பெண் நட்பென்னும் எல்லைக்குள் இருந்தாலும், பாலைவனமாக இருந்த வாழ்வில் சுனையாய் தெரிந்தாள் அலர்விழி. பிரவீன் மனம் இறக்கை இல்லாமல் விண்ணில் பயணித்தது. விளையாட்டின் இடையே அலர்விழியின் விரல் தீண்டலில் மனம் சிலிர்த்தது. இனி இவளைப் பிரிந்திருக்க முடியாது என்பது தெளிவாய் தெரிந்தது. ‘லவ் யூ அலர்விழி’ என்று மனம் கூப்பாடு போட்டது.
“உங்க டர்ன் தான் என்ன பண்றீங்க அத்தான். நம்ம டீம் விண் பண்ண வேண்டாமா?” என்று அலர்விழி அவனை உலுக்கவும் தரை இறங்கினான் பிரவீன்.
“என்ன மா?” என்ற மருத்துவனைப் பார்த்து அமர்ந்திருந்த எபெனேசருக்கு என்ன தோன்றியதோ, நேரம் பார்த்தவன், “விழி… முதுகு வலிக்குது படுக்கணும்ன்னு சொன்னியே. மணி பண்ணெண்டு. போ போய்ப் படு,” என்று அலர்விழியைக் கிளப்பினான்.
“இல்ல மனோ… கேம் நடுவுல…”
“உனக்கு வலிக்குது தான? கிளம்பு,” என்ற தொனிக்கு மறுபேச்சு பேச தோன்றவில்லை.
“ஆமா மனோ, வலிக்குது. கிளம்பறேன். காலைல பார்ப்போம்” என்று பாயல் வீட்டுச் சாவியை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
தனியே பெண்ணை விட மனமில்லையோ இல்லை விட்ட சம்பாஷனையை தொடரும் நோக்கமோ, “நான் வீட்டு வாசல் வரை உன் கூட வரேன் அலர்விழி.” அவள் பதிலுரைக்கும் முன் கூடவே சென்றான் மருத்துவன்.
“தேங்க்ஸ்” என்றவனை ‘ஏனாம்?’ என்பது போல் பார்த்தாள்.
“எனக்கு இந்த மாதிரி எல்லாம் புதுசு! கூட்டம்… கும்மாளம்… பிடிகாதுன்னு நினைச்சேன். ஆனா நீ இருந்ததுனால, உண்மையாவே நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன். மைண்ட் ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு!”
“ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லுவாங்களா?”
“பசிக்கிறவனுக்கு தான் சாப்பாடோட அருமை தெரியும் அலர்விழி. உனக்கு புரியாது. என் லைஃப்ல இதுக்கு எல்லாம் இடமே இல்லாம இருந்துது. உன் கூட பழக ஆரம்பிச்ச பிறகு தான், இந்த ஆறு மாசமா வாழ்க்கைக்கு மறுபக்கம் இருக்கறதே உணருறேன். அப்போ தேங்க்ஸ் சொல்லி தானே ஆகணும்!”
“ஓகே ஓகே… உங்க நன்றி மூட்டைய பத்திரமா வச்சுக்கிறேன்.”
அவள் புன்னகைக்க, “உன் ஃப்ரெண்ட்ஸ்… நீங்க எல்லாரும் ஒண்ணா வேலை பாக்கறீங்களா?” என்ற அவன் சந்தேகத்தைக் கேட்டான்.
“பாயல், ஒரே பில்டிங்னால பழக்கம். மனோ தான் அவளோட பேசிப் பழகி எனக்கும் அவள க்ளோஸ் ஃப்ரெண்ட் ஆக்கினார். என்னை விட மனோ கூட தான் அவ க்ளோஸ். மத்த எல்லாருமே எனக்கு மனோ மூலம் தான் தெரியும்.”
“எபெனேசர் எப்பிடி உன் லைஃப்ல?”
