உதய ராகம் – 11 (3)

ராகவன் ஒரு குட் நைட்டுடன் வீட்டினுள் சென்று மறைய, மெல்ல அவள் பக்கமாகத் திரும்பினான்.

“இருட்டில் போய் நிற்காம நட்சத்திரங்களின் அழகை ரசிக்க முடியாது பட்டே” என்றான்.

அவள் விழி விரித்துப் பார்க்க,

“யோசி புரியும்.” என்றவன், “கிளம்பவா?” என்றான் கரகரத்த குரலில்.

“பார்த்துப் போங்க”

“சரி பட்டே. அப்புறம் எண்ணி இருபது நாளில் நமக்குக் கல்யாணம். இனி, எங்க வீட்ல இருந்து எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டாங்க. நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கும். அதுக்கு நான் கியாரண்டி. சரியா?” சுண்டு விரலால், அவள் முகத்தில் இருந்த முடியை விலக்கி விட்டான். காற்றுக்குப் பறந்து, கலைந்திருந்தது அவள் கேசம். ஆனாலும் அவன் கண்களுக்கு அழகாகத் தான் தெரிந்தாள்.

“ஒரு கேஸ் விஷயமா நாளைக்கே கோயம்புத்தூர் போறேன், திரும்பி வர ஒரு வாரம் ஆகும். வேலையில் பிஸியா இருப்பேன் தான். ஆனா, கொஞ்சம் ஃப்ரீ டைம் கிடைச்சாலும் உனக்குக் கால் பண்றேன். எங்க வீட்ல இருந்து.. இல்ல என்ன பிரச்சனைனாலும் எனக்கு உடனே கால் பண்ணு. அடுத்து ஃப்ரீயா இருக்கும் போது மீட் பண்ணலாம். சரியா பட்டே?”

“ம்ம்ம்”

“போய்ட்டு வரேன். குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்” சுண்டு விரலால் அவள் கன்னம் வருடி, கண் சிமிட்டினான்.

“உதய்” சிந்தை முழுதும் அவனே நிறைந்திருந்ததால், அவன் பெயரை தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை அவளுக்கு.

மென்மையாகப் புன்னகைத்து வண்டியை கிளப்பினான். தலையில் அவன் ஹெல்மெட்டை சரி செய்த நொடி, உள்ளிருந்து ஓடி வந்து நின்றான் ராகவன். உதய் போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் ராகவி.

“பாதியை சொல்லி, மீதியை முழுங்கி, நீங்களே உள்ளுக்குள்ள சிரிச்சு. ம்ம், கதை கேட்கற சுவாரசியமே போச்சு” கடுப்புடன் ஒலித்த ராஜாவின் குரலில், நினைவுகளில் இருந்து நிஜத்திற்குத் திரும்பினாள் ராகவி.

அவனை முறைத்துக் கொண்டே, “அவர் எல்லாத்தையும் சரி பண்ணார். கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது. அவ்வளவு தான்.” என்றாள்.

“கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?” அடுத்தக் கேள்வியை வீசினான்.

“என்னைப் பொறுத்தவரை நல்லபடியா தான் எல்லாம் நடந்துச்சு. இட் வாஸ் ஆல் ஹேப்பி மோமெண்ட்ஸ் ஃபார் மீ”

“உங்களைப் பொறுத்தவரை அப்படின்னா? ஏதோ நடந்து இருக்கு. இல்லையா?”

“வெயிட் பண்ணுங்க. நானே சொல்வேன்”

“ஓகே” என்று தோள் குலுக்கினான்.

“சித்தியை வில்லி ஆக்கி இருக்கீங்க? சித்தின்னா வில்லி தான் இல்ல?” அவன் குரலில் சிறிதே கோபம் எட்டிப் பார்த்தது.

“நம்ம டிசைன் அப்படி. தாத்தா பாட்டின்னா பாசமா இருப்பாங்க. சித்தின்னா கொடுமைக்காரங்களா இருப்பாங்க. பொதுப் புத்தி அப்படித் தானே இருக்கு. அதுக்கு நாங்களும் விதிவிலக்கில்ல. ஆனா, உடனே எங்க பார்வையை மாத்திக்கிட்டோம்” என்றாள்.

அவன் ஏதோ சொல்ல வந்து, முடியாமல் பார்வையைத் திருப்பினான்.

“சரி சொல்லுங்க. கல்யாண வாழ்க்கை எப்படிப் போச்சு? உதய் ரொம்ப நல்லவரா தெரியறார். பட், கொஞ்சமே கொஞ்சம் மெனிபுலேட்டிவ். இல்லையா? அது நாம எல்லோரும் பண்றது தானே?”

