உதய ராகம் – 10 (2)

விசாலாட்சி, கண்ணதாசன் இருவரின் கண்களும் தளும்பி நின்றது. சிதம்பரம் மும்முரமாக உதயின் தந்தை சோமசுந்தரத்திடம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த வாரம் ஜவுளி, நகை எடுக்கப் போவது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

ராகவியைத் தன் பக்கத்திலேயே அமர்த்திக் கொண்டார் உதயின் அம்மா யசோதா.

வீட்டிற்குள் நுழையும் போது அவரைச் சித்தி என்று தான் மனதில் அழைத்தாள். ஆனால், இப்போது சித்தி, அம்மாவாக மாறியது அவளுக்கே விசித்திரம் தான்.

உதயின் அப்பா, அம்மா மற்றும் அவனின் அண்ணி வந்திருந்தனர். அவனது அண்ணி பிரியதர்ஷினியின் மடியில் இருந்த மூன்று மாத குழந்தையைக் கைகளில் ஏந்தி கொஞ்சத் தொடங்கினாள் ராகவி. அவளோடு ராகவனும் இணைந்து கொண்டான்.

பெரியவர்கள் பேசி முடித்து அவர்கள் கிளம்பும் நேரம், “நீ என்னை அக்கா, சொல்லி கூப்பிடனும். அக்கா சொல்லு, சரியா? வர்றோம்” என்று பிரியதர்ஷினி விடைபெற,

“வரேன் மா, ராகவி.” என்று அவளின் கையை லேசாகத் தட்டிக் கொடுத்து விட்டுக் காரில் ஏறினார் யசோதா.

அவர்கள் கார் வாசலை தாண்டியதும், அவளும் கடைக்குக் கிளம்பி விட்டாள். அவளுக்குத் தனியாக இருக்க வேண்டும் போலிருந்தது. ஏனோ மூச்சு முட்டுவது போலிருந்தது.

உதயின் அண்ணி மற்றும் அம்மா இருவருமே அவளை அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக் கொண்டதை மறைமுகமாகச் சொன்னதில் அவள் முகம் தெளிந்திருந்து. அகத்தின் மலர்ச்சி அவளது முகத்திலும் பரவியது.

கடைக்குச் சென்றதும் முதல் வேலையாக, உடையைத் தான் மாற்றத் தோன்றியது அவளுக்கு.

ஒருவேளை உதய் அவளை டின்னருக்கு அழைக்க வந்தால், அவனுக்காகச் சேலை கட்டியது போல இருக்க வேண்டாம் என்று நினைத்து உடை மாற்ற சென்றாள்.

ஆனால், அவளைத் தடுத்து நிறுத்தினாள் சுஹாசினி.

“என்ன சுஹா?”

“டிரஸ் மாத்த தானே போற, அதுக்கு முன்னாடி இந்தச் சேலையை ஒரு தரம் சுத்திட்டு கொடு, ரா” என்று அவள் முன் மென்ரோஜா வண்ண பட்டை நீட்ட,

“எப்ப பார்த்தாலும்…. உனக்கு வேலையே இல்ல, சுஹா” அலுத்துக் கொண்டு விலகி நடந்தாள்.

“நீ தான் எனக்கு ராசி ரா. இப்ப தான் வாங்கினேன். நம்ம கடையில் தான். பிளீஸ். கட்டிட்டு கொடேன்” என்று அவள் நாடியை பிடித்துக் கெஞ்ச, முகத்தை நான்கு முழம் தூக்கி வைத்துக் கொண்டு, “குடு” என்று புடவையை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு போனாள் ராகவி.

“சுஹா, இந்த ப்ளீட்ஸ் எல்லாம் கொஞ்சம் சரியா எடுத்து விடு. சேலை நல்லா இருக்கா மலர்? நானே வச்சுக்கவா?” என்று அவள் கண் சிமிட்டி கேட்டுக் கொண்டே, ட்ரையல் அறையின் கதவை திறந்து வெளியில் வந்தாள்.

புடவையின் கொசுவத்தை வலக் கரத்தில் பற்றிக் கொண்டு, இட கரத்தால் தன் முகத்தில் விழுந்த முடியை மொத்தமாக இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தாள் ராகவி.

அவள் முன் மண்டியிட்டு அமரப் போன சுஹாசினி, அப்படியே பின்னகர்ந்து நின்றாள்.

“சுஹா..” என்று ஆரம்பித்த ராகவி, தோழியின் கவனம் தன் மேல் இல்லை என்பதை உணர்ந்து கோபத்துடன் நிமிர்ந்தாள்.

அப்படியே அவள் நிமிர, அக்கணம் கடையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் உதய். அவள் இதயம் ஒரு வினாடி நின்று பின் அதன் இஷ்டத்திற்குத் துடிக்கத் தொடங்கியது.

முதல் இரு சந்திப்புகளைப் போல் இல்லாமல், இப்போது வேட்டி, சட்டை அணிந்திருந்தான். வலக் கரத்தில் கருப்பு பட்டையுடன் கூடிய கடிகாரம். இடக் கரத்தில் வெள்ளி காப்பும் அணிந்திருந்தான். சட்டையின் முதல் பட்டன் போடப்படாமல் திறந்து விடப் பட்டிருந்தது. அந்தக் கவர்ச்சியில் பார்வையை அவனிடம் இருந்து விலக்க முடியாமல், விழி விரித்து நின்றாள் ராகவி.

கடைக்குள் நுழைந்த பின்னே, மெதுவாகத் தலையில் இருந்த ஹெல்மெட்டை கழற்றினான்.

