். மத்தபடி அவங்களுக்குத் தேவைபட்டதை வாங்கினா… நான் எதுவும் சொல்லப் போறது இல்ல. இதுக்கு முன்னாடி எத்தனை முறை வந்து நம்ம கடையில் துணி எடுத்து இருப்பாங்க. அப்ப எதுவும் சொன்னேனா? பத்து, இருபது ஆயிரம் பெருசா தெரியல. ஏன் நடைக்கடை ஐம்பதினாயிரம் கூட நான் உங்ககிட்ட வந்து கம்ப்ளைன்ட் பண்ணல. ஆனா, இப்படி லட்சங்களில்…
எனக்கு அவங்க வேணும்னு பண்ணது போல இருந்தது, கடையவே திருப்பிப் போட்டு, கடைசியில் நாலே நாலு சேலை எடுத்து…
என்னமோ, நமக்கு நடுவுல அவங்க ஏதோ கேம் ஆடுறது போல இருக்கு…
ம்ப்ச், நான் தான் ரொம்ப யோசிக்கறேன் போல…”
“தெரிஞ்சா சரி” என்று எரிச்சலுடன் சொல்லி விட்டுப் படுக்கப் போனான் உதய்.
“உதய்…”
“கொஞ்ச நேரம் பேசாம இருந்து தொலையேன். காசு, காசு… மனுஷன் நிம்மதியே போச்சு. நாளைக்கு நான் வேலைக்குப் போகவா, வேணாமா? விடிய விடிய உட்கார்ந்து உன் கேஸ் ஃபைல் பார்க்க சொல்றியா என்னை? வீட்ல யார் என்ன பண்ணாலும், கேஸை என் பேரில் எழுது, என்ன? பிளடி ஹெல்”
அவளுக்கு மளுக்கென்று கண்கள் குளம் கட்டியது.
தன்னைத் தானே நொந்து கொண்டாள் ராகவி. இதைப் பற்றிக் கணவனிடம் பேசி இருக்கக் கூடாது. எப்போதும் போல, இப்போதும் அவனிடம் கொண்டு சென்றிருக்கக் கூடாது. அவனிடமிருந்து என்ன பதில் வரும் என்று தெரிந்தே கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாது.
தான் காசுக்காகப் பேசுவதைப் போலக் கணவன் சொன்னது அத்தனை வலித்தது அவளுக்கு.
விஜியை பேசும் போது, அசிங்கமாக இல்லையா? என்று கணவன் கேட்டது, அவ்வளவு வலித்தது.
அவளுக்கு இப்படி எல்லாம் பேசவே தெரியாது, வரவும் வராது. ஆனால், இன்று கோபத்தில், வார்த்தைகள் வரம்பு மீறியதாக உணர்ந்து வருந்தினாள் ராகவி.
தான் என்னவாகி கொண்டிருக்கிறோம் என்ற கவலை அவளுள் மெல்ல துளிர்க்க ஆரம்பித்தது.
இங்கே இவர்கள் சொல்வது போல, தான் காசு இருப்பதினால் தான்… நினைக்கையிலே சிரிப்பு வரும் போலிருந்தது.
சிறு வயதில் இருந்தே சேமிப்பின் அவசியத்தைக் கற்றுக் கொடுத்து தான் வளர்த்தனர் அவள் வீட்டில். காசு எப்போதும் இருந்தது தான். கேட்டது உடனே கிடைத்து விடும். ஆனால், அவர்கள் தேவையற்ற எதையும் ஒரு நாளும் கேட்டதே கிடையாது.
பணத்தின் அருமை தெரிந்த அவளுக்கு இப்படிக் கையை வீசி, காசை செலவழிப்பது கவலை அளித்தது. அதிலும், இன்று லட்சத்தில் தொடங்கியது, நாளை லட்சங்களில் போய் முடிய கூடாது என்ற கவலை தான் அவளுக்கு.
மேலும், காவ்யாவிற்குத் தேவையான, அவசியமான பண விவகாரங்களில் உதவுவதில் அவளுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. அது கணவனுக்குப் புரியவில்லை என்பதை நினைக்கையில் வலித்தது.
என்ன தான் ஜவுளி கடை வைத்திருந்தாலும் அவளே இவ்வளவு பணத்தை ஒரு சேலையில் நிச்சயம் போட மாட்டாள் எனும் போது…
மனதில் ஏதேதோ எண்ணங்கள் வலம் வர, கசிந்திருந்த கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
கண்ணீரை கணவனிடம் காட்ட விரும்பாமல், அறையை ஒட்டி இருந்த பால்கனியில் போய் நின்று கொண்டாள்.
மனைவியின் மனப் போராட்டத்தைக் கொஞ்சமும் உணராமல், உதய் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.