47 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 47

 

அலர்விழி, ஊர் வந்து ஒரு மாதமாயிருக்க, உறக்க நாடி அறுவை (Carotid Artery Surgery) சிகிச்சையின் பலனாய் சௌந்தரியா தேறியிருந்தார். பிரவீன் தான் அவர் உயிரை எமனிடம் இருந்து பிடுங்கி வந்ததாகவே நம்பியது குடும்பம். 

கடந்து வந்த வாரங்கள் அலர்விழிக்கு அவ்வளவு உவப்பாக இல்லை. வந்த அன்றிலிருந்தே முள்ளில் மேல் நின்றாள் பெண். பிரவீன் விமான நிலையம் வந்திருக்க, அலர்விழி நேரே சென்றது மருத்துமனைக்கு தான். 

“அம்மா…?”  என்றவளிடம், “பிரச்சினை இல்ல… தனி வார்டுக்கு மாத்தியாச்சு. நாலு வாரத்துல அவங்க வேலையப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க” என்றவன், அவள் தன்னை ஏதேனும் கேட்பாள் என்று பார்க்க, அவள் பார்வையிலோ பேச்சிலோ எந்த வித்தியாசமும் இல்லை. கடந்த மூன்று வாரங்களாக பெண்ணிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். நேரில் பார்த்ததும் கோபப்படுவாள் என்று பார்த்தால், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை!  சற்று குழம்பி தான் போனான் மருத்துவன். அவர்களைப் பற்றி பேசும் நேரம் இதில்லை என்பதால் அவனும் வாய் திறந்தானில்லை. 

சென்னையில், பிரவீன் வேலையிலிருந்த மருத்துவமனையில் சௌந்தரியா அனுமதிக்கப் பட்டிருக்க, பிரவீனின் நேரடி கவனிப்பென்பதால் அவருக்கு ராஜ கவனிப்பு.

“அம்மா உனக்காக எவ்வளவு பாடுபட்டான்னு தெரியும் தானே. அம்மா மனசு கோணாம நடந்துக்கோ பாப்பா” என்று தலை வருடி சென்றார் அப்பா. அழுது, களைத்த முகத்தோடு மருத்துவமனை ஓடி வந்த மகளை கோவித்துக் கொள்ள மனுஷனால் முடியவில்லை. 

அறுவை சிகிச்சை முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்க, கண் விழித்திருந்த சௌந்தர்யாவிற்கு மகளைக் கண்டதும் அழுகை முட்டிக் கொண்டு வந்தாலும், பெண்ணை அருகே சேர்க்கவில்லை. “அவ இங்க என் கண்ணு முன்ன வந்தா நான் மருந்து எடுத்துக்க மாட்டேன்” என்று கணவனிடம் கூறிவிட அவரும் என்ன தான் செய்வார்? 

“பாப்பா, வீட்டுல அம்மாவும் நகுவும் தனியா இருக்காங்க, நீ துணைக்கு போறியா?” என்று கேட்க, அலர் நகர்ந்தாளில்லை. ஒரே அறையில் தாயும் சேயும், இரயில் பயணிகள் போலிருக்க, பெண் நொந்தே போனாள். 

 மாதம் ஒன்றைத் தாண்டிய பின்னும், அம்மா அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்த பின்னும் மகள் முகம் பார்க்கவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவும் இல்லை. 

பிரவீன் மட்டும் அல்லாது குடும்பத்திலிருந்து அவ்வப்போது மக்கள் வந்து சென்றாலும், சௌந்தர்யா உடல் நலம் கருதி ஒருவரும் திருமணப் பேச்செடுக்கவில்லை. 

அமராவதி, “என் மருமக வந்துட்டாளா?” என்று கேட்கவும் அலர்விழிக்கு எப்படியோ போலானது! அவள் வீட்டாரைத் தவிர ஒருவருக்கும் அவள் திருமணம் தெரிந்திருக்கவும் இல்லை, பிரவீனோடு இவள் திருமணப் பேச்சு நின்றிருக்கவும் இல்லை. பிரவீனிடம் கூறி தானே அனுப்பினாள். ‘எவ்வளவு தெளிவாக சொன்னேன். இந்த மனுஷனுக்கு அறிவே இல்லியா?’ என்று எரிச்சல் வந்தது. மீண்டும் அவனோடு பேச வேண்டுமா? பெருமூச்சு மட்டும் தான் விட முடிந்தது!

