“தலையை மட்டும் சரி பண்ணிட்டு வர்றேனே” என்றவளை,
“வேணாம், இதுவே ஓகே தான். போகலாம், வா” என்று பிடித்திருந்த கையில் அழுத்தத்தைக் கூட்டினான்.
பின்னலை அவிழ்த்து விட்டிருந்தாள். முன் உச்சி முடி மட்டும் கிளிப்பிள் அடங்கி இருந்தது. விரிந்திருந்த கூந்தலும், பூவும் பின்னிப் பிணைந்து முதுகில் புரண்டு கொண்டிருந்தது.
அவன் வழக்கம் போலச் சுண்டு விரலால் அவள் முகத்தில் விழுந்த முடியை விலக்கி விட்டான்.
அவனோடு நடந்தபடி தலையைத் திருப்பி, ராகவனைப் பார்த்தாள். அவளின் கார் சாவியை உதயை நோக்கி தூக்கிப் போட்டான் அவன். அதை லாவகமாகப் பிடித்தான் உதய்.
‘என்னடா நடக்குது இங்க?’ என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் ராகவி.
“போய்ட்டு வா” என்று வாயசைத்தான் ராகவன்.
இன்றைக்கு அவனிடம் மனம் விட்டு பேசியே தீர்வது என்ற முடிவுடன் இருந்தவள், அவனுடன் வெளியில் செல்வது குறித்து அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளவில்லை.
கண்களைச் சுழற்றி, தோழிகளைத் தேடினாள். இருவரையுமே காணவில்லை. அவர்கள் பேசிக் கொண்டிருந்த ஐந்து நிமிடங்களில் கம்பி நீட்டி இருந்தார்கள் இருவரும். அதுவும் நல்லதற்குத் தான் இல்லையேல் ஒட்டி தள்ளி விடுவார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டே அவனுடன் நடந்தாள்.
“உதய் என்னோட ஃபோன் அண்ட் பேக் எடுத்துக்கறேன். ஒரு நிமிஷம்” என்று விலகி, தனது கைப்பையை எடுத்துக் கொண்டு திரும்பினாள். அலைபேசியைத் தேடி எடுத்துப் பையில் போட போனாள்.
குறுஞ்செய்தி வந்திருந்தது. திறந்துப் பார்த்தாள்.
“மாமா, தான் போலீஸ்னு நிரூபிச்சுட்டார். என்ஜாய் தே டின்னர். கடையை இன்னைக்கு நான் பார்த்துக்கறேன்” என்று ராகவன் தான் செய்தி அனுப்பி இருந்தான். தான் நின்ற இடத்தில் இருந்து அவனைத் திரும்பி பார்த்தாள்.
வாடிக்கையாளர் முன் பனாரசி பட்டை பிரித்து வைத்து, அதன் சிறப்பம்சங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.
அவனிடம் கை காட்டி, விடைப் பெற்று கடையை விட்டு வெளியில் வந்தாள் ராகவி.
உதயின் ராயல் என்ஃபீல்டு கடையின் முன் நிற்க, அவனைச் சீண்டி பார்க்கும் ஆசை வந்தது அவளுக்கு.
“என்ன போலீஸ், வருமானம் எல்லாம் தாராளம் போல.” என்று வண்டியை கண் காட்டியவள், “ரெண்டு லட்சம் இருக்குமா? இதென்ன வண்டியா? பார்க்க பீஸ்ட்டு போல இருக்கு” என்றாள் முகம் சுளித்து.
“ரெண்டு இல்ல மூனு லட்சம். அப்புறம் அது பீஸ்ட் இல்ல, அது வேற மாடல். இது ராயல் என்ஃபீல்டு பட்டே” என்றவன், “கார் ஒட்டுறியே அதுல என்ன திரில் இருக்கு சொல்லு? ஒரு நாள் இந்தப் பீஸ்ட்டை ஒட்டிப் பாரு. அப்புறம் இதைக் குறை சொல்லு. நான் ஒத்துக்கறேன்” என்றான் அழுத்தமாக.
“நானு, இந்த வண்டியை? வாய்ப்பேயில்லை.” என்றபடி அவள் நகர,
“அதையும் தான் பார்த்திடுவோம். என்னோட வரணும்னா என் பீஸ்டில் உட்கார்ந்து தானே ஆகனும்?” என்று புருவம் உயர்த்தியவன், “டின்னர் முடிச்சுட்டு வந்து, அதில் ஒரு ரைட் போகலாம். இப்போ வா, லேட்டாகுது”
அமைதியாய் அவனைத் தொடர்ந்து காரில் ஏறினாள் ராகவி.
காரை இயக்கி, மெல்ல நகர்த்தியபடி,
“ஆமா, என்ன சொன்ன?” என்றான் புருவம் நெரித்து,
“என்ன சொன்னேன்?” என்று அவள் இழுக்க,
“லஞ்சம் வாங்குவேன்னா? உன்கிட்ட இருந்து இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கலை. இது முதல் முறை, அதுனால விடுறேன். இன்னொரு தடவை இந்த வார்த்தையைத் தெரியாம கூட என்கிட்ட விடாத ராகவி. ஐ ஜஸ்ட் ஹேட் இட்” சட்டென அவன் குரலில் கடினம் ஏறி இருந்தது. அவனிடம் அப்படி ஒரு கடுமையை எதிர்பார்க்காத ராகவிக்கு அந்தக் குரல் நடுமுதுகை சில்லிட செய்தது.
“சாரி” என்றாள். அந்த மன்னிப்பை உணர்ந்து தான் கேட்டாள். ஆனால், குற்ற உணர்ச்சி எல்லாம் இல்லை. மாறாக, அவன் மீது புது மரியாதை வந்தது. சற்றே பெருமையாகவும் இருந்தது. அவனது கோபம் மிகவும் பிடித்திருந்தது.
