உதய ராகம் – 13 (3)

அவளுக்கு என்னவோ போல் ஆகி விட்டது.

“ராகவ், எவ்வளவு ஆபரேஷன் பார்க்கறான். தினம் எத்தனை ஃபேஷன்ட்ஸ் பார்க்கறான். எவ்ளோ இரத்தம் பார்க்கறான். ஆனா, உன் கையில் ஒரு கீறல் விழுந்தா கூடக் கண் கலங்குறான். ஏன்? உனக்கு உடம்பு முடியலைன்னு எத்தனை நாள் ஸ்டேஷன் போகாம வீட்ல இருந்து, போனிலேயே வேலை பார்த்து இருக்கேன். ஏன்? எல்லாம் அன்பு, அக்கறை தான் மா.” என்றவன், ஆழ மூச்சிழுத்து,

“நான் என்ன காரணம் சொன்னாலும், இன்னைக்கு நான் பண்ணது பெரிய தப்பு தான். சத்தியமா சொல்றேன். இனி இது போல நடக்காது. என்னை நம்பு ராகவி” என்றான் சோர்வாக.

அவன் உடல் ஓய்விற்குக் கெஞ்சியது. மூன்று நாட்களாக, சரியான உணவில்லை, உறக்கமில்லை. சைபர் செல் என்பதால் வேலை நேரம் முழுவதும் கணினி பயன்படுத்த வேண்டிய கட்டாயம். கண்களில் காந்தாரி மிளகாயை வைத்துத் தேய்த்தது போல எரிந்தது.

“பிளீஸ், உட்காரவா பட்டே?” கெஞ்சினான்.

“எப்ப சாப்பிட்டீங்க?” கேட்டாள்.

“நீ எப்போ சாப்பிட்டியோ, அப்ப தான்” என்றான் ஓய்ந்தவனாக,

“காலைல டீ, ரெண்டு ப்ரெட் ஸ்லைஸ்?” அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“ம்ம், அப்போ நீயும் சாப்பிடலை? அப்படித் தானே?”

“நான்.. நான் ஜுஸ், டீ, காஃபி ஏதாவது குடிச்சுட்டு தான் இருந்தேன். ராகவ், சுஹா குடிக்க வச்சாங்க.” என்று எழுந்தவள்,

“குளிச்சிட்டு வாங்க.” என்று விட்டு அறை வாயிலை நோக்கி நகர,

“ராகவி..” கைப் பிடித்து நிறுத்தினான்.

“நான் இன்னும் கோபமா தான் இருக்கேன் ஏசிபி. சாப்பிட்டு மிச்ச சண்டையை வெச்சுக்கலாம்” என்று விட்டு நடந்தாள் ராகவி.

“என் டெக்னிக்கை எனக்கே ஃபாலோ பண்றாளே. தெளிய வச்சு தெளிய வச்சு அடிப்பா போலயே..” புலம்பிய படியே குளிக்கச் சென்றான் உதய்.

அவன் குளித்து, உடை மாற்றி அடுப்படிக்குள் நுழைகையில், சூடாக இட்லியும், புதினா சட்னியும் தயாராகிக் கொண்டிருந்தது.

அடுத்தப் பத்தாம் நிமிடம், அடுப்படி தரையில் இருவரும் சாய்ந்து அமர்ந்தபடி உண்ணத் தொடங்கினர்.

திருமணம் முடிந்து ஏழு மாதங்கள் கடந்திருந்திருந்தும் கூட, திருமணத்திற்கு முன்பு, இருவரும் முதல் முறையாக உணவு உண்டது நினைவில் வந்து போனது.

முழுதாக மூன்று இட்டிலிகளை உண்டு விட்டே நிமிர்ந்து மனைவியைப் பார்த்தான் உதய்.

“தேங்க்ஸ் பட்டே” என்றான்.

“உங்களுக்குப் பிடிச்ச சப்பாத்தி தான் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா, இந்நேரம் அதைச் சாப்பிட்டா டைஜஸ்ட் ஆகாது. அதான் இட்லி ஊத்தினேன்” என்றாள், சாப்பிட்டுக் கொண்டே,

“சுட சுட இட்லி, புதினா சட்னிக்கு முன்னாடி சப்பாத்தி எல்லாம் பிச்சை எடுக்கணும்” என்றான் தீவிரமாக,

“அமைச்சர் வீட்ல கவனிப்பு பலமா இருந்ததே. அப்புறம் ஏன் சாப்பிடல உதய்? டீ, ஜுஸ்ன்னு உபசரிப்பு எல்லாம் வேற லெவலில் இருந்ததே…” கடுப்புடன் கேட்டாள்.

