இலக்கியாவை அழைத்தாள். “அலர் நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன், மெயில் செக் பண்ணிக்கிறியா?”
“என்ன அக்காவ பார்க்க போனியா?”
“ஆமாப்பா. இன்னைக்கு அக்கா பொண்ணு ஃப்ர்ஸ்ட் பர்த்டே. டின்னருக்கு கூப்பிட்டிருந்தா, அது தான் வந்தேன். ஆனா அக்கா திடீர்ன்னு பிஸி ஆகிட்டா. வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு, அவ ஸ்பெஷல் பேஷியன்ட் கூட செட்டில் ஆகிட்டா. நான் வெளியில தனியா உலாத்திட்டு இருக்கேன்.”
“பேஷியன்ட்ல என்ன ஸ்பெஷல்?”
“‘இந்த வெண்ணிலா தோலுங்க நடுவில அந்த வெண்ணிலால கொஞ்சம் காபிய சேர்த்தா எப்பிடி இருக்கும்? அப்படி இருக்கான், ஜம்முன்னு வெண்ணிலா காபி ஐஸ்-கிரீம் மாதிரி. அதனால அவன் ஸ்பெஷல்’னு சொல்லுவா!” கூறியவளோடு இவளும் சேர்ந்தே சிரித்தாள்.
“ஹ ஹா ஹா… வெண்ணிலா காபி ஐஸ்-கிரீமா? ம்ம்ம்! கத நல்லா இருக்கே… சொல்லு கேப்போம்”
“கதைக்கு நான் எங்க போறது? பேஷியன்ட் பத்தி வாயே திறக்க மாட்டா. எதோ அந்த ஆள், ரெண்டு நாள் முன்னால, அவள பாத்து சிரிச்சு ‘ஹாய்’ சொல்லிட்டான் போல, மேடம் குஷி மூடுல கொஞ்சம் உளறினா!”
“ஹாய் சொல்றதெல்லாம் ஒரு விஷயமா?”
“அதயே தான் நானும் கேட்டேன்”
“ம்ம்?”
“கோமால ஒரு மாசம் இருந்து பிழைச்சவராம். பிரெயின் இஞ்சுரி. ரெக்கவர் ஆகவே மாட்டார்! படுத்த படுக்கை தான்னு அவர்ட்டயே சொல்லிட்டாங்களாம். ஆனா மனுஷனுக்கு வைராகியம் ஜாஸ்தி போல, பொழச்சுகிட்டார். அவர் பொழச்சாலும் பிரெயின் இஞ்சுரி, சோ பழைய நினைவும் இல்ல, எல்லார் மாதிரி அவரால எழுந்து நடமாடவும் முடியல.
ரெண்டு மாசம் முன்னால தான், ரிஹேபிளிடேஷன் சென்டருக்கு கூட்டி வந்தாங்களாம்! இப்போ அக்காவோட கேர்ல தான் இருக்காராம். நடக்க ஆரம்பிச்சுட்டாராம். ரெண்டு நாள் முன்ன தோட்டத்துல, பூவுக்கு நடுவில இருந்த ரெண்டு குருவிய வேடிக்க பார்த்திட்டு இருந்த மனுஷன் ‘ஹாய்’ன்னு சொல்லி முதல் தரம் அக்காவப் பார்த்து சிரிச்சாராம்! அக்காவ கைல பிடிக்க முடியல! அவர் பழைய வாழ்க்கைய நினைவு படுத்தற மாதிரி ஏதாவது பார்த்தா, நினைவு வர சாத்தியம் அதிகம்ன்னு சொல்லி இருந்தா!”
“ம்ம்… சூப்பர்”
“அவரும் பாக்க சூப்பரா இருப்பாராம்.”
“ஓஹ்ஹ்ஹ்” இவள் கேலியாகச் சிரிக்க,
“அட போப்பா… அவர் கையில மோதிரம் இருக்காம். மேரிட் போல!”
“ஆஹ்… வட போச்சே!”
“போகட்டும் போகட்டும். அவர் புள்ள குட்டியோட போய் சந்தோஷமா இருக்கட்டும். ஆனா அதுக்குள்ள எங்க அக்காவையே வாய் பிளக்க வச்ச மனுஷன ஒரு தரம் போய் பார்த்துட்டு வரணும்! இல்லையா… அவர ஒரு போட்டோ எடுத்துட்டு வந்து காட்டுன்னு கேக்கணும்! அலர் அக்காட்ட இருந்து கால் வருது, நான் கிளம்பட்டா!”
