அன்றைக்குக் காலையில் எழுந்ததில் இருந்து ராகவிக்கு வேலை கழுத்தை நெரித்தது. காலில் பம்பரம் கட்டியது போலச் சுழன்று கொண்டிருந்தாள்.
கல்யாண முகூர்த்தங்கள் நிறைந்த மாதம் என்பதால் கடையில் கூட்டம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தது.
அன்று அவர்கள் கடையில் இரண்டு தலைமுறைகளாக ஜவுளி வாங்கும் ஒரு குடும்பம் அவர்கள் வீட்டுப் பெண்ணின் திருமணத்திற்குத் துணி எடுக்க வந்திருந்திருந்தனர்.
அவர்களையும், அவர்களோடு மற்ற வாடிக்கையாளர்களையும் கவனித்து, நிற்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தாள் ராகவி.
“ஆச்சி, இங்க வா” என்று விசாலாட்சி அவசரமாய் அழைக்க,
“என்ன ஆயா” என்றாள்.
“ஒரு லட்சத்துக்குச் செக் எழுதி கொடு செல்லம். ஐயா கேட்டாங்க. பாரு” என்றார்.
“இதோ, ஆயா” என்றவள், டேபிளில் ஆராய்ந்தாள். காசோலை புத்தகம் அங்கில்லை. முன்தினம் வங்கிக்கு சென்று விட்டு வந்தது நினைவில் வர, கைப்பையைத் தேடினாள்.
ஆனால், அவள் எப்போதும் வைக்கும் இடத்தில் கைப்பையைக் காணவில்லை. கடை முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை. கடை போனில் இருந்து அவளின் அலைபேசிக்கு அழைத்தாள். அழைப்புப் போய்க் கொண்டே இருந்தது. அப்போது தான் காலையில் கைப்பையை எடுக்கவேயில்லை என்பது அவளுக்கு உரைத்தது.
காலையில் உதய்கும் ஏதோ அவசர வேலை இருக்க, அன்று அவள் தான் அவனையும் ட்ராப் செய்திருந்தாள்.
‘இவரால, பேக் எடுக்க மறந்துட்டேன் போல..’ புலம்பிக் கொண்டே சென்றாள்.
“ஹேண்ட்பேக் வீட்லயே மறந்துட்டேன் போல ஆயா. இவ்வளவு நேரம் கவனிக்கவேயில்லை நான். செக் புக்கும், போனும் அதுல தான் இருக்கு. போய் எடுத்துட்டு வந்துடுறேன்” என்று அவள் பரபரக்க,
“சரி செல்லம். ஒன்னும் அவசரம் இல்ல. பொறுமையா போய்ட்டு வா” என்றார். “சரி” என்று தலையசைத்து விட்டு, வெளியில் வந்து காரை எடுத்தாள்.
அவள் வீட்டை அடைந்து காரை வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே நுழைய, நிசப்தமே அவளை வரவேற்றது.
பிரபாகரன், பிரியதர்ஷினியின் பத்து மாத குழந்தை பார்த்திபனின் சத்தம் எப்போதும் அவ்வீட்டை நிறைத்திருக்கும்.
ஆனால், இப்போது வீட்டை அச்சுறுத்தும் அமைதி ஆக்கிரமித்து இருக்க, “குழந்தை தூங்கறான் போல” தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
வீட்டின் பெரியவர்கள் நெருங்கிய சொந்தத்தில் ஒரு திருமணத்திற்காகக் காரைக்குடி சென்றிருந்தனர். உதயின் அத்தை மகள் விஜி வேலைக்குச் சென்றிருந்தாள்.
அத்தையும், மாமாவும் எப்போதும் வீட்டில் இருப்பார்கள் என்பதால், தொலைக்காட்சி ஓடிக் கொண்டேயிருக்கும். இப்படிச் சத்தமின்றி இருந்ததில்லை வீடு.
மெல்ல படியேறி தங்கள் அறைக்குச் சென்று, படுக்கையில் இருந்த கைப்பையை எடுத்து, அறையை மூடியவள், பக்கத்து அறையின் கதவை லேசாகத் தட்டினாள்.
“அக்கா, குட்டி பையன் தூங்குறானா?” என்று மெல்ல விசாரிக்க, பதில் வரவில்லை.
கதவை லேசாகத் தள்ளினாள். படாரென்று திறந்து கொண்டது கதவு. அறையில் யாரையும் காணவில்லை.
