பெண்கள் ஏவுகணையைப் பறக்க விட்டாலும், போர் விமானத்தில் பறந்தாலும், இன்றும் இனப் பெருக்கத்தின் தலைவனின் வித்தை அடை காக்கும் பெட்டகமாகவே ‘சில படித்த மேதாவி’களும் பெண்களைப் பார்க்கின்றனர்.
நேற்று வரை வீட்டுக்குள் புதைத்தான். அவன் காலடியில் காத்திருக்கும் செருப்பாய் வனைந்தான், கணவனையும் பிள்ளைகளையும் பேணிக் காப்பதில் மட்டுமே பெண்ணின் வாழ்நாள் பயன் இருப்பதாக அவள் மூளையில் ஏற்றி வைக்க முயன்றான். பல நேரம் அதில் வெற்றியும் பெற்றான்.
கற்பென்று அவளுக்கு மட்டுமே ஒன்றைக் கண்டுபிடித்து, அதை அவளுக்கு போதித்து, அதைக் கெடுக்கும் வித்தையையும் கற்றவன், அவன் கைப்பாவையாகப் பெண்ணை உள்ளங்கையில் அடக்கிக் கொள்ள, பெண்ணின் குணங்களை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவன் விருப்பம் போல் பெண்ணை வடிவமைத்தான்!
காதல் கொண்ட இதயங்களால் மட்டுமே இதைத் தாண்டி சிந்திக்க முடிகிறது. ஆணும் பெண்ணும் சமமாக மாறிப் போவது அவர்கள் பார்வையில் மட்டுமே. பேரன்பு இருக்கும் வரை பாலியல் கொடுமைகள் கொண்டு பெண்ணை அடக்க முடியாது என்பது திண்ணம்.
இந்த கண்மண் தெரியாத, உலக கோட்பாடுகளைத் தகர்க்கும் காதல் இன்று நேற்றில்லை… அது உள்ளது காவிய காலம் முதலே. காதல் மனைவிக்கு மேகத்தைத் தூது விட்ட காலத்திற்கு முன்னமே உள்ளது இந்தக் காதல். திருவள்ளுவனும் ஏழு வார்த்தை குறள்களுக்குள் அடக்க முயன்றான், அடங்க மறுத்த காதலை.
‘தைபர் நதி ரோமில் உருகிப் போகட்டும்! ரோம் சாம்ராஜ்யத்தின் தோரண வளையம் குப்புற வீழட்டும்! என் வசிப்புத் தளம் இதுதான்!’ என்று கிளியோபட்டராவிடம் உருகிக் கிடந்தான் மார்க் ஆண்டனி. கிளியோபட்டரா இல்லாத உலகத்தை விட வாளுக்கு இறையாவதை விரும்பி உயிர் நீத்தான் அந்த காதல் பித்தன். மார்க் ஆண்டனி மட்டுமல்ல, மனோவாவும் அந்த வகையை சேர்ந்தவன் தான் போலும்!
‘காதல் மரணத்தைப் போல் வலியது’ என்ற ஒரு கிரேக்கக் கூற்றுண்டு! அப்படித்தான் மனோவா காதலும் வலியதாக இருக்க வேண்டும். அதனால் தான் அலர்விழி மீண்ட பின்னும் அவனால் மூச்சுவிடக் கூட முடியவில்லை.
அன்றைய தினம் அப்படியே போக, ஞாயிறு புதிய விடியலோடு புலர்ந்தது.
“சாரி மனோ” என்பது தான் கண் விழித்த அலர்விழியின் முதல் வார்த்தை.
தலை வருடவே பிறவி எடுத்தது போல் மனோ அவள் தலை வருடி அமர்ந்திருக்க, “ரெண்டு பேரும் ஆசையா இருந்த நேரத்த நான் மறந்துட்டு, உங்கள வில்லன பார்க்கிற மாதிரி பார்த்து வச்சிருக்கேன். நடந்தது நினைவுல இல்ல… ஆனா இருந்திருக்கலாம்ன்னு தோணுது. என் மனோ கூட நான் இருக்க நிமிஷம் எல்லாம் எனக்கு பொக்கிஷம். அத மறக்க என்ன அவசியம். ப்ச்!” என்றவளை வாரி அணைத்தவனுக்கு பதில் பேசத் தெரியவில்லை.