“ம்ம்ம் சரி. இன்னைக்கோட அப்டேட்ஸ்ச எட்வின் கிட்ட கேக்கவா?”
“தேவை இருக்காது, இன்னைக்கு அப்டேட்ஸ் எல்லாம் மெயில் பண்ணிட்டேன். ஒரு தரம் பாத்துக்கோ, தேவைன்னா அவன்கிட்ட கேளு! பை பாய்,” என்று இலக்கியா கிளம்பி விட மடிக்கணினியில் முடிக்க வேண்டிய வேலைகளை நோட்டமிட்டவள், அன்றைய நாளைத் திட்டமிட்டு குறித்துக் கொண்டாள்.
அடுக்களை வேலை முடித்து, மாமனார் மாமியாரோடு சேர்ந்து உண்ண அமர்ந்தாள். மாமனாரை அவளால் மட்டும் தான் உண்ண வைக்க முடியும். “ப்பா.. என்னது இது? ஒழுங்கா சாப்பிடுங்க” என்று உருட்டி மிரட்டி உண்ண வைப்பாள்.
“மா.. கிளம்பறேன். ப்பா போயிட்டு வரேன்! இன்னைக்கு மதியம் வர மாட்டேன் யமுனாக்கா, டீம் லன்ச் இருக்கு. ஈவ்னிங் வர லேட்டாகும்” என்று கூறிக் கொண்டே கார் சாவியை எடுக்க, “பாப்பா… பாப்பா, இத எடுத்துட்டுப் போ”, பின்னோடு வந்தவரை செல்லமாக முறைத்தவள், “க்கா, நான் ஒண்ணும் பாப்பா இல்ல. இன்னைக்கு என்ன ஜூஸ்?” என்று கை நீட்டினாள் புன்முறுவலோடு!
“நீ விரும்பிக் குடிப்பியே ஆப்பிள், பேர், ஆரெஞ் எல்லாம் போட்டு ஒரு ஜூஸ்… அது! நேரத்துக்கு குடிச்சிடு பாப்பா!”
“சரி கா, கிளம்பறேன். நீங்களும் நேரத்துக்கு சாப்பிடுங்க” என்றவளை கண்கலங்க பார்த்தவர், “என் மகராசன் இப்படித்தான் சொல்லிட்டுப் போவான்… எம்புள்ள நல்ல மனசுக்கு இப்பிடி ஆகியிருக்க வேண்டாம்!” கூறிக் கொண்டே முந்தியில் மூக்கை துடைத்து அவர் செல்ல, நின்றவள் வேரூன்றி நின்று விட்டாள்.
நடுக்கூடத்தில் 3*5 அடியில் சுவரை அலங்கரித்த படத்தில் பார்வை நிலைத்தது. புன்னகை முகமாய் எபி, அலர்விழி கழுத்தில் தாலிக் கொடியை பூட்டிக் கொண்டிருந்தான். இருவர் விழிகளும் காதலாய் மோதி நின்றிருந்தன. நடுங்கும் உடலை இழுத்துக் கொண்டு வாசலில் நின்றிருந்த கேம்ரியில்(camry) அமர்ந்தாள்.
கண்களை மூடி ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்தாள். உடல் நடுக்கம் நின்ற பாடில்லை. ‘ஓ’வென்று கத்தி கதறத் துடித்த மனதை அமைதி படுத்தத் தெரியவில்லை.
பால்ராஜ் கார் ஜன்னலைத் தட்டி, “என்னடாமா முடியலியா?” என்று பெண் முகம் பார்த்தார்.
“இல்ல ப்பா. ஐ ஆம் ஃபைன்” என்றவள் புன்னகைக்க முயன்று தோற்றாள்.
மெல்லத்q தலை வருடி, “பத்திரம் டா” என்றவரும் அவளைப் போலவே பதில் புன்னகை வீசினார்.
ஒருவர் மற்றவருக்காக போடும் வேஷம் என்று கலையுமோ தெரியாது. ஆனால் அனைவருமே ‘ஐ ஆம் ஃபைன்’ என்று உதட்டை இழுத்துப் பிடித்து புன்னகைக்க கற்றிருந்தனர், அந்த குடும்பத்தில்.
