உதய்கு இது ஒன்றும் புதிதல்ல. அவனது வேலையின் காரணமாக இது போன்று நிகழ்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகி இருந்தது. மனைவியின் கோபம் நியாயம் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால், இம்முறை இரு உயிர்கள் சம்மந்தப்பட்டிருக்க, மனைவியையும் தான் ஒரு நாள் முழுக்கப் புறக்கணித்திருக்க, ராகவியைத் தற்போது சமாதானப்படுத்த இயலுமா அவனால்? சந்தேகம் தான் என்றது அவன் மனது.
மெல்ல அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான்.
அவளோ, தன் ஆயத்தங்கள் அத்தனையையும் மறந்து உறங்க தயாரானாள்.
“ராகவி…” நின்ற இடத்தில் இருந்து அவனைத் திரும்பி பார்த்தாள்.
“என்ன வேணும் உங்களுக்கு ஏபிசி? உங்க டிரிக்ஸ்(Tricks) எல்லாம் இங்க வேலை செய்யாது.. அதனால..”
“சாரி பட்டே..”
இளகி விடக் கூடாது என்று இறுக்கமாக நிற்பவளை கவலையுடன் பார்த்தான் உதய்.
“உங்க போனை கொடுங்க” என்றாள் கையைக் கட்டிக் கொண்டு,
“அது.. அது.. கார்ல… வண்டில மறந்துட்டேன் மா” உளறினான்.
“ஓஹோ. சரி, சரி. அப்படியா?.” என்றாள் நக்கலாக.
“பிளீஸ் மா…”
“போனை புத்திசாலித் தனமா பத்திரப்படுத்தி வச்சுட்டு வந்துட்டா, தப்பிச்சுடுமா? இன்னைக்கு இல்லனா என்ன? நாளைக்கு அதைச் சுக்கு நூறா உடைச்சு தான் போட போறேன்.” என்றவள்,
“என் போன் காலை… நான் போன் பண்ணா அட்டெண்ட் பண்ண முடியாத அந்தப் போன், என்ன இழவுக்கு உங்க கிட்ட இருக்கணும் சொல்லுங்க?”
“ராகவி, ஐ ஆம் சாரி. உனக்கு என் வேலையைப் பத்தி தெரியாதா? நானும் தெரிஞ்சு உன்னை அவோய்ட் பண்ணல மா. நீ, என்ன நடந்துச்சுன்னு சொல்லு?” என்று கேட்டவனை எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள் ராகவி.
“சாரி? எதுக்குச் சாரி? காரணம் சொல்லுங்க முதல்ல?” என்றாள் அழுத்தமாக.
சட்டென்று அவளை நோக்கி அவன் வர, கத்தினாள்.
“உட்காருங்க. அங்கேயே. சோஃபால… ஒரு அடி நகரக் கூடாது. என் பக்கத்தில் வந்தா, கொன்றுவேன் உங்களை…” அடித் தொண்டையில் இருந்து கத்தினாள்.
மௌனமாய் அவள் சொன்னபடி சோஃபாவில் அமர்ந்தான் அவன்.
“முதல்ல அந்த யூனிஃபார்மை கழட்டி கொடுங்க. காவல் துறையாம்…காவல் துறை.. மண்ணாங்கட்டி.. நாட்டைக் காவல் காத்து கிழிச்சது போதும். இன்னைக்கு அதை எரித்திட்டு தான் மறுவேலை. கழட்டுங்க” வெறுப்பும், ஆத்திரமும் மண்டிக் கிடந்தது அவள் குரலில்.
“ராகவி…” கர்ஜித்தான்.
“அவுட்.” என்றாள்.
வாசலை கைக் காட்டி,
“அவுட், கெட் அவுட். வெளில போங்க. ஒரு நிமிஷம் என் முன்னாடி நின்னாலும் உங்களை… வேணாம்.. வெளில போங்க..” அவளும் தன் தொண்டையின் பலத்தைக் காட்டினாள்.
அவளிடம் அந்த வார்த்தைகளை எதிர்பார்க்காதவன் அதிர்ந்து எழுந்து நின்றான்.
“என்ன பேசுறோம்னு கொஞ்சமாவது உனக்கு….”
“வாயை மூடுங்க. உங்களுக்கு என்ன பண்றோம்னு கொஞ்சமாவது அறிவு இருந்ததா? ஹான்? பதில் சொல்லுங்க ஏசிபி. என் போனை அட்டெண்ட் பண்ண முடியாத அளவுக்கு என்ன கிழிச்சுட்டு..”
“ராகவி…”
“பேசாதீங்க. கொன்றுவேன்” விரல் நீட்டி எச்சரித்தாள்.
அவளுக்குப் பேசிக் கொண்டிருக்கும் போதே முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“தூங்க முடியலை உதய். கண்ணை மூடினா, காலையில் பார்த்தது தான் கண்ணுல வருது. கண்ணைத் திறந்தாலும் அதே தான்… பயந்திட்டேன். ரொம்பவே… ஒரு நிமிஷம் கை, கால் எல்லாம் நடுங்கி.. என்ன பண்றதுன்னு தெரியாம.. கடவுளே..”