“வேண்டாம். மறந்து போனது மறந்ததாவே இருக்கட்டும். அது நமக்கு நினைவுல இருக்கவே வேண்டாம். மறக்கவே முடியாதபடி காதலிப்போம். அது போதும்” என்று குரல் கமற கூறியவனை நேசிக்காமல் இருக்க முடியுமா?
“நான் உங்க மேல பழி போட்ட பிறகும் எப்படித்தான் என் மேல கோபமே இல்லாம இருக்கீங்களோ, என் செல்லம் மனோ நீங்க!” கொஞ்சி, கன்னம் கிள்ளி முத்தம் கொடுக்க, என்ன முயன்றும் அவன் கன்னம் ஈரமாவதை அவனால் தடுக்க முடியவில்லை.
“நானே சும்மா இருக்கேன். நீங்க, கற்பு போச்சுன்னு நினைச்சு நினைச்சு அழுவீங்களா? போதும் எழுந்திரிங்க! விட்டா என்னையே கில்ட்டியா ஃபீல் பண்ண வச்சிடுவீங்க! ஏமாத்தாம கல்யாணம் பண்ணிக்கிறேன். எனக்கு ரொம்பப் பசிக்குது மனோ. ஃப்ரிட்ஜுல என்ன இருக்குன்னு பாப்போமா?” என்று எபியை இழுத்துக் கொண்டு அடுக்களை சென்று வயிற்றை நிரப்ப ஆரம்பிக்கவும் அம்மாவோடு பேசியதைக் கூறினாள்.
“கடுப்பாகுது மனோ. புரிஞ்சுக்கவே மாட்டாங்களான்னு இருக்கு! இவ்வளவு சொல்லி இருக்கேன்… தட்ட மாத்தியாச்சுன்னு சொன்னா என்ன தான் அர்த்தம்? மாப்பிள யாருன்னு சொல்லுங்க பாப்போம்?”
“…”
“டாக்டர்.பிரவீன் குமார்!”
கேட்டவனுக்கு முதுகில் குத்தப்பட்ட வலி. பிரவீன் பற்றிய பேச்செழவும் மெல்ல ஆரம்பித்தான் எபி. “வாட்கா பாட்டில் எப்பிடி வீட்டுல? மார்க் வீட்டுல வச்சு குடிக்க மாட்டானே…”
“பிரவீன் வந்தார். ஏதோ புக்க விட்டுட்டு போயிட்டார் போல, அத எடுக்க வந்தார். கொஞ்ச நேரம் பேசினேன். கல்யாண பேச்ச நிறுத்துங்கன்னு சொன்னேன். அவராலயும் என் முகம் பார்த்துட்டு இருக்க முடியல, ‘நீ ரெஸ்ட் எடு நான் கிளம்பறேன்’னு சொல்லி கிளம்பிட்டார். அவர் குடிக்க வச்சிருந்தத, நீங்க எனக்கு கலக்கி வச்சிருந்த லெமன் சோடான்னு நினைச்சு குடிச்சுட்டேன். அது தான் அந்தத் தூக்கம்… எல்லாம். நான் ஒரு லூசு, மாத்திர முழுங்கும் போது இல்லாத சோடா எங்க இருந்து வந்துதுன்னு யோசிக்க வேண்டாம்? ப்ச்! இவருக்கு இந்த பழக்கம் எல்லாம் இருக்கும்ன்னு நான் நினைச்சதே இல்ல!”
பிரவீன்! எதிர்பார்த்த பதிலே தான்! எவ்வளவு சுலபமாக எப்பேர்ப் பட்ட வலியை இறக்கி விட்டு சென்று விட்டான்! என்ன விதமான மனிதன் இவன் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. அடிதடி, சண்டை இதெல்லாம் பழக்கமில்லாதவனுக்கு பிரவீனை என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் எது செய்தாலும் அலர்விழி கவனத்தில் வரக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். பின்னொரு நாளில் ஹமியிடம் பிரவீன் பற்றிய விபரம் கொடுத்து விசாரிக்க சொன்னதில் அவன் சென்னையில் இல்லை என்பது வரை தெரிந்தது. என்றானாலும் சென்னை பக்கம் வந்து தானே ஆகவேண்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று மனதில் பதித்துக் கொண்டான்.
