53 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 53

 

“கார்காலம் வந்தால் என்ன 

கடும் கோடை வந்தால் என்ன

மழை வெள்ளம் போகும் 

கரை ரெண்டும் வாழும்

காலங்கள் போனால் என்ன 

கோலங்கள் போனால் என்ன

பொய் அன்பு போகும் 

மெய் அன்பு வாழும்

அன்புக்கு உருவம் இல்லை 

பாசத்தில் பருவம் இல்லை

வானோடு முடிவும் இல்லை 

வாழ்வோடு விடையும் இல்லை

இன்றென்பது உண்மையே

நம்பிக்கை உங்கள் கையிலே”

இரவு வானில் அளவில்லா நட்சத்திரங்களும் நடு நாயகமாய் நிலவும் வீற்றிருந்தது. பால்கனியிலிருந்த சொகுசு தொங்கு ஊஞ்சலில் அமர்ந்தாள். நாசியை செண்டு மலரின் வாசம் நிறைத்தது. தனிமையைப் போக்க அறையில் பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. 

கண்கள் மூட, இமைக்குள் மனோ வந்தான்.

“வந்ததும் எனக்கு ஆயிரம் முத்தம்!” என்றாள் கட்டளையாக.

“ஆயிரம் போதுமா? எனக்கு போதாதே…” என்றான், ஆசையைக் கொட்டி!

“நீங்க போதும் சொல்ற வரைக்கும் கொடுப்பேனாம்!” கொஞ்சலோடு மோகமும் எட்டிப் பார்த்தது.

“நான் போதும்ன்னு சொல்லவே மாட்டேனாம்…” குரலில் தேன் கலந்து குழைந்தான்.

“அப்போ நான் கொடுத்துட்டே இருப்பேனாம்…” கிளுக்கி சிரித்தாள்.

இருவரும் சிரிக்க, “லவ் யூ டி, காத்துட்டே இருப்பியாம்… உன் பின்னாடி வந்து உன் காதுல ஆசையா ‘மிஸ் மீ’ன்னு கேப்பேனாம்…”

“ஆஹா? அப்புறம்?”

“உன் காத்திருப்பு முடிஞ்ச சந்தோஷத்துல உன் உதடு துடிச்சுட்டே சிரிக்குமாம்… உன் கண்ணுல தண்ணியா வழியுமாம். என் கத்திருப்பு முடிஞ்ச சந்தோஷத்துல நான், என் பாப்பாக்கு வலிக்காத மாதிரி, என் காதல எல்லாம் ஒண்ணு சேத்து ஆசையா உன்னை இறுக்கி கட்டிப்பேனாம்!” வாயிலிருந்த ஜவ்வு மிட்டாயை மென்று      கொண்டே சிரித்தான். இன்றும் அந்தப் புன்முறுவலில் அதே வசீகரம். பெண்ணை முழுவதுமாக ஜவ்வு மிட்டாயோடு மென்றிருந்தான். 

“லவ் யூ மனோ. காத்திட்டே இருப்பேன்… உங்களுக்காகவும், என் காதோரம் நீங்க சொல்லப் போற காதலுக்காகவும்…”

மூடியிருந்த விழியோரம் நீர் கசிந்தது. “என்ன டி பட்டு… வா” என்றான் கைகள் விரித்து! தொங்கு ஊஞ்சலில் கோழிக் குஞ்சாய் சுருண்டாள். 

அவன் அணைப்பின் கதகதப்பை மனம் வேண்டியது. “மனோ… வந்திடுவீங்க தானே மனோ! உங்கள நம்பி காத்திருக்கேன் மனோ…” என்றாள், நடுங்கும் குரலில்.

அலர்விழியோடு நாமும் நம்புவோம். அவள் மனோ வருவான் என்று! பின்னோடு கட்டி அணைப்பான் என்று! காதில் காதல் உரைப்பான் என்று! பிரசவிக்கும் மழலையை அவன் தான் முதலில் கையில் ஏந்துவான் என்று! மகனோடு மனைவியையும் மார்பிலும் மடியிலும் தாங்குவானென்று! அலர்விழியோடே நாமும் நம்புவோம், திகட்டத் திகட்ட காதல் வாழ்வை இருவரும் வாழ்வார்கள் என்று, அலர்விழியோடே நாமும் நம்புவோம்! நம்பிக்கையே நல்லது!!

“காலத்துக்கும் உன் கூட தான்!” தலை கோதி புன்னகைத்தான்.

கைப்பேசி சிணுங்கியது. இலக்கியாவிடமிருந்து தகவல்கள் குவிந்திருக்க, பார்வை இலக்கியா அனுப்பிய படங்களில். “அக்காட்ட இருந்து உனக்காக சுட்டது” என்று பத்துக்கும் மேற்பட்ட படங்களை அனுப்பி இருந்தாள். அனைத்தும் மருத்துவ வளாகத்தில் அக்கா எடுத்ததாம்.

பலவகை மலர்கள், பல நிறங்களில். மஞ்சள் டாஃபோடில், பர்புள் டுலிப், பர்புள் மற்றும் பிங்க் கிரேப் ஹயாசிந், ச்செரி பிளாஸம், கடைசியாக மாக்னோலியா. இதயம் தாளம் தப்பியது. ஒவ்வொரு மலரும் ஒரு கதை கூறியது. கதையின் நாயகன் மனோ! 

