“ஆமா யாரு மனோ அது… சிவா? போன்ல இவ்வளவு நேரம் கதை?”
“அங்க சென்னைல, காலேஜ் ஃப்ரெண்ட் விழி! அவன் தான் ‘எதையும் யோசிக்காம கல்யாணம் பண்ணுடா’ன்னு சொல்லிட்டே இருப்பான். அது தான் கல்யாணம் ஆகிடுச்சு மச்சான்னு சொன்னேன். பையன் ஒரே குஷி ஆகிட்டான்”. எபி அலர்விழியிடம் கூறிக் கொண்டிருந்தான்.
“ம்ம்ம்… உங்க நலம் விரும்பின்னு சொல்லுங்க! அவருக்கு மேரேஜ் ஆகிடுச்சா?”
“ஸ்வேத்தா, என் கூட படிச்ச பொண்ணு, அவளுக்கு அப்பா மட்டும் தான். அவர் மேல அவளுக்கு அவ்வளவு மரியாதையும், பாசமும்! அவ, சிவாவ விரும்பினான்னு அவ வீட்டுல தெரிஞ்சதும், அவட்ட என்ன சொல்லி அவள கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாங்கன்னு தெரியலை, நாலாவது வருஷம் பாதியிலேயே அவ காலேஜ் வரது நின்னு, அவ அப்பா காட்டின பையனோட கல்யாணமும் முடிஞ்சுது!
இன்னைக்கு அவளுக்கு ரெண்டு பிள்ளைங்க. நாலு பேர் மதிக்கிற நிலையில அவள வச்சிருக்க நல்ல புருஷன். ஆனா நிறைவான வாழ்க்கைன்னு பார்த்தா, ப்ச்! ஊருக்குப் போயிருந்த போது அவள பார்த்தேன்… எல்லாம் இருந்தும் அவ முழுமையான வாழ்க்கையை வாழல விழி. ‘பழகிடுச்சு. ஏதோ இருக்கேன் எபி’ன்னு சொன்னா. சொன்னவ உதடுல பொய்யான ஒரு சிரிப்பு! ‘சிவா…’ன்னு ஏதோ கேக்க வந்தவ கண் கலங்கிப் போச்சு. கல்யாணம் ஆகிட்டா, அவ உயிரா காதலிச்சவன மறக்க முடியுமா என்ன? அவனால அவள மாதிரி பொய்யா வாழவும் முடியல! அவள மறக்க முடியலன்னு வேற கல்யாணம் பண்ணிக்கல! காலம் மாறலாம்!”
“அப்படி ஒரு வாழ்க்கை எனக்கும் வேண்டாம். உனக்கும் வேண்டாம். சிவா உயிரோட இருக்கான். உயிர்ப்பே இல்ல அவன்கிட்ட. அவனும் ஒருநாள் கல்யாணம் பண்ணிப்பான், அவன பெத்தவங்க தொல்லை தாங்காம! கையில இருந்தவள பறி கொடுத்துட்டு, அவன மாதிரி வாழ்க்கை ஓட்டத்தோட ஜீவனே இல்லாம ஓட நான் தயாரா இல்ல!”
வீட்டிற்குள் நுழையாமல், பாயல் வீட்டு வாசல் முன்னிருந்த தாழ்வாரத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க, வெளியே வந்த மார்க், “உங்களுக்காகத் தான் காத்திருக்கோம். ஃபோன் போட்டாலும் எடுக்கல. அது தான் உங்களக் கூப்பிட கிளம்பினேன். உள்ள வராம இங்க என்ன பண்றீங்க? எல்லாரும் பிஸினஸ் ஹால் போயிட்டாங்க” என்று கையோடு அழைத்துச் சென்றான்.