நகு அழைத்தாள். “என்ன டி?” என்றவளிடம் பெண் கொட்டி தீரித்தாள்.
“உன் கூடப் பிறந்தவ தானே நான். எனக்கு சொல்ல மாட்டியா உன் விஷயம் எதுவும்? அம்மா, அப்பாட்ட பேசிட்டு இருக்கவும் எதேச்சையா கேட்டேன்! ஏன் டி சொல்லல?” என்று அக்காளை திட்டித் தீர்த்தாள்.
“எனக்காகப் பாக்காத அலர். அத்தானுக்கு என்னை விருப்பம்ன்னா கல்யாணம் பண்ணிக்கட்டும். நீ அவர் அண்ணன கல்யாணம் பண்ணினா தான் என் கல்யாணம் நடக்கும்ன்னா அது எனக்கு வேண்டவே வேண்டாம்.” என்று தங்கையாய் நகு உருக, பெண் மனம் கனத்து போனது.
“வினோ அத்தான் வீட்டுல யாரும் பிரச்சனை கிளப்ப மாட்டாங்க தான். ஆனா கேப் கிடைச்சா எல்லாரும் உள்ள நுழைஞ்சு பிரச்சனைய பெருசாக்குவாங்க! யாரும் உள்ள நுழையாம இருக்க என்ன பண்ணனுமோ அதப் பண்ணு! உங்கள பிரிக்க முடியாதுன்னு தெரிஞ்சா தான் பிரிக்க நினைக்க மாட்டாங்க! புரியுதா?” ஏதோ உள்ளர்த்தத்தோடு பேசினாளோ? பெண் வளர்ந்து விட்டாள் போலும்!
“மாமாவோட ஃபோட்டோவ அனுப்பு. ரொம்ப நல்லவரா? எனக்கு எப்போ ஃப்ரெண்ட் ஆக்குவ அவங்கள? ஊருக்கு வரும்போது கொழுந்தியாளுக்கு பெட்டி நிறைய சாமான் வாங்கிட்டு வந்து அசத்தணும்ன்னு சொல்லி வை! ஆமா… பாக்க எப்பிடி சூப்பரா இருப்பாரா? இருப்பார் இருப்பார் இல்லேனா நீ ஏன் போய் தொப்புன்னு காதல்ல விழுவ? வேற ரிலிஜியனாமே? நீ கிரிஸ்டியனா மாறப் போறியா? கல்யாணத்துக்கு ஃபிராக் எல்லாம் போடுவியா? மோதிரம் மாத்தி கல்யாணமா? இல்ல தாலி கட்டு இருக்குமா?” துள்ளல் குறையாமல் நகு பேச இவள் தான் வாயடைத்துப் போனாள்.
“மாப்பிள்ளைய விட அவர் அம்மா தான் இம்பார்ட்டன்ட்! மாமாவோட அம்மா எப்டி? அவங்கள முதல்ல தெரிஞ்சுக்கோ சரியா? நான் ஒண்ணு சொல்லட்டா… அந்த டாக்டர் வீடு உனக்கு வேண்டாம் அலர். அத தான் நான் அம்மாட்ட சொன்னேன். மண்டையிலயே ஒண்ணு வச்சாங்க. எனக்கு அந்தம்மாவ சுத்தமா பிடிக்கல. பாக்கி பெரியம்மா மாதிரியே பொல்லாத வாய்! அவங்க கூட எல்லாம் மனுஷன் வாழவே முடியாது! அச்சோ, அம்மா வராங்க… அப்புறம் பேசறேன்”
கோடை மழை போல் கொட்டித் தீர்த்திருந்தாள் நகுநா. நகு கைப்பேசியை வைக்கவும் மனோ, அலர் இருவரும் முகத்தை பார்த்துக் கொண்டனர். ஸ்பீக்கரில் இருக்கவும் அவள் பேசியதெல்லாம் மனோவும் கேட்டான்.
“அவ ரொம்ப அமைதின்னு சொன்ன?”
“அஞ்சு வருஷம் ஆச்சு நான் வீட்ட விட்டு வெளில வந்து. அப்போ அவ அதிகம் எல்லாம் பேச மாட்டா… இப்போ தான் ரெண்டு மூணு வருஷமா இப்பிடி! எல்லாம் வினோ த்தான் வேலை!”