அவன் கண்கள், சிலையென நின்றிருந்த ராகவியைத் தொட்டு, அவளில் நிலைத்தது. அவனில் பதித்த விழிகளை அவள் இமைக்க மறந்திருந்தாள்.

“தோளில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை” கடையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் வரிகளில் இருவருமே அதிர்ந்து விழி விரித்தனர்.

“ரொம்ப ராங் டைமிங், பாட்டை மாத்து மலரே” என்று கிசுகிசுத்தாள் சுஹாசினி.

“ஏய் சுஹா, பேசாம இரேன்”

“எங்க பேசாம இருக்க. அவங்க ரெண்டு பேர் பார்வையைப் பாரு. பாட்டுத் தப்பு தானே. அதான் மாத்த சொன்னேன். அப்புறம், அவ கட்டி இருக்கறது என் சேலை மலரே. புதுச் சேலை மலரே, புத்தம் புதுசு. இப்ப தானே வாங்கினேன். எவ்வளவு ஆசையா கையில் எடுத்தேன். போச்சு. எனக்கு இனி அந்தச் சேலையே வேணாம். அதை நீயே வச்சுக்கோ ரா..”

“நீ தானே அவளை ஒரு முறை கட்டிட்டு கொடுன்னு சொன்ன. சும்மா இருந்தவளை இப்பவே கட்டுனு சொல்லி, கட்டாயப்படுத்தி… இப்ப பேச்சை பாரு. சேலையே வேணாம்னு சொல்ற?”

“அவளைத் தான் கட்டிட்டு தரச் சொன்னேன். இப்போ போலீஸும் கட்டுமே” கிளுக்கி சிரித்தாள் சுஹாசினி.

பனிமலருக்கும் சிரிப்பு வந்தது.

“அல்பம் சுஹா நீ” என்றாள் அவள்.

இவர்களின் பேச்சு அவர்களைப் பாதிக்கவேயில்லை. இருவரும்

தங்களில் தொலைந்து கொண்டிருந்தனர். உதய் மெல்ல உணர்வு வந்தவனாக அவளை நோக்கி வந்தான்.

“ஏய் விழுறா, விழுறா.. பிடி, பிடி.. அச்சோ, விழுந்துட்டா…” ‍கிசுகிசுத்தாள் சுஹாசினி.

“தலை குப்புற விழுந்துட்டா, சுஹா” கிளுக்கி சிரித்தாள் பனிமலர்.

“சும்மாவே புல் தடுக்கி பயில்வான். விழுந்துட்டே இருப்பா. ம்ம், இனி காப்பாத்த முடியாது. கல்யாணம் தான் ஒரே வழி.” முடிவாகச் சொன்னாள் சுஹாசினி.

அப்போது தான் உயிர் வந்தது போல அவர்களைத் திரும்பி முறைத்தாள் ராகவி.

அதற்குள் அவளை நெருங்கி இருந்த உதய், “போகலாமா?” என்றான்.

“எங்க?” என்றாள் தயக்கத்துடன்,

“கல்யாணம் பண்ணிக்கத் தான். கோவில் இல்லனா ரெஜிஸ்டர் ஆபீஸ்? ஆனா, இந்நேரம் ரெண்டும் இருக்காதோ? கோவில் இருக்கும் தானே? அப்படியே இல்லைனாலும், பிரச்சனை இல்ல. நமக்காகத் திறக்க வைப்போம். வா” என்றான் தீவிரமான குரலில். அவள் அதிர்ந்து விழிக்க,

“நீ தான் ரெடியா நிக்கிறியே பட்டே. பாரு, நானும் உனக்காக ரெடியா தான் வந்திருக்கேன். போற வழியில ஏதாவது நகைக் கடையில் வண்டியை நிறுத்தி தாலி மட்டும் வாங்கிக்கலாம். என்ன?” என்று கண் சிமிட்டினான் உதய்.

“ஆ…..”

அவளுக்கு வார்த்தையே வரவில்லை. ஒரு நொடி அதிர்ந்து, முகம் சிவந்து, வெளிவரத் துடித்த புன்னகையை அடக்கி அவன் முகம் பார்த்தாள்.

“அழகா இருக்கப் பட்டே” என்று கிசுகிசுப்பாகச் சொன்னவன், “உன்னோட அப்பா, ஐயா, ஆயா முன்னாடி தான் கல்யாணம் நடக்கும். டோண்ட் வொர்ரி. இப்போ, டின்னர் சாப்பிட போகலாம், வா” என்று வெகு இயல்பாக அவள் கைப் பற்றினான்.

“நான், நான்… இப்படியேவா?” என்று அவள் தடுமாற, தலை முதல் கால் வரை அவளை விழிகளால் வருடியவன், “ம்ம், இப்படியே தான். உன் கடை வாசல்ல இருக்கப் பொம்மை மாதிரி இருக்க” என்றான்.

“பொம்மை மாதிரியா?” என்று அவள் முறைக்க,

“இல்ல, சாரி. கோவில் சிலை.. இல்ல.. இளையராஜா ஓவியம் பார்த்திருக்கியா? அதுல வர பெண் போல இருக்க. கண்ணை உறுத்தாத அழகு. கண்ணுக்குள்ளயே நிறைஞ்சு நிற்கும் அழகு. என் அனுமதி இல்லாம போய் மனசுல சட்டமா உட்கார்ந்துக்கற…”

“போதும், போதும்” என்றாள் முகம் சிவக்க. சிரித்தான் அவன்.

ஓரக் கண்ணால் பார்த்தாள். தோழிகள் இருவரையும் அங்கே காணவில்லை.

error: Content is protected !!
Scroll to Top