உதய ராகம் – 12 (2)

அவர்களுக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தில் போய்த் தான் முடியும் என்பதை உணர்ந்தவள், குழந்தையை ஹாலில் உட்கார வைத்து விட்டு, மேலே ஓடினாள். மயங்கி கிடந்தவளை தன் பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். கைப்பையை எடுத்துக் கொண்டாள்.

இரண்டு மாடியை கடந்து கீழே வருவதற்குள் கைகள் கழன்று விழுந்து விடும் போல வலித்தது.

பிரியதர்ஷினியை காரின் பின்னிருக்கையில் கிடத்தி விட்டு, மூச்சு வாங்க வீட்டுக்குள் வந்தால், ஹாலில் விட்டு சென்ற பார்த்திபன் அடுப்படியில் இருந்தான்.

ஓடிச் சென்று கைகளில் அள்ளி, வீட்டை பூட்டி, அதே வேகத்தோடு காரில் ஏறி இயக்கினாள். கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து, மீண்டும் வீட்டின் இரு ஆண்களையும் அழைத்தாள். பிரபாகரன் எடுக்கவில்லை.

உதய், “ராகவி ஐ வில்..”

“உதய்… அக்கா… குட்டி பையன்.. கீழ விழ…” தந்தி குரலில் சொன்னாள்.

“ராகவி கூப்பிடுறேன்”

“உதய், வைக்காதீங்க. பிளீஸ்…”

“முக்கியமான மீட்டிங் மா..”

“அக்கா சூசைட்… உதய்” அதை அவள் காற்றிடம் தான் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் உதய் போனை வைத்திருந்தான்.

மீண்டும், மீண்டும் அழைத்தாள். அழைப்பை துண்டித்து விட்டான் அவன்.

கோபம், ஆத்திரம், வெறுப்பு, இயலாமை, அழுகை என அத்தனை உணர்வுகளும் மொத்தமாக அவளைத் தாக்க, வெடித்து அழுதபடி காரை செலுத்தினாள்.

ஒரு கை தானாக ராகவனின் எண்ணை அழுத்தியது.

“என்னாச்சு பாப்பா?” என்ற அவனது கேள்வியில் கேவி அழுதாள்.

“ராகவி…” என்று அவன் கத்த,

“பிரியதர்ஷினி அக்கா சூசைட்.. மாடியில் மயங்கி விழுந்துட்டாங்க. வீட்ல யாருமில்லை. காரில் தூக்கி போட்டு ஹாஸ்பிட்டல் கொண்டு போறேன். எங்க போக?”

“நேரா இங்க வந்திடு, சீக்கிரம். நான் டியூட்டியில் தான் இருக்கேன். கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்னு யோசிக்காத, யாரும் கேள்வி கேட்காம நான் பார்த்துக்கறேன். காரைப் பார்த்து ஒட்டு”

“என்னால முடியல ராகவ். காரை ஒத்த கையில் ஓட்டிட்டு இருக்கேன். எங்கேயாவது கொண்டு முட்டிடுவேன் போல இருக்கு. கை, கால் எல்லாம் நடுங்குது. குழந்தையைத் தலையைணை வச்சுச் சீட் பெல்ட் போட்டு விட்ருக்கேன். அக்கா பின் சீட்ல… பயமா இருக்கு ராகவ். நீயாவது கிளம்பி வா. பிளீஸ்”

“பல்ஸ் செக்… மூச்சு இருக்கா, பார்த்தியா?”

“ஆ…” பயத்தில் அலறினாள்.

“நாயே, நீயெல்லாம் டாக்டர் தானே? பயமுறுத்தாத. மூக்கில் விரல் வச்சு பார்த்தா.. காத்தே வராத மாதிரி இருக்கு ராகவ். நெஞ்சிலே காதை வச்சா… என் இதயத் துடிப்பு தான் கேட்குது. நானே பயந்து… ஏன்டா..” கதறினாள்.

“ஒன்னுமில்ல பாப்பா. ஸ்ட்ரெஸ், பயம், டையர்னஸ் இதுனால வந்த மயக்கமா தான் இருக்கும். பயப்படாத. அப்பா ஹாஸ்பிட்டல் போ. ஆனா, அப்பாக்கு சொல்ல வேணாம். ஜஸ்ட் மயங்கிட்டாங்க சொல்லு போதும். நான் வந்துட்டே இருக்கேன். இப்ப வந்துடுவேன்.

ராகவி.. பாப்பா, அவங்களுக்கு ஒன்னுமில்ல.. யூ வில் சேவ் ஹேர். நிமிர்ந்து உட்கார்ந்து, ரோட்டை பார்த்து வண்டியை ஒட்டு. நான், அப்பா ஹாஸ்பிட்டல்ல டியூட்டில யார் இருக்கான்னு பார்த்திட்டு கூப்பிடுறேன். ஓகே?” அவளின் பதட்டம் அவனையும் தொற்றி இருந்தது.

பக்கத்தில் எலிப் பல்லை காட்டி சிரித்தபடி இருந்த குழந்தையைத் திரும்பி பார்த்தாள். “அம்மாக்கு ஒன்னும் ஆகாது தங்கம். ஆக விட மாட்டேன்” தனக்கே தைரியம் சொன்னபடி சாலையில் பார்வையைப் பதித்து, கவனமாகக் காரை செலுத்தினாள்.

வீட்டுப் பக்கத்தில் இருந்த மருத்துவமனை ஒன்றில் சேர்த்திருக்கலாம் தான். ஆனால், பயத்தில், பதட்டத்தில் என்பதை விட, நாளை.. தற்கொலை முயற்சி, போலீஸ் கேஸ் என்று போனால், கணவன் மற்றும் வீட்டினரை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்வியும் சேர்ந்து கொள்ள, காரை அவளின் அப்பா பார்மசி வைத்திருந்த மருத்துவமனையை நோக்கி செலுத்தினாள். அந்நேரத்திலும் அத்தனையையும் சிந்திக்க வேண்டியிருந்தது. ராகவன் சொல்லியது சரி என்று பட்டது.