பேச்சு நகுவை சுற்றி, வினோவைத் தொட்டு, மாதவனில் முடிந்தது.
“உங்க வீட்டுக்கு சொல்லியாச்சு! எப்போ உன் அண்ணாக்கு சொல்லப் போற? சீக்கிரம் சொல்லிடு. கோவிச்சுக்கப் போறான்! நீ சொன்னா தான் நான் அபிட்ட வாய் திறக்க முடியும்.”
சங்கு பாப்பாவை பார்த்தே மாதமாகியிருக்க, நீண்ட நாளுக்கு பின் எபி, அபியை அழைத்தான். காணொளியில் குட்டி அழகி தான் வந்தாள். மழலை நீங்கா மொழியில் கதைத்தாள். அவள் மழலையில் மயங்கிப் போனான் எபி.
“மாமா மாமா… பாப்பு குட்டி விளையாட குட்ட்ட்ட்ட்டி பாப்பா மம்மி டம்மில இருக்கே” என்று அபிகெயில் கூற நினைத்த விடயத்தை மழலை போட்டுடைத்தாள்.
அலர்விழி குஷியாகிப் போக, இவனுக்குத் தொண்டை அடைத்தது. இப்படி ஒன்றை எண்ணாமல் போனோமே என்று!
பிரவீன் செய்த காரியத்தை வெளியே கூறுவானா? கூறும் வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றியது மனோவிற்கு! காரணம் இல்லாமல் இப்படிப் பட்ட காரியத்தில் அவன் இறங்கியிருக்கவே மாட்டான் என்பது எபியின் கணிப்பு! வயிற்றில் ஏதேனும் வந்து விட்டால்? அதைக் காரணம் காட்டி திருமணம் செய்ய முயல்வான். நினைத்துப் பார்க்கவே முடியவில்லை எபியால்.
மருந்தகம் சென்று ‘பிளான் பி’ மாத்திரை வாங்கி வந்தான். இவன் கொடுக்க, வாங்கியவள் கரம் நடுங்கியது. ‘ஏன் மனோ?’ என்றாள் பார்வையாலேயே…
“72 மணி நேரத்துக்குள்ள எடுக்கணுமாம். போட்டுக்கோ. யோசிக்காத! ஏன்னு கேக்காத. ப்ளீஸ் டி” என்றவன், உள்ளே சென்று விட்டான்.
அசைவில்லாமல் நின்றிருந்தவள் மெல்ல வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள். நடந்த எதுவும் நினைவிலில்லை. நினைவில் இல்லை என்பதற்காக அது உண்மை இல்லை என்று ஆகி விடாதே! தடம் பதித்திருப்பானோ? திருமணம் முன் பிள்ளை உண்டாவதை அவன் விரும்பவில்லை போலும்!
ஆனால், கருத்தரித்து விடாமல் இருக்க மாத்திரை அவசியம் தானா? அலுவலகத் தோழியும் இப்படி தானே குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுகிறேன் என்று மருத்துவரிடம் கேட்காமல் கண்ட மாத்திரையும் போட்டு மூன்று வருடமாக பிள்ளைக்காக வேண்டாத தெய்வம் இல்லை! தனக்கு அந்த அவஸ்தை தேவையா?
உயிர்த் துடிப்பை நிறுத்துவது பாவமாகாதா? மனோவோடான நிகழ்வை ஏற்றாயிற்று! அதற்குச் சின்னமாக அவள் மனோவின் வாரிசு வந்தால் தான் என்ன என்று தோன்றவும் மாத்திரை குப்பைத் தொட்டியில் தஞ்சம் புகுந்தது.
திருமணம் ஆகவில்லை! நினைவோடு கூடல் நிகழவில்லை. நடந்த விஷயத்தால் இடை, அதன் வடிவை இழக்குமோ? தெரியவில்லை. இதெல்லாம் போதாதென்று வீட்டில் அவள் காதலை காது கொடுத்துக் கேட்க ஆளில்லை!