பாட்டி இப்பொழுதெல்லாம் அறையை விட்டு அதிகம் வெளியே வருவதில்லை. அனைவரோடும் அமர்த்திக் கொண்டாலும், சுற்றி இருப்பவர்களோடு அவர் பேசினாலும் எதையும் உணர்வது போல் தெரியவில்லை. “பாட்டி எப்படி இருக்கீங்க?” என்று யாரேனும் கேட்டால், நல்ல பரிட்சயமானவரோடு பேசுவது போல் பேசினாலும் அவர் யாரோடு பேசுகிறார் என்றெல்லாம் தெரியாத நிலை! ஒற்றை வரியில் கூற வேண்டுமென்றால், பாட்டிக்கு ஜீவன் இருந்தது அவ்வளவே.

நாட்கள் கடந்தன. ஆனால், அம்மாவை எந்த விதத்துலுமே அலர்விழியால் நெருங்க முடியவில்லை.

“என் குடும்ப மானம்… மரியாதை… என் பொண்ணு வாழ்க்கை… நான் அவ மேல வச்சிருந்த நம்பிக்கைன்னு எல்லாத்தையும் தல முழுகிட்டு இப்போ எதுக்கு வந்தா? என்னையும் ஒரேயடியா கொன்னு புதைக்கவா? என் கண்ணு முன்னாடி அவ வரவே கூடாது!” என்று விட்டார் சௌந்தர்யா.

“இந்த ஒரு தரம் மா… இனிமேல் உங்க பேச்ச மீறவே மாட்டேன் மா” என்றவளை அவர் பார்க்க, “சத்தியமா உங்க பேச்ச மீறவே மாட்டேன் மா… பிளீஸ் பேசுங்க மா” என்று வார்த்தையை விட்டாள்.

“அப்போ அவன மறந்திடுவியா?” என்ற அம்மாவிற்கு எப்படிப் புரிய வைப்பாள், மனோ என்பவன் அவள் அணுவோடு கரைந்து விட்டவன் என்று? மண்ணோடு மண்ணாகும் வரையுமே அவன் அவளோடு தான் என்று அம்மாவிற்கு எப்படிப் புரிய வைப்பாள்? குளம் கட்டின விழிகளோடு அம்மாவைப் பார்த்து நிற்க மட்டும் தான் முடிந்தது. 

அடுத்த வாரம், மாதவன் வந்திறங்கினான் அவன் குட்டி மகளோடு. “கிரான்மா…” என்று சௌந்தர்யாவைத் தான் கட்டிக் கொண்டாள் குட்டி அழகி. மடியில் அமர்ந்து கதைத்த மழலையின் கதைகள் மனதிற்கு இதமாய் இருந்தது. 

பேத்தியை அணைத்துக் கொண்டே அருகே அமர்ந்த மாதவனைப் பார்த்தார். “நல்லா இருக்கியா மாதவா?” 

வந்ததும் நகுநா அனைத்தையும் அண்ணனிடம் ஒப்புவித்து விட, மாதவனுக்குமே அதிர்ச்சி தான். தன் தங்கையா? என்று எண்ணாமலிருக்க முடியவில்லை.

“ரொம்பவே நல்லா இருக்கேன் சித்தி,” என்றவனுக்கு சித்தியின் நிலை புரியாமலில்லை. இதை எல்லாம் அவனும் பார்த்தவனாயிற்றே! “ரொம்ப மனசப் போட்டு குழப்பாதீங்க சித்தி, என்ன ஏதுன்னு விசாரிப்போம்” என்றவனிடமும் மகளைப் பற்றி வாய் திறந்தாரில்லை. இரவுகள் முன் தூக்கம் வராமல் புரண்டவர் காதில் ஏதோ சத்தம் கேட்க, அறைக்கு வெளியே வந்தார். இரவின் தனிமையில் மகள் விசும்பலைப் பார்த்தவருக்கு எப்படியோ போல் ஆனது.

