(எப்படி கன்றுக் குட்டியும் அருந்தாமல் கலத்திலும் படாமல் பால் வீணாகிறதோ, அதைப் போலவே பசலை என்னை உண்ண, என் எழிலும், வெள்ளைப்படும் பெண்ணுறுப்பும், என் தலைவனுக்கும் உதவாமல், எனக்கும் உதவாமல் வீணாய் போகிறதே)
“பிரவீன் செஞ்சது தப்பு தான். ஆனா கெட்டதுல நல்லதா, அவன் தப்பானவன் இல்ல. அவ மேல இருந்த விருப்பத்துல செய்யக் கூடாத தப்ப செஞ்சுட்டான். அவளுக்கும் விரும்பினவனோட வாழக் கொடுத்து வைக்கல. சின்னப் பொண்ணு இப்படியே விட முடியுமா? மிஞ்சிப் போனா ரெண்டு மாசம்… வயிறுற தெரிய ஆரம்பிச்சுடும். தப்பு அவன் மேலனாலும், பார்க்குற எல்லாரும் அவள தான் தப்பாப் பேசுவாங்க. குழந்தைக்கும் அப்பா வேணும் இல்லையா? ரொம்ப நாள் கையில இல்ல. முன்ன நிச்சயத்துக்குன்னு குறிச்ச நாளையே ரெண்டு பேருக்கும், கோவில்ல வச்சு நெருங்கின சொந்தம் முன்ன நல்லது பண்ணி வைப்போம்.”
மருத்துமனையிலிருந்து வந்த பின்னும் சூன்யத்தை வெறித்து அமர்ந்திருக்கும் அலர்விழியைக் காண வந்த அம்பிகா கூறியிருந்தார். ஆனால் பெற்றவர்களால் அதை ஏற்க முடியவில்லை. “யோசிப்போம் அண்ணி” என்று விட்டிருந்தனர். ஆனால் அதை ஏற்கும் நாளும் வந்தது.
அலர்விழியைக் காட்டிலும் அதிகம் அழுததும் அவள் தான். அக்காவைத் தனித்து விடாது கூடவே அமர்ந்திருந்தாள். எபி என்பவனால் இரு குடும்பமும் பொலிவிழந்து போனது. “நீயும் இப்படி இடிஞ்சு போய் உக்கார்ந்தா வீட்டுல இருக்கறவங்கள யார் தேத்தறது? சுருண்டே கிடக்காம எழுந்திரு நகு” என்று நகுவை விரட்டினான் மாதவன்.
ஆனாலும் அவனால் எத்தனை நாட்கள் தான் இவர்களோடு இருக்க முடியும்? “மித்து அவ அம்மா கூட இருந்திருந்தா கூட இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பேன், அவளும் மாசமா இருக்கா. தனியா விட முடியாது. இப்படி உன்ன விட்டுட்டுப் போறேன்னு இருக்கு. உன்னோட வலிக்கு எங்கிட்ட மருந்தில்ல அலர். யாராலயும் இந்த வேதனைய எடுக்க முடியாது. ஆனா நீ வாழ முயற்சி பண்ணனும். புதுசா ஏதாவது வேலைக்குப் போ… வெளியில வரப் பாரு!” கிணற்றுத் திட்டில் அலர்விழி அமர்ந்திருக்க, அருகே இருந்த துணிக் கல்லில் தங்கை அமர்ந்திருக்க, அவர்களிடம் அமெரிக்கா பயணிக்கவிருக்கும் மாதவன் பேசி நின்றிருந்தான்.
“நகு, சங்குப் பாப்பாக்கு வேணுங்கிறத எடுத்து வச்சுட்டியா?” அம்மா குரல் கொடுக்க, “நீங்க பேசிட்டு இருங்க நான் வரேன்” என்று நகுநா உள்ளே ஓடியிருந்தாள்.
“ஐ ஆம் ஃபைன் மாதுண்ணா. நல்ல படியா போயிட்டு வா. முடிஞ்சா அவரப் பத்தி ஏதாவது தகவல் கிடைக்குதான்னு பாரு” என்றவளின் கண்கள் வறண்டு உதடு உலர்ந்திருந்தது.
