இளநீல வண்ண மைசூர் பட்டு அவளின் உடலை மென்மையாய் தழுவி இருந்தது. காதில் நீல நிற கற்கள் பதித்த ஜிமிக்கி, கன்னம் தொட்டு உறவாடிக் கொண்டிருந்தது. கழுத்தை ஒட்டி முத்து பதித்த ஆரம். இரு கைகளிலும் சிணுங்கிக் கொண்டிருந்தது மெல்லிய தங்க வளையல்கள். இடையைத் தொட்டுக் கொண்டிருந்த பின்னலின் பாதியை சுற்றியிருந்தது நெருக்கமாகத் தொடுத்த குண்டு மல்லி சரம். புருவ மத்தியில் ஸ்டிக்கர் பொட்டு, வகிட்டில் பளிச்சென்று குங்குமமாக இருந்த ராகவி, கணவனுடன் திருமண மண்டபத்தில் இருந்தாள்.
காலை பின்னிய சேலையை லேசாக விலகி விட்டு, “மெதுவா நடங்க, உதய்” சிணுங்கினாள்.
“அழகா இருக்கப் பட்டே. இந்தப் பட்டில் அப்படியே அள்ளுற. நாம ஏன் இங்க வந்திருக்கோம். வீட்டுக்கு…” என்றவனை முறைத்தாள் ராகவி.
“கல்யாணத்துக்கு வந்திருக்கோம் உதய். பேசாம வாங்க”
“ம்ப்ச்” சலித்துக் கொண்டான்.
“எப்ப பாரு பட்டு கட்டச் சொல்லி, என் பீரோ முழுக்க மைசூர் பட்டு தான் இருக்கு உதய். சுஹா, ஆயான்னு ஒருத்தர் விடாம கிண்டல் பண்றாங்க.”
சிணுங்கியவளின் கையைப் பற்றிக் கொண்டு உள்ளே நடந்தான்.
“மண்டபம், மேடை, ஐயர் எல்லாம் இருக்காங்க. இன்னொரு முறை கல்யாணம் பண்ணிக்கலாமா பட்டே” என்றவனை விசித்திரமாகப் பார்த்தாள் ராகவி.
“உதய்” என்று அதட்டியவள், அவனை மேலிருந்து கீழாகப் பார்த்து,
“பட்டு வேட்டி சட்டையில் நீங்களும் மாப்பிள்ளை மாதிரி தான் இருக்கீங்க. ம்ம், யோசிக்கறேன்” என்றாள், கண் சிமிட்டி.
“போலீஸ் யூனிபார்மில் வந்து இருக்கணும். உன் பக்கம் திரும்பற கண்ணை எல்லாம்…”
அவன் சொல்லி முடிக்கும் முன் சிரித்து விட்டாள் அவள்.
“முதல்ல போலீஸ் மாதிரி பேசுங்க” என்றவளின் அலைபேசி அழைக்க, “ஆயா கால் பண்றாங்க, உதய்” என்றாள்.
அலைபேசி அழைப்பை ஏற்றதும் அந்தப் பக்கம், “கல்யாணம் முடிஞ்சதா ஆச்சி?” என்று பதட்டமாகக் கேட்டார் விசாலாட்சி.
“ஒன்பது, பத்து முகூர்த்தம் ஆயா. நாங்க இப்ப தான் வந்தோம்.”
“சரி ஆச்சி. தாலி கட்டு முடிஞ்சதும் போன் பண்ணு” என்றார்.
“என்னாச்சு ஆயா? மணி ஒன்பதரை தானே ஆகுது? இப்ப தானே கடை திறந்து இருப்பீங்க? நான் பதினோரு மணிக்குள்ள வந்திடுவேன்.” என்றாள்.
“அது ஒன்னுமில்ல ஆச்சி. நீ பொறுமையா வா.” என்று வைத்து விட்டார் விசாலாட்சி.
மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து அழைப்பு வந்தது.
“சொல்லுங்க ஆயா” என்றாள்.
“உன்.. உன் நாத்தனார் கடைக்கு வந்திருக்கா. அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன் டா.”
“ஓ”
“கடை தொறந்து பத்து நிமிஷம் ஆகியிருக்கும். அப்பவே வந்துட்டா.” என்றார் சிறிய தயக்கத்துடன்,
“சரிங்க ஆயா, நான் வந்துட்டே இருக்கேன்”
அவள் காதில் இருந்து அலைபேசியை எடுத்து அணைத்து வைத்தான் உதய்.
“காவ்யா கடைக்கு வந்திருக்காங்களாம் உதய்” ஸ்டியரிங்கை லாவகமாக இடப்பக்கம் ஒடித்துத் திருப்பியபடி அவனைப் பார்த்தாள்.