கணவனோடு பேசி சிரிக்க வேண்டிய மகள், “பயமா இருக்கு மனோ… அம்மா என்ட்ட பேசவே மாட்டேங்கறாங்க மனோ… எல்லாம் என்னால தானே! என்னால முடியவே இல்ல மனோ… ஒவ்வொரு நிமிஷமும் முள்ளு மேல இருக்க மாதிரி இருக்கு. அம்மா சரின்னு சொல்லவே மாட்டாங்களா மனோ… ரொம்ப பயமா இருக்கு மனோ… வந்து அம்மாட்ட பேசுங்க மனோ… எனக்கு என் அம்மா வேணும் மனோ. நீங்க இல்லாம நான் இல்ல. உங்களுக்குத் தெரியும் தான? வந்து சொல்லுங்க மனோ!” என்று அவனிடம் கண்ணீர் விடுவது அம்மா என்ற நிலையில் அவரால் சகிக்க முடியவில்லை. மகள் நன்றாயிருக்க வேண்டும் என்பது தானே அவர் ஆசையும்! இவனிடமிருந்து மகளைப் பிரித்தால் அவள் நன்றாயிருப்பாளா? ம்ப்ச்! 

மகளிடம் அந்த மனோ என்பவனைப் பற்றி கேட்டிருக்க வேண்டுமோ… அவனைப் பற்றி விசாரித்திருக்க வேண்டுமோ? தங்கள் நிம்மதி மட்டுமா, மகளின் நிம்மதியும் போய் விட்டதோ? கணவனும் அதைத் தானே கூறினார்? பெற்ற மனம் அடித்துக் கொண்டது. 

தியாகுவும் ஒரு தகப்பனாய், “நீ யோசி சௌந்தர்யா… உன் பொண்ணு முகத்தப் பாரு. இதுக்குத் தான் ஆசை ஆசையா வளர்த்தோமா? பையன் குடும்பத்தைக் கூப்பிட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வருவோம். என் மக நிம்மதியும் சந்தோஷமும் தான் எனக்கு ரொம்ப முக்கியம்! ஊர் உலகம் பத்தி எனக்குக் கவல இல்ல! அது நாம வாழ்ந்தாலும் நம்மளப் பார்த்து வயிறு எரியும், நாம வீழ்ந்து போனாலும் ஏசும்! அதனால உன் வறட்டு பிடிவாதத்தை விட்டுட்டு உன் மகளுக்கு அம்மாவா யோசிச்சு, சீக்கிரம் ஒரு முடிவுக்கு வா” என்றிருந்தார். எல்லாம் கைவிட்டுப் போனபின் என்ன செய்வது? சேர்த்து வைக்கவும் மனமில்லை… பிரித்து வைக்கவும் திடமில்லை! ஒரு தாயாய், சௌந்தர்யா தளர்ந்து போனார்.  

மாதவன் வந்து இருதினங்களானது. வீட்டில் மழலையின் ஒலியைத் தவிர வேறு சப்தமில்லை. சித்தப்பாவும், நகுவும் அலர்விழியோடு பேசினாலும், வெறும் தேவைக்கு மட்டுமே அவள் இவர்களோடு பேசும் நிலை. 

“நல்லா இருக்கியாண்ணா… அண்ணி நல்லா இருக்காங்களா?” என்று ஜீவனே இல்லாமல் பேசும் தங்கையிடம் சண்டையிட அவனால் முடியவில்லை. அவளும் யாரோடும் ஒட்டவும் இல்லை, அம்மா முகம் பார்த்து பெண் காத்திருந்தாள்.

பெண்ணிற்கு சொந்த வீடே அன்னியமாகிப் போனது. வீட்டின் பின்புற திண்ணையில் தனியே அமர்ந்திருந்தவள், காலை வெயில் பட்டு இடது கையில் மின்னிக் கொண்டிருந்த நிச்சய மோதிரத்தை வருடிக் கொண்டிருந்தாள். மனமெல்லாம் மனோ தான். அவனுக்குள் தொலைந்து போனவள் அவனில்லாமல் தொலைந்து போயிருந்தாள். அவன் முகம் பார்த்துப் பேச வேண்டும் போல் இருந்தது. தனிமை கிடைப்பதில்லை என்பதால் அதிகம் பேசக் கூட முடிவதில்லை.