“என்ன ஃபைன்? உதடப் பாரு காஞ்சு போயிருக்கு. ஒழுங்கா உடம்பப் பாத்துக்கோ டி! வயத்துல இருக்கறதுக்காகவாது வேளா வேளைக்கு சாப்பிடு! இரு, நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன். நீ முதல்ல இங்க இருந்து எழுந்திரி”
“சரி ண்ணா” அவள் எழுந்து கொள்ளவும் மாதவன் உள்ளே சென்றான்.
கிணற்றை ஒட்டி நின்றவளின் கண்கள் சுற்றிப் பார்த்தன. நிலவொளி இருட்டை விரட்டியிருந்தது. இங்கு தான் பிறந்தாள். இங்கு தான் விளையாடி, விழுந்து வாரி எழுந்து ஓடினாள். இன்றும் விழுந்து தான் போனாள்! எழுந்து ஓட காரணமில்லாததால், எழுந்திருக்க விருப்பமில்லாமல் விழுந்தே கிடக்கிறாள்.
வானைப் பார்த்தாள். வானம் நிலவை ஏந்தியிருக்க, பார்த்தவளுக்கு ரசிக்கவில்லை. இதே பால் நிலா, அழகாகத் தோன்றிய நாட்கள் தான் எத்தனை! கிணற்றுக்குள் பார்த்தாள் அதிலும் நிலா மிதந்தது. இல்லை… அது நிலா இல்லை, மனோ! மனோ சிரித்தான். “மிஸ் மீ?” என்றவன் மந்தகாசமாக சிரித்தான். ஏக்கத்தோடு “மனோ…” என்றவளின் கண்ணீர் பட்டு மனோ கலைய ஆரம்பித்தான். “மனோ… போகாதீங்க” என்றவள் உள்ளே இருந்தவனை குனிந்து பிடிக்கப் போக, குப்புற விழப் போனவளை ஓடி வந்து பிடித்து நிறுத்தினான் தமையன்.
“என்ன டி பண்ணப் போன?”
“மாது ண்ணா என்னை விடு. அவர் போயிடப் போறார் ண்ணா!”
“அலர்விழி!” மாதவன் உலுக்க, பெருமூச்சோடு சுற்றிப் பார்த்தவள் கிணற்றடியில் அமர்ந்தாள். எங்கும் எதிலும் மனோ தெரிந்தான். ஆனால் எங்குமே அவன் இல்லை. மனோ வேண்டும் என்றது பாறாங்கல்லாய் கனத்த மனம். “மனோ வேணும் ண்ணா!” தோளில் சாய்த்து கொண்டவனுக்கு அவளோடு சேர்ந்து அழ மட்டும் தான் முடிந்தது.
பெண்ணை இப்படியே விட்டால் பைத்தியம் பிடித்து அலைவாள். அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்தால், ஒரு மாற்றமாயிருக்கும் என்ற எண்ணம் மேலோங்க, பிரவீன் தோன்றினான் பெற்றவர்கள் கண் முன்!
“அவன் ஒரு நல்ல டாக்டர். அவ மேல் உயிரையே வச்சிருக்கான். பயப்படாதீங்க, கண்டிப்பா அலர்விழிய நல்லா பார்த்துப்பான்,” என்று பல சிபாரிசுகளும் வர, சௌந்தர்யா மகளிடம் திருமணம் பற்றி பேசினார்.
“அம்மா நான் மனோவோட பொண்டாட்டி மா”
“சட்டப் படி உங்க கல்யாணம் நடக்கல. யாருக்கும் நீங்களா பண்ணிகிட்ட கல்யாணம் தெரியவும் தெரியாது. அது பொம்மைக் கல்யாணம் மாதிரி பாப்பா! அவர் வருவார்னா காத்திருக்கறதுல அர்த்தமிருக்கு. அவர் வரப் போறது இல்ல பாப்பா! இந்த ஒரு தரம் அம்மா சொல்றதக் கேளு. குழந்தைக்காக நீ இத ஒத்துகிட்டு தான் ஆகணும்!”
ஒருவனை நேசித்து, மணந்து, அவன் வாரிசை சுமந்து, அவனையே சுவாசித்துக் கொண்டிருக்க, அவனோடான திருமணம் செல்லாதாமே! ஏன் அம்மாவிற்குப் புரியவே இல்லை. எப்படிப் புரிய வைக்க என்று அலர்விழிக்கு விளங்கவும் இல்லை.
