மீண்டும் ராஜாவின் கேள்வி காதில் எதிரொலித்தது.
“பிரியதர்ஷினி பிரச்சினையின் ஆணி வேர் என்ன?”
அவளும் இது குறித்துப் பல நாட்கள், பல விதமாகச் சிந்தித்து இருக்கிறாள்.
வீட்டில் மொத்தமாக ஏழு பேர் இருந்தும் கூட ஒருத்தி தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்திருக்கிறாள் என்றால், அது வீட்டில் இருந்த மற்றவர்களின் தவறு தானே அன்றி, பிரியதர்ஷினியின் தவறில்லை என்பது அவளுக்கு நன்றாக விளங்கியது.
அந்த வீட்டின் ஒரே பிரச்சனையாக அவள் நினைத்தது வேலைகளைத் தான். இப்போது யோசித்துப் பார்த்தால் அது பிரியதர்ஷினிக்கு எத்தனை கடினமானதாக இருந்திருக்கும் என்று அவளுக்குப் புரிகிறது.
ராகவி திருமணமாகி சென்ற இரண்டாம் வாரமே அவ்வீட்டின் அடுப்படிக்குள் நுழைந்து விட்டாள்.
அவளுக்குச் சமையல் நன்றாகத் தெரியும். நிறையப் பேருக்கு சமைக்கவும் பழகி இருந்தாள்.
சிறு வயதில் இருந்தே பெரிய குடும்பத்தில் வாழ்ந்தது ஒரு காரணம் என்றால், இன்னொரு காரணம் அவளின் தோழிகளின் குடும்பம்.
சுஹாசினி, பனிமலர் பெரும்பாலும் அவளது வீட்டில் தான் இருப்பார்கள். சுஹாசினியின் அக்காவும் அப்போதெல்லாம் அவர்களோடு இணைந்து கொள்வார்.
ராகவியின் அம்மா தெய்வ நாயகி தன் வேலை நேரம் போகச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு எல்லா வேலைகளையும் பழக்கி விட்டார். அவர்களை அதை ஒரு விளையாட்டைப் போலச் செய்ய வைப்பார்.
இவர்களும் பேசி, சிரித்துக் கொண்டே இட்ட வேலைகளைச் செய்து முடிப்பர்.
சுஹாசினியின் அம்மா தான் அவர்களுக்கு வீட்டு வேலை, தோட்ட வேலை எல்லாம் பழக்கியது.
பனிமலரின் இரண்டு அண்ணன்களும் அவர்களுக்கு வாகனம் ஒட்டக் கற்றுக் கொடுத்தனர்.
ஆக, அவர்கள் பதினெட்டை எட்டும் போது எல்லா வேலைகளையுமே கற்றுத் தேர்ந்திருந்தனர். அதில் ஆண், பெண் பாகுபாடுன்றி ராகவனுக்குமே சமையல் வேலை முதற்கொண்டு எல்லாம் தெரியும். வீட்டில் சமைக்கவும் செய்வான்.
அதனால், தானோ என்னமோ, கணவன் சமையல் செய்ததை முதல் முறை வியந்து பார்த்தாலே ஒழிய, என்றுமே தடுத்து நிறுத்தியதில்லை ராகவி.
அதே போல நிறைய நபர்கள் இருக்கும் வீடும் அவளுக்குப் புதிதல்ல.
ஆனால், புகுந்த வீட்டில் அவளுக்கு இருந்த ஒரே பிரச்சினை என்னவென்றால் வேலைகள் தான்.
வேலை, வேலை என எப்போதும் ஏதாவது வேலை இருந்து கொண்டேயிருந்தது. காலையில் ஐந்து மணிக்கு எல்லாம் எழுந்து காஃபி போட்டு கொடுத்து, சமையலை தொடங்கினால் தான் எட்டு, ஒன்பது மணிக்குள் அவளால் அடுப்படி வேலையை முடித்து விட்டு, கடைக்குக் கிளம்பிச் செல்ல சரியாக இருக்கும்.
அந்தச் சமையல் வேலையிலும் இருந்த சிக்கல் என்னவென்றால் காலை உணவிற்குக் குறைந்ததாக இரண்டு டிஃபன் செய்ய வேண்டியிருந்தது.