‘வீட்டின் கதவு திறந்து தானே இருந்தது? அக்கா வீட்டிற்குள் தானே இருக்க வேண்டும்? எங்க போனாங்க?’ என்ற யோசனையுடன் அவள் நடக்க, மாடியில் இருந்து வந்த சத்தம் அவளை ஈர்த்தது.
துணி காயப் போடுறாங்க போல, என்று மாடிப் படி ஏறினாள்.
“தம்பியை பார்த்துட்டு கடைக்குப் போகலாம்னு… ” வார்த்தைகள் அப்படியே அந்தரத்தில் நின்று விட்டது. அதிர்ச்சியில் விழிகள் தெறித்து விடும் போலிருந்தது. இதயம் தொண்டைக்கு வந்து விட்டிருந்தது.
மூளை நொடி நேரம் மரத்தாலும், மறுநொடியே மின்னல் வேகத்தில் செயல்படத் துவங்கியது.
ஓடிப் போய், குழந்தையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மொட்டை மாடியின் சுவர் மேல் ஒரு காலை வைத்து ஏற முயன்று கொண்டிருந்தவளை மின்னல் வேகத்தில் கைப் பிடித்து, அணைத்து கீழே இழுத்தாள். பொத்தென்று இருவரும் தரையில் விழுந்தனர்.
“அக்கா, அக்கா.. என்ன பண்ண இருந்தீங்க கா… ஏன் கா?” உணர்ச்சிகள் தொண்டையை அடைத்து, பேச முடியாமல் செய்தது.
பயத்தில் வீறிட்ட குழந்தையை,
வெடுக்கென்று அவளிடம் இருந்து பறித்துத் தன் மார்போடு அணைத்துப் பிடித்துக் கொண்டாள் ராகவி.
“அக்கா, ஏன் கா? என்னக்கா? என்னாச்சு? பிளீஸ், பேசுங்க. வாங்க, கீழ போகலாம்.” அவளை அங்கிருந்து நகர்த்தி விட வேண்டும் என்ற உந்துதலில் கையைப் பிடித்து இழுத்தாள்.
“கீழ விழுந்து இருந்தா அழாம இருந்திருப்பான் இல்ல ராகவி? ஒரே இடத்தில் இருந்திருப்பான் இல்ல?” அந்தக் கேள்வியில் திடுக்கிட்டு, குழந்தையை மேலும் இறுக்கி அணைத்தாள்.
அவளின் கையைப் பற்றி, “கீழ போலாம் கா. பிளீஸ், வாங்க. நான் இருக்கேன் கா” கெஞ்சினாள்.
“எந்நேரமும் அழுதுட்டே இருக்கான். பால் குடிச்சிட்டே இருக்கான். என்னால முடியல. பிரெஸ்ட் ரொம்ப வலிக்குது ராகவி. ஒரு இடத்தில் இருக்க மாட்டேங்கறான். தவழ்ந்து வீட்டையே ரவுண்ட் அடிக்கறான். தூங்க மாட்டேங்கறான். என்னையும் தூங்க விட மாட்டேங்கறான். சாப்பிட, குளிக்க எதுவும் முடியல. இவன் பின்னாடி ஓடியே என் ஜீவன்…
பிரெஸ்ட் அப்படி வலிக்குது ராகவி. உனக்குப் புரியாது. என்னைப் பார்த்தா பைத்தியம் மாதிரி இருக்கு தானே? செல்ஃபிஷ் நானு. என்ன அம்மா நான்? என் குழந்தையை, நான் பெத்த குழந்தையை எனக்கு ஒழுங்கா பார்த்துக்கத் தெரியல. அதான், அவனை… அவனோடு நானும் கீழ குதிச்சுடலாம்னு… நான் மோசமான அம்மா.. அ..ம்..மா..” வார்த்தை தேய்ந்து அப்படியே மயங்கி ராகவியின் மடியில் சரிந்தாள் பிரியதர்ஷினி.
அவளின் வர்த்தைகள் தந்த அதிர்ச்சியை விட, அவள் மயங்கி விழுந்ததில், ராகவிக்கு உயிரே போய் விட்டது.
“அக்கா.. அக்கா…” உலுக்கினாள். ம்ஹூம், அவளிடம் அசைவேயில்லை. அவளுக்குப் பதட்டத்தில் மூளை வேலை நிறுத்தம் செய்யப் பார்த்தது.
பயத்தை விழுங்கி, கண்ணீரை துடைத்துக் கொண்டு, குழந்தையோடு கீழே ஓடினாள்.
போனை எடுத்து கணவனை அழைத்தாள். உதய் அழைப்பை ஏற்கவில்லை.
பிரபாகரனுக்கு அழைத்தாள். அவரும் எடுக்கவில்லை.