“சரி ப்பா” என்றவள் காரை உயிர்ப்பித்தாள். கார் மெதுவாக சாலை நெரிசலோடு கலந்தது. தனிமையில் மனம் மனோவை சுற்ற ஆரம்பித்தது. ‘ஏறு… உனக்கு போதும்ன்னு தோன்ற வரை டிரைவ் போலாம்’ மனோ கூறினான். சேர்ந்து போவதாக தானே கூறினான்? ஏன் தனித்து விட்டான்? “என்னை ஏமாத்திட்டீங்க மனோ?” என்றும் போல் செல்லச் சண்டையோடு நாளை ஆரம்பித்தாள்.
அன்றும் அப்படித் தானே சண்டையிட்டாள்? கோபமாக மூக்கிலிருந்த அந்த சின்ன வளையத்தை கப் ஹோல்டரில் விட்டுச் சென்றதை அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அதைப் பார்த்த அன்றிலிருந்து காரைத் துடைப்பது முதல் ஓட்டுவது வரை அவள் மட்டுமே. அவன் அமர்ந்த இடத்தில் வேறொருவர் அமர்வதையும் அவளால் சம்மதிக்க முடியவில்லை. மனோ கரம் பட்ட ஸ்டியரிங்கை தொடும் போது அது தரும் இதமே தனி! தொட்டுத் தடவி விடுவாள், அவன் கேசம் வருடுவது போல்.
“உடலென்ற பாண்டம்… உடைந்துவிடும்
கதறும் மனமே… கவலுற வேண்டாம்
இலைகள் உதிரும் பொழுதில்… மரம் அழிவதில்லை
அக்றினைபோலே அன்றாடம் வாழ்ந்திடு
உலகே… நிலையில்லையே…”
மனோ அதிகம் கேட்கும் பாடல்களில் ஒன்று ஒலித்தது. பாடல் வரிகள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம்! ஆனாலும் அவன் விரும்பிக் கேட்ட பாடலை கேட்கப் பிடிக்கும்! “என்ன பாட்டு மனோ இது?” இழுத்து மூச்சை விட்டவளின் கவனம் சாலையில். “வெளியில போகும் போது கேக்கிற பாட்டா இது?” இலை உதிர்ந்தால் மரம் அழிவதில்லை தான்! ஆனால் மரம் அழுமா அழாதா? ஞானி போல் யோசித்தாள்! ஐந்து விரல்களில் ஒன்றை வெட்ட நாம் கொடுப்பதில்லையே! அழும் என்று தான் தோன்றியது. ப்ச்!
“வாழ்வதை விடவும் வலியே கொடிதே
வீழ்வதை விடவும் பிரிவே கொடிதே
கருவறை எல்லாம் முதலும் அல்ல
முடிவுரை எல்லாம் முடிவும் இல்ல
கண்ணீர் வருது உண்மை சொல்ல
பாழும் மனது கேட்குதுமில்ல
நீ எங்கே நீ எங்கே… நாளைக்கு நானும் அங்கே”
பாடலை நிறுத்தியவள், மங்கலாகத் தெரிந்த சாலையில், கண்களைக் கசக்கி, கவனத்தை செலுத்தினாள். “ம்ப்ச்! போங்க மனோ… சும்மா சும்மா அழ விடுறீங்க!” சலிப்பாகத் தோன்றியது! உணர்ச்சிகளை துறக்க தான் நினைக்கிறாள், உணர்வோடு அவன் ஊடுருவி சென்றிருக்க, அவ்வப்போது உணர்ச்சிவசப் பட்டுவிடுவாள். இன்றும் அப்படிபட்ட நாள் தான்! காரணம், இன்றோடு சரியாக ஆறு மாதங்கள் முடிகிறது மனோ அவள் உதட்டில் இதழ் பதித்து ‘பா…ய் விழி’ என்று கூறி! சரியாக 26 வாரங்கள் இருவர் உடலும் பிரிந்து!
“இன்னும் எத்தன நாள் மனோ…” நெஞ்சம் பிசைய விக்கிக் கொண்டு வந்தது.
தனக்கான அறையில் அமர்ந்த ஐந்தாவது நிமிடம், “இன்னைக்கு காலையில ஒம்பது மணிக்கு கான்ஃபரன்ஸ் ரூம்105-ல எஸ்.இ.டெக்-அ நம்ம கம்பனியோட மெர்ஜ் பண்ணப் போறத பத்தின பேச்சுவார்த்த இருக்கு மேம்” என்றாள் உதவியாளர்.
