மாலை நேர தென்றல் இதமாய் மேனியை வருட இருவரும் தோட்டத்தில் நின்றிருந்தார்கள்.
“இன்னைக்கு அத்த வீட்டுக்கு வரலையா பாரு?” என்று காவேரியை குறித்துக் கேட்டான் பார்த்திபன்.
“ம்ம், வரலங்க.”
“சரி, கிளம்பு. உங்கம்மாவ போய்ப் பார்த்திட்டு வருவோம்”
“இப்பவா? அத்த கோவிலுக்குப் போய் இருக்காங்களே?”
“சரி, அம்மா வந்ததும் போவோம்” என்றான்.
அவளும் காலையில் இருந்து மூன்று முறைக்கும் மேல் அம்மாவை அழைத்து விட்டாள். அவரின் குரலே சரியில்லை. அம்மாவை காணும் ஆவலில் வேகமாகச் சென்று உடை மாற்றி வந்தாள். அப்போது சத்யபாமாவும் வீடு திரும்பியிருந்தார்.
பார்த்திபன் தகவல் சொல்ல, “ஆமா, இன்னைக்கு அவங்கம்மா வரவே இல்லல்ல. போய் என்னான்னு பார்த்திட்டு வாங்க, போங்க” என்றார்.
இருபது நிமிடங்களில் பார்கவியின் அம்மா வீட்டுக்கு வந்து விட்டார்கள்.
“பாரும்மா, வா வா. வாங்க மாப்ள” அவர்களுக்கு முன்னே காரில் இருந்து இறங்கிய ரங்கராஜன் இருவரையும் முகம் நிறைத்த புன்னகையுடன் வரவேற்றார்.
“அம்மா இங்க வீட்ல தனியா இருந்துட்டுதான் என்னைய பார்க்க வரலையாப்பா?” என்று புகார் படித்துக் கொண்டே அப்பாவை நெருங்கினாள்.
மதில் கதவை திறந்து அவர்கள் உள்ளே நுழைய, பார்கவியின் கண்ணில் முதலில் விழுந்தது அங்கே சாய்த்து வைக்கப்பட்டிருந்த புதுச் செடிகள்தான்.
அப்பாவையும், கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“தோட்டத்துக்குச் செடி வாங்கினீங்களாப்பா?”
“ஆமா பாரும்மா, சரக்கொன்றை, செம்பருத்தி, செவ்வாழை கன்னு வாங்கிட்டு வந்தேன்டா. உன் கையால நட்டு வைக்கணும். நாளைக்குக் காலையில வைப்போமா?” என்று கேட்டார்.
அப்பாவை கூர்மையாகப் பார்த்து, “இவர் வாங்கிட்டு வரச் சொன்னாராப்பா?” என்று பதில் கேள்வி கேட்டாள்.
“மாப்ளயா?” என்று திரும்பி பார்த்திபனை பார்த்தவர், “இல்லையே பாரும்மா. நானாதான் வாங்கிட்டு வந்தேன். நம்ம வீட்டு வாசல்ல கொஞ்சம் இடம் கெடக்கு இல்ல? இந்தச் சரக்கொன்றை செடிய வச்சா ஒரே வருசத்துல நல்லா பெரிய மரமா வந்து சரம் சரமா பூ பூத்து பாக்கவே அழகா இருக்கும்டா. நாம கேரளா போனப்போ, உனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னு சொன்னல்ல. அந்த ஞாபகம் அப்பாக்கு இருந்தது. நாலு நாளைக்கு முன்னாடி நம்ம மண்டபத்துல நடந்த கல்யாணத்துல தாம்பூலத்தோட மரக் கன்னு வச்சு கொடுத்தாங்களா, அப்போவே வீட்டுக்கு நாலு செடி வாங்கி உன் கையால வைக்கணும்னு நினைச்சேன்டா. வெள்ளை செம்பருத்தியும் வாங்கிட்டு வந்திருக்கேன், காலையில வைப்போமா?” என்று கேட்டார்.
அதெப்படி ஒரே நேரத்தில் இருவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனை தோன்றும். அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதழ்கள் தாமாகப் புன்னகையில் பிரிய, “இப்போதான்ப்பா எங்க வீட்ல பவள மல்லி செடி நட்டு வச்சுட்டு வந்தோம்” என்று சொன்னாள்.
“இவர் ஆஃபீஸ்ல இருந்து வரும் போது வாங்கிட்டு வந்தார்”
“அப்படிங்களா மாப்ள?” என்று பார்த்திபனின் தோளை தட்டினார்.
அதற்குள் காவேரி வெளியே வந்து விட்டார்.
அம்மாவை பார்த்ததும், “கால்ல என்னம்மா? ஏன் தாங்கி நடக்குற?” என்று கேட்டாள். அவள் ஓடிப் போய் அவரின் காலை ஆராயப் போக, “ஷ்ஷ்ஷ் வீட்டுக்குள்ள வா பாரு” என்று மகளை அதட்டினார் அவர்.
“எப்படிம்மா கால்ல அடிபட்டுச்சு? அதான் வீட்டுக்கு வரலையாம்மா நீ?” அவள் அக்கறையுடன் கேட்க, “ஆமா, உன் காக்கா இருக்கே. அது ஒரு வாரமா ஒரே கத்து. அவசரமா மாடியேறி போய் அதுக்குச் சோறு வெச்சுட்டு கீழ இறங்கி வந்தா படியில கால் பிசகிருச்சு பாரு” என்றார்.
“வாம்மா, போய் டாக்டர் பார்த்துட்டு வருவோம்”
“அப்பா மதியமே கூட்டிட்டு போயிட்டார், டாக்டர் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டாங்க. நீ பதறாத. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியா போகும்” என்று அவளைச் சமாதானம் செய்தார்.
“என்கிட்ட சொல்லவே இல்லப்பா நீங்க?” என்று அப்பாவை கோபித்துக் கொண்டாள்.
“நான்தான் வேணாம்னு சொன்னேன் பாரு. அதை விடு, நைட்டுக்கு என்ன வேணும்னு சொல்லு. அம்மா செய்யறேன்”
“இந்தக் காலை வச்சுட்டு செய்வியாம்மா நீ? உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நான் செய்யறேன்” என்றாள்.
“சின்னச் சுளுக்குதான் பாரு” என்ற காவேரியை அசையவே விடவில்லை அவள்.
“நைட்டுக்கு என்ன செய்யன்னு சொல்லுங்கப்பா. நான் செய்யறேன்” என்று அப்பாவை கேட்டாள்.
“நீ எது செஞ்சாலும்..” என்று காவேரி தொடங்க, “அப்பா சாப்பிடுவேன்டா” என்று சிரிப்புடன் முடித்தார் ரங்கராஜன்.