இரவு ஒன்பது மணி. தோழிகள் மூவரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மலையாளப் படம் ஒன்றைப் பார்த்தபடி இரவு உணவு உண்டுக் கொண்டிருந்தனர்.
நீர் தோசை, கோரி ரொட்டி, சிக்கன் குழம்பு, சிக்கன் நெய் ரோஸ்ட் என்று அவள் முன் வரிசையாக அமர்ந்திருந்த உணவை ஒருவித ஒவ்வாமையுடன் பார்த்தாள் ராகவி.
“ஏன் சுஹா, மதியம் என்ன சாப்பிட்டீங்க.?” என்று கேட்ட ராகவியைத் தட்டில் இருந்து தலையை உயர்த்திப் பார்த்தாள் சுஹாசினி.
“மீன் தான். வேற என்ன? இங்க அது தானே ஸ்பெஷல்” என்றாள் சுஹாசினி.
“மதியம் மீன் சாப்பிட்டுட்டு இப்பயும் ஹெவியா இத்தனை சிக்கன் ஆர்டர் பண்ணி…” சுஹாசினியின் பார்வையில் பட்டென்று வாயை மூடிக் கொண்டாள் ராகவி.
“மதியம் சாப்பிட்டு பல மணி நேரம் ஆச்சு. தின்னது செமிச்சும், பல மணி நேரம் ஆச்சு. அப்புறம் இந்தக் கோரி ரொட்டி, நீர் தோசை இதெல்லாம் இந்த ஊர் ஸ்பெஷல். இங்க சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். சாப்பிடு” என்றாள்.
“எனக்குப் பசிக்கலை” என்றாள் தயக்கத்துடன்,
“என்ன பண்ணுது ராகவி?” என்று மலர் அக்கறையாகக் கேட்க,
“என்ன பண்ணும்?. ஒன்னும் பண்ணாது. அவ உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தியா? ராஜா சாரும், மேடமும் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுத்திப் பார்த்தியா?” என்று சுஹாசினி கேட்க, மலர் முழித்தாள்.
“கோலி பஜ்ஜி, ஃபிஷ் ஃப்ரை, மாங்காய், வெள்ளரி சாலட், கோக்கம் (குடம்புளி வகையைச் சார்ந்தது) ஜுஸ், ஆரஞ்சு ஜுஸ்.. அப்புறம்…”
‘ஒன்னு விடாம கவனிச்சு இருக்காப் பாரு’ ராகவியால் மனதினுள் புலம்ப மட்டுமே முடிந்தது.
“அத்தனையையும் சாப்பிட்டா, எப்படிப் பசிக்கும்?” என்று சுஹாசினி கேட்க, தலையைத் தொங்கப் போட்டாள் ராகவி.
“ரெண்டு நீர் தோசை சாப்பிட்டு படு ராகவி. வெறும் வயித்துல படுக்காத. நைட் பசிக்கும்” என்ற சுஹாசினியின் குரலுக்குத் தலையை மட்டும் அசைத்து விட்டு, கஷ்டப்பட்டு இரண்டு தோசைகளை விழுங்கினாள். இத்தனைக்கும் நீர் தோசை காகிதம் போன்று மெலிதாகத் தான் இருந்தது. ஆனால், அவளால் தான் உண்ண முடியவில்லை.
உணவை முடித்து, அறைக்குள் சிறிது நேரம் நடந்து விட்டுப் படுக்கையில் சரிந்தாள்.
ராஜா கேட்ட கேள்வியில் போய் நின்றது மனது.
“ஆடி மாசம் என்ன நடந்தது?”
அதை நினைக்கும் போதே அவளுக்குச் சிரிப்பு வந்தது.
அவர்களுக்குத் திருமணமாகி நான்கு மாதங்கள் கழிந்திருந்த நிலையில் தமிழ் மாதமான ஆடி மாதம் வந்தது.
ஆடி சீருடன், ராகவியின் வீட்டில் இருந்து அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.
