பிரியதர்ஷினியிடம் அவ்வளவு பேசி இருந்தார் மருத்துவர். அவளது முகம் ஓரளவு தெளிந்திருந்தது. கணவன், மனைவி இருவருக்குமே அறிவுரையும், ஆலோசனையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து சில முறை மருத்துவமனைக்கு வரவும், மனநல மருத்துவரை ஒரு முறை சந்திக்கவும் பரிந்துரைத்தார் மருத்துவர்.
இரவு மணி பத்தை நெருங்கும் போது பிரியதர்ஷினியை டிஸ்சார்ஜ் செய்து, அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
ராகவி ஓரளவு இயல்புக்கு திரும்பி இருந்தாலும், உடலில் அதிர்ச்சியும் நடுக்கமும் இன்னமும் மிச்சமிருந்தது.
வீட்டிற்கு வந்ததும் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளுக்குக் காலையில் கண்ட காட்சி கண்களை விட்டு மறைய மறுத்தது. நினைக்க நினைக்கக் கண்ணீர் பொங்கியது. குளிரால் உடல் நடுங்க தொடங்கவும் வெளியில் வந்து உடை மாற்றிப் படுத்தாள்.
இரவு ஒரு மணிக்கு அறைக்குள் நுழைந்த உதய் கண்டது, மனைவி, குழந்தை பார்த்திபனை அணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்ததைத் தான்.
எதுவோ சரியில்லை என்றது மனது. பதட்டமாக அவளின் பக்கம் சென்றான்.
முகம் வருடி, தலை கோதி கொடுத்தான். பாதி உறக்கத்தில் இருந்தவள், பட்டென்று கண் விழித்தாள்.
“பட்டே, சாரி மா” என்றான், மன்னிப்பை வேண்டும் குரலில், “தூங்கு” என்றான்.
அவன் கதவு திறந்த சத்தத்தில் அவன் வந்ததை உணர்ந்து, கதவை தட்டினார் பிரபாகரன்.
இருவரும் எழுந்து வெளியில் செல்ல, ராகவியின் கையை இறுக பற்றி,
“தேங்க்ஸ் ராகவி. நீ மட்டும்… நீ இல்லனா… இன்னைக்கு என் பொண்டாட்டி பிள்ளை… என்னால சொல்ல கூட முடியலை மா… தேங்க்ஸ் மா” என்று கலங்கிய குரலில் சொன்னவர், திரும்பி உதயை தோளோடு அணைத்து,
“தேங்க்ஸ் டா. ஒரு நிமிஷம் செத்துட்டேன் டா. ஆனா, ராகவி, ரெண்டு பேரையும் தூக்கி போட்டு ஹாஸ்பிட்டல் கொண்டு போய்…” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உள்ளிருந்து, “அத்தான்..” என்று பிரியதர்ஷினி அழைக்க,
“குழந்தையைத் தூக்கிட்டு போறேன் மா” என்று அறைக்குள் நுழைந்து குழந்தையைக் கைகளில் அள்ளினார்.
“அத்தான், குட்டி பையன் இன்னைக்கு என் கூடத் தூங்கட்டும். பிளீஸ், அக்காக்கு ரெஸ்ட் வேணும்” இரைஞ்சினாள்.
“அவ தான் மா குழந்தையைக் கேட்டுட்டே இருக்கா. நான் பார்த்துக்கறேன். நீங்க படுங்க. ரெண்டு பேரும் டையர்டா இருப்பீங்க” என்றார் கரிசனத்துடன், தலையை மறுப்பாக அசைத்தாள் ராகவி. அவளுக்குக் கோபமாக வந்தது.
அந்நேரம், “உங்க தம்பியை பார்த்துக் கத்துக்கோங்க. பொண்டாட்டியை எப்படி உள்ளங்கையில் வச்சு தாங்குறதுன்னு. நம்ம வீட்ல ஆம்பளைங்க யாராவது அடுப்படி பக்கம் வந்து இருப்பீங்களா? அவரு பொண்டாட்டிக்கு காபி போட்டு கொடுக்கறார். காய் நறுக்கி, தோசை ஊத்தி, வீடு துடைச்சு.. துணி காயப் போட்டு… துணி அயர்ன் பண்ணி.. அவ்வளவு ஏன், அவ பீச்சில் நடந்தா, அவ செருப்பைக் கைல தூக்கிட்டு கூடவே போறார்…”
“நீங்க போங்க அத்தான். பிளீஸ்” ராகவிக்கு இருந்த கோபத்தில், உதய் புகழை எல்லாம் இப்போது கேட்க முடியும் என்று தோன்றவில்லை.
இக்கரைக்கு அக்கரை பச்சை தான் என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனாலும், பிரியதர்ஷினி சொன்னதை அவளால் மறுக்கவே முடியாது. உதய் எப்போதும் நல்ல கணவன் தான். சொதப்பும் சில.. இல்லை.. பல நேரங்கள் தவிர!