ஒரு வாரம் அவஸ்தையோடு சென்றது. “நிச்சயத்துக்கு என்ன கலர் புடவ வேணும்?” “வேலைய சென்னைக்கு மாத்த சொல்லி கேட்டாச்சா?” “எப்போ வர? பையன் வீட்டுல உன்ன பாத்து பூ வைக்கணுமாம்… சீக்கிரம் வா” இப்படியான பேச்சுகளிடையே வெந்து போனாள். அப்பாவோடு சண்டையிட்டாள். “உன் அம்மாவுக்காக, மனச மாத்திக்கோ பாப்பா. காலப் போக்கில சரி ஆகிடும் மா. நீ வீட்டுக்கு வா, பேசுவோம்” என்று அப்பாவும் கைவிரித்து விட பெண் துவண்டு போனாள்.
அலுவலகத்தில் இரு வாரங்கள் கழித்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றனர். ஊருக்கு செல்லும் தைரியம் சுத்தமாக இல்லை. அவள் பதட்டமும், பயமும் எபியையும் அதிகம் பாதித்தது. அவஸ்தையோடு நாட்களை இருவராலுமே தள்ள முடியவில்லை.
“அப்பாட்ட சொல்லிட்டேன் விழி. அடுத்த மாசம் ரெஜிஸ்டர் பண்ணிடலாம்! எனக்கு இன்னும் லீவ் அப்ரூவ் ஆகல டி” என அவன் கூற, “என் கூட வாழ விருப்பம் இருக்கா இல்லியா?” என்று கேட்டதோடு அவனோடும் பேசவில்லை.
வெள்ளி இரவு வீட்டுக்கு வந்தவனை கட்டி நின்றவளின் நடுக்கம் அவனை அதிகமாகத் தாக்கியது. பெண்ணின் தவிப்பும் பயமும் பார்க்க சகிக்கவில்லை மனோவிற்கு. பிரவீன் அதிகமாய் நெஞ்சை அரித்தான். இரவு முழுவதும் யோசனையில் சென்றது. ஒரு வாரமாகவே இருவர் நிம்மதியும் நீர் பட்ட கோலமாய் மாறியிருக்க, அம்மாவை அழைத்துப் பேசினான்.
காலை அலர்விழி அடுக்களை வர, காபி கலக்கிக் கொண்டிருந்தவன், “குட் மார்னிங்க டா பட்டு” என்று மின்னல் புன்னகையை வீசி, “இந்தா…” என்று ஒரு கோப்பை காபியைக் கொடுத்தான்.
நாவு காபியை ருசிக்க, கண்கள் நான்கும் புலர்ந்து வரும் காலை அழகை ரசிக்க முயன்று தோற்றன.
“என்னங்க அந்த மஞ்ச பறவ என்ன அழகா கூடு கட்டுது பாருங்களேன்” என்றவள் பார்வை மரத்தில் கூடு கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கன் கோல்ட்பிஞ் மேல். “நல்ல திறம தான் இந்தப் பறவைங்களுக்கு! இனி பொண்டாட்டி தேடுமோ?” லயித்து பேசிக் கொண்டிருந்தவளிடம், “அது பொண்ணு பறவ. ஆண் பறவ இன்னும் மஞ்சளா இருக்கும் விழி” என்றான்.
“உங்களுக்கு தெரியாத விஷயம் ஏதாவது இருக்கா?” அலுத்துக் கொள்ள நினைத்தாலும் உள்ளுக்குள் பெருமை தான் எபியை நினைத்து.
“கல்யாணம் பண்ணிக்கலாமா விழி” ஆழமான தொனியில் கேட்டவனிடம் சிறிதும் படபடப்பு இல்லை. தெள்ளத் தெளிவான கேள்வியை நிதானமாகக் கேட்டான்.
பறவை பற்றி தானே பேசிக் கொண்டிருந்தாள்? திருமணம் பற்றியா கேட்டான்? தலை திருப்பி எபி முகம் பார்க்க, அவன் பார்வை இரு கிளைகளுக்கிடையே இருந்த கூட்டின் மேல். குருவி கூடப் பிடித்த இடத்தில் கூடு கட்டி பிடித்த வாழ்வை சுதந்தரமாக தேர்வு செய்து விடுகிறது!
“அப்பா உங்க வீட்டுல பேசினாங்க. உங்க வீட்டுல காது கொடுத்து கேக்கக் கூட ரெடியா இல்லியாம்! ‘மறக்க முடியாத அளவுக்கு இது என்ன காவியக் காதலான்னு கேக்கிறவங்களுக்கு என்ன பதில் கொடுக்கிறதுன்னு தெரியல எபி’ன்னு சொல்லிட்டார்.”