ஆனாலும், தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் அவளுக்கு மரணப் பயத்தைக் காட்டியது. குழந்தையைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே மனதில் தனக்குத் தெரிந்த அத்தனை கடவுளையும் வேண்டியபடி காரை முடிந்த மட்டும் விரைவாகச் செலுத்தினாள்.

லஞ்சம் என்றதும் முகம் சுளித்தவன் மனைவி, அக்கணம், அவள் அறிந்த அத்தனை கடவுள்களுக்கும் லஞ்சம் தர பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.

அவள் மருத்துவமனையை அடைய, அங்கே வாயிலில் அவளுக்காகப் பனிமலர் பதட்டமாக நின்றுக் கொண்டிருந்தாள்.

“ராகவி…”

கார் நிற்கும் முன்னே ஓடி வந்து கதவை திறந்து, குழந்தையைத் தூக்கி கொண்டாள். அடுத்த இரண்டாம் நிமிடம் மருத்துவரின் முன் இருந்தார்கள்.

பதினைந்து நிமிடம் வெளியில் காத்திருக்க வைத்து, அவளின் ரத்த அழுத்தத்தைக் கூட்டி, பின்னர்,

“சாதாரண மயக்கம் தான் ராகவி. காலையில் சாப்பிடல போல. சரியான தூக்கம் இல்ல போல. ரொம்ப வீக்கா இருக்காங்க. அது போகக் குழந்தைக்குப் பால் கொடுக்கறாங்க. இல்லையா? அதான். எல்லாம் சேர்ந்து அவங்க எனர்ஜியை டிரேய்ன் பண்ணிடுச்சு. டிரிப்ஸ் போட சொல்லி இருக்கேன். இப்போ ஏறிட்டு இருக்கும். கொஞ்ச நேரத்தில கண் முழிச்சிடுவாங்க” என்ற மருத்துவரையே கண்ணசைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள். நிம்மதி பெருமூச்சு கூட விட முடியவில்லை அவளால்.

அவர் மகப்பேறு மருத்துவர். அந்த மருத்துவமனையில் தான் அவளின் தந்தை சிதம்பரம் மருந்தகம் வைத்திருக்கிறார்.

அப்பாவை பார்க்க வரும் போது, பல முறை அவரைச் சந்தித்து இருக்கிறாள். அவளைப் பார்த்ததும் பெயர் சொல்லி அழைத்துப் பேசும் அளவுக்கு நெருக்கமானவர் அந்த மருத்துவர்.

“என்ன ராகவி?” என்று அவர் கனிவாகக் கேட்க,

“அக்கா, அக்காக்குப் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷன் இருக்கும் போல டாக்டர்.” என்றாள் சிறு குரலில்,

“ஓ.. எப்படிச் சொல்ற?”

மயங்கும் முன் அவள் தன்னிடம் புலம்பியதை மருத்துவரிடம் ஒப்பித்தாள் ராகவி.

“எஸ். நீ சொல்றதை வச்சு பார்க்கும் போது அப்படித் தான் இருக்கு. பிரசவத்துக்குப் பின்னாடி பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போலத் தான் இருக்கு. எதுக்கும் நான் பேஷண்ட்…”

“எனக்கு அக்கா.. அவரோட அண்ணன் வைஃப்” என்றாள்.

“சரி மா. அவங்க கிட்ட பேசிட்டு, அப்புறம் முடிவு பண்ணலாம்.” என்றவர்,

“இப்போலாம் டெலிவரிக்கு அப்புறம் வர்ற இந்த டிப்ரசன் ரொம்ப அதிகமாகிடுச்சு. ஆனா, நிறையப் பேர் இதைக் கண்டுக்காம அலட்சியப் படுத்துறாங்க. குடும்பமும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது இல்ல. இவ தான் அதிசயமா பிள்ளை பெத்துட்டான்னு.. ம்ப்ச் தினம் எத்தனை பார்க்கறேன்.

யாரும் சீரியஸா எடுத்துக்கறது இல்ல ராகவி. இவளுக்கு என்னமோ ஆச்சுன்னு கவனிக்காம விட்டுடுறாங்க. இவ இப்படித் தான் லூசு மாதிரி கத்திட்டு இருப்பா. ஒழுங்கா குழந்தையைப் பார்த்துக்க முடியலை, பிள்ளை பெத்துட்டா.. இப்படிப் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலயே அதைத் திருப்பி விட்டு, அவங்களை இன்னும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, நிலைமையை மோசமாக்கிடுறாங்க.

இதைச் சரியான கவுன்சலிங், புட் அப்புறம் போதுமான ரெஸ்ட் மூலம் சரி பண்ணிடலாம் ராகவி. பயப்பட வேண்டியதில்லை” என்று அவளைப் பார்த்து புன்னகைத்தவர்,

“தற்கொலை பண்ணிக்கக் காரணம் தேடுறாங்க. அவங்க ஏதோ உளருறாங்க, அப்படின்னு எடுத்துக்காம.. சரியா புரிஞ்சு என்கிட்ட சொன்னதுக்கு உன்னைத் தான் பாராட்டணும். வா, இப்ப எப்படி இருக்காங்கன்னு பார்ப்போம்” என்றபடி எழுந்து கொண்டார். ராகவியின் முகத்தில் அப்போது தான் சற்றே வெளிச்சம் வந்தது.

error: Content is protected !!
Scroll to Top