49 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 49 

 

 

“கிளம்பியாச்சா மனோ?”

“ஆச்சு டா. டேக்சில இருக்கேன். உனக்கு சர்ப்ரைஸ் குடுக்க நினைச்சா…”

“ஹ ஹ ஹா… அவங்க நம்ம ரெண்டு பேருக்கும் சர்ப்ரைஸ் பிளான் போட்டிருக்காங்க. இன்னைக்கும் நாளைக்குமா ஷாப்பிங் முடிச்சுட்டு, அடுத்த நாளைக்கு கடலூர் கிளம்பிப் போற வழியில நம்ம வீட்ட பாக்க போற மாதிரி பிளான் போடுவாங்களாம். அப்போ நம்ம ரெண்டு பேரும் மீட் பண்ணுவோமாம்! சர்ப்ரைஸ் ஆகிடுவோமாம்! ஹ ஹ ஹா…”

“நீ எல்லாத்தையும் ஒட்டுக் கேட்டியாக்கும்! ஆளப் பாரு!”

“ஸ்பீக்கர் ஒண்ணு தான் இல்ல… அவங்க பேசும் போது!”

“எங்க… வினோ வீட்டுல இன்னைக்கு ஸ்டே பண்றீங்களா?”

“ம்ம்ம்… அங்க தான் இருக்கேன். இன்னைக்கும் நாளைக்கும் இங்க. அடுத்த நாள் உங்களப் பார்த்துட்டு வந்திடுவோம். அடுத்து நம்ம மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணும் போது தான் பார்ப்போமாம்…”

“என்ன ஒரு கண்றாவிப் பிளான் இது? நீ என் பொண்டாட்டி டி! நம்ம வீட்டுல இருக்க வேண்டியது தானே. வயத்துல பிள்ளைய வச்சுகிட்டு ஏன் விழி அலையற? இரு நான் மாமாகிட்ட பேசறேன்.”

“எதுனாலும் நேர்ல பேசிப்போம். இப்போ அத்தை வீடு ஓக்கே தான்!”

“வாந்தி எல்லாம் இல்ல தான?”

“ரெண்டு நாளைக்கு இருந்தது தான். அப்புறம் ஒண்ணும் இல்ல.”

“வந்ததும், முதல் வேலையா டாக்டரப் பார்க்கணும்! உனக்கு மணி ஏழாச்சு, இப்போ தான் காபி குடிக்கறியா? காலையிலயே இதெல்லாம் குடிக்கலாமா? ஒழுங்கா ஜூஸ் குடி!”

“ஓகே… ஓகே… டாக்டரப் பாத்துடுவோம். இதுல காபித் தூள் இல்ல, இஞ்சியோட மல்லியும் கருப்பட்டியும் தான்! உங்களுக்கு ஒரு மணிக்கு தானே போர்டிங்? ஃப்ளைட்ட மிஸ் பண்ணிட மாட்டீங்களே?”

“டேய்… மணி 8.30 தான் ஆகுது! 10:30 க்கு போய் சேர்ந்தாப்     போதும்!”

“அரை மணி நேரமா ஒரே இடத்துல வண்டி நிக்குது மனோ! நினைவிருக்கா? ட்ராஃபிக் கிளியர் ஆகுதா இல்லையா?”

“நகர ஆரம்பிச்சாச்சு! ஆனா மழை ஒண்ணும் குறையிற மாதிரித் தெரியல! அடிச்சு ஊத்துது. இப்பொ மிஸிசிப்பி ரிவர் மேல வண்டி ஆமை வேகத்துல நகருது! கீழ கடல் மாதிரி தண்ணி அடிச்சுட்டுப் போகுது! இந்த இருட்டுல பார்க்க கொஞ்சம் பயமா தான் இருக்கு! எத்தன பேர இந்த ஃப்ளட் முழுங்கப் போகுதோ தெரியல!”

“யாருக்கும் ஒண்ணும் ஆகாது! நீங்க பத்திரமா வந்து சேருங்க. நேரம் ஆக ஆக எனக்கு தான் இருப்பு கொள்ளல.”

“எனக்கும் தான் டி பட்டு” என்றவன் பெண்ணைக் கொள்ளையடித்தான்.

