48 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 48

 

 

“கல்யாண ஏற்பாட்ட நிறுத்துங்க சித்தி!”

எத்தனை சுலபமாக பிரவீன் நேற்று கூறினான்! வீட்டிற்கு வந்தவனிடம் அம்பிகா, “வா டா பிரவீன், அலர்விழியோட பேசி வெடிங் கார்ட் டிசைட் பண்ணியாச்சா?” என்றதற்கு, இவன் இப்படித்தான் கூறினான்.

பேச்சு வார்த்தை எல்லாம் முடித்து, நிச்சயத்திற்கும், திருமணத்திற்கும் நாட்கள் குறித்த பின், “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் சித்தி! ஏதாவது சொல்லி நிறுத்திடுங்க!” என்றால் என்ன அர்த்தம்?

கூறியவனுக்கு பெண்ணை பிடிக்காதிருந்தால் அதில் நியாயமுண்டு, இவனுக்கு தான் அலர்விழியைப் பிடிக்குமே! அவன் தானே அவள் வேண்டுமென்று நான்கு வருடங்களாய் ஒற்றைக் காலில் நின்றான்! 

மகன் மேல் அம்பிகாவிற்கு கோபம் வரதான் செய்தது. “எடுத்தோம் கவுத்தோம்ன்னு உளறாத பிரவீன். சித்தி ஏதாவது சொல்லிடப் போறேன்!”

“யோசிச்சு தான் சொல்றேன் சித்தி. அவள விரும்பறேன். அதனால தான் சொல்றேன். இந்தக் கல்யாணம் வேண்டாம். நிறுத்திடுங்க.” என்றான் தீர்மானமாய்.

“என்ன டா படுத்துற? உன் ஒருத்தன் ஆசைக்காக நான் உன் அம்மா கால்ல விழுந்தேன். சும்மா இருந்த குடும்பத்தில போய் குட்டையக் குழப்பி… ப்ச்! அந்த பொண்ணு மனசுல ஆசைய வளர்த்திருக்கும்! எந்த முகத்த வச்சுட்டு உன் அம்மாவப் பார்ப்பேன்! அவள விடு! அவங்க தான் டா என்னோட சம்பந்தி! ஏன் டா? என்ன தான் உன் பிரச்சினை?” என்று கடிந்த பின்னும் அவன் பதில் மாறவில்லை. 

இதைப் பெண் வீட்டில் யார் கூறுவது? மீண்டும் அபிராமி காலில் விழ, அவரோ “ரொம்ப நிம்மதி! எனக்கு அந்தப் பொண்ண பிடிக்கவே இல்ல. ஒட்டகம் மாதிரி என்ன உயரம்! வீட்டுக்கு வந்தவங்கள உபசரிக்கத் தெரியுதா அதுக்கு? அதுவும் அது மங்கிப் போன மூஞ்சியும்! இவளப் போய் என் மகனுக்கான்னு நினைச்சேன்! இப்போ தான் நிம்மதியா இருக்கு! நீ தான ஆரம்பிச்ச… நீயே உன் சம்பந்திட்ட சொல்லு போ…” என்று விட்டார்.

இதோ… சௌந்தர்யாவைப் பார்க்கும் சாக்கில் அம்மாவும் மகனும் பிரவீனோடு அலர்விழி வீட்டிற்கு வந்தாயிற்று. “எப்படி அண்ணி இருக்கீங்க? மாதவனும் அமெரிக்கா கிளம்பிடுவான்னு இவனும் கல்யாணத்துக்கு அப்புறம் தனியா இருக்க வேண்டாம்ன்னு சென்னை பக்கமே வேலையப் பார்த்துட்டு வந்துட்டான். கல்யாணத்துக்கு அப்புறம் நீங்களும் உங்க பொண்ண எப்போ வேணுமோ வந்து பார்த்துக்கலாம்! என் மருமக எங்க?” அம்பிகா இயல்பாகப் பேசுவது போல் தோன்றினாலும், வந்த விஷயத்தை எப்படிக் கூறுவதென தவித்துப் போனார்.

