“என் சாம்ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள், நீ எனக்கு வேண்டும்” என்று பார்த்த அன்றே சகுந்தலையைப் பார்த்து துசுயந்தன் (துஷ்யந்தன்) உரைத்தானாம். கணையாழியிட்டு (முத்திரை மோதிரம்) கந்தர்வ மணம் புரிந்தானாம். ஆணும் பெண்ணும் ஓர் உயிராய் மாறினார்களாம்.
திருச்சபை வளாகத்தில் இன்ஃபினிட்டி நின்றது. மார்க், ஆட்ரே, மார்கரீட்டா, இலக்கியா, பாயல், லீ என்று ஒரு கூட்டமே இவர்களுக்காகக் காத்திருக்க, பெண்ணின் புன்னகை நீண்டது. காலை நேர ஆராதனை முடியவும் சபை கலைய ஆரம்பித்தது. திருச்சபையில், தோழர்கள் சூழ, “வாழ்க்கை பூரா?” என பெண்ணவள் முகம் பார்க்க, “வாழ்கை பூரா!” என்றவளின் வலது கை பிடித்து அவன் பெயர் பொறிக்கப்பெற்ற மோதிரத்தை அணிவித்தான். அவனுக்கு அணிவிக்க வேண்டிய மோதிரத்தில், ‘விழி’ என்று வெளியே பொறித்திருக்க, உள்ளே ‘Till death do us part’ என்றிருந்தது. அடக்கமுடியா உணர்வுகள் மனதை ஏதோ செய்தது. பிடித்திருக்கும் விரலுக்கு சொந்தக்காரன் இனி காதலன் இல்லை, கணவன்!
கோவிலுக்கு சென்றனர். அவர்களோடு அவர்கள் நண்பர்கள் பட்டாளமும் அமைதியாய் நின்றிருக்க, கண்மூடி வேண்டி நின்றவள் கண் திறக்கும் வரை காத்திருந்தவன் சட்டைப் பையிலிருந்து தாலிக் கொடியை கழுத்தில் பூட்டி, குங்குமத்தை தாலியிலும் வகிட்டிலும் வைத்து விட்டான். சொல்லொனா உணர்ச்சிப் பெருக்கில் பெண் மாட்டி, திக்கு முக்காடிப் போனாள் விழி.
ஐயரில்லை, மந்திரமில்லை, கோவில் திருமணத்தை நடத்தவுமில்லை! போதகர் இல்லை, வசனங்கள் போதிக்கப்படவில்லை, திருச்சபை அவர்கள் திருமணத்தை அங்கீகரிக்கப் போவதும் இல்லை! மேளமில்லை. சொந்தமில்லை. அட்சதை இல்லை. பெற்று, உயிராய் வளர்த்த பெற்றவர்கள் இல்லை வாழ்த்த! இப்படி ஆயிரம் இல்லைகளுக்கு இடையே நடந்த இது, நிச்சயம் திருமணம் தான்! சுற்றி நின்று பார்த்தவர்கள் சாட்சிகள் தான்! ஆனால் இந்திய சட்டத்திற்கு அது போதாது! இருவருக்குமே தெரியும்.
இருந்தும் அதுவே போதுமானதாக இருக்க, இருவரும் மனதார விரும்பி முழு நிறைவோடே மண வாழ்க்கைக்குள் புகுந்தனர்.
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று
-மகாகவி பாரதியார்
[வரைமுறைகள் (சாஸ்திரங்கள்) நமக்கெதற்கு கண்ணம்மா? பொறுமையிழந்தவர்க்கு சாஸ்திரங்கள் எதுவுமில்லையடி கண்ணம்மா, காதலின் எல்லையை கடந்து விட்ட என்னைத் தடுத்து நிறுத்தும் சக்தி வரைமுறைகளுக்கு இல்லையடி.
அனுமதி வாங்கி, முன்னோர்கள் முன்னிலையில் திருமணச் சடங்கெல்லாம் பின்னர் பார்த்துக் கொள்வோம், இன்னமும் காத்திருப்பேனோ? காதலின் அணை உடைந்து பெருகி வரும் ஆசை முத்தத்தை பெற்றுக் கொள்ளடி உன் கன்னங்களில்.]
திருமணம் முடித்து வீடு வந்து சேரும் வரையுமே தாலியைப் பார்ப்பதும் அதை வருடுவதுமாக அலர்விழிக்கு சென்றது. நடந்தவை எல்லாம் கனவு போல் எந்த அலட்டலும் இல்லாமல் முடிந்திருக்க, இன்னும் நம்ப முடியவில்லை. மனோவின் மனைவி நான்… உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. இந்த தாலி மட்டும் தானே அவர்களுக்குள் புதிது. காலை விழித்ததும் அவன் முகத்தில் தான்! இருந்தும் இது எத்தனை அவசியமாக இருக்கிறது பிரவீன் போல் மற்ற ஆடவரைத் தள்ளி நிறுத்த?
