எப்படியும் அந்த வீட்டில் தான் வாழப் போகிறோம், அப்போது தெரிந்து கொள்வோம் என்ற எண்ணத்துடன் அவனை நோக்கினாள்.
“எதையும் முன் முடிவோடு அணுக கூடாது ராகவி. என்ன தான் வாழ போறது, நாம ரெண்டு பேரா மட்டும் இருந்தாலும்.. நம்ம ரெண்டு பேர் குடும்பமும் நம்ம வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமா இருப்பாங்க. அதை நாம தவிர்க்கவே முடியாது. இப்ப நான் ஏதாவது சொல்லி, நீ அதே கண்ணோட்டத்தோட அவங்களைப் பார்க்கறதை நான் விரும்பல பட்டே. நீயே பேசி, பழகி ஒவ்வொருத்தரையா புரிஞ்சுக்கோ. நமக்கு நம்மோட பார்வை தான் ஒருத்தரை சரியா கணிக்க உதவும் ராகவி.” என்று அவள் மனதில் எழுந்த கேள்விக்கு அவன் பதில் சொல்ல,
‘மைண்ட் ரீடர் போலீஸ். கவனமாக இருக்கணும்’ என்று நினைத்தபடி அவள் நிமிர, “கண்டிப்பா” என்றான் அவன் சிரிப்புடன்.
ஒரு மணி நேரத்தில் காய்கறி புலாவ், லச்சா பராத்தா, மஷ்ரூம் மசாலா, வெங்காய, வெள்ளரி பச்சடி செய்திருந்தான். அவளால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
“வாவ் உதய்” என்று வாய் பிளந்தாள். சிரித்துக் கொண்டே அவன் உணவுகளை டேபிளில் எடுத்து வைக்க, அவன் மறுக்க மறுக்கக் கேட்காமல், சமைத்த பாத்திரங்களைத் தேய்த்து அடுக்கி வைத்தாள்.
கடலைப் பார்த்தபடி இருந்த பால்கனியில் டேபிள் போட்டு எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து உணவை உண்ணத் தொடங்கினர்.
மனதுக்குப் பிடித்தவனுடன், மனஸ்தாபம் நீங்கி, அவன் முகம் பார்த்து நெருக்கமாக அமர்ந்து, கடல் காற்று உடலை தழுவிச் செல்ல அந்த இரவும், உணவும் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது அவளுக்கு.
“கவலைகள் மறக்குதே, கவிதைகள் பிறக்குதே.. உன்னருகே நானிருந்தால்..”
“மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிா் நான்”
“படித்தால் இனித்திடும் புதினம்
உனை நான் மறப்பது கடினம்”
அவன் அலைபேசியில் ஒலித்த பாடல் வரிகளும் மனதை மயக்குவதாகவே இருந்தது. அன்றைக்கு நடப்பது அனைத்தும் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தருவதாகவே இருந்தது.
அவளுக்கும், தனக்குமாக உணவை பரிமாறிய படி, பேச்சையும் பரிமாறிக் கொண்டிருந்தான் உதய். இந்த நொடிகள் அப்படியே உறைந்து, நின்று விடாதா என்றிருந்தது அவளுக்கு.
இருவரும் உணவை முடித்திருக்க, “நேரமாச்சு போலப் பட்டே” என்று எழுந்தவன், அவளது தட்டையும் எடுத்தபடி நகர்ந்தான். மீண்டும் அனைத்தையும் ஒதுக்கி, பாத்திரங்களைக் கழுவி, மீந்த உணவை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து அவர்கள் கிளம்ப மேலும் அரை மணி நேரம் ஆகியிருந்தது.
வீட்டை விட்டு வெளியில் வந்ததும், “பிளீஸ் பட்டே, சின்னதா ஒரு வாக். ஜஸ்ட் கால் மட்டும் நனைச்சிட்டு வரலாம். உன்னை அதுக்காகத் தான் இங்க கூட்டிட்டு வந்தேன். இப்போ பீச் பக்கத்தில கூடப் போகாம போனால் எனக்குத் தூக்கமே வராது பட்டே, பிளீஸ். நான் தான், உன் கூடவே இருக்கேன் இல்ல. ” அவன் கெஞ்சல் குரலில் கேட்க, அவளால் மறுக்க முடியவில்லை.
உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் கூட, வெளியே திடமாகக் காட்டிக் கொண்டு அவனுடன் நடந்தாள்.
அவள் கரம் பற்றி நடத்திக் கொண்டு போனான் உதய். நேரம் பத்தை கடந்திருந்தது. ஆனாலும், ஆங்காங்கே மக்கள் மணலில் அமர்ந்தும், அலைகளில் கால் நனைத்தபடியும் கடலை, அவ்விரவை ரசித்துக் கொண்டிருந்தனர்.
“ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி… நெஞ்சிரண்டு நாளும் பாட…” மனோ உருகிக் கொண்டிருந்தார் அவனது அலைபேசியில், பாடலை கேட்டுக் கொண்டே அவனோடு நடப்பது அத்தனை பிடித்திருந்தது அவளுக்கு.
இனி என்ன வந்தாலும் சரி, இவனோடு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருந்தாள் ராகவி.
உண்மையில் அக்கணம் அவளால் அவனைத் தாண்டி எதையுமே யோசிக்க முடியவில்லை.
