உதய ராகம் – 13 (2)

அன்று காலையில் ஏழு மணிக்கு வேலைக்கு ஓடினர் இருவரும். இப்போது நள்ளிரவு வரை விழித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அவனுக்காகப் பாவப்பட்டு இளகிய மனதை கடினமாக்கினாள்.

“இனி, இப்படி நடக்காது மா..”

“இன்னைக்கு நடந்ததுக்கு என்ன பதில் ஏசிபி? ஒரே ஒரு நிமிஷம் உங்களுக்கு டைம் இல்ல என் கிட்ட பேச.. இப்ப மட்டும் ஏன் வீட்டுக்கு வந்தீங்க. அங்கேயே படுத்து தூங்கி.. நாட்டைக் காப்பாத்த வேண்டியது தானே?

எவ்வளவு பயந்து போய் இருந்தேன் தெரியுமா? நான் என்ன, நீங்க உடனே ஓடி வந்து சூப்பர் ஹீரோ மாதிரி நிற்கணும்னா எதிர்பார்த்தேன்? இல்லையே. ராகவன் பண்ண மாதிரி, இதைப் பண்ணு, இங்க போ, நான் இருக்கேன், உன் கூட… அந்த அந்த மாரல் சப்போர்ட் கூடக் கொடுக்க முடியலைன்னா… நீங்க என்ன மாதிரி புருஷன், ஆங்? பொண்டாட்டியையும், சொந்த வீட்டையும் காக்க முடியாத உங்களுக்கு எதுக்குக் காக்கி சட்டை?

அப்படி உங்களுக்கு முக்கியமில்லாத.. நான் ஏன் இனி இந்த வீட்ல இருக்கணும்?”

“ராகவி…”

“மூச்.. பேசாதீங்க. கோபம் வருதோ? இன்னைக்கு அக்காக்கு நடந்த மாதிரி… நாளைக்கு.. எனக்கு… நானே இது போல ஏதாவது எமர்ஜென்சியில் மாட்டினாலும்…”

அவளை இழுத்து மீண்டும் வாயைப் பொத்தினான்.

இம்முறை, அவனை உதறியவள், பளாரென்று அவனை அறைந்திருந்தாள்.

முதல் முறையாக அடித்திருக்கிறாள். எல்லாவற்றிற்கும் ஒரு முதல் முறை இருக்க வேண்டும் இல்லையா? ஆனால், இது தான் கடைசி முறையாகவும் இருக்க வேண்டும் என்றே இருவரும் விரும்பினர்.

கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தலை குனிந்தானே தவிர, வேறொன்றும் சொல்லவில்லை அவன்.

“சாரி, உதய். நான், வேணும்னு அடிக்கலை… உதய்… சாரி‌‌…”

“நானும் வேணும்னு பண்ணல பட்டே. அமைச்சர் நீலகண்டன் முன்னாடி உட்கார்ந்து இருந்தேன். சுத்தி என்னோட டீமும், அவரோட டீமும் இருந்தாங்க. அதான்…

எங்க தலைக் கிட்ட, என் பேரை மென்ஷன் பண்ணி ஹெல்ப் கேட்டு இருக்கார். நான் தான் அந்த வேலையை முடிக்க முடியும்னு அவர் நம்பி கூப்பிடும் போது.. வேலையை சரியா முடிக்கனுங்கற பதட்டத்தில் இருந்தேன் மா. அங்க அவ்ளோ பேர் முன்னாடி நான் மட்டும் பொண்டாட்டி கிட்ட…”

“முட்டாள் போலீஸ் மாதிரி பேசாதீங்க. அப்படிப் பொண்டாட்டி கிட்ட பேசினா தான் என்ன? போனில் கொஞ்சவா போறோம்.? இல்ல அவங்களுக்கு எல்லாம் வீட்ல பொண்டாட்டி, பிள்ளை இல்லையா? ஒரு அவசரம்னா கால் பண்ண மாட்டாங்களா? இல்ல எல்லோரும் உங்களை மாதிரி பொறுப்பில்லாத போலீஸ் தானா?”