ஏழு வாரப் பிரிவு தவிப்பாக மாறியிருந்தது. “வரேன் டி” என்றவனை, “அம்மா உடம்பு கொஞ்சம் சரி ஆகட்டும் மனோ. நம்ம பேசுறத டென்ஷன் ஆகாமக் கேக்கிற நிலமை வந்ததும் சொல்றேன் வாங்க” என்றிருந்தாள். இன்று அவன் வேண்டும் போல் இருந்தது. காதும் மனதும் அவன் ‘மிஸ் மீ’காக ஏங்கியது. 

ஏனோ காலை கண் விழித்ததிலிருந்தே மனம் ஒரு நிலையிலில்லை. உடலும் ஏதோ செய்தது. வெறும் வயிறே புரட்டியது. காலை உணவும் தொண்டையைத் தாண்டவில்லை. மனோ இல்லாமல் இனி முடியாது என்று தோன்றியது. கணவனைப் பார்க்க வேண்டும், விரலோடு விரல்  கோர்த்து தோள் சாய வேண்டும். ‘மனோ வரீங்களா?’ மோதிரத்தை வருடியவளின் நினைவு அதை அவன், அவள் கையில் அணிவித்த நாளுக்கு சென்றது. அவன் செய்த கலாட்டாவில் மூழ்கியவள் இதழ் விரிந்தது.

“அவன் போட்ட மோதிரமா?” சத்தம் கேட்ட திசை நோக்கித் திரும்பினாள். மாதவன் கதவில் சாய்ந்து நின்றிருந்தான். 

“அவர் உன் தங்க புருஷன் ண்ணா! அவர்ன்னு மரியாதையாப் பேசு!” குரலில் கொஞ்சம் கண்டிப்பு!

“அடிப் போடி இவ வேற! உண்மையாவே கல்யாணம் ஆகிடுச்சா? இல்ல வீட்டுல ஒத்துக்க வைக்க நாடகம் ஆடுறியா?”

“ஆகிடுச்சுண்ணா”

“யாரவன்? என்ன நம்பிக்கைல யார் கிட்டயும் ஒரு வார்த்த கேக்காம இப்படி ஒரு முடிவ எடுத்த நீ?”

“மனோ பத்தி உனக்கு என்ன தெரியணும் கேளு! அவர் குடும்பம் பத்தி தெரியணுமா? அவர் குணம்? படிப்பு? ஃப்ரெண்ட்ஸ்? என்ன தெரியணும் உனக்கு? என்ன வேணுமோ கேளு! சொல்றேன்! அப்புறம், யார் கிட்டயும் கேக்கலன்னு சொல்லாத! உங்கிட்ட சொன்னா உடனே அப்பாட்ட சொல்லுவ… அப்புறம் நான் எங்கிருந்து வேலை பாக்க? அது தான் உங்கிட்ட முன்னமே சொல்லல! அதுக்கு நிஜமாவே சாரி! 

ஆனா, கல்யாணம் பேச ஆரம்பிச்ச அடுத்த செக்கண்ட் அம்மாட்ட சொல்லிட்டேன்!  எத்தன தரம் அம்மா, அப்பாட்ட சொன்னேன் தெரியுமா… அவர் விபரம் தரேன். விசாரிச்சுட்டு எங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கோங்கன்னு! யாருமே காது கொடுத்துக் கூடக் கேக்கல. 

