மனதில் இத்தனை நாள், ஒரே வீட்டில் இருந்தும் அவளைக் கவனிக்காமல் விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி குடைந்தது.
அவள் பார்த்தவரை நன்றாகத் தான் இருந்தார். குழந்தையுடன் விளையாடிய படி, அத்தை, மாமாவுடன் கலகலப்பாகப் பேசிக் கொண்டு.. அவளையும், உதயையும் கிண்டல் செய்து, சிரித்துப் பேசி.. பிரியதர்ஷினி கோபப்படும் ஒரே ஆள் பிரபாகரன் தான். ஆனாலும், அதைக் கணவன் மனைவிக்கு இடையிலான செல்ல சண்டைகளாகத் தான் அவள் எடுத்துக் கொண்டது. இப்போது தான் அது மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்பதே புரிகிறது.
மருத்துவரை பின் தொடர்ந்து வெளியில் வந்தாள்.
பனிமலரோடு ராகவனும் நின்றிருந்தான். நாலே எட்டில் அவளை நெருங்கியிருந்தான்.
“எல்லாம் நார்மல். நான் பார்த்துட்டேன்” என்று தந்தி மொழியில் முக்கியச் செய்தியை சொன்னான்.
“ரொம்பப் பயந்துட்டேன் ராகவ்”
அவளின் தலை கோதி,
“பயம் நம்மை அலர்ட்டா தான் வச்சிருக்கும். தப்பில்லை.” என்று அவளோடு நடந்தான். இருவரும் அறைக்குள் நுழையும் போதே உள்ளிருந்து பேச்சுக் குரல்கள் கேட்டது. பிரியதர்ஷினி விழித்திருந்தாள்.
“தேங்க் காட். அக்கா” இருக்கும் இடம் மறந்து கத்தினாள் ராகவி.
அவளைப் பார்த்ததும், “சாரி ராகவி” என்றாள் பிரியதர்ஷினி மெலிதான குரலில்.
“எப்படி இருக்கீங்க கா?”
பதிலுக்குப் புன்னகைத்து, தலையசைத்தாள் அவள்.
“பிரபாகரன் அத்தான் வந்துட்டே இருக்காங்க கா” என்று அவள் சொன்னதும் அதிர்ச்சியில் விரிந்தது அவளின் விழிகள். அவளை ஆறுதல் படுத்த தான் சொன்னாள் ராகவி. ஆனால்..
“இங்க பாருங்க மா, உங்களுக்கு ஒன்னும் இல்ல. டெலிவரிக்கு அப்புறம் வர்ற இந்த மன அழுத்தம் நீங்க பயப்படுற அளவுக்குப் பெரிய நோய் எல்லாம் இல்ல. உங்க ஹஸ்பெண்ட் வந்ததும் நான் பேசுறேன். சரியா? அவருக்குத் தேவையானதை மட்டும் சொல்வோம். என்ன? நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம்.” என்று மருத்துவர் மென்குரலில் சொல்ல, சற்றே தெளிந்தாள் பிரியதர்ஷினி.
ராகவியின் சந்தேகத்தை மெய்பித்தது மருத்துவரின் பேச்சு.
அவளுக்கு மனம் கனத்துப் போனது.
“வீட்ல யாருக்கும், இன்னும் சொல்லலை கா. அத்தானுக்கும் நான் காரணம் எதுவும் சொல்லலை கா” என்று ராகவியும் சொல்ல, “தேங்க்ஸ் ராகவி” என்றாள்.
ராகவிக்கு நிலைமையைச் சமாளிக்கப் பொய் சொல்ல வேண்டியிருந்தது. இப்போது பிரபாகரன் அழைப்பை எடுக்க வேண்டும் என்ற கவலையும் தொற்றிக் கொண்டது.
“குழந்தை, பார்த்தி எங்க?”
“இதோ வெளில தான் கா இருக்கான். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துக்கறேன்” என்று விட்டு வெளியில் வந்தாள். குழந்தையைத் தூக்கி கொண்டு போய் அவளிடம் காட்டினாள்.
பிரியதர்ஷினி எவ்வளவு வற்புறுத்தி கேட்டும் கொடுக்காமல், குழந்தையைத் தன்னுடன் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தாள்.
அலைபேசியை எடுத்து பிரபாகரனுக்கு அழைத்தாள். சாவகாசமாக அழைப்பை ஏற்று, “என்னம்மா ராகவி, அஞ்சாறு தடவை கால் பண்ணி இருந்த போல? மீட்டிங்கில் இருந்தேன். எடுக்க முடியலை..” அதைக் கேட்கும் பொறுமை அவளுக்குத் தான் இல்லை.
கோபத்தில் வார்த்தைகள் தாறுமாறாக வந்து விழுந்து விடும் போலிருந்தது.
“உங்க பொண்டாட்டி..”
