மெத்தையில் படுத்துக் கொண்டே வானைப் பார்க்கலாம், அந்த கண்ணாடித் தளம் கொண்ட இக்ளூ அமைப்பிலிருந்த அறையிலிருந்து. மெத்தையில் படுத்திருந்தவள் வானை ஏக்கமாகப் பார்க்க, அவளைப் பார்த்து படுத்திருந்தவனுக்கோ அதைக் காட்டிலும் ஏக்கம்.
“என்ன மனோ… ஒண்ணும் தெரியல! இதுக்கு எங்க வீட்டு மொட்ட மாடியே தேவல. போங்க மனோ. என்னை ஏமாத்தி தப்பான இடத்துக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க!” வானத்தை வெறித்து… அலுத்துப் போயிருந்தாள் அலர்விழி!
“அலாஸ்கா நார்தர்ன் லைட், ஃபேர்பேங்க்-ல தான் நல்லா தெரியும்ன்னு உனக்காக இங்க புக் பண்ணினேன். டெய்லி எல்லாம் தெரியாது டி! அதுவா வந்தா பார்த்துக்கோ! அது வரைக்கும் ஐயாவ கவனிக்கிறது.” பெண்ணவள் வயிற்றில் கோலமிட்டுக் கொண்டே கொஞ்சினான்.
“என்ன மனோ? ஏன் வரல இன்னும்?” பெண் சிணுங்க, “நீ வந்திருக்கன்னு அதுக்கு தெரியாதில்லையா அது தான் வரல போல” என்று கழுத்து வளைவில் முத்த மழையோடு சமாதானப் படுத்தினான். அவள் சிணுங்க, அவன் சமாதானப் படுத்த என்று ஆரம்பித்து, பெண்ணின் வெட்க சிரிப்பும், நாண சிணுங்கல்களும், இரவு மணி இரண்டை தொட்டும் நிற்காமல் தொடர்ந்ததிற்கு, கண்டிப்பாக அரோரா போரியாலிஸ் (aurora borealis) காரணமில்லை!
மூன்று மணியளவில் இரவு வான் வண்ண மயமானது. வானில் தோன்றிய ஒளிரும் பச்சையும் (fluorescent green), சிகப்பும், கலைத்து விட்ட கோலமாய் முழு வானையும் ஆக்கிரமித்து மின்சார நடனமாடத் தொடங்கியது. பெண் வாய் பிளந்தாள்.
‘நீ அத ரசிப்பியாம், நான் உன்ன ரசிப்பேனாம்’ என்றவன் கூட கண் சிமிட்டாமல் அந்த பிரம்மாண்டத்தில் லயித்துப் போனான். வார்த்தையில் அடங்காத அற்புதம் அடுத்த 15 நிமிடங்கள் நீடித்தது. வண்ண ஜாலம் முடிந்த பின்னும் அதன் தாக்கம் அதிகம் அவர்களிடையே.
“வாவ் மனோ! ஜஸ்ட் வாவ் இல்ல…” என்றவள் அசையாது படுத்திருந்தாள். இயற்கை தான் எத்தனை விசித்திரம் நிறைந்தது. பார்க்க, கற்றுக் கொள்ள என்று எவ்வளவு பொக்கிஷங்களை தேக்கி வைத்திருக்கிறது.
டன் கணக்கில் கனக்கும் கருமேகங்கள்… அந்தரத்தில் தொங்கும் மேகத்திற்குள் வீற்றிருக்கும் நீர் தேக்கம்… வானில் தோன்றி மறையும் வானவில்… இதோ இந்த வண்ண ஜாலம்! எல்லாமே விந்தை தான்!
அடுத்து வந்த இரு இரவுகளிலும் அலாஸ்கா வானில் வண்ணங்கள் தோன்றவில்லை என்றாலும், உறங்கா இரவுகள் பல வர்ண்ண ஜாலங்களை இருவருக்குள்ளும் அள்ளித் தெளித்தது. நீ, நான், என்ற எல்லைகள் கடந்து, காதலிலும் காமத்திலும் திளைத்து, மோகத்தில் மூழ்கி ‘நாம்’ ஆகிய தருணங்கள் பல.