ஏன் அவரோட அப்பா கூட இங்க பேசினாங்களே… அதுக்கும் அசைஞ்சு கொடுக்கல! அவங்க எந்த விதத்தில குறைஞ்சு போயிட்டாங்கன்னு ஒத்துக்கல? அவர் வேறாளுன்னு ஒத்துக்கவே மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க! இது எல்லாம் ஒரு காரணமா? உப்புக்கு பெறாத இந்தக் காரணத்த வச்சுகிட்டு, யோசிக்காம வேண்டாம்ன்னு சொன்னா, என்னை என்ன பண்ணச் சொல்ற? ஒத்துக்கலன்னா கூட வெயிட் பண்ணலாம். இவங்க, சொல்ல சொல்ல கேக்காம அந்த டாக்டர் வீட்டோட சம்பந்தம் பண்றாங்க! ஏன் உனக்கு அது தெரியாதா? எனக்கு ஒரு ஃபோன் போட்டு ‘உனக்கு ஓகேவா’ன்னு நீ ஒரு வார்த்தையாவது கேட்டியா? இல்ல தான! எல்லாருமா என்னை இந்த முடிவுக்குத் தள்ளி விட்டுட்டு இப்போ கேளுங்க!”

“ப்ச்! இல்ல டி, ஒரு வார்த்த என்ட்ட சொல்லியிருந்தா விசாரிச்சிருப்பேனே. இப்படி தப்பான இடத்துல தலைய விடுவியா நீ? உன் முகமும் சரி இல்ல, வீட்டுல ஒருத்தரும் சந்தோஷமா இல்ல! சித்திக்கு மனசே ஆறல அலர். 

வாரம் ரெண்டு நாள் தான் அவன் வீட்டுக்கு வருவான்னு சொன்னாங்க… அவனுக்கு வேற குடும்பம் ஏதாவது இருக்குமோன்னு சித்தி பயப்படுறாங்க! ஒருத்தி ஏமாந்ததைப் பார்த்த பிறகும் எப்படி அலர்… உன்னால? ப்ச்!”

“நாங்க என்ன ‘லிவ்-இன்’லயா வாழ்ந்துட்டு வந்தோம் டெய்லி வீட்டுக்கு வர? அவர் வேலை பாஸ்டன்ல, வாரக் கடைசில தான் அவரால வர முடியும்! அவர் நடத்தைய சந்தேகப் படுற அளவுக்கு அவர் எங்கேயும் குறைஞ்சு போகல! 

நல்லவர்ன்னா என்ன ண்ணா? ஆதரவே இல்லாம நின்ன ஒரு பொண்ணுகிட்ட அட்வான்டேஜ் எடுக்காம, ஒரு அப்பா ஸ்தானத்துல இருந்து பார்த்துகிட்டா, நல்லவரா க்ளாசிப்ஃபை ஆவாரா?

என்ன பார்க்குற? உன் பொண்டாட்டியோட க்ளோஸ் ஃப்ரெண்ட், எபி பத்தி தான் பேசறேன். மனோவா எபெனேசர்! என் புருஷன். அவரப் பத்தி இன்னும் என்ன தெரியணும் உனக்கு? 

படிக்கும் போதே காதல்னு அவர் முன்ன கண்ணக் கசக்கிட்டு உன் தங்கச்சி நின்ன போது, மனசு பூரா ஆசை இருந்தும், இப்போ காதல்ன்னு சுத்திட்டு இருந்தா படிப்பு வீணாயிடும்ன்னு சொன்னவர். வருஷம் ரெண்டு காத்திருந்து, அவர் மனசை என் கிட்ட உணர்த்தும் போது நான் படிச்சு முடிச்சிருந்தேன்.

படிக்க ஆசப் பட்ட கோர்ஸ்க்கு பே பண்ண காசில்லன்னு நின்னப்போ நீ தானே ‘நான் உன் அண்ணன். நான் பார்த்துக்கிறேன்’னு சொன்ன? அதே அண்ணன் ஸ்தானத்துல நின்னு லட்ச ரூபா ஸ்காலர்ஷிப்புன்னு ஃபீச குறைச்சதும், அதே மனோ தான்!

காதலிக்கிற பொண்ணோட காதல் பேச்சு பேசாம விடிய விடிய, அப்பா மாதிரி பாடம் சொல்லித் தந்து, எந்தக் கம்பெனில ஜாயின் பண்ணினா என் கனவு நினைவாகும்ன்னு பார்த்துப் பார்த்து நல்ல வேலை கிடைக்க தயார் பண்ணி என் கனவ வாழ வச்சவர் மனோ. 