“வேலையை முடிக்கணும். அது மட்டும் தான் மனசில் இருந்தது பட்டே, அந்நேரம் சாப்பிட எல்லாம் தோணல” என்றவன், நிமிர்ந்து அவளைப் பார்த்து,

“பொறாமை?” என்று கண் சிமிட்டினான். அவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“அது, அவங்க அமைச்சர் டீமில் இருந்த பொண்ணு பட்டே. எதிகல் ஹேக்கர். எனக்குக் கல்யாணம் ஆகலைன்னு நினைச்சிட்டு…”

அவன் சொல்லி முடிக்கும் முன், “ஓஹோ, அப்புறம்..?” என்றாள், கோபத்துடன்,

“ம்ம்ம், பேச்சிமுத்து இருக்கார் இல்ல. என் டீமில் உன் ஆளு. பட்டுனு போட்டு உடைச்சுட்டார். அமைச்சர் வைஃப் ப்ரெக்னன்ட்டா இருக்காங்க. எதுக்கோ அவரைப் பார்க்க ஒரு நிமிஷம் ஆபீஸிக்குள்ள வந்துட்டு போனாங்க. அந்நேரம் பேச்சி முத்தும் ஒரு ஃபைல் கொடுக்க உள்ள வந்தார். அந்தப் பொண்ணு என்கிட்ட பேசுறதை பார்த்து, “அடுத்து சார் வீட்ல தான் விசேஷம். இல்ல தம்பி? கல்யாணம் ஆகி ஆறு, ஏழு மாசம் ஆச்சுல்லன்னு கேட்டார். அந்தப் பொண்ணு முகம் அப்படியே…”

“ரொம்ப அக்கறை வழியுது, துடைச்சுக்கோங்க” என்றாள் கோபமாக,

“என் பட்டை தவிர எந்தப் பொண்ணு மேலயும் என் பார்வை திரும்பாது பட்டே” என்றான் அவள் கண்களைப் பார்த்து, தன்

புன்னகையை அவனிடம் இருந்து மறைத்தபடி எழுந்து, கை கழுவினாள் ராகவி.

இருவருக்கும் பாலில்லா தேநீர் தயாரித்து எடுத்துக் கொண்டு அவர்களது அறைக்குச் சென்றனர்.

அறைக்குள் நுழைந்ததும் அவனைச் சோஃபாவில் அமர செய்து விட்டு, அவள் படுக்கையின் விளிம்பில் அமர்ந்தாள்.

“சொல்லு பட்டே” என்றான் தயக்கத்துடன்,

“பிரபா அத்தான் கிட்ட பேசுங்க. டாக்டர் சொல்ற வரை கவுன்சலிங் போகணும் ரெண்டு பேரும். அப்பாயின்மென்ட் மிஸ் பண்ணாம கூட்டிட்டுப் போகச் சொல்லணும்.”

“ஓகே”

“அவரை ஒரு வாரம் வீட்ல இருந்து, அக்கா கூடவே இருந்து வேலையைப் பார்க்க சொல்லணும்..”

“அது எப்படிப் பட்டே?”

“நோ கிராஸ் கொஸ்டீன்ஸ், நான் சொல்றது தான் ஃபைனல். இல்லனா…”

“வேணாம் பட்டே, சொல்லு செய்யறேன்” என்றான், ஒரு பெருமூச்சுடன்,

“அவங்களுக்குக் கவுன்சலிங் முடியற வரைக்கும், அக்காவோட அம்மாவை இங்க வர வைக்கணும்.”

“அது?”

அவளது முறைப்பில் அப்படியே வாயை மூடிக் கொண்டான் அவன்.

“டாக்டர் ஆல் க்ளியர் கொடுத்ததும் அக்காவை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கனும். அவங்க கூடப் போறதும், போகாததும் உங்க அண்ணா விருப்பம். எப்போ அக்காவே நம்ம வீட்டுக்கு வர விரும்பறாங்களோ, அது எத்தனை மாசம் ஆனாலும் சரி… வெயிட் பண்ணி அவங்க சொல்லும் போது தான் பிரபா அத்தான் அவங்களை இங்க கூட்டிட்டு வரணும்”

“பட்டே.. பட்டே… அவன் என்னை அடி பிச்சுடுவான். நான் மட்டும் என் பொண்டாட்டியோட இருக்கும் போது, அவனை எப்படி..”

“அந்தப் பொண்டாட்டி நல்லதுக்குத் தான் இவ்வளவும் சொல்றேன். இன்னைக்கு ஒரே நிமிஷத்தில் அவங்களைத் தொலைச்சு இருப்பார். அதை ஞாபகத்தில் வச்சுட்டு பேசுங்க.” படபடவெனப் பொரிந்தாள்.

“அவங்க வீட்ல வசதி பத்தாது பட்டே..”

அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது, அதைக் கேட்டதும்.

“வசதி யாருக்கு பத்தாது? உங்களுக்கா? உங்க அண்ணனுக்கா? இல்ல அக்காவுக்கா? ம்ம்ம், சொல்லுங்க? அங்க இருக்கப் போறது அக்கா தான், அவங்களுக்கு வசதி பத்தினா போதும். உங்களுக்குத் தேவைன்னா… பிரபா அத்தானுக்குத் தேவைன்னா, அவர் தான் செய்துக்கணும்.

என்ன வேணுமோ வாங்கிப் போடுங்க. குறைந்தா போய்டுவீங்க? இருபது வருஷம் சீராட்டி வளர்த்த பொண்ணை அவங்க பிரபா அத்தானுக்குக் கட்டிக் கொடுத்து இருக்காங்க. ஆமா தானே? அவரை அக்கா நல்லா பார்த்துக்கும் போது.. அக்காவை பார்த்துக்க வேண்டியதும் பிரபா அத்தான் பொறுப்பு தானே?”

எதற்கும் பதிலில்லை அவனிடம், இதற்குத் தான் பொண்டாட்டியும் மாட்டுவது இல்லை அவன்.

error: Content is protected !!
Scroll to Top