கைப்பேசியில் நேரம் பார்த்தவள், 105-ன் கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தாள். நினைவுகள் ஐந்து வருடங்களுக்கு முன் சென்றது.
‘அதே ரூம். அதே இடத்தில நான்! நீ எங்கே மனோ?’ அடைத்த தொண்டையை கனைத்து கொண்டாள்.
“மேடம் ஜூஸ்” என்று உதவியாளர் வைத்து விட்டுச் சென்றாள். அந்த ஆரெஞ் நிற திரவத்தைப் பார்த்தவள் கண்கள் தன் போல் கலங்க ஆரம்பித்தன. மூச்சை உள்ளிழுத்தாள். பழரசத்தைக் கையில் எடுக்க, “மிஸ் மீ?” என்றான் அவன், மந்தகாசப் புன்னகையோடு! ஜவ்வு மிட்டாயோடு அவளையும் சேர்த்து மென்று கொண்டு!
மூடிய இமைகளை இடித்து நின்றது உவர்ப்பு நீர். “ஜூஸ் கொஞ்சம் புளிப்பில்ல…?” என்று கேட்டவனின் சத்தம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்க, பெண் துவண்டு போனாள்.
“மனோ…” என்றவள் உடைந்து அழுதாள். மனம் அழுத்தம் தாள முடியாமல் கண்ணீர் வழிய அழுதாள். ‘கண்கள் குளம் கட்டினாலே ‘வா’ என்று நெஞ்சில் போட்டுக் கொள்ளவாயே… ஏன் என் கண்ணீருக்கு வர மறுக்கிறாய் மனோ…?’ சத்தமாக கேவல் வெடிக்க அழுதாள்.
கூட்டத்திற்காக சில தகவல் வாங்க வந்த எஸ்தர் அவள் நிலை கண்டு நின்று விட்டார். மகனை இழந்த வேதனையை விட கண்முன் அலர்விழி தினம் தினம் படும் வேதனை அவரால் தாள முடியவில்லை.
மெல்ல தலையை வருடி விட்டார். வலி மிகுதி இருவருக்கும், அதனால் பேச்சு வரவில்லை. கண்கள் திறந்தாள். “என்ன டா?” என்று கண்களை துடைத்து விட்டார். “ஆம் ஃபைன் மா” என்றவளால் இம்முறை அழுகையை கட்டுப் படுத்த முடியவில்லை. “ஆம் நாட் ஃபைன் மா” என்றவள் எஸ்தரின் வயிற்றில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
“செத்துடலாம் போல இருக்கு. என்னால அவரில்லாத உலகத்துல வாழ முடியல. இன்னைக்கு வருவார் நாளைக்கு வருவார்ன்னு இன்னும் எத்தன நாளைக்கு பிரியத் துடிக்கிற உயிர இழுத்துப் பிடிக்க… யாருக்கெல்லாமோ வர சாவு எனக்கு ஏன் வர மாட்டேங்குது…”
கன்னம் பிடித்து முகத்தை உயர்த்தியவர், “அவன் என்ன ஆனான்னு தெரியல. என் மகனுக்கு உன் கூட வாழ கொடுத்து வைக்கல. ஆனா அவன் எங்க இருந்தாலும், உன் நிம்மதி தான் அவனுக்கு நிம்மதி கொடுக்கும். இப்படி எல்லாம் பேசாத. அவன் உயிரையே உன் கிட்ட கொடுத்துட்டு போயிருக்கான். நீ இப்படி அழலாமா?”
பெண்ணை எழுப்பி, நெற்றியில் முத்தம் வைத்து, “நீயும் எங்கள விட்டுப் போகணும்ன்னு முடிவு பண்ணினா, எங்களையும் கூட்டிப் போயிடு. பாதி செத்துட்டோம். நீ மகளா என் வீட்டுக்கு வந்தப்புறம் தான் நாங்க எழுந்து நடமாட ஆரம்பிச்சிருக்கோம். உன் முடிவு எதுவா இருந்தாலும் எங்களையும் சேத்துகோ!” என்றவரின் மென்மையான புன்சிரிப்பில் இருந்த வருத்தம் காண சகியாதவளாய் என்றும் போல் இன்றும், “ஐ ஆம் ஃபைன் மா” என்றாள், அதே வலி நிறைந்த புன்முறுவலோடு.
“மேம்…” என்று கதவு தட்டப்படவும் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டாள்.
“சொல்லுங்க…” என்றவளிடம், “நீங்க ரெடினா, அவங்கள வர சொல்லவா?” என்றாள் தயக்கத்துடன், பி.ஏ.