“என்ன ராகவி?”
“அக்காக்கு உடம்பு முடியலை. வீட்ல மயங்கிட்டாங்க. இப்போ, ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கேன். நீங்க, உடனே வாங்க அத்தான்.” என்று மருத்துவமனையின் பேரை சொல்லி விட்டு, மேற்கொண்டு எதையும் பேசாமல் அழைப்பை துண்டித்தாள்.
அடுத்ததாகக் கணவனுக்கு அழைத்தாள். மூன்றாம் முறை தான் அழைப்பை ஏற்றான்.
“இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு.. சொன்னா..”
“உதய்..”
“அப்புறம் கால் பண்றேன்” அவ்வளவு தான், வைத்து விட்டான். அவளுக்குக் கோபம், கோபம், அப்படி ஒரு கோபம் வந்தது.
ஒரு வெறியோடு மீண்டும் அழைத்தாள். பத்து, பதினைந்து, ம்ஹூம் அவன் எடுக்கவில்லை. இது ஒன்றும் அவளுக்குப் புதிதில்ல. அவன் வேலையில் இது போல நேர்வது இயல்பு தான். அவளுக்குப் பழகியும் இருந்தது. அவள் வீணாக, தேவையில்லாத காரணங்களுக்காக அவனை இதுவரை வேலைக்கு இடையில் தொந்தரவு செய்ததே கிடையாது.
அப்படி இருக்கையில், அவன் இன்று அழைப்பை ஏற்காதது, அவளின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
ஒரு பிடிவாதத்துடன் தொடர்ந்து அழைத்தாள்.
“ரா..க..வி..” அவன், அங்கே பல்லைக் கடிப்பது, இங்கே துல்லியமாகக் கேட்டது அவளுக்கு.
“எங்க..”
“ராகவி இம்பார்டன்ட் மீட்டிங்கில் இருக்கேன். போனை…”
“எங்க இருக்கீங்க?” இறுக்கத்துடன் கேட்டாள்.
“ஸ்டேஷன்ல..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“உதய், காஃபி எடுத்துக்கலை? காஃபி சாப்பிட மாட்டீங்களா? ஜுஸ்?” அக்கறையாய் விசாரித்தது பெண் குரல். பட்டென்று அழைப்பை துண்டித்தாள் ராகவி.
மனம் சட்டென்று வெறுமையைத் தத்தெடுத்துக் கொண்டது.
அலைபேசியை அணைத்துப் பையில் போட்டு விட்டு நிமிர்ந்தாள். பிரபாகரன் வந்து கொண்டிருந்தார். அதுவரை உடலில் இருந்த இறுக்கம் குறைந்து மெல்ல தளர்ந்தாள் அவள்.
அவர் வேக வேகமாக மனைவியைப் பார்க்க விரைந்தார்.
உதயின் அத்தை பெண் விஜியை அழைத்து, வேலை முடித்து நேராக உதயின் தங்கை காவ்யாவின் வீட்டிற்குப் போகச் சொன்னாள். தாங்கள் அனைவரும் மருத்துவமனையில் இருப்பதை மட்டும் சொன்னாள். மயக்கம் என்று மட்டுமே செய்தி சொன்னாள்.
பிரபாகரன் மூலம் அதே காரணம் தான் பெரியவர்களுக்கும் சொல்லப்பட்டது.
“நேர்ல சொல்லிக்கலாம் அத்தான். போன்ல அவங்களுக்குப் புரிய வைக்கிறது கஷ்டம்”
“சரி ராகவி” என்று விட்டுப் போனார் பிரபாகரன்.
மாலை நெருங்கும் வேளையில், மண்டையில் மணி அடித்து மனைவிக்கு அழைத்தான் உதய். அவள் அழைப்பை ஏற்கவில்லை.
“அண்ணிக்கு என்ன?” குறுஞ்செய்தி வந்தது.
“ஓ, நான் தந்தி மொழியில் சொன்னது. போலீஸிக்கு இப்ப தான் புரிஞ்சு இருக்கு போல” வெறுப்புடன் நினைத்துக் கொண்டாள். தொடர்ந்து அழைத்தான். இம்முறை அவள் எடுக்கவில்லை. எங்கே கோபத்தில் வெடித்து விடுவோமோ என்ற பயம் தான் அவளுக்கு.
“அவர் முக்கியமான வேலையா இருக்கார். கால் பண்ண வேண்டாம். அவர் பண்ணாலும் இப்ப… இப்ப சொல்ல வேண்டாம் அத்தான். நான் சொல்லிக்கறேன் அவர் கிட்ட” பொய்யை சொல்லி முடிப்பதற்குள், அவளுக்கு வியர்த்து விட்டது.
“சரி சரி மா” என்று விட்டு போய் மனைவியுடன் அமர்ந்து விட்டார் பிரபாகரன்.