சூரியன் மெல்ல கடலுக்குள் இறங்கிக் கொண்டிருந்தான். கூடடைய ஒரே திசையில் பறந்து கொண்டிருந்த பறவைகளை இமை மூடாது ரசித்திருந்தாள் ராகவி
தனதருகில் அமர்ந்திருந்த ராஜா, சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்ததைக் கவனிக்காதது போல அமர்ந்திருந்தாள்.
அவனது சிரிப்பு அவளையும் தொற்றிக் கொள்ளும் போலிருந்தது. ஆனாலும், முயன்று பார்வையை அவன் பக்கம் திருப்பாமல் அமர்ந்திருந்தாள்.
“அப்புறம், போலீஸ் எந்தத் தண்டனைக்கு ஒத்துக்கிட்டார்?” சிரித்துக் கொண்டே கேட்டான்.
“அது உங்களுக்குத் தேவையில்லாதது. அவருக்குத் தண்டனை கொடுத்தேன். அவ்வளவுதான். உங்களுக்கு அவ்ளோ தெரிஞ்சா போதும்” என்றாள் பட்டென்று.
“ஓகே, ஆனாலும், அவர் என்ன பண்ணாருன்னு தெரிஞ்சுக்க… ஒரு க்யூரியாசிட்டிலதான் கேட்டேன். சொல்ல விருப்பம் இல்லனா, விடுங்க” என்றான்.
அவள் அமைதியாய் அமர்ந்திருக்க, “அந்த ஆடி மாசம் என்ன நடந்தது?” என்றான்.
ராகவி அவனைத் திரும்பி பார்த்தாள், அவன் கண்களில் மின்னும் ஆர்வத்தைக் காண்கையில் அவளுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது.
“அதையும் சொல்றதா இல்ல” என்றாள் தீர்க்கமாக.
“ஓகே. உங்க விருப்பம்தான்” என்றவன்,
“பிரபா அண்ணா.. அவங்க அண்ணா வீட்டு பிரச்சனையைச் சரி பண்ணாரா? அவங்களோட பிரச்சனை என்னனு கண்டுப்பிடிச்சீங்களா? விஷயம் தெரிந்து, வீட்ல உங்க மாமனார், மாமியார் எப்படி ரியாக்ட் பண்ணாங்க?” கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான்.
ஏனோ, அப்போது அவனுக்குப் பதில் சொல்லும் மனநிலையில் அவளில்லை. ஆனாலும், சொன்னாள்.
“பிரபா அத்தான், பிரச்சினையின் சீரியஸ்னஸை சரியா புரிஞ்சுக்கிட்டார். சோ, உதய் சொன்னதை எல்லாம் கேட்டுக்கிட்டார்” விலாவரியாக விளக்கம் சொல்லாமல், சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டாள்.
“அப்புறம்?” என்றான் அவன் விடாமல், குரலில் சிறிதே எரிச்சல் எட்டிப் பார்க்க,
“அக்கா, இப்ப அவங்க அம்மா வீட்ல இருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்கும் கவுன்சிலிங் நல்லபடியா முடிஞ்சது. இப்ப ரொம்பச் சந்தோசமா இருக்காங்க. எல்லோர் கிட்டயும் மனசு விட்டு பேசுறாங்க. பிரபா அத்தான் எல்லாச் சனி, ஞாயிறும் அக்காவை பார்க்க மாமியார் வீட்டுக்கு போய்டுறார். தே ஆர் வெரி ஹேப்பி நவ்”
“நல்லது. உங்களுக்குத் தான் ரொம்ப நிம்மதியா இருந்திருக்கும் இல்ல?”
“ம்ம், ஆமா.”
“பிரச்சினையின் ஆணி வேர் என்னனு கண்டுப்பிடிச்சீங்களா?” என்று அவன் கேட்க,
“எந்தப் பிரச்சனைக்கு?” என்றாள். அவன் கேள்வி புரியாமல்,
“பிரியதர்ஷினி அவங்களோட பிரச்சனைக்குத் தான்” என்றான்.
“இல்ல. அவ்ளோ ஆராய்ச்சி எல்லாம் நான் பண்ணல. அவங்களுக்கு இருந்த மன அழுத்தம் போய்டுச்சு. இப்ப அவங்க நார்மல். எனக்கு அது போதும்.” என்றாள்.
“நீங்களும் ஏன் அதையே ஃபாலோ பண்ணக் கூடாது? பிரச்சினையைச் சால்வ் பண்ணிட்டு…” அவளது கோபப் பார்வையில், பேச்சை நிறுத்தி விட்டு, தோளை குலுக்கினான்.
இருவருக்கும் நடுவில் சட்டென்று ஒரு அசவுகரியமான அமைதி வந்தமர்ந்து விட்டிருந்தது.
எப்போதும் போல ராஜாவே அதைக் கலைக்க முயற்சித்தான்.
“சண்டை பத்தி மட்டுமே பேசிட்டு இருக்கோம். போலீஸ், ஆபீஸர் ரொமான்ஸில் எப்படி?”
அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்த்திராத ராகவி, லேசாகத் துளிர்க்க ஆரம்பித்த கோபத்துடன் அவனைப் பார்த்தாள்.