“உங்களுக்குத் தெரியாது மனோ. என்னைக்கு வீட்டுல ‘மாப்பிள்ளை பார்க்கறோம் வா’ன்னு சொன்னாங்களோ அன்னைக்கு என் நிம்மதி எல்லாம் போச்சு! அதுவும் இந்த ஒரு வாரமா எவ்வளவு அவஸ்தை தெரியுமா? ஏதோ மூச்சுக் குழாயில இருந்த அடைப்பை எடுத்து விட்ட மாதிரி ஒரு பெரிய ரிலீஃப் இப்போ. அடுத்த மாசம் ரெஜிஸ்டர் பண்ணிடலாம் தான?”
“கண்டிப்பா! நான் தான் சொன்னேனே… யார் எதிர்த்தாலும் நீ தான் என் பொண்டாட்டின்னு! காலம் பூரா என் கூட தான்! இப்போ பார் நீ என் கிட்ட வசமா மாட்டிகிட்ட.”
நீண்ட மூச்சுக் காற்றை அவள் வெளியிட, “என்னோட கல்யாணம் செம்ம கிராண்டா நடக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் பட்டேன்! உனக்கும் அப்படி கனவெல்லாம் இருந்திருக்கும் இல்ல? இந்த சாத்திரம், சம்பிரதாயம் எல்லாம் நடுவில வரும்ங்கறதுனாலயோ என்னவோ, அதப் பத்தி நாம பேசிக்கவே இல்ல!
ரிஷப்ஷனுக்கு தான் எந்த சம்பிரதாயமும் இல்லியே… அதுல நம்ம ஆசையப் பூரா தீர்த்துப்போம். ஊருக்குப் போறோம், உங்க அம்மா அப்பா கைல கால்ல விழுந்து, சம்மதிக்க வைப்போம்! அடுத்த ஒரு வாரத்துல ரிஷப்ஷன் வர்ற மாதிரி இப்போவே அப்பாகிட்ட டேட் பார்க்க சொல்றேன்! உனக்கு ஏதாவது ஆசை இருக்கா? அதாவது, பீச் வென்யூல… கார்டன் செட்டிங்ல ஓப்பன் ரிஷப்ஷன்… ஸ்டார் ஹோட்டல்ல ஆயிரம் விளக்குக்கு நடுவுல, இந்த மாதிரி ஏதாவது?”
“ம்ம்ஹூம். அது எல்லாம் நான் யோசிச்சது இல்ல. உங்க இஷ்டம் அது. ஜஸ்ட் சர்ப்ரைஸ் மீ!”
“ம்ம்ம்.. அசத்திடுவோம்! லைஃப் டைம் மெம்மரி கிரியேட் பண்ணுவோம்”
“என்னோட பக்கெட் லிஸ்ட் நினைவிருக்கில்ல?”
“அத மறப்பேனா?” என்றவன் கண்களில் ஏகாந்தம்!
திருமணத்திற்கு வந்த அனைவரோடும் வீடு வந்து சேர, மதிய உணவு வகைகளும் வந்திறங்கின. உணவு முடியவும் கேக் வெட்டி கொண்டாடி, தம்பதியரை வாழ்த்தி நண்பர்கள் வெளியேற மாலையானது.
“டின்னருக்கு கீழ பிஸினஸ் ஹால் புக் பண்ணியிருக்கு, அங்க வந்திடுங்க. எல்லாரும் அங்க தான் இருப்போம்” என்று பாயல் கூறி செல்லவும் அக்கடா என்று சோஃபாவில் அருகருகே அமர்ந்த இருவரிடமும் புதிதாய் முளைத்த கூச்சம்.
“ரெஃப்ரெஷ் ஆகிட்டு வரட்டா…” அவன் எழுந்து கொள்ள, அவளுக்கும் உடையை மாற்றினால் போதும் என்றிருக்க, அவளறைக்கு சென்றாள்.
நீளமான கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள் நீண்ட மூச்சை இழுத்து விட்டுக் கொண்டாள். தலையில் இருந்த சிகப்பு ரோஜா-இதழ் மலர்ச் சரம் முதல் புடவை வரை எல்லாம் மனோவின் தேர்வு. ஆனால் அனைத்துமே அவ்வப்போது அவனிடம் பிடிக்கும் என்று கூறியது.