பொதுவான பேச்சுகளும் உபசரிப்பும் சென்று கொண்டிருந்தாலும், எப்படி ஆரம்பிப்பது என்று அம்பிகா விழிக்க, அதே விஷயத்தை எப்படி இவரிடம் கூறுவது என்று அலர்விழியின் பெற்றோர் விழித்தனர்.

“அது, அண்ணா… நம்ம பிரவீன்… வந்து…” அம்பிகா திக்கித் திணற, “எனக்கு அலர்விழிகிட்ட கல்யாண விஷயமாப் பேசணும் மாமா, அத தான் சித்தி சொல்றாங்க” என்றவனை வெட்டவா குத்தவா என்று அம்பிகா பார்த்து வைத்தார்.

‘இந்தப் பையன் என்னைக் கிறுக்காக்காம விட மாட்டான் போல’ என்று எண்ணினாலும் புன்னகைத்து, “ம்ம்ம்” என்று மண்டையை ஆட்டி வைத்தார்.

கூறியவன் எழுந்து தியாகு அருகில் வரவும், அவர் எப்படிக் கூறுவதென்று மென்று விழுங்கினார். “அலர் வேற ஒரு பையன விரும்பறா… அதனால…” விஷயத்தை போட்டுடைக்க தியாகு வெகுவாய் பாடுபட, “தெரியும் மாமா!” என்றான் கசந்த புன்னகையோடே.

பெற்றவரால் பெண்ணை விட்டுக் கொடுக்க முடியவில்லை. “கொல்லப்புறம் போங்க, அலர் அங்க தான் இருக்கா” என்றவர், “அவகிட்ட ஒரு வார்த்தை நாங்க கேட்டுட்டு உங்ககிட்ட வாக்கு கொடுத்திருக்கணும். தப்பு எங்க மேல. மன்னிச்சிடுங்க தம்பி” என்றார்.

வலித்தது. உண்மையிலுமே காதல் மனம் வலிக்கதான் செய்தது. அபிராமி அவளை ‘மருமகளே’ என்று அழைத்த அன்றே கைப்பேசியில் அழைத்துக் கூறி விட்டாள், ‘நான் மனோ பொண்டாட்டி, இந்தப் பேச்சை தயவு செய்து நிறுத்துங்க. இப்படியே போனா எல்லாருக்கும் மனசு கஷ்டம் ஆகிடும்!’ என்று.

இழுத்துப் பிடித்து புன்னகைத்தவன், “விடுங்க மாமா, எதுக்குப் பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு?” என்றான் அடிபட்ட குரலில். 

அடுக்களையிலிருந்து எழுந்த எண்ணை நாற்றமும், பலகார நாற்றமும் ஒவ்வாமையைத் தர, புரட்டிக் கொண்டு வந்தது அலர்விழிக்கு. வாந்தி வரவில்லை என்றாலும் தலை சுற்றலும் புரட்டலும் அதிகமே ஆனது. வெளியே காற்றோட்டமாக கிணற்றடி கொய்யா மர நிழலில் நின்றிருந்தவளுக்கு தனிமை இனிமையாகத் தோன்றியது. கை மெல்ல வயிற்றை வருடியது. இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்! எதுவென்றாலும், மனோவிடம் கூறிவிட வேண்டும் என்று மனம் சண்டித்தனம் செய்ய, இருந்த படபடப்பில், அவனுக்கு நடுசாமம் என்று தெரிந்தும் நின்ற இடத்திலுருந்தே காணோளியில் அழைத்திருந்தாள். 

கலையாத தூக்கத்தோடு, “விழி…? என்ன டா?” என்றவன் குரல் வருட, காலையிலிருந்து தேக்கி வைத்திருந்த தவிப்பை எல்லாம் கண்ணீராய் இறக்கினாள்.