“நான் படிச்ச கம்யூட்டர் சென்டர் இவருது”
“ம்ம்ம்… எபெனேசர் கூட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஷிப்போ?”
“ம்ம்… ஆமா த்தான்”
“ஃப்ரெண்ட்ன்னு சொல்ற, அவன பத்தி உனக்கு தெரியும் தானே? அவன்…. என்ன சொல்ல, எப்பிடி சொல்லன்னு தெரியல. ஆனா அவன் கூட ஃப்ரெண்ட்ஷிப் உனக்கு என்னைக்கும் நல்லதில்ல அலர்விழி. மூணு தரம் நானே பார்த்திருக்கேன், அவன் சரி இல்ல அலர்விழி. கவனமா இரு.”
மெல்ல புன்னகைத்தாள். “நீங்க கண்ணால பாத்ததும், காதால கேட்டதும் பொய் அத்தான். அவரோட ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள் ரொம்பப் பெருசு. அதுல 50% பொண்ணுங்க. தப்பா பார்த்தான், தப்பாப் பேசினான்னு ஒரே ஒருத்தரை சொல்ல சொல்லுங்களேன்… மாட்டாங்க!
உங்களுக்கு ஆரம்பத்துலயே அவர் மேல் ஒரு தப்பான எண்ணம் ஏற்பட்டிடுச்சு! அதுதான் அரண்டவனுக்கு இருண்டது எல்லாம் பேய்ன்னு சொல்ற மாதிரி, அவர தப்பாவே பார்க்கத் தோணுது உங்களுக்கு.
உங்களுக்கு படம் பார்க்குற பழக்கம் இல்லன்னு தெரியும். தளபதின்னு ஒரு படம். ரஜினி, மம்முட்டின்னு ரெண்டு பெரிய ஸ்டார்ஸ் நடிச்சது. ஃப்ரெண்ட்ஷிப்னா இது தான்னு சொல்ற ரெண்டு கேரக்டர்ஸ்! ஒரு சீன்ல, ரஜினி சொல்லுவார் ‘உனக்காக என் உயிர குடுப்பேன்’னு அதுக்கு மம்முட்டி கேப்பார் ரஜினிட்ட, ‘ஏன்?’ன்னு. அதுக்கு பதில் என்ன சொல்லுவர் தெரியுமா? ‘ஏன்னா நீ என் நண்பன்’னு!
மனோ பத்தி உங்களுக்கு தெரியல அத்தான். என் விஷயத்துல மனோவும் அப்படித்தான். அவர்கிட்ட ‘ஏன்’னு கேளுங்க, ‘விழி என் உயிர்’ன்னு யோசிக்காம சொல்லுவார். அவரே ஆசப் பட்டா கூட என்னைத் தவிர வேற பொண்ண அவரால கனவுல கூட நெருங்க முடியாது.”
“அலர்விழி!?” என்ன கூற வருகிறாள்?
“எனக்கும் அப்பிடிதான் அத்தான். மனோக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஏன்னா மனோவ நான் உயிருக்கும் மேலா விரும்பறேன்.”
நொறுங்கிப் போனான் பிரவீன். இப்படி ஒன்றை அவன் எதிர்பார்க்கவில்லை. வலித்தது. மூளை மட்டுமே சிந்திக்கும் என்ற மருத்துவனின் சிந்திக்கத் தெரியாத இதயம் கசக்கிப் பிழிந்து வலித்தது. அதிலும் அலர்விழி தேர்ந்தெடுத்தவன், ஒரு அயோக்யன்! எல்லா விதத்திலும் தான் அவளுக்கு பொருத்தம் தானே… ஏன் அலர்விழி? அழ ஆசை கொண்டான், காதலில் தோற்றுப் போன பிரவீன்.
