பார்த்திபன் காதலி – 40 (2)

பார்கவி புன்னகையுடன் எழுந்து சமையல் அறை செல்ல பார்த்திபன் அவளைப் பின் தொடர்ந்தான்.

“நீங்க உக்காருங்க மாப்ள” என்று காவேரி சொல்ல, “யூஎஸ்ல இருக்கும் போது நானேதான் சமைச்சுச் சாப்பிட்டேன் அத்த. அப்போ பாருதான் எனக்குச் சமைக்கச் சொல்லி கொடுத்தா. அதுனால பயப்படாதீங்க, நான் நல்லாதான் சமைப்பேன்” என்று அவன் சொல்ல, மகளை முறைத்தார் காவேரி.

கணவனைப் பார்த்து, “அம்மா உங்கள கேட்டாங்களா?” என்று அவள் முணுமுணுக்க, “ஓ, உன்னைய போட்டு கொடுத்துட்டேனா?” என்று அப்பாவியாகக் கேள்வி கேட்டான் அவன்.

“இப்பவேவா செய்யப் போற பாரு? கொஞ்ச நேரம் ஆகட்டும். உக்காரு அதுவரைக்கும் பேசிட்டு இருப்போம்” என்று மகளை அழைத்தார்.

அவள் நேரத்தை பார்த்து விட்டு அம்மாவிடம் வர, பார்த்திபன் அலைபேசியில் மூழ்கினான்.

“நான் இப்ப வந்துடுறேன்” என்று எழுந்து வெளியில் சென்ற ரங்கராஜன், இருபது நிமிடங்கள் கழித்துக் கோழி கறி வாங்கி வந்தார்.

“நான் செய்யறேன்” என்று காவேரி எழ, அவரை வற்புறுத்தி அமர வைத்து, பார்கவி சமைக்க, பார்த்திபன் அவளுக்கு உதவி செய்தான்.

இட்லி, கோழிக்கறி குழம்பு, புதினா சட்னி என மணக்க மணக்க இரவு உணவு தயாராகி இருந்தது.

நால்வரும் சேர்ந்து அமர்ந்து பேசிக் கொண்டே உண்டார்கள்.

இரவு உணவை முடித்ததும் அம்மாவின் பாதத்திற்குத் தைலம் தேய்க்க அமர்ந்து விட்டாள் பார்கவி.

பார்த்திபன், ரங்கராஜன் இருவரும் தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டார்கள்.

ரங்கராஜன் மகளைப் பற்றிப் பேசினார். மகள், மனைவி, தொழில் இதை விட்டால் அவரின் உலகத்தில் வேறெதுவும் கிடையாதே.

“மாப்ள, நான் ஒன்னு சொன்னா நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது” என்று அவர் பீடிகை போட, “தப்பா எடுத்துக்காத மாதிரி சொல்லுங்க மாமா” என்றான் புன்சிரிப்புடன்.

“நம்ம மண்டபம், கேட்டரிங் பிசினஸ் இதையெல்லாம் நாளைக்கு நான் என்ன மாப்ள செய்யட்டும்?”

“என்ன மாமா கேட்கறீங்க?” அவரின் கேள்வி புரிந்தாலும், பதிலின்றி அதிர்ச்சியுடன் கேட்டான்.

“இந்த வீடு, எங்க அடையார் பிளாட். நம்ம மண்டபம், ஊர சுத்தி நான் வாங்கிப் போட்டிருக்க இடம் எல்லாமே பார்கவிக்குதான் மாப்ள. அவளுக்காக வாங்கினது. அவ எதிர்காலத்தை யோசிச்சு வாங்கிப் போட்டது மாப்ள.”

“நான் பார்கவிகிட்ட ஒன்னுமே சொல்லலையே மாமா?” குழப்பத்துடன் கேட்டான்.

“நீங்க இதையெல்லாம் மறுக்கறது உங்களுக்கு நியாயமா இருக்கலாம். உங்க சுயமரியாதைய நான் மதிக்கறேன் மாப்ள. அதுனாலதான் கல்யாணத்தப்போ நீங்க சொன்ன எல்லாக் கண்டிஷனுக்கும் நான் ஒத்துக்கிட்டேன். ஆனா ஒரேடியா நீங்க இதை ஒதுக்கக் கூடாது மாப்ள. நாளைக்கு இத்தனை சொத்தையும் நான் தர்மத்துக்கா எழுதி வைக்க முடியும்? நீங்களே சொல்லுங்க. என் மக, என் மருமகன், என் பேரப்பிள்ளைங்க இதையெல்லாம் அனுபவிக்கணும்னுதானே நான் ஆசைப்படுவேன்?”

நடையை நிறுத்தி அவரை நேராகப் பார்த்து, “உங்க ஆசை நியாயமானது மாமா” என்றான்.

ஏற்கெனவே பார்கவியும் இது குறித்து அவனிடம் பேசியிருந்தாள்.

“நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு பார்த்தி. உங்கம்மாக்காகப் பார்த்து, அவங்களுக்குப் பயந்து எங்கம்மா எனக்கு எதையும் செய்ய யோசிக்கறாங்க. எனக்குச் செய்யாம அவங்க யாருக்கு செய்வாங்க நீங்களே சொல்லுங்க. இந்த வீட்டுக் கடனை நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அடைப்போம். ஓகே? மத்தபடி எனக்கு எங்கப்பாம்மா செய்யறதை தடுக்காதீங்க பிளீஸ்” என்று சொல்லியிருந்தாள்.

வீட்டு கடனுக்கு அவள் வருமானத்தில் இருந்து ஒரு தொகையை ஒதுக்க, அவன் வேண்டாம் என்று மறுக்க அவர்களுக்குள் சண்டையாகி இருந்தது. இப்போது அந்த நினைவுடன் மாமனாரை பார்த்தான்.

“இதுவே எனக்குப் பையன் இருந்திருந்தா அவன்கிட்ட என் தொழிலை ஒப்படைச்சிருப்பேன் மாப்ள. பார்கவிக்கு மொத்த வருமானத்துல சமமான பங்கு கொடுக்கச் சொல்லியிருப்பேன். ஆனா இப்போ எல்லாம் அவதான் பார்க்கணும். எனக்குப் பின்னாடி தொழிலை..”

“அச்சோ மாமா” என்று அவசரமாக அவர் பேச்சை நிறுத்தினான்.

“நான் நிதர்சனத்தைச் சொல்றேன் மாப்ள”

“அதெல்லாம் நீங்க நல்லா இருப்பீங்க மாமா. உங்க பேரன், பேத்தி கூட இதே தெருவில ஓடி விளையாடுவீங்க பாருங்க” என்றான். அதைக் கற்பனை செய்து பார்த்தவரின் முகம் பிரகாசமானது.

“கேட்டரிங் மேனேஜ் பண்ண ஆள் போட்டாச்சுதானே மாமா?”

“ம்ம், ரெண்டு வாரம் ஆச்சு மாப்ள. நீங்க சொன்ன ஆள்தான். பொறுப்பா இருக்கார்”

“நல்லது மாமா. மண்டபம் புக்கிங்லாம் இப்போ பாரு பார்க்கிறாதானே? இனிமே நானும் பார்க்கறேன். கேட்டரிங் பிசினஸ் கூட என்னன்னு உள்ள இறங்கி கத்துக்கறேன் மாமா.” என்றான்.

“எனக்காகச் சொல்றீங்களா மாப்ள?”

“அச்சோ இல்ல மாமா. நீங்க கேட்டரிங் பிசினஸ் பார்க்க ஆள் கேட்டப்பவே பார்கவிகிட்ட நான் இது பத்தி பேசியிருந்தேன். நாங்க யூஎஸ் போய்ட்டா நீங்க எப்படித் தனியா இதையெல்லாம் சமாளிப்பீங்கன்னு கூடப் பேசிக்கிட்டோம்”

“ஓ, திரும்ப யூஎஸ் போறதா இருக்கீங்களா மாப்ள?” கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.

“இல்ல மாமா. ரெண்டு வருஷம்தானேன்னு யோசிச்சேன். ஆனா உங்களையும், அம்மாப்பாவையும் இங்க தனியா விட்டுட்டு நாங்களும் அங்க போய்த் தனியா இருந்துன்னு யோசிச்சாலே போக மனசு வரல மாமா.” என்றான் மனம் திறந்து.

“நல்லது மாப்ள. இங்கேயே பெரிய பொசிஷன் போவீங்க நீங்க” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.

வீட்டினுள் காவேரியும் மகளிடம் அதையேதான் பேசிக் கொண்டிருந்தார்.

“உங்கத்த யோசிக்கிறது நியாயம்தான். பொண்ணு வீட்ல இருந்து வாங்கிட்டாங்கன்னு ஊரு உலகம் பேசும்னு அவங்க நினைக்கறாங்க. ஆனா அந்தப் பேசுற நாலு பேரையும் போய்ப் பார்த்தா, பொண்ணு வீட்ல சண்டை போட்டு கேட்டு வாங்குறவனா இருப்பான். அட்வைஸ் எல்லாம் அடுத்தவனுக்குதான் பண்ணுவான்‌‌. மத்தவன் சந்தோஷமா, நிம்மதியா வாழ்ந்தா பொறுக்காது அவனுங்களுக்கு. அவங்களுக்கு அடிச்சா லாட்டரி. மத்தவனுங்களுக்குன்னா இளக்காரமாதான் பேசுவானுங்க” என்றார் கோபமாக.

பார்கவி புன்னகைக்க, “உங்கத்தைக்கு என்ன, நாங்க உனக்குச் செய்யக் கூடாது அவ்ளோதானே? விடு, அப்பா எல்லாத்தையும் உன் புள்ளைங்க பேர்ல எழுதி வைக்கிறேன்னு சொல்லிட்டார். போன வாரம் லாயர் பார்த்து பேசிட்டே வந்துட்டார்” என்று அவர் சொல்ல, சிரித்தாள் பார்கவி.

பார்த்திபன் அம்மாவை அழைத்து இரவு இங்குத் தங்கப் போவதாகத் தகவல் சொல்லி விட்டான்.

error: Content is protected !!
Scroll to Top