“இப்போ வயிறு எப்டி இருக்கு விழி?”
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க போங்க” என்றவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
“நாலு நாள் முன்ன, கிளம்பும் போது சொன்னேன், அடி வயிறுல நரம்பு இழுக்குது, ஜுரம் வர மாதிரி இருக்குன்னு! இன்னைக்கு இங்க இருந்து கிளம்பும் போது வந்து கேக்கறீங்க ‘வயிறு எப்பிடி இருக்கு’ன்னு!”
“யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேன்னு சொல்ற மாதிரி, மாச மாசம் அந்த நாள் வரதுக்கு முன்ன இப்பிடி தானே வலிக்கும். சோ அதுன்னு நினைச்சேன். ஆனா இன்னும் ஒண்ணும் ஆகலியேன்னு கேட்டேன்.”
“ஹ ஹ ஹா… டேட் எல்லாம் இல்ல. அதுக்கு இன்னும் பத்து… பன்னெண்டு நாள் கிட்ட இருக்கு.”
“அச்சோ இது தெரியாம ட்ரிப்ப நாலு நாளோட நிறுத்திட்டேனே…”
“ம்ம்கும்! ஒரு இடத்தயும் முழுசாப் பார்க்க விடல நீங்க! நாலு நாள் இருந்தா என்ன நாப்பது நாள் இருந்தா என்ன?” அவள் அலுத்துக் கொள்ள, அவன் பலமாக சிரிக்க, “என்ன சிரிப்பு?” என்றவளிடம் அவன் மீண்டும் பாவனையோடு அதையே சொல்லி “இப்போ சொல்லு…. நீ எதையும் முழுசாப் பார்க்கல?” எனவும், “நீங்க இருக்கீங்களே…” அவள் அடிக்க, “வேணும்னா ஒரு மணி நேரம் இருந்து பொறுமையா முழுசா பார்த்துட்டே போவோமே விழி” பெண்ணவள் கையில் சிக்காமல் பனிக்குள் கால் பதித்து மனோ ஓட… பனியில் புதைந்து ஒன்றாய் உருண்டு புரண்டவர்களிடையே சிரிப்பு மழைக்கு பஞ்சமில்லாது போனது.
வெஸ்ட் வெர்ஜினியா வந்திறங்கிய தம்பதியினருக்கு சுற்றிப் பார்க்க பகல் போதவில்லை. பாரா கிளைடிங் முதல் அலர்விழி அங்கு ஆசைப் பட்ட இடங்களை எல்லாம் சுற்றித் திரிந்தனர்.
கடற்கரையை ஒட்டியிருந்த ஹோட்டல் அறைக்குள் அடைந்தவர்கள் இரவின் இனிமையை முழுவதுமாக ரசித்தனர். கடலை முழுவதுமாக ரசிக்கவென ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடி சுவர்.
வெள்ளி அலைகளின் அழகில் அவள் மூழ்கியிருக்க, அவள் அழகில் அவன் மூழ்கிப் போனான். இனிமையான மனமொன்றிய கூடல். ஏற்கனவே சிப்பியில் முத்தில்லை என்றால் கண்டிப்பாக விழுந்த நீர் இருவர் உயிரையும் தாங்கிய நித்திலமாகும்.
தாக்கிய மின்சாரத்தின் பலனாய், “ஏன் மனோ?” நூறாவது முறையாக அவள் கேட்டாலும், பதில் தெரியாதவன் என்ன கூறுவான்? “தெரியல டி!” என்ற பதிலையே நூறாவது முறையாகக் கூறிவிட்டான். ஏன் விழியைக் காதலித்தான்? பதில் தெரியா கேள்வி!