“நான் ரெடி! டூ மினிட்ஸ்-ல கூட்டி வாங்க” என்றவள் சத்தியமாக ரெடி இல்லை. இருந்தும் அடுத்த இரண்டு மணி நேரமும், பலவீனமாக சாகக் கிடக்கும் எஸ்.இ.டெக்-கை, டேர் டூ டிரீம்-மோடு ஒன்று சேர்க்கும் வழிகளையும், அதனால் தங்களுக்கு வரும் லாப கணக்கையும் ஆராய்ந்தாள் அவர்கள் குழுவோடு.
“கன்கிராட்ஸ் மிஸஸ்.எபெனேசர், அடுத்த மைல் ஸ்டோன டச் பண்ணீட்டீங்க” என்று வாழ்த்தி சென்றனர்.
கதவு வரை சென்ற வக்கீல், “ஒண்ணு கேக்கலாமா?” என்று தயங்க, மெல்லிய புன்னகையோடு, “ஷ்யோர்” என்றாள்.
“எப்போ டியூ(பிரசவ நாள்)?” என்றாள், அலர்விழியின் வயிற்றைப் பார்த்து.
“இப்போ தான் 27 வீக்ஸ் ஆகுது. இன்னும் 13வீக்ஸ் இருக்கு” என்றாள், மெல்ல வயிற்றை வருடிக் கொண்டே.
அன்று மருத்துவமனையில் விஷ்வா அலர்விழியைத் தேடி வராமல் இருந்தால்? “மாதவன் நடந்ததை சொன்னான். இது உன் குழந்த தான்! பிரவீன் குழந்தையா இருக்க வாய்ப்பே இல்ல” என்று எத்தனை உறுதியாகக் கூறினான். அந்த வார்த்தை அந்த நிமிடம் தேனை விட தித்தித்ததே… “என்ன அண்ணா சொல்றீங்க? அல்ட்ரா-சௌண்ட் வேற சொல்லுதேண்ணா?”
“நான் வெளியில சொல்ல கூடாது. ஆனாலும் உனக்காக சொல்றேன். பிரவீனுக்கு அசுஸ்பெர்மியா! உனக்கு புரியற மாதிரி சொல்லணும்ன்னா அவனால மெடிக்கல் உதவி இல்லாம அப்பா ஆகவே முடியாது அலர். அவன் நினைச்சா இந்த மாதிரி ஏகப்பட்ட ஃபேக் ரிப்போர்ட்ட கொடுக்க முடியும், சட்டத்துகிட்ட மாட்டிக்காம! அவனுக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கு! கண்டிப்பா இந்த ரிப்போர்ட்ட மாத்தியிருக்காங்க. நீ வா, என் தங்கை மேட்டர்னிட்டி கிளிக்கில தான் வேல பாக்குறா. அவ கிட்ட கேப்போம்” என்று வழி காட்டியிரா விட்டால், இன்று அவர்களின் வாரிசு?
“இந்த வயசுலேயே தனியா நிக்கணுமாடி நீ? வேற கல்யாணம் வேண்டாம் சொல்லிட்டியாமே, நகு சொன்னா!” விஷ்வாவின் சகோதரி காட்டிய மருத்துவர் காயத்திரி, நகுநாவின் தோழியின் அக்காவாகிப் போக, அவள் தான் இப்படி கேட்டாள்.
“மனுஷனே எண்ணங்களோட குவியல் தானே க்கா. நம்ம எண்ணங்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் எல்லாம் சரின்னு நாம நினைக்கிறதுனால தான் அத பொக்கிஷமா நினைச்சு, நம்ம எண்ணப்படி வாழ்க்கைய வாழறோம்.
என் பொக்கிஷம் என் கணவர், இப்போ அவரோடான நினைவுகள். அவரும், அவரோட நான் வாழ்ந்த நிமிஷங்களும் என்னோட மூச்சுக் காத்தோட கலந்திருக்கு. நான் மூச்சு விடுற வரைக்கும் அவர் எனக்குள்ள தான் இருப்பார். அவர் காத்திருன்னு சொன்னார், கண்டிப்பா வருவார்” என்றவளின் கண்களில் கண்டது, கணவன் மீதான காதல் மட்டுமே!