ஹால் முழுவதும் மலர்களாலும் பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க, உள்ளே நுழைந்தவர்களை, கூடியிருந்த அந்தப் பெரிய கூட்டம் ஆர்ப்பாட்டமாய் வரவேற்றது. இருவரின் அலுவலகத் தோழர்கள் அனைவரும் வந்திருக்க கூட்டம் நிரம்பி வழிந்தது. தொலைக்காட்சி திரையில் பாடலில்லா இசை அறையோடு மனதையும் நிறைக்க, அதுவரை இருந்த இயல்பு நிலை மாறி இருவருக்கும் புதுமணத் தம்பதியருக்கே உரிய உணர்வு ஒட்டிக் கொண்டது.
பெண்ணையும் மாப்பிள்ளையும் இரு கூட்டம் தூக்கி கலாட்டாவோடு மாலைகளை மாற்றச் செய்து, பானைக்குள் மோதிரம் தேட விட்டு, கேலி கிண்டலோடு சில பல விளையாட்டுகள் இருவரையும் விளையாடச் செய்யவும், அவசர திருமணம் என்ற நினைவு பின் சென்றது. மறுநாள் போராட்டம் மறந்து போனது. இந்த நிமிடம் மட்டுமே உண்மை என்பதால், ‘கணவன் மனைவி’ என்ற அந்த நிமிடத்தை மட்டுமே இருவரும் ரசித்தனர்.
ஆளுயர கேக் வெட்டப்பட ஆர்ப்பாட்டமான கைதட்டலில் ஆரம்பித்து விழாவிற்கு வந்திருந்த அலுவலக தோழர்கள் அனைவரும் வாழ்த்தி, பரிசளித்து, ஏற்பாடு செய்திருந்த திருமண விருந்துண்டு கிளம்பிச் செல்லவும், அவர்களின் ஆறு நபர் பட்டாளத்தோடு லீ-யும் தங்கிவிட, கையில் தட்டோடு அரட்டைக் கச்சேரி களைகட்டியது.
உணவு முடித்த எபியின் கண்கள் தொலைக்காட்சி திரையில் பதிந்தன.
You’re the light, you’re the night
You’re the colour of my blood
You’re the cure, you’re the pain
இசையோடு பாடல் வரிகள் திரையில் ஒளிபரப்பாக, எபியின் வாய் பாடல் வரிகளை முணுமுணுத்தாலும் பார்வையோ புது மனைவியின் மீது.
You’re the only thing I wanna touch
Never knew that it could mean so much, so much,
முணுமுணுப்பு பாடலாய் மாறிப் போக, ஆட்ரே, எபியோடு பாடலில் இணைந்தாள்.
ஒருவன் ஆரம்பிக்க, அடுத்தடுத்த இசைக்கு ஒவ்வொருவராய் பாட, வண்ண விளக்குகளோடு, அதுவே (karaoke night) கேரியோக்கி இரவாக மாறிப் போனது. பாடலாய் ஆரம்பித்து விளையாட்டாய் உருவம் பெற்று, ஆண்கள் ஒரு அணி, பெண்கள் ஒரு அணி என்று போட்டியாய் மாறியது கேரியோக்கி இரவு.
மார்க், ஆட்ரேயை வம்பிழுக்க, ஒரு கட்டத்தில் பெண்ணால் வாய் திறக்க முடியாமல் போக ஆண்களிடையே கரகோஷம்.
மிஞ்சியது எபியும், விழியும்! ஆங்கிலப் பாடல் ஒன்றை எபி ஆரம்பிக்க, கன்னம் சிவத்த பெண் வாய் திறக்க மாட்டாள் என்று நினைக்க, நினைப்பை பொய்யாக்கி, தமிழில் அலர்விழி பாட ஒருவருக்கொருவர் எதிலும் சளைக்காதவர்கள் என்பதால் போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்தது. கடைசி சுற்று, வெற்றி பெறுபவரின் அணியே வாகை சூடிக் கொள்ளும் என்ற நிலை. தோற்றும் போகும் எண்ணமில்லை அலர்விழியிடம்.