பிரபாகரன் மற்றும் விஜிக்கு மதிய உணவை கட்டிக் கொடுக்க வேண்டியிருந்தது. அத்தை, மாமா, பிரியதர்ஷினி அக்காவிற்கு ஏதேனும் ஒரு குழம்பும், காயும் செய்து வைக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் விஜி மற்றும் அத்தை உதவினார்கள் தான். ஆனாலும்…
அத்தனையும் செய்து முடித்துக் கடைக்குக் கிளம்பும் ஒவ்வொரு முறையும், பேசாமல் படுத்து தூங்கி விட்டால் தான் என்ன என்று அவளுக்குப் பல முறை தோன்றியது உண்டு. சில முறை அதைச் செய்தும் இருக்கிறாள்.
உதய் பதறி அடித்து, “என்னாச்சு பட்டே” என்று அவளுக்காக உருகியது தான் மிச்சம். ஆனால், வேலைகள் குறையாது.
பல நாட்கள் அவனே புரிந்து கொண்டு, அவளுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்திருக்கிறான் தான். அவ்வேளைகளில் எல்லாம் கணவனின் மேல் காதல் வளர்ந்து கொண்டே போனது அவளுக்கு.
அன்று தான் ஆடி மாதம் முடிந்து மீண்டும் இருவருமாகப் புகுந்த வீடு வந்திருந்தனர்.
ஆம், ஆடி மாதம் முழுவதுமே ராகவியின் வீட்டில் தான் இருந்தான் உதய். அவன் வீட்டில் யாரும் கேள்வி கேட்கவும் இல்லை. அப்படியே கேட்டிருந்தாலும் அவன் ஸ்டைலில் பதிலும் கொடுத்திருப்பான் அவன்.
ஒரு மாதம் பிறந்த வீட்டின் சொகுசில் இருந்து விட்டு வந்தவளுக்கு மீண்டும் அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்ய உடல் ஒத்துழைக்க மறுத்தது.
அவளும் எத்தனையோ முறை அத்தை, மாமாவிடம் பேசிப் பார்த்து விட்டாள். பலன் தான் பூஜ்யம்.
மேல் வேலைக்கு மட்டும், உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளலாம் என்று அவள் சொல்லி மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், பெரியவர்கள் தான் ஒத்துக் கொள்வது போலத் தெரியவில்லை.
“வீட்ல நாலு பொம்பளைங்க இருந்துட்டு, வேலைக்கு ஆள் வைக்கணுமா?” என்று நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டார் மாமனார்.
அவளும் எவ்வளவோ பேசி புரிய வைக்க முயன்றாள்.
“வீடு பெருக்கி, துடைக்க, பாத்திரம் தேய்த்து வைக்க, துணி மெஷின்ல போட்டு எடுக்க.. இதுக்கு மட்டும் போதும் மாமா. சமையல் நாங்க பார்த்துக்கறோம்”
“என்ன? நம்ம துணியை வேற ஒருத்தர் துவைக்கறதா?” முகம் சுளித்தபடி கேட்டார்.
“வேலைக்குப் போட்டு போறதை மட்டும் தான் மாமா, மற்றதை நாங்க பார்த்துக்கறோம். வீட்ல டெய்லி துணியே ஒரு கூடை விழுகுது மாமா. அதுலயும் குட்டி பையன் துணியே அவ்ளோ இருக்கு. வேலைக்கு ஆள் வெச்சா எங்க எல்லோருக்கும் கொஞ்சம் வேலை குறையும் மாமா.”
“என்னமா? வீட்டு வேலை செய்யச் சோம்பேறி பட்டால்.. வீடு எப்படி உருப்ப…” மாமியார் யசோதா முடிக்கும் முன்பே, பதில் கொடுத்து விட்டாள் ராகவி.
“என்னங்க அத்தை பேசுறீங்க? நான் வேலையே செய்ய முடியாது சொல்லலை. விஜியும், நானும் வேலைக்குப் போறோம். அக்கா கை குழந்தை வச்சுட்டு இருக்காங்க. நீங்க உடம்பு முடியாதவங்க.”
“அதுக்காக…” என்றார் அவர்.