பதறிப் போனான். “என்ன டி? ஏன் அழற? யாராது ஏதாவது சொன்னாங்களா? அங்க இருக்க முடியலியா? அப்பாவ வந்து கூட்டிட்டுப் போக சொல்லட்டா? இதுக்கு மேலயும் உன்னத் தனியா விட்டா சரிப் படாது. நான் வரேன்… அழாத டி” 

அவன் அடுக்கிக் கொண்டே போக, முத்துப் பற்கள் தெரிய புன்னகைத்தவளின் கன்னம் நனைந்திருந்தது.

“என்ன டி? அழறியா? சிரிக்கறியா?”

“மனோ…” என்றவளின் குரலில் நிலை குலைந்து போனான்.

“என்னடாமா? முதல்ல கண்ணத் தொட, என்ன விஷயம் சொல்லு…”

“அம்மா பேசினாங்க மனோ. உன் புருஷன் எப்போ வரார்ன்னு கேட்டாங்க! எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? காலையில எழுந்ததும் அப்பாகிட்டப் பேசுங்க…”

“நிஜமா…” அவன் கட்டிலில் இருந்து துள்ளி எழுந்து அமர்ந்தான். காலையில் நடந்த அனைத்தையும் கூற, மனோவைக் கையில் பிடிக்க முடியவில்லை. 

அவன் மகழ்ச்சிக் கடலில் நீந்துவது போதாதென்று நினைத்தாள் போலும். மோகமெல்லாம் ஒன்று திரட்டி தவிப்பாய் “மனோ…” என்றவள் கண்களில் ஏக்கம் பொங்கி வழிந்தது.

“பதிமூனாயிரம் கிலோ மீட்டர் தள்ளி இருக்கேன் டி! கொஞ்சிக் கொஞ்சி கொல்லாத! அஞ்சு நாள் இருக்கு நான் வரதுக்கு” என்றவன் குரலும் குழையத் தான் செய்தது.

“வேணும் மனோ… நீங்க” வார்த்தைகள் கண்டிப்பாக அவனுக்கு மழைச் சாரலாய் இருக்கும் என தெரியும்.

“எனக்கு மட்டும் என்னவாம்! நான் இருக்க மூடுக்கு இப்போவே உன்னத் தூக்கி சுத்தணும் போல இருக்கு!”

“மனோ… நான் பத்து கிலோ வெயிட் போட்டாலும் என்னைத் தூக்குவீங்க தானே” என்றாள், புன்னகை வாடா பாவத்தோடு!

“ஏன்… சந்தோஷம் தாங்காம நல்லா முக்கிட்டு இருக்கியா டி?”

“மனோ…” சிணுங்கினாள்.

“கொஞ்சிக் கொஞ்சி கொல்லாத டி பட்டு!”

“சொல்லுங்கபா… பத்து கிலோ போட்டாத் தூக்குவீங்க தான?”

“ம்ம்ம்…? இன்னும் பத்தா? இப்போவே 60கிலோ! சும்மா ஒரு பேச்சுக்கு தூக்குவேன்னு சொன்னா… ஏய், இரு இரு. அது என்ன பத்து கிலோ?”

“மாசத்துக்கு ஒண்ணுன்னு கணக்கு போடுங்க மனோ” என்றவளின் பார்வை அவனைக் கபளீகரம் செய்ய… “விழி…” என்றவனுக்கும் மனைவியைக் கையிலேந்த முடியாதா என்ற தவிப்பு.

“என்ன டி சொல்ற? நிஜமா?” படபடத்தான்.

“உங்க உயிர் மனோ… எனக்குள்ள உங்க குட்டி பாப்பா மனோ” உதடு துடிக்கக் கூறியவளின் நெஞ்சமெல்லாம் மனோ மட்டுமே.