“நான் சீனியில் செய்த கடல்
நான் சீனியில் செய்த கடல்
வெள்ளைத் தங்கத்தில் செய்த உடல்
வெள்ளைத் தங்கத்தில் செய்த உடல்
உன் காதலி நானே”
அறையில் ஆட்கள் கூடியிருக்க, அடி வயிற்றிலிருந்து உணர்வுப் பூர்வமாக ஒருத்தி, ஒருவனைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே உல்லாசமாய் விஷமப் புன்னகையோடே இப்படிப் பாடினால்… அவனும் தான் என்ன செய்வான்? எழுந்த புன்முறுவலை சவ்வு மிட்டாயோடு மென்று… உமிழ் நீரோடு விழுங்கினான்.
“நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டுப் பூ இவள்
நான் தினமும் தோற்பவள்
அந்த ஆடை சண்டையில்”
விழுங்க முடியாமல் போன புன்முறுவல் கட்டுப்பாடில்லாமல் பொங்கி வழிந்தது. சவ்வு மிட்டாயை மென்று கொண்டே எழுந்த புன்முறுவலை மறைக்க இடக்கை கொண்டு நாடியை தேய்ப்பதும், தலை குனிந்து பிடரி முடியைக் கோதுவதுமாய் நின்றிருந்தவனை ஒரு வழியாக்காமல் விடுவதில்லை என்ற எண்ணம் கொண்டவளோ மொழி தெரியாத கூட்டம் நடுவில், ஒற்றைப் புருவம் உயர்த்தி அவனைப் பகிரங்கமாய் வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.
“இனி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு”
‘அடியேய்… என்ன டி?’ பார்வையால் கேட்டு நின்றவன், இலக்கியா இவனைப் பார்த்து கண் சிமிட்டவும் வெட்கத்தில் நெளிந்தான்.
“அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு”
ஒருவருக்கும் புரியாமல் போனாலும் அவனுக்குப் புரிந்ததே அவளின் சேட்டை! ‘கொழுப்பெடுத்தவளே… போதும் டீ…’ எபி பார்வையால் கெஞ்சியும், பாட்டை நிறுத்தாமல் அவள் பாட, இதற்கு மேல் முடியாது என்று கைகளை உயர்த்தி சரணடைந்தான் எபி.
இசையை ரசிக்க மொழி தேவை இல்லை என்றது அறையில் எழுந்த கரகோஷம்.
ஆணின் ஆர்வமும் பெண்ணின் அழைப்பும் ஒன்று சேர, வீட்டிற்குள் நுழைந்ததுமே, “அடங்க மாட்டியா டி நீ…” என்று மனைவியை தன்னோடு அணைத்துக் கொண்டான் மனோ.
“இப்போ தைரியம் இருந்தா பாடு டீ,” அவன் சவால் விட, “ஏன் பாட மாட்டேனாக்கும்?” கேட்டவளின் மயக்கும் புன்னகையில் மயங்கித்தான் போனான். கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றவளுக்கு தைரியத்தில் குறைவில்லை என்றது அவள் முணுமுணுத்த பாடல் வரிகள்.
ஆண் ஆரம்பித்து பெண்ணை காம சுழலுக்குள் இழுக்க வேண்டும் என்பது சட்டமா? அப்படி ஒரு சட்டமிருந்தால், சட்டம் உடைக்கப்பட்டது அங்கே! பெண் முகம் மனோ கழுத்து வளைவில் புதைந்திருக்க… முத்தம் தின்னும் முரட்டுப் பூவாய் அவள் மாறிப் போக அலர்விழி என்ற சுழலுக்குள் மனோ என்ற காதலன் முழுவதுமாக இழுக்கப் பட்டான். பஞ்சு நெருப்பை முற்றிலும் ஆக்கிரமித்திருக்க… ஆரம்பித்ததை இருவருக்குமே முடிக்கவும் தெரியவில்லை… முடிக்கும் நினைப்புமில்லை.
வெள்ளை தங்கத்தில் செய்த உடல் தானா என்று ஆரம்பித்து, ஆராய்ச்சி அவள் சீனியில் செய்த கடல் தானா என்று முடிவில்லாமல் நீண்டு கொண்டே போனது. 99% மனைவியை 100% மனைவியாக மாற்றும் முடிவில் அவன்.