அவனை அறிந்து கொள்ள அந்த ஒரு மாலைப் பொழுது அவளுக்குப் போதுமானதாக இருந்ததா என்றால், இல்லை என்று தான் சொல்வாள். ஆனால், அவனோடு கழித்த அந்தப் பொழுது, அவளை வேறு எதையும் சிந்திக்க விடவில்லை. இந்த இனிமையும், புரிதலும், அனுசரணையும் இனி வரும் நாட்களிலும் மாறாமல் தொடர வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டாள் அவள்.
“நான் இப்படியே தான் இருப்பேன் பட்டே” என்றான், அவளது மனதை படித்தது போல. இதழ்களும், விழிகளும் மலர நிலவொளியில் ஜொலித்தது அவள் முகம்.
“போகலாமா?” என்றான். விருப்பமே இல்லை என்றாலும், வீட்டுக்குப் போய் ஆக வேண்டுமே என்று திரும்பி நடந்தாள் ராகவி.
வீட்டிற்குச் செல்லும் வழியில் இருவருமே எதையும் பேசிக் கொள்ளவில்லை.
“என்ன யோசனை பலமா இருக்கு?” என்று சாலையைப் பார்த்துக் கொண்டே கேள்வி எழுப்பினான்.
“நீங்களும் தான் பேசாம வரீங்க”
“நம்ம ஃபேமிலி கொஞ்சம் கரடு முரடான ஆட்கள் தான். கற்றாழை போல, இல்ல பலா? ம்ப்ச் எனக்குச் சொல்லத் தெரியல பட்டே. ஆனா எல்லோருமே நல்லவங்க தான். உன்னை நல்லா பார்த்துப்பாங்க அப்படினு எல்லாம் நான் எந்தவித உத்திரவாதமும் தர மாட்டேன். ஆனா, நான் உன்னை நல்லா பார்த்துப்பேன். அது பிராமிஸ். வீடுன்னா சின்னச் சின்னப் பிரச்சனைகள், சண்டைகள், சச்சரவுகள் வந்துட்டே தான் இருக்கும். ஆனா, எல்லாத்தையும் நீ சமாளிப்பன்னு எனக்குத் தெரியும். உன்னால முடியாத பட்சத்தில் நான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன். ஆனா, முடிந்த வரை எல்லாத்தையும் நீ தான் பார்த்துக்கணும் பட்டே. என்னால ஸ்டேஷன், வீடுன்னு ரெண்டு இடத்துலயும் ஒரே வேலையைப் பார்க்க முடியாது டா. உனக்குப் புரியுது தானே?”
பெரிதாகப் பேசினான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முயன்றாள்.
“கிவ் மீ அப் பிராமிஸ் ராகவி” என்றான்.
“என்ன பிராமிஸ்?” மிரண்டாள்.
ஸ்டியரிங்கை ஒரு கரத்தில் பிடித்துக் காரை இயக்கியபடி, மறு கரத்தால் அவளது கைப் பற்றினான்.
“சத்தியம் பண்ணு ராகவி. பண்ணுவ தானே?” என்று அவன் கேள்வியாக நிறுத்த,
மறுக்க மனமில்லாமல், “ம்ம்” என்றாள்.
“என் வேலையில், வீட்டை சரியா…” என்று துவங்கியவன், நிறுத்தி நிதானமாக,
“கல்யாணத்துக்கு அப்புறம் வீட்ல என்ன நடந்தாலும் நீ தான் சமாளிக்கணும். எல்லாத்துக்கும் என்னை எதிர்பார்க்கக் கூடாது. வீட்டுப் பிரச்சினைகள் உன்னால சரி பண்ண முடியலைன்னா மட்டும் தான் என்கிட்ட வரணும். சரியா?” என்று கெஞ்சல் குரலில் அவன் கேட்க, அந்தக் குரலுக்கு மறுப்பு சொல்ல இயலவில்லை அவளால்.
“ராகவி” என்றான்.
“வீட்டு விஷயங்களை நானே பார்த்துக்கணும்? சரி. பாரத்துப்பேன்” என்றாள் திடமாக.
“தாங்க்ஸ் பட்டே” அவளது கையைப் அழுத்தமாக, அப்படியே பிடித்தபடி ஒற்றைக் கையால் காரை செலுத்தினான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவளது வீட்டை அடைந்திருந்தனர்.
மணி இரவு பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
தோட்டத்தில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த ராகவன், காரை பார்த்ததும் ஓடி வந்து கேட்டை திறந்து விட்டான்.
புன்னகையுடன், “ஹாய் மாமா” என்றான்.
“ஹாய் ராகவ், சாரி ரொம்ப நேரமாகிடுச்சோ. நீங்க தூங்க போய் இருக்கலாமே. உங்க தூக்கத்தையும் கெடுத்துட்டோம் போல”
“அச்சோ, அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல மாமா. உள்ள வாங்க” என்று படபடப்புடன் பதில் சொன்னான் ராகவன்.
இருவர் பேசுவதையும் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தாள் ராகவி. ராகவனுக்கு உதயின் மேலிருந்த கோபம் போய் விட்டது என்பதை உணரும் போது அத்தனை ஆறுதலாக இருந்தது அவளுக்கு.
“இன்னொரு நாள் வரவா ராகவ்? பிளீஸ். நாளைக்கு எல்லோருமே வேலைக்குப் போகனும் இல்ல? உள்ள வந்து பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாது. தப்பா நினைக்க வேண்டாமே” என்று அவன் கேட்க, மௌனமாக அவனை ஆமோதித்தான் ராகவன்.
காரின் சாவியை அவளிடம் கொடுத்து விட்டு, ராகவனிடம் இருந்து தனது புல்லட்டின் சாவியை வாங்கிக் கொண்டான் உதய். காரில் இருந்த ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டான்.