“ஸாரி சூப்பர், பிளவுஸ் டிசைன் சான்சே இல்ல! அதுக்கு மேட்சிங் நகை, சூப்பரோ சூப்பர்! உனக்கு ரொம்ப நல்ல டேஸ்ட்! எல்லாம் ரொம்ப அழகா இருக்கு அலர். என்னோட கல்யாணத்துக்கு நீ தான் செலக்ட் பண்ணனும்! ஆமா, எத்தன நாள் ஷாப்பிங்? எங்க வாங்கின?” இலக்கியா, பாயலோடு நிற்காமல் ஆட்ரே கூட அதைத்தான் கேட்டாள்.
நுண்ணிய வேலைப் பாடோடு மிளிர்ந்த சந்தன நிற பட்டுப் புடவையை மெல்ல நீவி விட்டாள். அவளின் கல்யாணப் பட்டு! “உங்களுதுல சந்தனக் கலர் இல்ல… எங்க வீட்டுல சிகப்பு இல்ல பச்சப் பட்டு தான்” என்று எப்பொழுதோ கூறியிருந்ததினாலோ என்னவோ, ஆங்காங்கே மென் சிகப்பும், தளிர் பச்சை நிறமும் நூல் வேலைப்பாடாய் தலை காட்டியது.
காதில் ஆடிக் கொண்டிருந்த அந்த பெரிய, பட்டை தீட்டப்பட்ட இளம் சிவப்பு செவ்வக மாணிக்கக் கம்மலை கையில் எடுத்து வெளிச்சத்தில் ஆட்டிப் பார்த்தாள். “எப்படி அலர் இவ்வளவு பர்பெக்ட் மேச்சிங்கா பிங்-ரூபி, ஓசியன் க்ரீன் எம்ரால்ட் வாங்கின? சுத்தி இருக்கறதெல்லாம் டையமண்டா?” பெண்கள் ஆசையாய் தொட்டுப் பார்த்ததை நினைத்து புன்னகைத்தாள்.
அடம் பிடித்து நேற்று தான் வாங்கினான். “இவ்வளவு காஸ்ட்லி செட் வேண்டாமே” என்றதற்கு, “நீ என் பொண்டாட்டி டி… ஆட்டையப் போட தெரிய வேண்டாம். இதெல்லாம் கல்யாணம் ஆன புதுசுல மட்டும் தான்! யூஸ் பண்ணிக்கோ…” என்று சிரித்தான்.
கைகள் கழுத்தை அலங்கரித்த ஹாரத்தை வருடியது. “போட்டு விடவா?” என்று ஆசையாய் மனோ தான் காலையில் அந்த ஹாரத்தை அணிவித்தான். கடல் இளம் பச்சை நிற சின்ன சின்ன மரகதப் பச்சை மணிகள் பூட்டிய கொத்து சரங்கள் நடுவே அழகிற்கு பஞ்சமில்லாத பெரிய செவ்வக இளம் சிவப்பு மாணிக்கத்தைச் சுற்றி வைரம் பதித்த முகப்பு! “இதெல்லாம் அவர் செலக்ஷன்” என்று இவள் கூற, “உன் ஆளுக்கு நல்ல ரசனை” பாயல் பாராட்ட, இலக்கியா, “அது, இவள எபி சைட் அடிக்கும் போதே தெரியலையாக்கும்” என்று ஆரம்பித்து இருவரும் இவளைப் படுத்திய பாட்டிற்கு கன்னம் சிவக்காமல் வந்ததே தெய்வ செயல்!
மார்புக்கும் கழுத்துக்கும் இடையே நின்றிருந்த ஹாரத்தின் மேல் அழகாய் வீற்றிருந்தது மாங்கல்யம்.
என்றோ ஒரு நாள் படம் பார்க்கும் வேளை அவள் தான் கூறினாள், அவன் கட்டப்போகும் தாலி எப்படி வேண்டுமென்று. “நீங்களும் மாப்பிள்ள வீட்டுப் பக்க தாலி தானே மனோ போடுவீங்க. ஆனா எனக்கு ஆன்ட்டிது மாதிரி பெருசா வேண்டாம் மனோ. எல்லா ட்ரெசுக்கும் செட் ஆகாது. முறுக்கு தாலி செயின் வேண்டவே வேண்டாம். நெஞ்சு நீள அழகான மெலிசான செயின்ல, சின்னதா… ரொம்பச் சின்னதா மாந்தளிர் மாதிரி ஒரு ஹார்ட், அதுல ஒரு பக்கம் ஆன்ட்டிது மாதிரி சிலுவை இருக்கட்டும், ஆனா அடுத்த பக்கம் எம்-ன்னு உங்க நேமோட இனிஷியல் இருக்கணும்!”
ஆசையைக் கூறினாலும், பெரியவர்கள் என்ன போட்டாலும் சரி தான் என்று நினைத்தாள். ஆனால் அவள் கேட்டதையே செய்வான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. சிறிய தட்டை இதயவடிவில் ஒரு பக்கம் சிலுவையும் மறுபக்கம் MV என்றிருந்தது.