“கொஞ்சமே கொஞ்சம் இல்ல?” என்று அவள் சிரித்துக் கொண்டே கேட்க,

“ஆமா. கொஞ்சம் தான். காதல் தான் அதிகம் போலத் தெரியுது” என்றவனை, மௌனமாய் முறைத்துக் கொண்டிருந்தாள் ராகவி.

“சரி விடுங்க. ஒரு நாலு ஐந்து சீன்ல.. அப்படியே ஒவ்வொரு பிரச்சனையா தொட்டு, சட்டுனு கிளைமாக்ஸ் சண்டைக்கு வாங்க” என்றான் திடீரென்று,

“ஓ, சார் ரொம்பப் பிஸியோ? நான் சொல்றதை அப்படி ஒன்னும் நீங்க கஷ்டப்பட்டுக் கேட்க வேணாம். போய் உங்க வேலையைப் பாருங்க. முதல்ல நீங்க கேட்டதால தான் நான் சொல்ல ஆரம்பிச்சேன். இல்லனா…”

படபடவென்று பொரிய ஆரம்பித்தாள்.

“ராகவி கூல் டவுன், பிளீஸ். அமைதியாகு.” என்று வெள்ளை கொடியை அசைத்தவன், “நடந்ததைச் சொல்லும் போது, நீங்க மனதளவில் மீண்டும் ஒருமுறை அதை வாழ்ந்துட்டு வருவீங்க. உங்களுக்குத் தேவையில்லாம ஸ்ட்ரெஸ் கொடுக்க வேண்டாம்னு தான், முக்கியமானதை மட்டும் சொல்ல சொன்னேன். புரிஞ்சுக்கோங்க” என்றான்.

“ஓகே” சற்றே இறங்கி வந்தாள்.

“சொல்லுங்க” என்றான் மீண்டும்.

“கல்யாணமாகி முதல் நாலைந்து மாசம் ரொம்பச் சந்தோசமா தான் இருந்தேன். இல்ல, இருந்தோம். தினம் தினம் ஏதாவது சின்னச் சின்னச் சண்டைகள், வாக்குவாதங்கள், பிரச்சினைகள் வந்துட்டே தான் இருந்துச்சு. ஆனா, அதை எளிதா கடந்து வர எங்களுக்கு நடுவில் இருந்த புரிதலும், அன்பும் உதவுச்சு.

என்ன சண்டைப் போட்டாலும், ரெண்டு நாள்ல சமாதானம் ஆகிடுவோம். என்னை ஹேண்டில் பண்ண அவரும், அவரை ஹேண்டில் பண்ண நானும் பழகி இருந்தோம். இல்ல கத்துக்கிட்டு இருந்தோம்.

இன்ஃபேக்ட், தொடக்கத்தில் நாங்க போட்டுக்கிட்ட சண்டைகள் தான் எங்களுக்கு நடுவுல நெருக்கத்தை, அன்பை, காதலை அதிகப்படுத்துச்சு. ஈகோ எதுவும் இல்லாம, இறங்கிப் போக ரெண்டு பேருமே ரெடியா இருந்த நாட்கள் அவை. பிளிஸ்ஃபுல் டேஸ்.”

“ம்ம், சண்டைகளுக்கு… யார் காரணம்?” கனவுகளில் மூழ்கியவளை கலைத்தது அவன் குரல்.

“ஆங், வேற யார் அவர் தான்”

“அப்போ, நீங்க எதுவும் பண்ணதில்ல?” என்ற அவனின் கேள்வியில் அவளின் ரத்த அழுத்தம் கூட,

“இது என் கதை. இதில் என் பக்கத்தைத் தான் நான் சொல்ல முடியும். எனக்கு நான் தான் இந்த உலகத்திலேயே ரொம்ப நல்லவ. சோ..”

“வேணாம், வேணாம். நான் எதுவும் கேட்கலை. நீங்க சொல்லுங்க” என்றான் அவன் பட்டென்று, மெலிதான புன்னகை அவளது முகத்தில் வந்து விட்டுப் போனது.

“அவருக்கு ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு. எதையும் என்கிட்ட சொல்றது கிடையாது. வீட்ல யார் என்ன கேட்டாலும் என்னைக் கைக் காட்டிட்டுப் போய்டுறது. அவளும் வேலைக்குப் போறாளே, அவகிட்டே முன்னமே சொல்லி வைக்கணுமே. ம்ஹூம், அந்த எண்ணமே கிடையாது. எதுவும் தெரியாம, நான் தான் மாட்டிக்கிட்டு முழிக்கணும். அப்புறம் அவர் வீட்டுக்கு வந்ததும் சண்டையைத் தொடங்கனும்.” பெருமூச்சொன்றை வெளியிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

“உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்னா, எங்க அத்தை முக்கியமான சொந்தக்காரங்க கல்யாணத்துக்குப் போகனும்னு இவர்கிட்ட சொல்லி இருப்பாங்க. சார் என்கிட்ட அதைச் சொல்ல மறந்திடுவார். அப்புறம் எங்க அத்தை என் முன்னாடி வந்து நின்னு, “காலையில 5-6 முகூர்த்தம். நாம நாலு மணிக்கு வீட்ல இருந்து கிளம்பினா சரியா இருக்கும், இல்லம்மா?” அப்படின்னு கேட்பாங்க. எனக்கு எப்படி இருக்கும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க? பல தடவை, யார் கல்யாணம் அத்தை? போயே ஆகணுமான்னு ஒன்னும் தெரியாம கேட்டிருக்கேன்.