இவர்களிடம் பேசுவதில் ஒரு உபயோகமும் இல்லை, எதுவும் நடக்கப் போவதில்லை எனும் முடிவுடன் எப்போதும் போல வேலைகளைச் செய்தாள் ராகவி.
ஆனாலும், ஒரு வாரம் தான் சமாளிக்க முடிந்தது.
“எல்லாம் காசு இருக்கறதால…” என்ற மாமியாரின் பேச்சில் மலைத்துப் போனாள். மாமனாரிடம் தான் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.
அன்றைக்கு ராகவி தான் சொன்னாள். வேலைக்கு ஆள் வைத்தால், வீண் செலவு என்று அவர்கள் சொல்லவும், “நானே அவர்களுக்குச் சம்பளம் கொடுத்து விடுகிறேன்” என்று.
அவள் என்ன அர்த்தத்தில் சொன்னாள், கணவனின் காசில் இருந்து கொடுப்பதாகத் தானே? அதற்கு ஏன் அவளைக் குத்த வேண்டும்?.
சட்டென்று மரமாய் வளர்ந்து நின்ற கோபத்துடன் அவர்கள் முன் போய் நின்றாள்.
“என்ன காசு அத்த? நம்ம வீட்லயும் தான் காசு இருக்கு. அதே போல எங்க வீட்ல இருக்கறதில் என்ன தப்பு?
நீங்க நாலு பிள்ளைகளை வளர்த்து, படிக்க வச்சு, கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கீங்க. உங்களுக்குச் செலவு அதிகம்.
ஆனா, எங்க வீட்ல நாங்க ரெண்டே பேர். அதனால் செலவு கம்மி, சேமிப்பு அதிகம்.
இங்க சில வருஷம் முன்னாடி வரை, மாமா மட்டும் தான் வேலைக்குப் போய்ச் சம்பாதிச்சாங்க. அதுக்கேத்த வசதி உங்களுக்கு. அதுக்கேத்த சேமிப்பு உங்களுக்கு.
எங்க வீட்ல அப்பா, அம்மா, ஆயா, ஐயா எல்லோரும் வேலைக்குப் போனாங்க. இப்பவும் அப்பா, ஐயா, ஆயா போறாங்க.
வேலையும், வருமானமும், வருஷங்களும் கூடக் கூட வசதியும், சேமிப்பும் கூடத் தானே செய்யும். அதில் எங்க தப்பு என்ன இருக்கு? சொல்லுங்க?” என்று அவள் தீர்க்கமாகக் கேட்க, பதிலில்லாமல் அவளைப் பார்த்தனர் இருவரும்.
“எங்க வீட்ல, நாங்க யாரும் பணத்தை முன் வச்சு எதையும் பார்த்தது இல்ல. நான், வீட்டுல இருக்க எல்லா லேடிஸிக்கும் சேர்த்து தான் பேசுறேன். எனக்காக மட்டும் இல்ல.
ரெண்டு அடுக்கு வீடு, மொத்தம் நாலு பெட்ரூம். கிச்சன், ஹால், அதுக்கும் மேல மொட்டை மாடி, தோட்டம் எல்லாத்தையும் பெருக்கி அள்ளி, துடைச்சு… தினம், தினம் செய்ய முடியல.
இதுக்காகவே வேலைக்கு இருக்கவங்களைக் கூப்பிடுறதில் என்ன தப்பு? நீங்களே சொல்லுங்க.
நாம ஒருத்தருக்கு வேலை தான் கொடுக்கப் போறோம்.
இப்பல்லாம் இதுக்காகக் கார்ப்பரேட் கம்பனிகளே களத்தில் இறங்கி வீடு கிளினிங், பாத்ரூம் கிளினிங்னு ஒன்னு விடாம செஞ்சு தர்றாங்க. அதுக்கு என்ன சொல்லப் போறீங்க?”
என்று அவள் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனரே தவிர ஒன்றும் சொல்லவில்லை.
இது வேலைக்காவாது என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு, எப்போதும் போல வேலைகளைப் பார்த்தாள் ராகவி.
மேலும் ஒரு வாரம் இப்படியே கடக்க, அன்றைக்குச் சமையலை முடித்து விட்டு அரக்க பரக்க குளிக்கச் சென்றாள்.