“சொல்லுங்க… என்னை நினைச்சதும் முதல்ல உங்களுக்கு எது நினைவில வரும்?” தினமும் ஒரு கேள்வி, இது இன்றைய கேள்வி!
அவன் பொல்லாத சிரிப்பைப் பார்த்தவள், “எசகு பிசகா ஏதாவது சொன்னீங்க… கண்டிப்பா அடி வாங்குவீங்க” என்ற மிரட்டலோடு மனோ முகம் பார்க்க, “உன் கண்ணு! முதல் முதல்ல நீ பேசறதுக்கு முன்ன என் கிட்ட பேசின உன் கண்ணு தான்! அப்புறம் உன் திமிர். ஒரு ஆம்பிள தொண்டையில கை வச்சுட்டு நிக்கிறானேன்னு கொஞ்சம் கூட பயமில்லாம நின்ன பாரு… உனக்குள்ள இருக்க அந்த லேடி ஜாக்கி சான பிடிக்கும், கொத்து கொத்தா அழகாத் தொங்குற உன் நூடுல்ஸ் மண்டை… உள்ளங்கை உணர்ந்த உன் நாடித் துடிப்பு… அதுக்கு மேல சொன்னா நீ அடிப்ப! இப்படி அணு அணுவா உன் எல்லாமே…”
சூடான மார்பில் தலை சாய்த்துப் படுத்திருந்தவள், தலை உயர்த்தி, “எனக்கு உங்க ‘மிஸ் மீ?’ அத கேக்கும் போதெல்லாம் என் குட்டி இதயம் பட்டுன்னு வெளியில தெறிக்க ரெடி ஆகிடும்! காதோரமா நீங்க ‘மிஸ் மீ?’ன்னு ஒவ்வொரு முறையும் கேக்கும் போது ‘ஆமா டா. உன்ன மட்டும் தான் உயிரா காதிலிக்கறேன்… பயித்தியம் மாதிரி மிஸ் பண்றேன்’னு சொல்லத் தோணும்!
காதல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சொல்லுவாங்க. ‘மிஸ் மீ?’ன்னு காதோரமா காதல் சொன்ன முதல் ஆள் நீங்களாதான் இருக்கும். அந்த ஒத்த கிசுகிசுப்பான ‘மிஸ் மீ’க்கு எத்தன வருஷம் ஏங்கி இருக்கேன் தெரியுமா?”
“நீ என்னை ரொம்ப தேடினியா விழி…?” காதோரம் அவன் இதழ் வருட, “ம்ம்ம்” என்ற பதிலுக்கு, “நானும்… உன்ன அதிகமா தேடியிருக்கேன்! அப்பவும் இப்பவும்…” என்றவன் அவன் தேடலில் மூழ்கிப் போக பேச்சு சத்தம் நின்றே போனது.
இன்பம் நீண்டது. பேச்சும் சிரிப்பும் நீண்டது, நியூ ஜெர்சி வந்து, அவன் கையில் பையோடு, “கிளம்பட்டா?” என்று கேட்டு நின்றவரை! ‘போகணுமா?’ என்ற பார்வை ஏந்தி, “ம்ம்ம்” என்ற மெல்லிய சத்தத்தோடு பதில் தந்தவளுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
பத்து நாட்கள்! நினைவில் தித்திப்பாய் உறைந்து போன பத்து அழகான நாட்கள்! ‘பூமி சொர்கம் ஆனதோ… பகல் உறைந்து போகாதா… இரவு நீளாதா…’ என்று புதுமையாக எண்ண வைத்த பத்து நாட்கள் முடிந்து போனதா? குளம் கட்டி நின்ற கண்களைப் பார்த்தவன், “வா” என்று அணைத்துக் கொண்டாலும், அவனுக்கும் பாஸ்டன் போக மனமில்லை என்றாலும், போய் தானே ஆகவேண்டும்.