“ம்ம்” என்றான், காரை செலுத்தும் அவளின் கைகளைப் பார்த்தபடி.
அடுத்தப் பத்தாம் நிமிடம் கடையில் இருந்தார்கள்.
கடையின் முன் காரை நிறுத்தி ராகவி இறங்கியதும், ஓட்டுநர் இருக்கைக்கு மாறி, மெலிதான புன்னகையுடன் விடை பெற்றுக் கொண்டான் உதய்.
கடைக்குள் நுழைந்தவள் ஒரு நொடி திகைத்து நின்று விட்டாள். யானை புகுந்த சோள கொல்லை போல மாறியிருந்தது கடை. எங்குப் பார்த்தாலும் துணிகள் பிரித்து, விரித்து வைக்கப் பட்டிருந்தது. ஒருபக்கம் புவனா, மாலதி இருவரும் குவிந்திருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டேயிருந்தனர்.
காவ்யா அவளின் தோழியுடன் வந்திருந்தாள்.
ராகவியைப் பார்த்ததும் எழுந்து அவளை நோக்கி வந்தார் விசாலாட்சி.
“நீ பார்த்துக்கோ ஆச்சி. நான் கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்” வேறு எதையும் சொல்லாமல் கிளம்பி விட்டார் அவர்.
சேலையை மாற்ற கூடத் தோன்றாமல் நாத்தனாரின் முன் போய்ப் புன்னகையுடன் நின்றாள்.
“வாங்க காவ்யா அண்ணி” என்றாள்.
“கொஞ்சம் சேலை, சுடி வாங்கலாம்னு வந்தேன் அண்ணி. ஆனா, எதுவுமே பிடிக்கலை” என்று திருப்தியின்மையை முகத்தில் பளிச்சென்று காட்டினாள் காவ்யா.
காவ்யாவின் பின்னால் நின்றிருந்த மைதிலி, அவளை எரித்து விடுவதைப் போலப் பார்க்க, ராகவிக்குக் கவலையானது.
“இதோ, நான் எடுத்து காட்டுறேன். வாங்க” என்று ஆரம்பித்தது தான், ஒரு மணி வரை நீண்டு கொண்டேயிருந்தது.
ராகவி தன் பொறுமையைச் சிரமப்பட்டு இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
காவ்யாவைப் பார்க்கையில்,
‘என்னவாயிற்று இவளுக்கு?’ என்று தான் ராகவியின் மனதில் ஓடியது.
முற்பகல் முழுவதையும் செலவிட்டு, முடிவாகப் பில் போட சொல்லி காவ்யா நீட்டிய சேலைகளைப் பார்த்ததும் வாயடைத்து போனாள் ராகவி. முகம் மாறாமல் காப்பது அவளுக்குப் பெரும் பாடாக இருந்தது.
காவ்யா கை காட்டிய சேலையை எடுத்துக் கொடுக்கும் போதே விலையைச் சொல்லி தான் எடுத்து வைத்தாள். ஆனால், அவள் அதை எடுப்பாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை ராகவி.
நான்கு சேலை, இரண்டு சுடிதார் தான் எடுத்திருந்தாள். விலை லட்சத்தில் வந்திருந்தது.
ராகவி சேலையை மடித்துப் பெட்டியில் இடும் போதே, “போய்ட்டு வரேன் அண்ணி. அண்ணா கிட்ட சேலைக்குத் தேங்க்ஸ் சொன்னேன் சொல்லிடுங்க” என்றாள் காவ்யா.
மலர்ந்த புன்னகையுடன் சொன்னவளின் முகம் பார்த்த ராகவி, “சரிங்க அண்ணி” என்று பதிலுக்குப் புன்னகைத்து துணிப் பையை நீட்டினாள். தன் அதிர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை அவள்.
அதைக் கைகளில் வாங்கிக் கொண்டு, “வரேன் அண்ணி” என்று காணாமல் போனாள் காவ்யா.
காவ்யா வாங்கிச் சென்ற உடைக்கான பில்லை தன் பெயரில் இட்டு, காசை கடையின் கணக்குக்கு மாற்றி விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
தலையில் சூடியிருந்த பூக்கள் தலையைக் கனக்க செய்தது. அதன் வாசம் தலைவலியின் அறிகுறியை தந்தது. பசி மெல்ல மேலெழும்பி, தலைவலிக்குக் காரணம் நான், தான் என்றது.
ஆனால், அந்தத் தலைவலிக்குக் காரணம் காவ்யா என்று அவள் நன்கு அறிவாள்.