“சாரி மா…”

“இன்னொரு முறை சாரி சொல்லாதீங்க உதய். திருப்பித் திருப்பி அதையே சொல்ல அசிங்கமா இல்ல உங்களுக்கு? ஒரு செகண்ட் யோசிச்சு பாருங்க. இன்னைக்கு நான் ஹேன்ட் பேகை மறந்துட்டு போகலைன்னா, சரியா அந்நேரம் பார்த்து வீட்டுக்கு வரலைன்னா… வீட்டுக்கு வந்தவ எனக்கும் வேலை முக்கியம்னு அக்காவை தேடாமல் கடைக்குப் போய் இருந்தேன்னா… என்னவாகி இருக்கும்? இந்நேரம் நம்ம வீடு, இழவு வீடா மாறி இருக்கும்..” மீண்டும் அவள் வாயை அவன் அடைக்கப் பார்க்க, அவனது கையை அடித்துத் தட்டி விட்டாள்.

“ஒன்னு இல்ல உதய். ரெண்டு உயிர். ஒருவேளை காப்பாத்த போய் நானும் சேர்ந்து விழுந்து இருந்தா.. என்னவாகி…”

“சொல்லாத…” அறை அதிர கத்தியவன், அவளை இழுத்து மூச்சு முட்டும் அளவு இறுக்கமாக அணைத்திருந்தான்.

“அப்படிச் சொல்லாத பட்டே. சொல்லாத..” அதையே திருப்பி, திருப்பிச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

எடையற்றுக் காற்றில் உதிர்க்கப்படும் வார்த்தைகள் தான், சமயங்களில் கத்தியின் கூர்மையுடன் குத்தி கிழிக்கிறது.

காலையில் இருந்து கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை, அவன் அணைப்பில் வெடித்து மீண்டும் வெளிவந்தது அவளுக்கு. அணைத்திருந்தவன் உடல் குலுங்கவும் தான் அவனுமே அழுகிறான் என்பதை உணர்ந்தாள் ராகவி.

மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். இருவரின் கண்களில் இருந்தும் நிற்காமல் வடிந்து கொண்டிருந்தது கண்ணீர்.

“சாரி… சாரி மா..” அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, மன்னிப்பை யாசித்தான்.

அவளுக்கு அழுகை தான் வந்தது.

அவன் மார்பில் தலை சாய்த்து அன்றைக்கு நடந்ததை முழுவதுமாகச் சொன்னாள். பிரியதர்ஷினியை இரண்டு மாடி தனியாக இழுத்துக் கொண்டு போனதை.. அவள் காரை கை நடுங்க ஓட்டியதை… எங்காவது கொண்டு போய்க் காரை முட்டி விடுவேனோ என்று பயந்ததைச் சொன்ன போது, அவன் உடல் அதிர்ந்து அடங்கியது.

“அமைச்சர், அவரோட ஆபீஸ்க்கு சைபர் அட்டாக். நிறைய முக்கியமான பைல்ஸ் எல்லாம்… ஹைலி கான்ஃபிடன்ஸியல் பைல்ஸ். அவரோட டீம் டிரை பண்ணி முடியாம தான் என்னைக் கூப்பிட்டாங்க. என் டீமில் யாருக்கும் போன் கூட அலோவ் பண்ணல. அங்க நான் மட்டும் போனில்…”

“உங்க அமைச்சரும் மனுஷன் தானே? எமர்ஜென்சி அவருக்கு வராதா? இல்ல சொன்னா புரியதா? அறிவாளி மாதிரி பேசி என்னைக் கடுப்பேத்தாதீங்க போலீஸ்.

“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சுன்னு” கேட்க தெரிஞ்சது இல்ல? அந்த வார்த்தை உங்க வாயில இருந்து வர்றதுக்கு முன்னாடி அதைக் கொஞ்சமாவது யோசிச்சு சொன்னீங்களா?

அதிசயமா இப்படிக் கால் பண்றாளே, என்னவோ ஏதோன்னு உங்களுக்குப் பதறலை, துடிக்கலை. பொண்டாட்டி மேல அவ்வளவு அலட்சியம்”

அவனிடம் இருந்து மீண்டும் விலகி நின்றாள். அவனும் அணைக்க முற்படவில்லை

“இல்ல பட்டே. கொஞ்ச நேரத்தில் ரியலைஸ் பண்ணி கால் பண்ணேன். ஆனா, நீ…”

“நான் போனை எடுக்கலை. இனியும் எடுக்க மாட்டேன். இதே போல் உங்களைத் திருப்பி அடிக்கறேன் இருங்க.”

அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து தண்ணீரை வாயில் சரித்தாள். அவனிடமும் நீட்டினாள்.

‘அப்பாடா, சாமி மலையிறங்குது’ என்று ஆசுவாசமானான் உதய்.

ஆனால், அவனது ஆசுவாசத்தில் தண்ணீரை ஊற்றி விட்டு மீண்டும் சண்டையைத் தொடங்கினாள் ராகவி.

“உயிர் காக்கும் டாக்டர் ராகவன். ஓகே, இன்டர்ன்ஷிப் தான் பண்றான். ஆனாலும், எனக்காக வந்து நின்னான் இல்ல? மலர், அவளும் வந்து நின்னா. சுஹா காலேஜில் இருந்து நேரா ஹாஸ்பிட்டல் தான் வந்தா… ஆனா, நீங்க…”

“சாரி, சாரி மா…”

“ஓகே, ப்ரூவ் இட்” என்றாள் கைக் கட்டி,

“எதைப் பட்டே..” என்று அவன் அவளை நோக்கி நகர,

“சாரி கேட்டீங்க இல்ல? அதுக்கு என்ன அர்த்தம்? நான் செய்த தவறுக்கு மனம் வருந்துகிறேன். இல்லையா? அதைத் தான் நிரூபிக்கச் சொன்னேன்” என்றாள்.

“எப்படி?”

என்னவென்று நிரூபிப்பான் அவன். பதட்டமாக அவளைப் பார்த்தான்.

“எப்படியா? நான் கொடுக்கற பனிஷ்மென்ட்டை ஏத்துகிட்டு நிரூபிங்க.” என்றாள்.

“என்ன பட்டே, நீ..”

“யோவ், போலீஸ். தப்புப் பண்ணா தண்டனை கொடுக்கணும் தானே?” என்று புருவம் உயர்த்தியவள்,

“இன்னைக்கு நீங்க பண்ண தப்புக்கு உங்களுக்கு, நான் என்ன தண்டனை தரட்டும்? இனி இது போல நடக்கக் கூடாது இல்லையா? குற்றவாளின்னு நிரூபணம் ஆகிடுச்சு. அடுத்தது தண்டனை தானே போலீஸ்?” தீர்க்கமாகக் கேட்டாள்.

அதிர்ச்சியில் மொழிகள் அனைத்தும் மறந்தவனாக அவளைப் பார்த்தான் உதய்.

“சட்டம் தன் கடமையைச் செய்யும்.. வக்கீல் ஆஜர் ஆகிட்டாங்க”

முணுமுணுத்தான்.

“வாயை உடைப்பேன்”

“இன்னைக்கு ரொம்பப் பேசுற பட்டே..” வருத்தத்துடன் சொன்னான்.

“உங்களுக்கு வேணும்னா சூசைட், டெத் எல்லாம்… தினம் பார்க்கிற ஒன்னா இருக்கலாம் உதய். ஆனா, எனக்குக் கண் முன்னாடி ஒருத்தர், என் கணவரோட அண்ணி, உயிரை விடப் பார்த்தது… முடியல உதய்.. பச்ச குழந்தை, அவனுக்கு என்ன தெரியும்? இப்படியொரு நிலைமை இனி என் வாழ்க்கையில் வரவே கூடாதுன்னு வேண்டிக்கறேன்”

“போலீஸ்… எங்களுக்கு இதெல்லாம் பார்த்து பார்த்து பழகிப் போய் இருக்கலாம் டா. ஆனா, நிச்சயம் மனசும், உணர்வுகளும் மரத்து போகல.. அதுவும்.. அதுவும்… நமக்கு நெருங்கின ஒருத்தருக்கு… நம்ம நேசிக்கிறவங்களுக்கு ஒன்னுன்னா. நாங்களும் உடைந்து தான் போவோம் பட்டே. ஆப்டர் ஆல், எங்களுக்குள்ளயும் இரத்தம் தானே ஓடுது. துடிக்கத் தானே செய்யும்…” இறுகிய குரலில் சொன்னான் உதய்.

error: Content is protected !!
Scroll to Top