பதிலுக்கு எதையும் சொல்லாமல், பார்வையை நேராகப் பதித்துக் காரை செலுத்திக் கொண்டிருந்தான் உதய்.
அவள், அவனைக் காயப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனாலும் அப்படிப் பேசி இருக்கக் கூடாது என்பதை உணர்ந்தவள், சில வார்த்தைகளை, சிலரிடம் விளையாட்டாகக் கூடச் சொல்லக் கூடாது என்பதை மீண்டும் ஒருமுறை தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டாள்.
கைப்பையில் இருந்து போனை எடுத்து வீட்டிற்கு அழைத்தாள் ராகவி.
“செல்லம், என்னடா எந்த ஹோட்டலுக்கு டின்னர் போறீங்க?” எடுத்ததும் அந்தக் கேள்வியைத் தான் கேட்டார் கண்ணதாசன்.
“ஐயா, அது வந்து..” என்று அவள் இழுக்க,
“வீட்டுக்கு வந்துட்டு உடனே கிளம்பிட்ட செல்லம். பேசவே இல்ல” என்றவர்,
“இங்க பாரு செல்லம். எனக்கு உன்கிட்ட சொல்ல நிறைய இருக்கு. ஆனா, உனக்கே எல்லாம் தெரியும். நான் சொல்லி தான் புரிய வைக்கனும்னு அவசியமில்லனு எனக்குத் தெரியும். சில நேரத்தில, சில விஷயங்கள் நம்ம வாழ்க்கையில் ஏன் நடக்குதுன்னு யோசிப்போம் தான். ஆனா, நடந்தது எல்லாம் நல்லதுக்குன்னு எடுத்துக்கணும். எப்பவும் மன்னிக்க, மறக்க தயாரா இருக்கணும். அது தான் எப்பவும், எல்லோருக்கும் நல்லது” என்றவர், சிறிய இடைவெளி விட்டு,
“என்னடா, ஐயா எதுக்கு இதையெல்லாம் இப்ப சொல்லிட்டு இருக்காருனு தானே யோசிக்கற?” என்ற கேள்வியுடன் அவர் சிரிக்க,
“ஆமா ஐயா” என்றாள் ராகவி.
“நானும் இந்தத் திருட்டு பயலுக்கு எல்லாம் எவன் போலீஸ் வேலை கொடுத்ததுன்னு கோபமா தான் இருந்தேன். ஆனா, அவர் மேல தப்பில்லை செல்லம். எல்லாம் அவங்க வீட்ல… வேணாம் செல்லம். இனி அவங்க உன் மனுஷங்க. அவங்களைப் பத்தி நீ தப்பா நினைக்கக் கூடாது.
இதுவரை நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு, மாப்பிள்ளை கூடப் பேசிட்டு வா. கல்யாணம் குறிச்ச தேதியில் நல்லபடியா நடக்கும். சரியா செல்லம்?”
“ம்ம், சரிங்க ஐயா” என்றாள்.
“உங்க அப்பா, ஆயா, நான், எல்லாம் அவ்வளவு சந்தோசமா இருக்கோம். என்னைக்கு இருந்தாலும் எங்களுக்கு உன் விருப்பம், ஆசை தான்டா முக்கியம். நீ சந்தோசமா இருந்தா அது போதும் எங்களுக்கு. அவர் கூட மனசு விட்டு பேசு. சரியா? ஒன்னும் அவசரம் இல்ல. நீங்க ரெண்டு பேரும் பொறுமையா வாங்க. என்ன?” என்றார்.
“சரிங்க ஐயா” என்றாள். அலைபேசியை அணைத்துப் பையில் போட்டாள். அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்தாலும் கூட, எதுவும் கேட்கவில்லை அவன்.
கார் பெசன்ட் நகர் பக்கமாகத் திரும்புவதைக் கண்டவளின் இதயம் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது.
“உதய் எங்க போறோம்?” என்றாள்.
“என்னோட ப்ரெண்ட் வீட்டுக்கு”
“ஓ” என்றவள், சேலையைச் சரியாக இழுத்து விட்டு, காற்றில் பறந்த கூந்தலை கிளிப்பில் அடக்க முயன்றாள்.
சட்டென்று கை நீட்டி, அவள் கையில் இருந்த கிளிப்பை தட்டி விட்டான் உதய்.
“அவங்க வீட்ல யாருமில்ல. ஃபேமிலியோட மாமியார் வீட்டுக்குப் போய் இருக்கான். நாம மட்டும் தான் இருக்கப் போறோம். சோ, ஃப்ரீயா விடு” என்றான்.
“என்ன?”
“எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி பட்டே? என் கூடத் தானே வர்ற? ஏன் பயம்?” என்றான் கண்களைச் சுருக்கி,
‘ஆங், உன் கூடத் தனியா வர தான் எனக்குப் பயம்’ என்று எப்படிச் சொல்வாள் அவள்.
“ராகவி, கேள்வி கேட்டேன்” என்றான் அழுத்தி,
“என்னது?” என்றாள் புரியாமல்,
“என்னைப் பார்த்து பயப்படுறியா என்ன?”
“யாரு நானு? உங்களைப் பார்த்து? நினைப்பு தான்” என்றாள். சிரித்துக் கொண்டே காரை லாவகமாகக் குறுகலான சந்துகளில் செலுத்தி, கடற்கரைக்கு நெருக்கமாக இருந்த வீட்டின் பார்க்கிங்கில் சென்று நிறுத்தினான்.