“திரும்பவும் ஊருக்கு போக லீவ் எடுக்கணும்! அதனால் இப்போ வேலைக்கு போய் தானே ஆகணும் விழி. இன்னைக்கு புதன், மூணே நாள் தான்… வந்திடுவேன். சீக்கிரம் யாராவது ஒருத்தர் இடம் மாறலாம். இப்போதைக்கு, ஃப்ரைடே சீக்கிரம் கிளம்பி வந்துடுறேன் சரியா?” என்றவன் அறியவில்லை, மறுநாளே வந்து நிற்பானென்று.
புதனன்று காலை எபி சென்று விட, மெத்தையில் சிறிது நேரம் புரண்டவளும் அலுவலகம் கிளம்ப வேண்டுமே! சோம்பலாய் கிளம்பி சென்றவளின் சோம்பலெல்லாம் கணினி முன் அமர்ந்ததும் தடம் தெரியாமல் மறைந்து போனது.
மாலை, அலுவலகத்திலிருந்து வந்தவளுக்கு தலைக்கு மேல் வேலையிருந்தது. பத்து நாட்களாக ஊர் சுற்றியதின் விளைவாகக் குவிந்து கிடந்த அழுக்கு துணி மூட்டையும், காலியாயிருந்த குளிர்சாதனப் பெட்டியும் பெருமூச்சு விட வைத்தது.
பொக்கனோஸ் கேம்பிங்கிங் டெண்டில் ஆரம்பித்து, புஷ் கார்டன் தீம் பார்க்கில் வலம் வந்து, அலாஸ்கா நார்தர்ன் லைட்ஸ் என்று தேனிலவைக் கொண்டாடினர். இடங்களைப் பார்த்தார்களா தெரியாது… ஆனால் விழியை வருடும் இமையாக மாறியிருந்தான், மனோ.
இந்த பத்து நாட்களில் ‘மனோ’ என்ற கொஞ்சல் அழைப்பும், செல்ல சிணுங்கல்களும் தான் எத்தனை. பெண்ணை மயக்கி சுருட்டி கைக்குள் பொதிந்து வைக்கும் வித்தை அறிந்திருப்பான் போலும், நங்கையவள் மயங்கி, கிறங்கி தான் போயிருந்தாள்.
கைப்பேசி அழைக்க, மனோ மோகம் தடைபட, ‘இது வேற’ என்று வந்தவளுக்கு புன்முறுவலோடு நின்ற தங்கை புத்துணர்ச்சி தந்தாள்.
“என்ன டி நகு காலையிலயே கால் போட்டிருக்க? முகம் பூரா ஒரே பல்லு தான்! என்ன விஷயம்?”
“மாதுண்ணாவும் குட்டிப் பாப்பாவும் அடுத்த மாச கடைசில வராங்களாம். அண்ணி வரல. நேரா அமெரிக்கா போறாங்களாம். இனி மேல் அங்க தானாம்! அண்ணனும் ரெண்டு வாரம் இருந்துட்டு அங்க கிளம்பிடுவாங்க. இனி நீ தனியா இருக்க மாட்ட!”
“ஏய்… சூப்பர்! அண்ணாட்ட பேசியே மாசம் ஆச்சு!”
“நீ தான் ரொம்ப பிஸி ஆச்சே. ரெண்டு வாரமா நீ என்கூட பேசல. ரெண்டு மெசேஜோட எஸ்கேப் ஆகிட்ட, அது தான் நீ படுக்கறதுக்குள்ள பேசிடுவோம்ன்னு கூப்பிட்டேன்,” பேசிக் கொண்டே போன நகுநாவின் பார்வை கூர்மையானது.
“என்ன டி அப்டி பாக்குற?”
“அலர் உன் வகிட்டில ரத்தம் டி… என்ன ஆச்சு? தலைய இடிச்சுகிட்டியா?”