“இல்ல. தொடக்கத்தில் இருந்தே அவர் மேல குற்றம் மட்டுமே சொல்லிட்டு இருந்தீங்களா… அதான், சொல்ல விருப்பம் இல்லனா..” என்று அவன் இழுக்க,
நக்கல் பார்வையுடன்,
“ரொமான்ஸ் தானே? ம்ம். கல்யாணத்துக்கு முன்னாடி, ஏன் கல்யாணமாகி ஏழெட்டு மணி நேரம் கழிச்சு கூட, ஒரு சைவ முத்தம் கூடக் கொடுத்தது இல்ல போலீஸ்” என்றாள் உதடு சுளித்து.
“என்னது?” என்று ஒரே நேரத்தில் அதிர்ச்சியுடன் இரு குரல்கள் கேட்க, கண்ணை மூடி, “அச்சோ, போச்சு” என்றபடி, நிமிர்ந்து பார்த்தாள் ராகவி.
அங்கே அதிர்ச்சியில் புறா குஞ்சை போல வாயை பிளந்த படி நின்றிருந்தாள் சுஹாசினி. அவள் கையைப் பிடித்துக் கொண்டு பனிமலர்.
ராகவிக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அதே நேரம் ராஜாவும், சுஹாசினியும் ஒன்று போல அதிர்ந்து கத்தியதில் சிரிப்பும் வரும் போலிருந்தது.
“இவ்வளவு நேரம் எனக்குக் கம்பெனி கொடுத்ததுக்கு ரொம்பத் தேங்க்ஸ், அப்புறம் பார்க்கலாம்” என்று ராஜாவிடம் விடைப் பெற்றுக் கொண்டு எழுந்து கொள்ளத் தரையில் கை ஊன்றினாள்.
ராஜா கை கொடுக்க, அவனை முந்திக் கொண்டு சுஹாசினி ஓடி வந்து கைக் கொடுத்து தூக்கி விட்டாள்.
மூவரும் மௌனமாய் அறையை நோக்கி நடந்தனர்.
அறைக்குள் காலை வைத்ததும், சுவரைப் பிடித்துக் கொண்டு, சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்திருந்தாள் சுஹாசினி.
மலர் சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. இருவரையும் கண்டுக்கொள்ளாமல் கடலைப் பார்த்திருந்த கண்ணாடி சுவரின் பக்கம் சென்று திரைச் சீலைகளை விலக்கி விட்டாள் ராகவி.
“ஏய் மலரே, முத்தம். அதுவும் சைவ முத்தம் கூடக் கொடுத்தது இல்லையாம் போலீஸ். சோகத்தைப் பாரேன்.”
வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள் சுஹாசினி. இப்போது அவளோடு பனிமலரும் சிரிக்க ஆரம்பித்திருந்தாள். அவர்கள் இருவரையும் பார்த்துக் கோபமாகப் புருவம் உயர்த்தினாள் ராகவி.
“ஆனாலும், போலீஸ் ரொம்ப மோசம் ராகவி. இல்ல மலரே?” என்று சுஹாசினி கிண்டலாகக் கேட்க, இம்முறை கண்ணாடி சுவரில் லேசாகத் தலையை முட்டிக் கொண்டாள் ராகவி.
‘வாயை வச்சிட்டு சும்மா இல்லாம. அச்சோ, இன்னைக்கு இவ ஓட்டியே தள்ளிடுவாளே’ தனக்குள்ளே புலம்பினாள் ராகவி.
“ஏய் மலரே, கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு. எப்ப வந்து, என்ன கவலைப் பாரு இவளுக்கு..” மீண்டும் சிரித்தனர்.
“சுஹா..” கத்தினாள் ராகவி.
“விடு ரா, எல்லாக் கோட்டையும் அழிச்சிட்டு, மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம். நீ மறக்காம சைவ முத்தம் என்ன, அசைவ முத்தம் கூடக் கேட்டு வாங்கிடு. என்ன?” என்றாள், வாயெல்லாம் பல்லாக.
“பேசாம இரு சுஹா…” ஒற்றை விரல் நீட்டி மிரட்டினாள்.
“உன் மிரட்டலுக்கு எல்லாம் போலீஸ் தான் பயப்படனும். எங்களுக்கு என்ன அவசியம் வந்தது. இல்ல மலரே?”
மலரோ மேலே, கீழே, இட, வலம் என்று எல்லாப் பக்கமும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள்.
“பைத்தியங்க…” முணுமுணுத்தாள் ராகவி.
“பட்டே..?” என்று சுஹாசினி தொடங்க,
“காஞ்சிபுரமா? ஆரணியா? பனாரஸா? எந்தப் பட்டு?” என்று மலர் இழுக்க,
“மைசூரு மலரே. சுத்த மைசூர் பட்டு” முடித்தாள் சுஹாசினி.
கோபத்திலும், வெட்கத்திலும் முகம் எல்லாம் சிவக்க, உதடு துடிக்க, “பைத்தியங்களா.. உங்களோட..” கத்தி விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தது கதவடைத்துக் கொண்டாள் ராகவி.
“தப்பிச்சு ஒடிரு பட்டே” பின்னிருந்து அவளை விரட்டியது சுஹாசினியின் குரல். சிரித்து விட்டாள் ராகவி.