உடனே, “என்னம்மா இப்படிக் கேட்கிற? உங்க மாமாவோட தம்பி பையன், அத்தை பேத்தி நாமே போயே ஆகணும். உதய் நீ வருவேன்னு சொன்னானே. கிஃப்ட் கூட வாங்கி வைக்கறதா சொன்னான். நகை வாங்கிட்டீங்க தானே மா? அவங்க நம்ம வீட்டு எல்லா விஷேஷத்துக்கும் நகை தான் செஞ்சு இருக்காங்க. எங்க நகையை எடுத்துட்டு வா, பார்ப்போம். மொய் பணம் ரெடியா எடுத்து வை. சீரை ரெடியா எடுத்து வை” இப்படி ஏதாவது ஒன்னு சொல்லுவாங்க. என்ன பண்ணன்னு தெரியாம பே-ன்னு முழிச்சு இருக்கேன் பல முறை. அப்போ எல்லாம் வரும் பாருங்க ஒரு கோபம்” பல்லைக் கடித்தாள்.

“ரிலாக்ஸ் ராகவி” என்றான் அவன்.

“உதயை கேட்டா ஸ்டாண்டர்ட்டா ஒரு பதில் வச்சிருப்பார். “அச்சோ மறந்துட்டேன் பட்டே, சாரி.” வாயிலேயே குத்தலாம் போல இருக்கும். அந்தப் பதிலை கேட்டாலே..”

அவன் பக்கென்று சிரித்து விட, அவனை எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள் அவள்.

ஒற்றைப் புருவம் உயர்த்தி, “என்ன?” என்றாள்.

“சாரி” என்றான். சிரித்துக் கொண்டே.

“என் பொழப்புச் சிரிப்பா சிரிச்சு போச்சு” வானம் பார்த்து புலம்பினாள் ராகவி.

“உதய் உன்கிட்ட வெளிப்படையா எல்லாத்தையும் சொல்லி இருக்கணும். கோபங்கள், சந்தேகங்கள், கேள்விகள் மனசில கசப்பா, கசடுகளா தங்கிப் போகும். பின்னால அவருக்கு அதுவே பெரிய தலைவலியா முடிஞ்சு இருக்கும். இல்ல?”

இப்போதும் பதில் சொல்லாமல், அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். உதடு துடிக்கப் பார்வையைத் திருப்பிக் கொண்டான் அவன்.

தொண்டையைச் செருமி சீர் செய்து, “எப்போ சீரியஸான சண்டை…” கேள்வியை அவனை முடிக்க விடாமல் இடைப் புகுந்தாள்.

“ஹலோ, எல்லாச் சண்டையும் சீரியஸா தான் போடுவாங்க. விளையாட்டுக்குச் சண்டை போட நாங்க என்ன சின்னப் புள்ளைங்களா?” எகிறினாள்.

கண்களைக் கசக்கி விட்டு, “சாரி, கண் மண் தெரியாத கோபம் எப்ப வந்தது? லைக், கொலைவெறி?”

கேட்டான் அவன்.

மெல்ல விழி மூடினாள், “எங்களுக்குக் கல்யாணமாகி ஏழு மாசமாகி இருந்தது. அவங்க அண்ணி, அதாவது பிரியதர்ஷினி அக்கா மொட்டை மாடியில் இருந்து குழந்தையோடு குதிக்க…” மேலே அவளால் தொடர்ந்து சொல்ல இயலவில்லை.

மனதில் கனம் கூடிப் போனது. வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது. கண்களில் இருந்து சரசரவென்று வழிந்த கண்ணீர் கன்னம் தொட்டிருந்தது.

பெரும் தயக்கத்துடன் அவள் கரம் பற்றி, “ராகவி” என்றான்.

“அவங்க தற்கொலை பண்ணிக்க இருந்தாங்க. குழந்தையோட.. வீட்ல யாருமே இல்ல. நான் கூப்பிட்டு…..உதய்… உதய்… வரல…” திக்கினாள்.

கன்னம் தொட்டக் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

error: Content is protected !!
Scroll to Top