எச்சில் விழுங்கினாள் பெண்! மெல்ல தொட்டுப் பார்த்தாள். பத்து நாட்களாக முளைத்த புதுப் பழக்கமல்லவா இது? “நான் உன் பக்கத்துல இருக்க நாளெல்லாம் நீ குளிச்சுட்டு வந்ததும் என் கிட்ட தான் வரணும். இத நான் தான் வைப்பேன்” என்று ஆசையாய் நேற்று வரை அவன் தான் வைத்து விட்டான். அதே பழக்கம்! இன்று இவள் குளித்து வந்ததும் வைத்துக் கொண்டாள்.
“அது குங்குமம் நகு” என்றவளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.
“அத முதல்ல கழுவு லூசு! அங்க கல்யாணம் ஆனவங்க தான் வைப்பாங்க!”
“என் வகிட்டில இருக்கறது குங்குமம், அத வச்சது மனோ… உன் மாமா. நாங்க ரெண்டு பேரும் விரும்பி ஞாயித்துக் கிழமை கல்யாணம் பண்ணி கிட்டோம்…” அவள் பேசிக் கொண்டே போக, திரையில் தெரிந்த அம்மா முகம் பார்த்தவளுக்கு பேச்சு நின்று போனது.
அம்மாவின் பார்வை தந்த அனலை ஏற்க முடியவில்லை. இங்கு தான் மட்டும் தான் குற்றவாளியா? “நீங்களும் எனக்கு வேற கல்யாணம் பண்றதுல குறியா இருக்கீங்க! எனக்கு வேற வழி தெரியல மா…” அவள் கூறி முடிக்கும் முன் “அந்த பையன் எங்க டி?” என்றார் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“அம்மா… அவர் பையன் இல்ல. உங்க மாப்பிள்ளை! அவர் பாஸ்டன்ல வேல பாக்கிறார்! சனி ஞாயிறு மட்டும் தான் மா வருவார்” எனவும் அழைப்பு துண்டிக்கப் பட்டது.
இனி திருமண பேச்சு இருக்காது தான்! இருந்தும் ஏனோ கை கால் உதறலை உதற முடியவில்லையே!
சங்கடங்களை விட களைப்பிற்கு சக்தி அதிகம் என்பதால் உறக்கம் பெண்ணை இழுத்துக் கொண்டது. விடிந்ததும் கைப்பேசி எடுத்தவளுக்கு தலையில் இடி இறங்கியது. நகுநாவிடமிருந்து பதினைந்து அழைப்புகள். நகு பதிவிட்டிருந்த ஒலிப் பதிவைக் கேட்டவள் சிலையாகிப் போனாள்.
“மனோ… அம்மா கொலாப்ஸ் ஆகி விழுந்துட்டாங்களாம். ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்காங்க மனோ. நகுவ தவிர யாருமே பேச மாட்டேங்கறாங்க மனோ” என்றவளுக்கு அழுகை நின்ற பாடில்லை. எல்லாம் தன்னால் தான் என்ற குற்ற உணர்வு.
‘நீ அவ்வளவு சுயநலவாதியா?’ அம்மா கேட்டது சரி தானே!
“ஏற்கனவே ஒரு தரம் மினி ஸ்ட்ரோக் வந்துதாம். ஸ்ட்ரெஸ் ஆகக் கூடாது. ரத்த அழுத்தம் ஏறக் கூடாதுன்னு பிரவீன் தான் வைத்தியம் பார்த்துட்டு இருந்தாராம். அதனால் தான் அப்பாவும், பாட்டியும் நமக்கு சப்போர்ட் பண்ணாம அம்மாவ டென்ஷன் பண்ணாம, அம்மா சொல் பேச்ச கேளுன்னு சொல்லிட்டு இருந்திருக்காங்க! இப்போ என்னால என் அம்மா படுக்கையில, பயமா இருக்கு மனோ…” பெண் உடைந்து அழுதாள்.