கடைசியாக வந்த காணொளியில் ஒரு கிளை, கிளையை நிரப்பியிருந்தது மாக்னோலியா மலர்கள். கிளையின் நடுவே பழுப்பு நிற கார்டினல் அலகைத் திறந்து அமர்ந்து சிகப்பு கார்டினலைப் பார்க்க, சிகப்பு கார்டினல் அதன் அலகில் இருந்த விதையோடு பெண் பறவை அலகை நோக்கிக் குனிந்தது. சட்டென்று ஒரு வலிமையான கரம் கைப்பேசி கேமராவை மறைக்க, “அச்சோ… ஏங்க?” என்று பெண் சிரிக்க, “எ…” என்று ஏதோ கூறவந்த ஆண் குரலோடு காணொளி முடிந்திருந்தது. அந்த பெண் குரலின் சொந்தக்காரி, இலக்கியாவின் அக்காவாம்!

அடுத்து என்ன நடந்திருக்கும்? கண்டிப்பாக பெண் பறவை அலகிற்குள் விதையை ஊட்டி விட்டிருக்கும் சிகப்பு கார்டினல்!

‘வீடியோல கூட பார்க்க விடுறது இல்ல!’  தன் போல் பெண்ணவள் முகம் புன்னகையைத் தத்தெடுத்தது. 

இலக்கியா, “படுக்கலியா? படு போ” என்று தகவல் அனுப்பினாள்.

“இதோ… போய்ட்டே இருக்கேன். குட் நைட்” என்றாள்.

“ஹேய் அலர், அந்த கார்டினல் விடியோ பார்த்தியா? சூப்பரா இல்ல? இன்ட்ரெஸ்டிங் விஷயம் ஒண்ணு இருக்கு. இந்த பறவை நாம இருக்க இடம் கிட்ட வந்து, அத நாம பாத்தா, நம்ம மனசுக்கு நெருக்கமானவங்க நம்மளத் தேடிப் பார்க்க வந்திருக்காங்கன்னு அர்த்தமாம். அக்காவோட அந்த பேஷியன்ட் சொன்னதா சொன்னா.”

‘நம்ம மனசுக்கு நெருக்கமானவங்க நம்மளத் தேடி பார்க்க வந்திருக்காங்கன்னு அர்த்தமாம்!’  கூறிக்கொண்டாள். 

“ஓய்… மேட்டர் தெரியுமா… நான் அக்காவோட சென்டருக்கு போயிட்டு இருக்கேன். அப்படியே அக்காவோட சாக்கோ வெண்ணிலா ஐஸ்-கிரீம பார்த்துட்டு வரதா பிளான்.” என சிரித்தவள், “சரி நீ படு. குட் நைட்!” என கைப்பேசியை அணைத்தாள்.

இமைகள் மூட, கார்டினல் இனிமையாகப் பாடியது. கார்டினல் இரண்டும் கொஞ்சிக் கொண்டன.

காது மடலில் மீசை முடி உரைய, “என்னது இது காலையிலேயே ஷோ பார்த்து கிட்டு?” என அவன் கேட்க, அவள் புன்னகைத்தாள்.

“அம்மணிக்கு காலைலேயே நல்ல கிளுகிளுப்பா படம் பாத்த எஃபக்ட் போல…” அவன் கேசம் கோதி சிரித்தான். 

“அவ்வளவு டெஸ்ட் வச்சு செலெக்ட் பண்ணின அந்த சிகப்பு கார்டினல் பறவ, அதோட குஞ்சு பறக்க ஆரம்பிச்சு, சீசன் முடிஞ்சதும் விட்டுட்டுப் போயிடுமாம். நான், கார்டினல் மாதிரி ஒரு சீசனுக்கு மட்டும் இல்லாம, ஒரு ஜென்மம் முழுசும் உன்னையும் நம்ம பிள்ளைங்களையும் உயிரா பார்த்துப்பேன்.” என்றான் காதல் ததும்ப.

 “ஒரு ஜென்மம் முழுசும்!” கண்கள் நீரைக் கசிய விட, “வந்திடுவீங்க மனோ! எனக்குத் தெரியும்!” என்றவளின் இதழ்கள் விரிந்தன.

“தலை சாய்க்க இடமா இல்லை
தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவா இல்லை
நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது” 

தென்றல் தாலாட்ட, கணவன் அணைக்க, நித்திரைக்குள் ஆழும் முன், என்றுமில்லாமல் இன்று மனதோடு திடமாய் பேசினாள்.

வருவான்! என் மனோ வருவான். இதே அறையில் நான் காத்திருக்க, என் பின்னோடு வந்து நிற்பான். தோளில் பதியும் உள்ளங்கைகள் இரண்டும், என் முழுக் கைகளை வருடிக் கொண்டே என் விரல்களோடு பின்னிப் பிணையும். காது மடலில் அவன் இதழ் உரைய, அவன் மூச்சுக் காற்று உஷ்ணமாய் என் உயிர் சேர, “மிஸ் மீ?” என்று காதல் கூறுவான். அன்று என் இதழ் துடித்து சிரிக்கும். கண்கள் பனித்து நீர் வழிய, கன்னம் நனையும்! அது வரை காத்திருப்பேன்! என்று திடமாய் கூறிக் கொண்டாள்!

விழியோடு எங்கள் காத்திருப்பும் முடிய, வா மனோ… 

காதோரம் காதல் சொல்ல!

மனோ வருவான். அவனை உயிராய் நேசிப்பவளை தேடி மனோ நிச்சயம் வருவான் என்ற உணர்வோடே கதை நிறைவடைகிறது. 

“இல்ல… எனக்கு போதாது. எனக்கு கண்டிப்பா அவங்க சேர்றத படிச்சா தான் நிம்மதி”ன்னு சண்டைப் போட்டவர்களுக்காகவும், நினைப்பவர்களுக்காகவும்… 

இன்னும் ஒரு அத்தியாயம்…

error: Content is protected !!
Scroll to Top