காவியக் காதல் அழகு தான்! கேட்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும்! அதன் ஆழமும் அழுத்தமும் அப்படி! ஆனால் அதை வாழ்ந்தவர்களுக்கு? காவியக் காதல்கள் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை!
மலைக்க வைத்த காவியக் காதலை ருசி பார்க்க லைலா-மஜுனு, அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட் என்று எவரும் உயிரோடு இருக்கவில்லை! கண்ணீரில் முடிந்தால் மட்டுமே அது காவியக் காதல்! காவியங்களில் கண்ணீர் விடவைக்கும் காதல், வீட்டிற்குள் நுழையும் வேளை வரவேற்கப் படுவதில்லை என்பது அப்பட்டமான உண்மை. வீட்டிலுள்ள இவர்கள், பாரதி கூறியது போல் காதலையும் பாடை கட்டி அனுப்ப தானே நினைக்கின்றனர்.
பெற்றவர்களுக்காக விலகலாம்! காதல் வலியால் வேறு திருமணம் செய்யாமல் வாழ்வை வெறுத்து வாழலாம். இல்லை பிடிக்காத ஒருவரை மணந்து காலம் முழுவதும் கண்ணீர் விடலாம்! கண்ணீரோடு வாழ்ந்து? இவர்கள் காதலும் காவியக் காதல் என்ற பெயரை சூட்டிக் கொண்டு?
“சொல்லு விழி, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றவன் சத்தியமாக அவளோடு விளையாடவில்லை என்பதை அவன் முகபாவம் காட்டியது.
வீட்டினர் முன் தான் திருமணம் என்றவனா பேசுவது? “கல்யாணமா? நாமளேவா? வீட்டுல?” கலவையான உணர்வு எட்டிப் பார்த்தது பெண்ணிடம். வாரம் முழுவதும் சண்டையிட்டாள் தான்! ஆனால், மனோவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை இந்த முடிவை!
“ம்ம்ம்… இதுக்கு மேல பேச ஒண்ணும் இல்ல! பண்ணிக்கலாமா?”
“மனோ… இங்..கயா?”
“உங்க வீட்டுல ஒத்துக்கல! நீ அங்க போன பிறகு உன்ன திரும்பவும் வேலைக்கு எல்லாம் அனுப்புவாங்கன்னு கனவு காணாத! அவங்க சரி சொல்லுவாங்கன்னு நாம தனித் தனியா காத்திருக்கிறதில பிரயோஜனம் இல்ல விழி! அப்படியே காத்திருந்தாலும், உன்ன கடலூர்ல விட்டுட்டு என்னாச்சோன்னு பதட்டத்துலயே என்னால காலம் தள்ள முடியாது. நிச்சயமா, உன்ன கார்னர் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சே உன்ன என்னோட காதலியா அனுப்ப முடியாது! எனக்கு வாழ வேண்டிய வயசுல உன் கூட வாழணும்! என்னோட வாழ, என் மனைவியா வாழ்க்கைய ஆரம்பிக்க உனக்கு சம்மதம் தானே?”
எச்சில் விழுங்கி, “ஆ…ஆமா மனோ. ஆனா எப்டி?” என்றவளுக்கு பதட்டம் கூடியதே ஒழிய சற்றும் குறையவில்லை. மனோ வேண்டும் தான்! ஆனால் அம்மா அப்பா?
தோளோடு அணைத்தவன், உச்சந்தலையில் இதழ் பதித்து, “உனக்கு யோசிக்க டைம் வேணும்ன்னா… எடுத்துக்கோ. நீ முழு மனசோட சரி சொல்றவரை காத்திருக்கேன். ஆனா என் மனைவியா தான் உன்ன ஊருக்கு கூட்டிட்டுப் போவேன். என்னால ரிஸ்க் எடுக்க முடியாது! உன்ன யாருக்காவும் என்னால பிரிய முடியாது விழி! யூ ஆர் மைன்! மைன் அலோன்!” என்றவனைப் பார்த்தவளின் மனதின் அலைப்புறுதல் நின்று போனது. மனோவின் உள்ளங்கைக்குள் கையை அடக்கிக் கொண்டாள், என் விருப்பும் வெறுப்பும் உன்னைத் தாண்டாது என்பது போல்.