மூணு நாள் உடம்பு முடியாம படுத்த படுக்கையா இருந்தப்போ, உயிரக் கைல பிடிச்சுகிட்டு வந்தார் மனுஷன் என்னைப் பார்த்துக்க. அம்மா பக்கத்துல இல்லாமப் போயிட்டாங்களேன்னு ஒரே ஒரு செக்கண்ட் என்னை நினைக்க விடல அவர்.

அப்பா கூட, ஒரு நாள் அம்மா காலப் பிடிச்சு விட்டு நான் பார்த்தது இல்ல. எனக்கு அடிக்கடி கால் வலி வரும். அவர் தான் பாதம் வரைக்கும் பிடிச்சு விடுவார். வாரக் கடைசில வரும் போதெல்லாம் பாத்திரம் கழுவி, என் துணி வரைக்கும் ஐயர்ன் பண்ணி, அந்த வாரத்துக்கான காய் வாங்கி, வெட்டித் தருவார்! ஆம்பிள பொம்பளன்னு பேதம் பார்க்க மாட்டார். அப்பாக்கு நான் எத்தன அருமையோ… அப்படித்தான் மனோக்கு நான்!

நான் வெறும் அசோசியேட் கன்சல்டன்ட்! என் சேலரி தெரியுமா உனக்கு? என் வீட்டு வாடகை, கார், வார வாரம் அதுக்கு கேஸ், மாச வீட்டு செலவுல இருந்து… நான் போட்டுக்கிற துணி, நகை, பர்ஃயூம்ன்னு ஏன் சோப் வரைக்கும் செலவாக என்ன மிஞ்சும் தெரியுமா? நீயும் தானே வெளியூர்ல இருக்க யோசி! மிஞ்சிப் போனா 1000 டாலர்! ஆனா நான் மாசம் 1000டாலர் தான் செலவே பண்றேன்! என்னோட செலவையும் அவர் தான் பார்த்துக்கிறார். கல்யாணத்துக்கு முன்னமே… என்னைக்கு அவர் மனச என் கிட்ட சொன்னாரோ, அன்னைக்கே நான் தான் அவருக்கு பொண்டாட்டின்னு வாழ்ந்துட்டு இருக்கார் அவர்!

அம்மாக்கு எத்தன லட்சம் செலவாச்சுன்னு உனக்கு தெரியும் தான? அந்த பில்ல நான் எப்படி கட்டினேன் தெரியுமா? ‘உன் அம்மா எனக்கும் அம்மா தான் டி’-ன்னு சொல்ற அதே மனோவால தான்! அவர் என்னை மட்டுமில்ல இந்தக் குடும்பத்தையும் அவர் குடும்பமா நினைக்கிறார்! 

ஒரே வீட்டில தான் மாசக் கணக்கா இருந்தோம். அவர் மேல நான் எவ்வளவு பைத்தியமா இருக்கேன்னு அவருக்குத் தெரியும்! எல்லைய மீறியிருந்தாலும் நான் விலகி எல்லாம் கண்டிப்பா போயிருக்க மாட்டேன்! ஏன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்ல நாங்க இருந்திருந்தா யாருக்காது தெரியுமா? இருந்தாலும், அவர் அத விரும்பல! தனித் தனி ரூம்ல தான் இருந்தோம், அதுவும் அவரால!

எனக்குப் புரியல! ஒரு மனுஷன் எனக்குப் புருஷனாக இந்த எந்த குணமும் அவசியமில்ல! ஜாதி, மதம் இன்னும் என்ன? குலம் கோத்திரம் இப்படிப்பட்டது மட்டும் தான் தேவைப்படுதில்ல! உனக்கு ஒரு உண்மை சொல்லட்டா, அவர் தகுதிக்கு முன்ன நான் எல்லாம் ஒண்ணுமே இல்ல! நியாயப்படி அவங்க வீட்டுல தான் ‘இவ வேண்டாம்’ன்னு சொல்லணும்! 