“நாளைக்கு மிட்-நைட் ஃப்ளைட் விழி” என்றவனின் மார்பே கதியென்று படுத்திருந்தவளை கட்டாயப்படுத்தி “அம்மாக்கு ஒண்ணும் ஆகாது டி. அந்த பிரவீன் ரொம்ப நல்ல டாக்டர், காப்பாத்திடுவான்” என்று கூறிக் கூறியே உண்ண வைத்து, உறங்க வைத்தான்.
அவனுக்கு தான் தூக்கம் இமையைத் தழுவவில்லை. அவளைத் தனியே அனுப்ப மனமில்லை. அவளைப் போல் ஆரம்பகட்ட டெவலப்பராக இருந்திருந்தால் அவனும் நினைத்த நேரம் விடுப்பெடுக்க முடியும். ஆனால் அவன் இருப்பதோ மிகவும் பொறுப்பான பதவியில். பத்து நாட்கள் விடுப்பெடுத்தாயிற்று, அடுத்த மாதம் திருமணப் பதிவிற்காக இந்தியா செல்ல மீண்டும் இரண்டு வாரங்கள் விடுப்பு வேண்டும்!
“நடக்கிற எதையும் தாங்குற சக்தி மனுஷனுக்கு இருக்கு. என்னைக்கு தன்னால முடியாதுன்னு நினைக்குறானோ அன்னைக்கு அவன் தோத்துப் போயிடுவான். உங்க அம்மாக்கு வாழ்க்கைய வெறுக்குற அளவுக்கு ஒண்ணும் ஆகல… கொஞ்சம் டென்ஷன். சரி ஆகிடும்” என்றவன் கரத்தைப் பெண் விடவில்லை.
இனி இவர்கள் நிலை? பாரம் மனதை அழுத்த கண்களில் நீர் வழிய, “அம்மாவ நினைச்சா… இல்ல என் நிலம நினைச்சான்னு தெரியல மனோ! ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்கு மனோ. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க!”
“எனக்கு ரெண்டு வாரத்துக்கு மேல லீவ் கிடைக்காது விழி. அடுத்த மாசம் மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ற டைம்க்கு தான் வருவேன். அம்மாக்கு முடியாம இருக்கறதனால இப்போதைக்கு கல்யாணப் பேச்சு நடக்காது. பயப்படாம போ!”
“நீங்க இல்லாம எனக்கு ஒண்ணுமே ஓடாது மனோ” உடைந்தழுதாள்.
அவள் மட்டுமா உடைந்திருந்தாள்? அவனும் தானே. பிரவீன் ஏதேனும் கூறி விடுவானோ? மனம் பதைபதைத்தது. உண்மை மறைத்ததிற்கு சண்டை போடுவாளோ? அவள் உண்மை அறிந்து உடையும் வேளை அவளுக்காக இருக்கக் கூட முடியாதே?
நிற்பது விமான நிலையம் என்பதெல்லாம் அவன் கருத்தில் இல்லை. கன்னங்கள் இரண்டையும் இரு உள்ளங்கைகளுக்குள் தாங்கினான்.
“கின்ட்சுகி (kintsugi) எப்பவும் இந்த வார்த்தைய நினைவுல வச்சுக்கோ…” என்றவன், “உன்ன உடைக்கிற மாதிரி ஏதாவது கேள்விப்பட்டா… ‘என் வாழ்க்கை, என் உயிர், என் மூச்சுக் காத்து… என் எல்லாமே நீ மட்டும் தான்’னு நினைவுல வச்சுக்கோ விழி! எதுவும் இந்த உண்மைய மாத்த முடியாது! ஐ ஆம் ட்ரூலி டீப்லி மேட்லி இன் லவ் வித் யூ மிஸஸ்.மனோ,” என்றவன், “நீ தைரியமான பொண்ணு! உன் நிமிர்வையும் தைரியத்தையும் டைட்டா பிடிச்சுக்கோ! உன்ன உடைக்க உன்னால மட்டும் தான் முடியும்! உடைஞ்சு போகாத… நான் இருக்கேன் உனக்காக. கஷ்டம் வரும் போது என்னை மறந்திடாத.” என்றான்.