உதய் அன்று வேலைக்கும் செல்லவில்லை. அவளை வீட்டை விட்டு செல்லவும் விடவில்லை.
அவளை அனுப்ப முடியாது என்று நேரடியாக அவளின் அப்பாவிடமே சொல்லி விட்டான்.
சிதம்பரம் சங்கடத்துடன், “சரிங்க மாப்பிள்ளை” என்று விட்டார். ஆனால், உதயின் வீட்டினர் தான், சடங்கு, சம்பிரதாயம் என்று ஆயிரம் காரணங்களைச் சொல்லி அவளை அனுப்பி வைத்தனர்.
தன்னுடைய பிரியமான செல்ல பொம்மையைப் பறிக் கொடுத்த குழந்தையைப் போல முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்துக் கொண்டே காரில் ஏறினாள் ராகவி.
நான்கு மாதமாக அவனோடு உறங்கி, அவனோடு விழித்து, அர்த்தமில்லா கதைகள் பேசி உறங்கிய பொழுதுகளை அவளுக்கும் அதிகம் தேடியது.
அந்த நினைவுகள் தந்த கதகதப்போடு அவளது அறையில் உறங்கிப் போனாள் ராகவி.
நள்ளிரவில் தன் படுக்கையில் வித்தியாசம் உணர்ந்து, கணவனின் வாசம் உணர்ந்து, பாதிக் கண் திறந்து திரும்பிப் பார்த்தாள் ராகவி.
தான் தலை வைத்திருப்பது தலையணையில் அல்ல. கணவனின் மார்பில் என்று உணர்ந்து புன்னகைத்தாள்.
“உதய், எப்போ வந்தீங்க?” ஆழ்ந்த
உறக்கத்தில் இருந்தவனை மெல்ல உலுக்கினாள்.
“ரொம்ப முக்கியம் பட்டே, தூங்கு” அவளைச் சுற்றி கையைப் போட்டு, அணைத்தபடி உறக்கத்தைத் தொடர்ந்தான்.
காலையில் ஆறு மணிக்கு பால்கனிக்கு நெருக்கத்தில் இருந்த மரத்தில் இருந்து குயில் கூவி அவளை எழுப்ப, சோம்பல் முறித்தப்படி எழுந்தாள்.
அருகில் இருந்த ஹாலில் இருந்து உதயின் குரல் கேட்க, தலையைச் சரி செய்து கொண்டு, எழுந்து வெளியில் போனாள்.
கண்ணதாசன் மாடியின் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க, படியேறி மேலே வந்து கொண்டிருந்தார் சிதம்பரம்.
“வாங்க மாமா, எப்ப வந்தீங்க?” என்று உதய் அவரிடம் விசாரிக்க, அவரோ பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தார்.
தான், தான் மாமனார் வீட்டுக்கு வந்திருக்கிறோம், அதுவும் அவர்களுக்குத் தெரியாமல், இரவோடு இரவாக என்பதை மறந்தவனாக அவரையே நலம் விசாரித்துக் கொண்டிருந்தான் உதய்.
கண்ணதாசன் சிரித்துக் கொண்டே, “இப்ப தான் தூங்கி எழுந்து வர்றான் மாப்பிள்ளை. நீங்க உட்காருங்க, காஃபி சாப்பிடலாம்” என்று அழைக்க, அப்போது தான் சுற்றம் உணர்ந்து, “இருக்கட்டும் ஐயா. நான்… நான்.. ராகவி” என்று அவன் தடுமாற,
“அட உட்காருங்க, மாப்பிள்ளை. எங்களுக்கு இந்த ஆடி மாசம் பிரிச்சு வைக்கறதில் எல்லாம் பெருசா நம்பிக்கை இல்ல. சடங்கு, சம்பிரதாயம், பாரம்பரியம் இதெல்லாம் விட்டுப் போகக் கூடாதுன்னு தான் செய்யுறது. நீங்க எப்பவும் போல இருங்க” என்று விட்டார் கண்ணதாசன்.