ம்ப்ச்! எங்க அன்ப மதிச்சு ரெண்டு வார்த்த அவர்கிட்ட பேசிப் பார்த்திருக்கலாமே. அத விட்டுட்டு, தங்கைக்கு மேரேஜ் நின்னுடும்… அம்மாக்கு பிரஷர் ஏறிடும்… நாங்க வாக்கு கொடுத்துட்டோம்… தட்டை மாத்திட்டோம்… நான் கை காட்டுறவன கல்யாணம் பண்ணாட்டி நீ எங்க பொண்ணே இல்ல-ன்னு கார்னர் பண்ணினா நானும் என்ன தான் செய்வேன்? ஆசையா வளர்த்த மகளோட நிம்மதியான வாழ்க்கைய விட ஜாதி, மதம் எல்லா பெருசாகிடுச்சா? இந்த ஜாதிப் பேர சொல்லி இன்னும் எத்தன நாளைக்கு தான் அடிச்சு கிட்டு சாகப் போறோம்?

என்னால அவரத் தவிர யாரையும் புருஷனா நினைக்கக் கூட முடியாதுன்னு சொல்லிப் பார்த்துட்டேன். அவர் இல்லன்னா கல்யாணமே வேண்டாம்ன்னும் சொன்னேன். கொஞ்சம் கூட என மனசப் புரிஞ்சுக்கவே இல்ல! வேற வழி தெரியாம, பயத்துல தான் கல்யாணம் பண்ணிகிட்டேன் ண்ணா. 

இத்தனை வருஷம் ஒருத்தரைப் புருஷனா நினைச்சு வாழ்ந்துட்டு, நேத்துப் பார்த்த ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டி அவன் கூட குடும்பம் நடத்தினா, நான் தப்பானவ இல்லையா? ஒருத்தன நம்ப வச்சு அவன் கழுத்தறுக்கிற பொண்ணா என்னை இவங்க வளக்கலியே! என்ன பண்ணட்டும் சொல்லு! 

சொல்லாம பண்ணிகிட்டேன் தான்! அது கண்டிப்பா தப்பு தான்… ஆனா மனோவோடான என் மேரேஜ் தப்பில்லண்ணா! திருட்டுத் தனமா கல்யாணம் பண்ணல ண்ணா! நாங்க வாழ்ற சமுதாயத்துல, எங்க கூட சேர்ந்து இருக்க ஃப்ரெண்ட்ஸ் முன்னால, கடவுள் சாட்சியா தாண்ணா கல்யாணம் பண்ணிகிட்டோம். அவர் தப்பானவர் இல்லண்ணா!”

பெண், ‘எபி’ தான் தன் கணவன் என்றதுமே மாதவனுக்கு எதிர்த்துப் பேச விஷயம் இல்லாது போனது. அவன் மகளின் செல்ல மாமாவாயிற்றே அவன். இவன் மனைவிக்கும் அவன் தானே ஒரே சொந்தம்! அவனைப் பற்றி கதை கதையாக அபி கூறியிருக்கிறாளே! அவன் கூறித் தானே அபியை அவன் பெற்றோர், சொந்த மகள் போல் தாங்கினர். அபியைத் தாங்கியவர்கள், மகனின் மனம் கவர்ந்தவளை விட்டு விடுவார்களா?

சித்தி முன்னிலையில் சித்தப்பாவோடு பேசினான். “எனக்கு மாப்பிள்ளையைத் தெரியும் சித்திப்பா. ஒரு தரம் அவர் கார்ல இடிச்சு கை காயமாகிடுச்சு. அவ்வளவு தன்மையான மனுஷன் தப்பானவரா இருக்கவே முடியாது. அது மட்டுமில்ல! அபியோட ஃப்ரெண்டு தான் அவர். அவர் தான் அவள அமெரிக்கால பார்த்துகிட்டது. தேடினாலும் நம்மளால அவர மாதிரி ஒருத்தரக் கண்டு பிடிக்க முடியாது சித்தப்பா. நம்பி பொண்ணக் கொடுக்கலாம் சித்தப்பா.” 