முகமெல்லாம் பூரிப்பில் மிளிர, “பத்து என்ன டி பட்டு… பதினஞ்சு போட்டாலும் அசராம தூக்குவேண்டி செல்லம்! ஆமா டாக்டரப் பார்த்தியா? என்ன சொல்றாங்க? என் பையன் எப்போ வரானாம் அப்பாவப் பார்க்க?” தரையில் கால் படாமல் இரண்டடி மேலே பறந்தான். 

“இங்க வீட்டுல ஆட்கள் வந்திருக்காங்க. இவங்க கிளம்பினதும் தான் டாக்டரப் பாக்கணும். கணக்கு எல்லாம் சரியா தான் வருது மனோ! கண்டிப்பா நம்ம பாப்பா தான் என் தல சுத்தலுக்கு காரணம்!” 

“இந்த ஒரு தரம் நீ உங்க அம்மா கூட டாக்டரப் பாரு! நெக்ஸ்ட் டைம்ல இருந்து நானே கூட்டுட்டுப் போறேன்… சரியா?”

“இல்ல மனோ… அது தான் ஒரு வாரத்துல நீங்க வரீங்களே… உங்க கூடவே போய் பார்த்துட்டு வீட்டுல ஒண்ணாவே சொல்லுவோம். என்னால யார் பார்வையும் தனியா ஃபேஸ் பண்ண முடியாது!”

“சரி விடு. நானும் யார்கிட்டயும் இப்போதைக்கு வாய் திறக்கல!”

“சீக்கிரம் வர முடியாதா பா? ரொம்ப மிஸ் பண்றேன் உங்கள! இப்போவே பாக்கணும் போல இருக்கு”

“மார்க்-ஆட்ரே கல்யாணம் நாளைக்கு இல்லாட்டா, இப்போவே பறந்து வந்திடுவேன்”

“மறந்தே போயிட்டேன் பாருங்க. நாளைக்கு விஷ் பண்றேன். அவங்க வீட்டுல தான் இருக்கீங்களா?” 

“ம்ம்ம்… இங்க மழ கொட்டித் தீர்த்துட்டு இருக்கு!”

இருவரும் உலகம் மறந்து பேசிக் கொண்டிருக்க, “அலர்விழி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்ற சத்தம் இருவரின் ஏகாந்த வேளையைக் கத்தரித்தது.

“லைன்ல இருங்கப்பா. டாக்டர் வரார். ஏதோ பேசணுமாம்! ரெண்டு நிமிஷத்துல அவர கட் பண்ணி அனுப்பிடுறேன்.”

“அவன்கிட்ட போனக் குடு விழி”

“எதுக்கு மனோ…?”

“குடு!”

“ப்ச்! மனோ”

“விழி!”

அதற்கு மேல் வாதம் செய்ய முடியாதே…

“நீயா?” என்று வினவியவனைப் பார்த்தான் பிரவீன். பேசுவது அலர்விழிக்கு கேட்டாலும் அர்த்தம் புரியவில்லை. ஆனால் பிரவீன், “ஆமா. நான் தான்!” என்றான்.

“என்ன ஒரு நெஞ்சழுத்தம் டா உனக்கு? நீ மனுஷன் தானா?”  

“உன்ன மாதிரி ஒருத்தனுக்கு விட்டுக் கொடுப்பேன்னு நினைச்சியா?”