எபியின் மீதான அலர்விழியின் கட்டுக் கடங்காத காதலைக் கண்ட பின் ‘தண்டித்து விடு’ என்று யாசித்த பிரவீனிடம், “இது என்ன சினிமாவா உன்ன நான் வெட்டிப் போட்டுட்டு சட்டத்துகிட்ட இருந்து தப்பிக்க?” என்றவள்,
“நீ ஒரு நல்ல மனுஷனா எனக்குத் தெரியல. ஆனா நல்ல டாக்டர்! என்னோட அம்மா மாதிரி பல உயிர காப்பாத்தின நல்ல டாக்டர். உன்னோட நல்லது உன்ன வாழ வைக்கட்டும்! உன் துரோகத்த மன்னிக்கிற lஅளவுக்கு எனக்குப் பெரிய மனசில்ல. ஆனாலும் மன்னிக்கிறேன். உன் மேல வெறுப்ப வளர்த்துகிட்டு, அந்த வெறுப்ப உரம் போட்டு மேலும் மேலும் வளர்க்க என் மனசுல இடம் இல்ல. என் மனசில, என் மனோக்கு மட்டும் தான் இடம். எங்க இருந்தாலும், நம்புறவங்களுக்கு துரோகம் பண்ணாம நல்லா இரு. பிரவீன்னு ஒரு மனுஷன், என்னைப் பொறுத்த வரைக்கும் செத்துட்டான்! உன் மூஞ்சியில முழிக்க கூட எனக்கு பிடிக்கல, தயவு செஞ்சு அப்படியே திரும்பிப் பார்க்காம போயிடு!” என்று விட்டாள்.
‘இந்தா வைத்துக் கொள் நீ கேட்காத மன்னிப்பு!’ என்று அலர்விழி கொடுத்து விட, மன்னிப்பின் சுமையைத் தாங்க முடியாமல் எங்கு சென்றானோ ஒருவரும் அறியவில்லை.
அலர்விழியின் பிரசவத்திற்குப் பின் நகுநா-வினோவின் திருமணம் முடிவாகியிருக்க, பிள்ளைகளுக்காக பெற்றவர்கள் சென்னை பக்கம் வீடு மாற்றி வருவதாக முடிவெடுத்திருந்தனர். மாதவனும் அபியும் தங்கள் காதல் பரிசை ஈன்றெடுக்க மகளோடு ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் சுபம் தான், எபி இருந்திருந்தால் எல்லாமே அலர்விழிக்கும் சுபம் தான்!
“ஆல் த பெஸ்ட் மிஸஸ்.அலர்விழி எபெனேசர். சீ யூ சூன். டேக் கேர்!” என்று விட்டு வக்கீல் சென்று விடவும்,
“உங்க பையன் உங்கள மாதிரியே மனோ! ஒரு நிமிஷம் ஒரு இடத்துல உக்காரவே மாட்டேங்கிறான்… அவ்வளவு சுறுசுறுப்பு! மீட்டிங் முடியறதுக்குள்ள நாலு லாப் நீந்திட்டான்! சார் தான் அடுத்த மைக்கல் ஃபெல்ப்ஸ்! ஒலிம்பிக்ல தங்க மெடலா வாங்கிக் குவிக்கப் போறான்!” வயிற்றை வருடிக் கொண்டே ட்ராபிக்கல் ஃப்ரெஷ் ஜுஸை தொண்டைக்குள் இறக்கினாள், கூடவே அவர்களின் இதமான காதல் தருணங்களையும்.
கண்மூடி சாய்ந்தமர்ந்தாள். “இந்த குட்டி வயிறுல இருந்து எப்போ என் குட்டி பாப்பா வரும்?” மீசை குறுகுறுக்க வயிற்றில் கோலம் போட்ட அன்று கேட்டான். “ம்ம்ம்… ஜோசியர்கிட்ட கேட்டு சொல்றேன்” என்றவளிடம், “நான் ஜோசியம் சொல்லட்டுமா?” என்றவன், கூறிய ஜோதிடம் பலித்திருக்க, பெருத்த வயிறைப் பார்க்க வரமாட்டானாமா?
ஊரே அவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்க, அவள் நம்ப மறுத்தாள். “என் மனோவால வர முடியும் போது வருவார். என் கூட பேச முடியும் போது பேசுவார்!” என்றாள் முழு நம்பிக்கையோடு! கூறியவள் தினம் தினம் அவனோடு பேசிக் கொண்டிருக்கிறாள். மனோ என்ற கனவை பிடித்துக் கொண்டு நிழலோடு நிஜமான வாழ்க்கை.