மகள் பேசியது அனைத்தையும் உள்ளறையிலிருந்து பெற்றவர்கள் இருவரும் கேட்கதான் செய்தார்கள். இதற்கு மேல் இருவரையும் தள்ளி வைப்பது சரியில்லை என்று தான் பெற்றவர்களின் எண்ணமும்!

“கேட்டீங்களே சித்தி, நான் எப்படி இருக்கேன்னு! அபியும் நானும் சந்தோஷமா இருக்கோம் சித்தி. கண்டிப்பா அவள தவிர யாரும் என்னை இவ்வளவு நேசிக்க முடியாது. அம்மா சொன்னாங்களேன்னு அவங்க கௌரவத்துக்காக நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணி இருந்தா, கண்டிப்பா சொல்றேன் சித்தி, இவளையும் என் மகளையும் மறக்க முடியாம, நான் நல்லாவே இருந்திருக்க மாட்டேன். 

எங்களப் பிரிக்க, மதம், ஜாதி, இனம், நிறம், தேசம்ன்னு ஆயிரம் காரணம் அடுக்கிட்டே போகலாம். ஆனா நாங்க சந்தோஷமா இருக்கோம். காரணம், ரெண்டு பேரும் எங்க எல்லா வேறுபாட்டுக்கு நடுவுலயும் ஒருத்தர ஒருத்தர் மனசார விரும்பறோம். நீங்க மனசு வச்சா, நம்ம அலர் நல்லா இருப்பா சித்தி” 

அனைத்தையும் கேட்ட சௌந்தர்யா போகிற போக்கில் நகுநாவிடம், “உன் அக்கா இங்க வந்து ரெண்டு மாசம் ஆகப் போகுது. அவ புருஷன் எப்போ வராராம்?” என்று கேட்டு செல்ல, நகுநா நின்று விட்டாள்! அலர்விழி அழவே ஆரம்பித்து விட்டாள்.

“பாப்பா… என்ன இது? கண்ணத் தொட, மாப்பிள்ளைகிட்ட பேச சொல்லு. அவங்க வீட்டுல இருந்து வர சொல்லுவோம். இன்னும் யாருக்கும் விஷயம் தெரியாது. இப்படியே உன்ன விட முடியாது. சட்ட சிக்கல், சம்பிரதாயம் எல்லாம் இருக்கில்ல. பேசி முடிப்போம். ஊரறிய அனுப்பி வைக்கிறது தானே உனக்கும் மரியாதை!” என்று அப்பா கூறவும் பெண்ணால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை.

“டாட், அயிட்ட ஏன் கிரையிங்?” என்று சங்கு பாப்பா கண்களைத் துடைத்து விடவும் தான் அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

“டோண்ட் கிரை அயிட்ட. அம்மா டம்மில எனக்கு விளையாட பேபி இருக்கில்ல… ஐ வில் ஷேர் மை லிட்டில் பாப்பா வித் யூ” என்று அலர்விழியை மழலை சமாதானப் படுத்தினாள். 

அதுவரையுமே எதோ சுழலில் இருந்தவளுக்கு பட்டென்று திரை விலகியது. வந்து ஏழு வாரங்கள் முடிந்திருக்க, மாதம் வர வேண்டிய மாதவிடாய் ஒருமுறையேனும் வரவில்லை! என்று கடைசியாக வந்தது? மனம் கணக்குப் போட ஆரம்பித்தது. அனைவர் முன்னும் நிச்சய மோதிரம் போடும் முன்பே வந்தது தான்! ஆம், அதன் பின் வரவில்லை!  

கர்பம் தானா? ஊர்ஜிதப் படுத்த மருந்தகம் செல்ல வேண்டுமே! எப்படி வெளியே போவது? என்ன சொல்லிப் போவது? மதியம் போல் போகலாம் என்று நினைக்க, அவள் நினைப்பில் மண்ணைப் போட வந்திறங்கினான் பிரவீன்! 

எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து முடிக்கும் முன் சௌந்தர்யாவைக் காண வந்தவனோடு வினோவும், அம்பிகா அத்தையும்!

error: Content is protected !!
Scroll to Top