“என்ன ஆச்சு மா?”
“அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி கேட்காதீங்க கேடி போலீஸ். இந்நேரம் உங்க காதலி எல்லாத்தையும் சொல்லி இருப்பானே. பொண்டாட்டி நானு. ஆனா, என்னைச் சமாளிக்க அவனைக் கைக்குள்ள போட்டு வச்சு இருக்கீங்க”
“அசிங்கமா பேசாத…”
“ஓ, உண்மையைச் சொன்னா, கோபம் வரத் தான் செய்யும். ராகவ் கிட்ட இந்நேரம் என்ன நடந்ததுன்னு எல்லா டீட்டெயிலும் கலெக்ட் பண்ணிட்டு வந்திருப்பீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். அப்படியே இங்க என்ன நடந்ததுன்னு தெரியாத அப்பாவி மாதிரி நடிக்காதீங்க..”
“அவன் இன்னைக்கு எதுவும் சொல்லலை பட்டே. கோபமா இருக்கான் போல…”
“நேர்ல வேணா போய்க் கேட்டு இருக்கலாம் இல்ல. நல்லா கொஞ்சுவான்…”
நொடியில் தலை தொங்கி விட்டது அவனுக்கு.
“நீ… நீ கூடத் தான் பேச்சி முத்து கிட்ட எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கற. அதுக்கு நான் ஏதாவது சொன்னேனா?” என்று கேட்டவனைக் கொலை வெறியுடன் பார்த்தாள் ராகவி.
“நீங்க போன் எடுத்து பேசினா? நான் ஏன் அவரைக் கேட்கப் போறேன் உதய்? நாளைக்கு நானே செத்து போனாலும், தகவல் சொல்ல….” நாலு எட்டில் அவளை நெருங்கி, மேலே சொல்ல விடாமல் வாயைப் பொத்தினான். அவனிடம் இருந்து திமிறி, விலகி நின்றாள்.
“பைத்தியம் மாதிரி பேசாத.. செத்து கித்துனு இன்னொரு முறை பேசு. அப்புறம் நான் மனுஷனாவே..”
“உங்க பொண்டாட்டி உசுரு மட்டும் வெல்லம். அண்ணன் பொண்டாட்டின்னா..”
“வேணாம் சொல்லாத, பிளீஸ்…”
“சரி நீங்க சொல்லுங்க. ஏன் போனை எடுக்கலை. எடுத்தாலும் ஏன் பேசலை? அப்படி என்ன பெரிய புல் புடுங்கற வேலை பார்த்திட்டு இருந்தீங்க?.”
“அது, அது… முக்கியமான…”
“என்னை விட முக்கியமான வேலையா?”
அமைதியாய் நின்றான்.
“பதில் வேணும் போலீஸ். இல்லனா, மௌனம் சம்மதம்னு எடுத்துப்பேன்”
மூச்சு வாங்க கத்தினாள். அவன் மூச்சு விடவும் பயந்து நின்றான்.
“உன்னை விட எதுவுமே எனக்கு முக்கியமில்…” அவன் முடிக்கும் முன் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தாள்.
“பொய், பொய், பொய். ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் நான் சொல்ல வந்ததைக் கேட்க நேரம் இருந்ததா உங்களுக்கு? சொல்லுங்க? எவ்வளவு நேரம் ஆகிடப் போகுது? மிஞ்சி மிஞ்சி போனா ரெண்டு நிமிஷம்? யூ டோண்ட் ஹவ் தட் டைம் ஃபார் மீ. அப்படித் தானே? எப்பவாவது உங்க வேலை நேரத்தில் போன் பண்ணி தொல்லை பண்ணி இருப்பேனா? சொல்லுங்க?”
“இல்ல மா… இன்னைக்கு..”
“அந்த அமைச்சர் என்னை விட முக்கியமா போய்ட்டார் இல்ல? போங்க, போங்க. போய் அமைச்சருக்கே சேவகம் பண்ணுங்க.” என்றவளை அதிர்ந்து போய்ப் பார்த்தான்.
“ராகவி…”
“பேச்சி முத்து கிட்ட தான் போட்டு வாங்கினேன். என்ன இப்போ? காஃபி வேணுமா? ஜுஸ் வேணுமான்னு எவளோ என் புருஷனை கொஞ்சினா, ஆத்திரம் வருமா இல்லையா? இதுல ரொம்பக் கான்பிடன்ஸியல் மீட்டிங். இல்ல போலீஸ்?”
உடலில் இருந்த சக்தி அனைத்தும் வடிவது போலிருந்தது அவளுக்கு. கண்கள் எரிந்து உறக்கத்திற்குக் கெஞ்சியது. மணி நள்ளிரவு மூன்றை நெருங்கி இருக்க, அவனைப் பார்க்கவும் பாவமாக இருந்தது.