சிரித்தான் எபி! “யாருத யாருக்கு யார் விட்டுக் கொடுக்கப் போறது? நல்லாவே கனவு காண்ற! உன் மேல செம காண்டுல இருக்கேன் நான். அவ ஒருத்திக்காகத் தான் வாய மூடிட்டு இருக்கேன். இல்ல நீ செஞ்ச காரியத்துக்கு உன்ன ஒண்ணும் இல்லாதவனா கம்பி எண்ண வச்சிருப்பேன்! நான் அங்க வரும் போது உன்ன நான் பாக்கக் கூடாது. பாத்தேன், சத்தியமா உன்ன கொன்னுடுவேன். அவ வீட்டில சொல்லி காரியம் சாதிக்க நினைச்சு தானே அந்த மட்டமான செயல்ல இறங்கின? ஆனா நீ அதப் பத்தி மூச்சு விட்டாலோ, அந்த மூச்சுக் காத்து அவ மேல பட்டாலோ, அதோட உன் டாக்டர் தொழில மறந்திடு! சத்தியமா சொல்றேன், மூச்சு விட்ட… நீ முடிஞ்ச!! 

இப்போ விழிகிட்ட பேச தானே வந்த! ‘கங்கிராட்ஸ் மிஸஸ்.அலர்விழி எபனேசர். ஹாப்பி மேரிட் லைஃப்’ன்னு சொல்லிட்டுப் போ.” 

பிரவீன், அலர்விழியைப் பார்த்தான். பெண் நட்பாகப் புன்னகைத்தாள். அவர்கள் சம்பாஷனை அவளுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. நடந்ததை எபெனேசர் மூடி மறைத்திருக்க வேண்டும்! அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. “உன் விருப்பப்படி கல்யாணத்த நிறுத்த சொல்றேன்… ஆனா நமக்குள்ள எல்லாம் முடிஞ்ச பிறகு கல்யாணத்த நிறுத்தணுமா?” என்று கேட்க வந்தவன், அலர்விழியிடம் கைப்பேசியைக் கொடுத்து கிளம்பி விட்டான்.

“என்ன மனோ பேசினீங்க? தலையும் புரியல வாலும் புரியல?”

“புரிய என்ன இருக்கு? என் பொண்டாட்டிய தொந்தரவு பண்ணாதன்னு சொல்லி அனுப்பினேன். அவன விடு! நான் வீட்டுல பேசறேன். பெரியவங்க பேசி ஆக வேண்டியத பாக்கட்டும்! உன்னால முடிஞ்சா அம்மாட்டப் பேசு. சந்தோஷப் படுவாங்க!” என்றவனிடம் மண்டையை ஆட்டி வைத்தாள்.

அவள் யோசித்து… நிதானமாய் எஸ்தரை அழைக்கும் முன் எஸ்தரும் பால்ராஜும் மறு நாளே வந்திறங்கினர். அவர்களைப் பார்த்ததும் சௌந்தர்யா கையிலிருந்த சங்கமித்ரா பால்ராஜின் கரத்திற்குத் தாவினாள். பேத்தியைக் கொண்டு பேச்சு ஆரம்பிக்க, லகுவான மனநிலை அங்கு.

“உன்ன மாதிரி ஒரு பொண்ணுக்கு ஆசைப் பட்டேன். நீயே எனக்கு மருமகளா வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இருந்தாலும் நீ எங்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லவே இல்ல… உன் மேல எனக்கு ரொம்பக் கோபம். ஆன்ட்டி கோவிச்சுகிட்டேன் போ” என்று அடுக்களையில் அலர்விழியிடம் பேசிக் கொண்டிருந்த எஸ்தரையும், உரிமையோடே அவர் நாடி பிடித்து, “அப்பிடி எல்லாம் பட்டுன்னு கோவிச்சுக்கக் கூடாது”, கொஞ்சி கன்னத்தில் முத்தமிடும் மகளையும் பார்த்த சௌந்தர்யாவிற்கு உள்ளத்தில் சொல்லத் தெரியாத உணர்வு எழுந்து மறைந்தது. அம்பிகாவும் நகுவை இப்படிக் கொஞ்சுவதைப் பார்த்து தானே அலர்விழியை அவர்கள் வீட்டு மருமகளாய் அனுப்பினால் சுகித்திருப்பாள் என்றெண்ணினார்!