“இவர் எப்படி வீட்டுக்குள் வந்தார்? இப்படியா ஐயா கிட்ட மாட்டணும்? மாமனார் வீட்டுக்கு தெரியாம வந்துட்டு, அவர் கிட்டயே, “எப்போ வந்தீங்க மாமா?” வேற.. இவரை எல்லாம்..” கோபத்திற்குப் பதிலாகச் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.
“வாங்க மாமா, இந்தாங்க காஃபி” என்று உதயிடம் காஃபி கோப்பையை நீட்டிய ராகவனைப் பார்த்ததும் அவளுக்கு எல்லாம் விளங்கி விட்டது. அது அவன் வேலை தான் என்று.
சற்று நேரத்தில் எல்லாம், காஃபி கோப்பையுடன் எழுந்து அறைக்குள் வந்து விட்டான் உதய். அறை வாயிலில் நின்றிருந்தவளின் கையில் கோப்பையைத் திணித்து விட்டு, சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தான்.
வெளியில், “திருட்டு பய, இவனுக்கு எல்லாம் எவன் போலீசில் வேலை கொடுத்தான்னு தெரியல” என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.
அறையின் உள்ளே, “சாரி, நீயில்லாம அந்த வீட்ல இருக்க முடியல பட்டே. அதான், இங்க வந்துட்டேன்” என்று அவளின் கன்னம் பற்றிக் கெஞ்சிக், கொஞ்சிக் கொண்டிருந்தான் உதய்.
இப்போது நினைக்கையிலும் அவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது.
“கேடி போலீஸ்” முணுமுணுத்துக் கொண்டாள்.
அன்றும் அவள் கொடுத்த தண்டனையைக் கேட்டதும், அவளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சி கூத்தாடி, இரண்டு நாட்கள் யூனிஃபார்ம் அணிவதில்லை. இரண்டு நாட்கள் மனைவியின் அருகில் வரப் போவதில்லை என்று சத்தியம் செய்த போது கணவனைப் பாவமாகத் தான் பார்த்தாள் ராகவி.
அவனுக்கு அது இரண்டையும் செய்வது, எத்தனை கடினம் என்பதை நன்கு அறிவாள் அவள்.
ஆனால், சமய சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு கேஸ் விஷயமாக வெளியூர் சென்று விட்டு வந்தான் உதய்.
யூனிஃபார்ம் மற்றும் மனைவியிடம் இருந்து, வெகு லாவகமாகத் தப்பித்தான் அவன்.
“இதெல்லாம் செல்லாது, செல்லாது. ப்ராடு போலீஸ்” என்று ராகவி ஆட்சேபிக்க,
“எல்லாம் செல்லும் செல்லும் வக்கீலே. தண்டனை காலம் முடிந்தது. இனி தீர்ப்பையும், தண்டனையையும் பத்தி நீ பேசவே கூடாது.” என்று அவளை எளிதாக மடக்கி இருந்தான் உதய்.
அவள் கோபமாக அவனைப் பார்க்க, “கடவுளே, வக்கீலா பிராக்டிஸ் பண்ணாத போதே, இந்தப் பாடு படுத்துறா, இதுல வக்கீலா மட்டும் ஒரு முறை கோர்ட் வாசலை மிதிச்சா, என் நிலைமை.. அதோ கதி தான்” அவளை வெறுப்பேற்ற வேண்டும் என்றே புலம்பினான்.
அவள் கொடுத்த அத்தனை அடிகளையும் சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டான்.
“ஏய் ரா, மணி பனிரெண்டாகப் போகுது. இப்படிப் பேய் மாதிரி சிரிச்சு பயமுறுத்தாதே ரா. தூங்க விடு பிசாசே” தூக்க கலக்கத்தில் கத்தினாள் சுஹாசினி.
பதில் கொடுக்காமல் புரண்டு சுவரை பார்த்து படுத்தாள் ராகவி. ஆனால், தூக்கம் தான் வந்தபாடில்லை. மாறாகக் கண் முன் கணவனே வந்து நின்றான்.