“எப்பவும் கத்துவா ராகவி. ஆனா, நான் தான் அதைச் சரியா புரிஞ்சுக்க…” வருத்தத்துடன் சொல்லத் தொடங்கிய பிரபாகரனை,
“பிளீஸ், போங்க அத்தான். அவங்களைப் பேச விடுங்க. மனசு காலியாகட்டும். அப்புறம் சரியாகிடுவாங்க. பிளீஸ், பார்த்துக்கோங்க அத்தான்” என்று குழந்தையின் பால் பாட்டிலை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள்.
தன்னைச் சுற்றி நடப்பது அனைத்தையும் கை கட்டி, புருவம் சுளித்து, கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் உதய். அவனுக்குக் கண்ணைக் கட்டி, வீட்டில் விட்டது போலிருந்தது.
பால் பாட்டிலை வாங்கிக் கொண்டு, குழந்தையோடு அவர்களின் அறைக்குள் சென்று மறைந்தார் பிரபாகரன்.
அவளிடம் எலக்ட்ரிக் பிரெஸ்ட் பம்ப் வாங்கிக் கொடுத்திருந்தான் ராகவன். அதில் தாய் பாலை பம்ப் செய்து எடுத்து, பாட்டிலில் அடைத்து குழந்தைக்குப் புகட்டலாம். பிரியதர்ஷினியை அவ்வாறு செய்ய வைத்து, பாட்டிலில் இருந்த பாலை குழந்தைக்குப் புகட்டினாள். முதலில் குடிக்க மறுத்தவன், சிறிது நேரத்தில் அதற்குப் பழகி இருந்தான். நன்றாகக் குடிக்கவும் தொடங்கினான். வயிறு நிறைந்ததும் அதிசயமாகத் தாயை தேடாமல் அவளோடு தூங்கி விட்டான்.
குழந்தையை எளிதாகச் சமாளித்த ராகவிக்கு, அவனின் அம்மாவை சமாளிப்பது தான் அத்துணைக் கடினமாக இருந்தது. அவளைச் சம்மதிக்க வைப்பதற்குள் பெரும்பாடு பட்டுப் போனாள்.
“என்னது பாலை கறந்து… பாட்டிலில் வச்சு கொடுக்கறதா?” அதிர்ந்து கத்தினாள் பிரியதர்ஷினி.
அவளிடம் மருத்துவரை பேச வைத்து, தாய்ப்பால் வெளியில், அறை வெப்ப நிலையில் வைத்தால் மூன்று, நான்கு மணி நேரம் வரை கெடாது. குளிர்சாதன பெட்டியில் வைத்தும், பாதுகாத்துக் கொடுக்கலாம் என்று அவர் பல முறை விளக்கி சொல்லவும் தான் ஒத்துக் கொண்டாள் பிரியதர்ஷினி.
இரவு தூங்க செல்லும் முன் ராகவிக்கு நன்றி சொல்லி விட்டே சென்றாள்.
“சிலதை செய்ய எப்பவுமே மனசு ஒத்துக்காது ராகவி. ஆனா, இப்போ அவ்ளோ ரிலாக்ஸட்டா ஃபீல் பண்றேன். நானே ஃபீட் பண்ணலைன்னு கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருக்கு. ஆனா,..”
“அக்கா, எல்லா நேரமும் நீங்க பாட்டிலில் கொடுக்கப் போறது இல்ல. இவ்வளவு யோசிக்காதீங்க. போய்ப் படுங்க. அவனை நான் பார்த்துக்கறேன்” என்றிருந்தாள்.
“ராகவி” என்ற கணவனின் குரலில் கலைந்து அவனைத் திரும்பி பார்த்தாள்.
மனைவியின் ஓய்ந்த தோற்றமும், சோர்ந்த முகமும் அவனைக் கவலையுற செய்தது.
அந்நொடி தன்னையே வெறுத்தான் உதய்.
நிமிர்ந்து, இறுக்கமான அவள் முகம் பார்த்து, எச்சில் கூட்டி விழுங்கினான்.
சட்டென்று அறைக்குள் நுழைந்து, ஜன்னல், கதவை சாற்றி, திரை சீலைகளை இழுத்து விட்டு, ஏஸியின் அளவை கூட்டி வைத்தாள். தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்தாள் ராகவி.
அத்தனை முன்னேற்பாடும் சண்டைக்கு என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது.
சத்தம் வெளியில் கேட்காமல் இருக்கத் தான் செய்கிறாள் என்பதைக் கைக் கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தான் அவன்.
அவனது விசாரணை அறையை எப்போதும் போல ஞாபகப்படுத்தியது.
“ஒரு முக்கியமான கேஸ், ரொம்பக் கன்பிடன்சியல். அதான்.. சாரி… தெரியாம… இனி நடக்கா…” தடுமாறினான்.
“நான் உங்களை ஏதாவது கேட்டேனா ஏசிபி?” என்றாள் ராகவி.
அந்த நிதானமான குரலை நன்கு அறிவான் அவன்.
அணிந்திருந்த காக்கி உடையைப் போல, அவனது உடலும் கத்தியாய் நிமிர்ந்து நிற்க,
“இன்னைக்கு, நீ செத்தடா உதய்” சத்தமாகவே முணுமுணுத்தான்.