“என்ன தவம் செஞ்சேன் மனோ, என் வாழ்க்கைல நீங்க வர?” தாலியைப் பார்த்து வாய் முணுமுணுக்க,
“நான் என்ன தவம் செஞ்சேனோ அது தான்” என்றவன் அவள் பின் நின்றிருந்தான்.
கண்ணாடி வழியே அவனைப் பார்க்க, “என்ன டி?” கேட்டவன் பார்வை ரசனையாய் பெண்ணை வருடியது.
“வீட்டுல எப்போ சொல்றது மனோ?”
“கண்டிப்பா இப்போ இல்ல! ஊருக்குப் போய் நேர்ல சொல்லுவோம்.” என்றவன் தெளிவாகவே இருந்தான்.
எப்பொழுதும் பின்னோடு கட்டிக் கொள்பவன் ஏனோ பார்த்தே நின்றான்.
“டிரெஸ் மாத்தப் போன உங்களுக்கு இங்க என்ன வேலை?”
“நீ ஸாரி அவுக்க, பிளவுஸ் பின்னால இருக்க சேப்டி பின்ன எடுக்க வேண்டாமா? அதுக்கு தான் வந்தேன்” என்றவன் பின்னை கழட்டிக் கொடுத்து, “வேற எதயும் கழட்ட என் ஹெல்ப் வேணுமா…” என்று கேட்டு இரண்டு அடியும் வாங்கியே சென்றான்.
உடை மாற்றி தேநீர் போட்ட பின்னும் அவனைக் காணவில்லை. தேநீரோடு அறைக்குச் செல்ல, குளித்து முடித்து ஈர உடலோடு அப்பொழுது தான் வெளியே வந்தான். நிற்கவா… வேண்டாமா என்ற தடுமாற்றம் அவளிடம்.
அவள் தடுமாற்றமும், அவஸ்தையும் பார்த்தவன் முகத்தில் புன்னகை பூக்க, பெண்ணை நெருங்கினான். “என்ன டி?” என்று இடுப்பைக் கரங்கள் சுற்ற, பெண்ணிற்கு மூச்சு முட்டியது. கோப்பை இரண்டையும் வாங்கி மேசையில் வைத்தவன் கைகளுக்குள்ளிருந்தவளுக்கு மெலிதான படபடப்பு.
“ஓய் பட்டு…”
“ம்ம்”
“என்ன டி இந்த நெளி நெளியிற?”
“ம்ம்ஹூம்”
“அப்போ என்னைப் பாக்கவேண்டியது தானே”
விழிகள் நான்கும் மோதிக் கொள்ள, அவன் குறும்புப் பார்வையும், மந்தகாச புன்முறுவலும், பெண்ணை முதன் முதலாய் ஏதோ செய்ய, மார்பில் முகம் புதைத்தாள்.
“மிஸஸ் மனோ… இது தான் வெக்கமாங்க? உங்களுக்கு வெக்கம் எல்லாம் வரும்ன்னு இன்னைக்கு தான் தெரியுது.” அவன் வாய் விட்டுச் சிரிக்க, “உங்களுக்கு தான் வெக்கமே இல்ல. துணியப் போடுங்க…” என்றவள் ஓடியிருந்தாள்.
அதே மனோ… அதே வீடு… அதே அணைப்பு! எல்லாம் அதே தான்! ஆனால்… புதுவித குறுகுறுப்பு. புதுவித படபடப்பு. அவன் ஸ்பரிசம் தந்த புதுமையான இதம், எல்லாமாய் பெண்ணை புதுப் பெண் போல் உணர வைக்க, ‘இதுல என்னமோ இருக்க தான் செய்து’ என்று தாலியைப் பார்த்து நின்றாள்.
“அது உன் கழுத்துல தான் இருக்கப் போகுது. எத்தன தரம் அதையே பார்ப்ப? இந்தா டீ,” என்று அறையில் விட்டு வந்த கோப்பையை நீட்டினான்.
அவன் இரு கரங்களிலும் தேநீர் கோப்பை இருக்க, கரத்திற்கு இடையே புகுந்தவள், எம்பி இதழைத் தீண்டி, “ஆயுசுக்கும்” என்று கூறி கோப்பையைக் கையில் வாங்கினாள்.
நிறைவான மனநிலை! நீல வானம், வெண் பஞ்சு மேகம், பச்சை இலை எல்லாமே அழகாகத் தெரிந்தது.
குளிர் காற்று மேனி தீண்ட, மனதை நிறைத்தவன் மார் சாய்ந்து, சுகம் தரும் அணைப்புக்குள் தன்னை மறந்து சூடான தேநீரைத் தொண்டைக்குள் இறக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு உலகம் மிகவும் அழகாகவும் இன்பமாதாகவும் தோன்றியதில் வியப்பில்லையே!