“வந்ததும் எனக்கு ஆயிரம் முத்தம்!” என்றாள் கட்டளையாக.

“ஆயிரம் போதுமா? எனக்குப் போதாதே…” என்றான், ஆசையைக் கொட்டி!

“நீங்க போதும் சொல்ற வரைக்கும் கொடுப்பேனாம்!” கொஞ்சலோடு மோகமும் எட்டிப் பார்த்தது.

“நான் போதும்ன்னு சொல்லவே மாட்டேனாம்…” குரலில் தேன் கலந்து குழைந்தான்.

“அப்போ நான் கொடுத்துட்டே இருப்பேனாம்…” கிளுக்கி சிரித்தாள்.

இருவரும் சிரிக்க, “லவ் யூ டி, காத்துட்டே இருப்பியாம்… உன் பின்னாடி வந்து உன் காதுல ஆசையா ‘மிஸ் மீ’ன்னு கேப்பேனாம்…”

“ஆஹா? அப்புறம்?”

“உன் காத்திருப்பு முடிஞ்ச சந்தோஷத்துல உன் உதடு துடிச்சுகிட்டே சிரிக்குமாம்… உன் கண்ணுல தண்ணியா வழியுமாம். என் காத்திருப்பு முடிஞ்ச சந்தோஷத்துல நான், என் பாப்பாக்கு வலிக்காத மாதிரி, என் ஒட்டுமொத்தக் காதலையும் ஒண்ணு சேர்த்து ஆசையா உன்னை இறுக்கிக் கட்டிப்பேனாம்!” வாயிலிருந்த ஜவ்வு மிட்டாயை மென்று கொண்டே மந்தகாசமாகப் புன்னகைத்தான். இன்றும் அந்த புன்முறுவலில் அதே வசீகரம். பெண்ணை முழுவதுமாக ஜவ்வு மிட்டாயோடு மென்றிருந்தான். 

“லவ் யூ மனோ. காத்திட்டே இருப்பேன்… உங்களுக்காகவும், என் காதோரம் நீங்க சொல்லப் போற காதலுக்காகவும்…”

பேசிக் கொண்டிருக்கும் வேளை பலமான சத்தத்தோடு பாலம் உடைய ஆரம்பித்தது. என்ன நடக்கிறது என்று உணரும் முன்னே, வாகனங்கள் எல்லாம் நிலைகுலைந்து கீழே புரண்டோடும் வெள்ளப் பெருக்கை நோக்கி உருள ஆரம்பித்தன. மழை, இடி, கூக்குரல், பாலம் உடைந்து சரியும் சத்தமென பலவித சத்தம் விண்ணைத் தொட்டது.

காணோளியில் பார்த்துக் கொண்டிருந்தவள், “மனோ… என்ன ஆகுது அங்க? மனோ…” கதற, அவள் சத்தம் கேட்க அவன் கையில் கைப்பேசி இல்லை. அவனும் பாலத்தின் மேல் இல்லை! 

அடித்து செல்லும் நீரோடு இழுத்து செல்லப்பட்டவன் மனம் முழுவதும் அவனுக்காக காத்திருக்கும் அவன் விழி மட்டுமே. இருட்டில் வெள்ளப் பெருக்கின் வேகத்தோடு போராட முடியவில்லை. தலை மேல் ஏதோ பாறாங்கல்லாய் இடித்தது. 

‘விழி’ விழியோடு இணைய இமைகள் இரண்டும் மூடின. ‘மனோ…’ என்று சிரித்தவளின் மார்போடு முகம் புதைத்தான். அவளும் ஆசையோடு தழுவி, அவனை உள்ளுக்குள் புதைத்தாள்.

(ஆகஸ்ட் 1, 2007ல் மிஸிசிப்பி ஆற்றின் மேல் இருந்த, I-35W பாலம் உடைந்து 145 பேர் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 13 பேர் இறந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர். பல முறை மிஸிசிப்பி ஆற்றில் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுண்டு. 2011 வெள்ளப் பெருக்கு அள்ளி சென்ற உயிர்களும், பயிர்களும் ஏராளம். 

கதையில் வரும் சம்பவம் கற்பனையே)

error: Content is protected !!
Scroll to Top