“என் மகன, அதாவது உங்க மருமகனக் காட்டினாளா இல்லையா? இவன் தான் என் பிள்ள” என்று எபியின் புகைப்படம் காட்டினார் எஸ்தர். 

பார்த்ததும் சௌந்தர்யாவிற்கு எபியைத் தெரிந்தது. கண்கள் பனித்தது. இவன் தானே ‘என்னை உங்க மகனா நினைச்சுக்கோங்க மா’ என்றது! 

“இவர எனக்குத் தெரியும். ஒரு தரம் பார்த்து இருக்கேன். இந்தப் பிள்ளைய பெத்த அம்மா பாக்கியவதின்னு நான் தான் என் மனசார சொன்னேன். இன்னைக்கு அதே பிள்ளை என் மகளுக்கு வாழ்க்கைத் துணை! என் மனம் நிறைஞ்சு போயிடுச்சு!” என்றார் நா தழுதழுக்க. 

“இது யமுனா உனக்காகக் கொடுத்து விட்டா” என்று முல்லையை சூட்டி விட்டார். 

“நீயும் என் பொண்ணு மாதிரி தான். வா” என்று நகுவோடும் பொருந்திக் கொண்டார். “இத உனக்கு உன் மாமா கொடுக்க சொன்னான்” என்று வாசனைத் திரவிய குப்பியைக் கொடுத்தார். “வேற என்ன வேணும்ன்னு நீயே ஃபோன் போட்டு இன்னைக்கே சொல்லுவியாம், வாங்கி வரேன்னு சொல்லச் சொன்னான். வெக்கப்பட்டு கேக்காம இருந்திடாத. சான்ஸ் கிடைக்கும் போது கூச்சப்படாம, அண்ணன்கிட்ட கேக்கிற மாதிரி உன் மாமாட்ட கேட்டு வாங்கிக்கோ.” நகுவிடம் கூற, பெண்ணிற்கு மாமாவையும் அவரைப் பெற்றவரையும் பிடித்துப் போனது.

“கால் வலி இப்போ எப்பிடி ம்மா இருக்கு?” என்று பாட்டியிடம் சரளமாகப் பேசினார். 

மொத்ததில், தியாகுவோடு பால்ராஜும், மொத்த குடும்பத்தோடு எஸ்தரும் கிளம்புவதற்குள் பொருத்திக் கொண்டனர்.

“அவனுக்கு ரெண்டு வாரம் தான் லீவ். அதனால் அவன் வந்த அடுத்த வாரமே மேரேஜ ரெஜிஸ்டர் பண்ணிட்டு, ரிஷப்ஷன் வச்சிடுவோம். ஈவன்ட் மேனேஜ்மென்ட் கிட்ட கொடுத்துட்டா எந்தக் குறையும் இல்லாம பார்த்துப்பாங்க… என்ன சொல்றீங்க?” என்று ஆரம்பித்து, திருமணப் பதிவு நாள், வரவேற்பு தேதி… இடம், ஷாப்பிங் என்று அனைத்தையும் பேச, 

பக்கத்து அறையில் இருந்தவள் காதில் விழுந்ததெல்லாம், “அவனால மனச இங்க வச்சுகிட்டு அங்க இருக்க முடியல போல, நாளைக்கு கிளம்பறான். மருமகட்ட சொல்லிடாதீங்க. ஏதோ சர்ப்ரைஸ்சாம்! 

நாள மறுநாள் நல்லா இருக்கு, முகூர்த்தப் பட்டும், மத்தத் துணி எல்லாத்தையும் சென்னையில எடுத்திடுவோம், நீங்க வந்தீங்கனா, வீட்டையும் பார்த்துட்டு, அப்படியே ரெண்டு பிள்ளைங்களுக்கும் நாம சர்ப்ரைஸ் கொடுப்போம்! என்ன சொல்றீங்க?” என்பது மட்டுமே!

error: Content is protected !!
Scroll to Top