“கடவுள் முன்னாடி கல்யாணம் பண்ணினோம் மா. அவர் விரலப் பிடிச்சு ‘என்னோட ஆயிசுக்கும் நீங்க தான்’னு சொல்லி மோதிரம் போட்டேன் மா. அவர் வருவார் மா.”
“பாப்பா! கண்ணத் திற! மாசம் ரெண்டாச்சு! வர மாட்டார். உன் வாழ்க்கையப் பத்தி உனக்கு அக்கறை இல்லாம இருக்கலாம். எங்களால அப்படி இருக்க முடியாது! நீ சொன்ன தான… ‘உங்க பேச்ச மீற மாட்டேம்மா’ன்னு! இப்போ சொல்றேன் கேளு. பிரவீன் தப்ப மன்னிச்சு கல்யாணம் பண்ணிக்கோ, அவன் கெட்டவன் இல்ல. தப்பு செஞ்சவன், அதுவும் உன் மேல பிரியப்பட்டு. எனக்கும் அவன கொல்லற வெறி இருந்தது உண்மை தான். ஆனா அவன விட உன்ன சந்தோஷமா யாரும் வச்சுக்க முடியாது. அவன் தப்புக்கும், உன் பிடிவாதத்துக்கும் சேர்த்து குழந்தைய தண்டிச்சுடாத!”
எப்படியேனும் வாடிய மகள் வாழ்வை பூக்க வைத்து விட முடியாதாவென்று சௌந்தர்யா தவித்தார்.
“இவன தவிர வேற யாரக் கல்யாணம் பண்ணினாலும் நாளைக்கு பின்ன அது பிரச்சினை தான் பாப்பா…”
“எனக்கு வேற யாருமே வேண்டாம் மா!”
“புருஷன் இல்லாம, கையில குழந்தையோட இந்த உலகத்தில உன்னால தனியாப் போராட முடியாது புரிஞ்சுக்கோ. இந்த ஊரப் பொறுத்தவர நீ கல்யாணம் ஆகாத பொண்ணு! நீ தப்பே பண்ணலனா கூட உன் மேல தான் பழி வரும்! இந்த ஒரு தரமாவது அம்மா பேச்ச கேக்கக் கூடாதா?”
ஆக, கருவறையில் ஒருவன் விதைத்து விட்டால், அவனைத் திருமணம் புரிந்து அவனுக்கு தகப்பன் என்ற அந்தஸ்தை பெண் கொடுக்கக் வேண்டும். அப்படி கொடுப்பதினால், அவன் புண்ணியத்தால் அவளுடைய பெயரும் கெடாது! என்ன உலகமடா என்று அம்மாவை பார்த்தாள்!
“மா… இது எங்க குழந்த மா. இவன் தான் லூசு மாதிரி அவனுதுன்னு சொல்லிட்டு அலைஞ்சா, உடனே நம்பிடுவீங்களா?”
“பாப்பா… வாரக் கணக்குன்னு ஒண்ணு இருக்கில்ல? அவன் சொல்ற கணக்கு சரியா வருதே மா!”
“முதல்ல அல்ட்ராசௌண்ட் ரிப்போட்ட தாங்க. அதுல பாப்போம் எத்தனாவது வாரம்ன்னு!” சென்னையிலிருந்து வரும் முன் எடுத்த ரிப்போட்டை பெண் முதல் முறை பார்த்தாள். பன்னிரெண்டு வாரக் கரு என்றிருந்தது. பத்து அல்லது ஒன்பது தானே இருக்க வேண்டும்?
வயிற்றைத் தொட்டுப் பார்த்தவளுக்கு தாளமுடியா வேதனை. எத்தனை தூங்கா இரவுகள், எத்தனை வெளியே செல்லா பகல்கள்? கலைந்த மெத்தைக்கு பலன் இல்லாமல் எப்படிப் போகலாம்? “மனோ… இது நம்மது இல்லியாம் மனோ! எனக்குன்னு எதையுமே நீங்க விட்டுப் போகலியா? நான் அழுதா பிடிக்காதுன்னு சொல்லிட்டு நித்தம் அழ விடுறீங்க மனோ” விசும்பலோடே கோபித்துக் கொண்டாள்.