“உங்களுக்கு அவர பிடிக்கலன்னு எனக்குத் தெரியும். எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கணும்னு அவசியமும் இல்ல. உங்க நம்பிக்கை வட்டத்துக்குள்ள அவர் இல்லங்கிறதுக்காக அவர் தப்பானவரும் இல்ல, நம்பத் தகாதவரும் இல்ல. உங்களுக்கு அவர் கூட ஒத்து வரலை. அது அவர் குத்தமில்ல.
என் மேல் உயிரா இருக்க அப்பாக்கு எனக்கு நல்லது மட்டுமே தான் நினைக்க முடியும். அப்படிப்பட்ட அப்பா கிட்டயே என் வாழ்க்கை டெசிஷன்ஸ் எதையுமே எடுக்க விட்டது இல்ல நான். என் படிப்பு, வேலை… ஏன் நான் உடுத்தற துணி வரைக்கும் என் முடிவு தான்!
ஆனா நான் கண்ட என் எதிர்காலக் கனவை, கண்ண மூடிட்டு மனோ கிட்டக் கொடுத்தேன்! இனி மேலும் நிறையக் கனவு காணுவேன், அவர் கனவை எனதாக்கிப்பேன், அவர் என் கூடவே இருக்க தைரியத்துல! அவர் மேல இருக்கற அசைக்க முடியாத நம்பிக்கைனால!
மனோ ரொம்ப நல்லவர் அத்தான். நீங்க தான் எனக்கு சப்போர்ட் பண்ணி வீட்டுல பேசணும். எங்க கல்யாணத்தால நகு-வினோ கல்யாணத்துல எந்தப் பிரச்சனையும் வராதுன்னு அம்பிகா அத்த, அம்மாகிட்ட சொல்லணும் அத்தான். அது நீங்க நினைச்சா நடக்கும்!”
நின்றவன் நின்று போனான். இனம் புரியாத உணர்வு அவனைக் கவ்விக் கொண்டது. பிடிக்காத கசப்பை விழுங்கினான்.
“என்ன த்தான் நின்னுடீங்க?”
தொண்டை அடைத்து வலிக்க, “உண்மையாவே அவன லவ் பண்றியா அலர்விழி?” எனக் கேட்டவன் கண்களில் மிதமிஞ்சிய வலி.
கீற்றாய் புன்னகை வந்தது. “இதில ஷாக் ஆக என்ன இருக்கு அத்தான்?”
தோய்ந்து போன குரலில், “விளையாடுறியா அலர்விழி?” என்று கேட்டவன் விழியில் ஊற்று.
“இதில விளையாட என்ன இருக்கு? அவர் அநியாயத்துக்கு ஸ்மார்ட் ஆண்ட் சார்மிங் தான்! அதுக்காக நான் அவருக்குப் பொருத்தமில்லையா என்ன? நாங்க நல்ல பேர் தான் த்தான். மேட் ஃபார் ஈச் அதர்!”
“நான் இத உன் கிட்ட இருந்து எதிர்பார்க்கல அலர்விழி,” கூறியவன் முகமும் சத்தமும் விழுந்து போனது.
“உங்களுக்கு மனோவ பிடிக்காதுன்னு தெரியும். ஆனா உங்க கணிப்பு 100% தப்புன்னு கற்பூரம் அணைச்சு சொல்லுவேன். அவர் ரொம்ப தங்கமானவர் அத்தான். நீங்களே எனக்கு மாப்பிள்ளை தேடினா கூட அப்பிடி ஒருத்தர பார்க்க முடியாது. அவர் மேல இருக்கற உங்க அபிப்பராயம் மாற கஷ்டம் தான். இருந்தாலும் அத உங்களுக்குள்ளேயே வச்சுக்கோங்க… வீட்டுல அப்பிடி எதுவும் அவரப் பத்தி சொல்லிடாதீங்க. பிளீஸ்!”
“ஒரு வாழ்க்கை அத்தான்! அத நம்ம மனசுக்கு பிடிச்சவங்களோட வாழணும். காதலிக்காம போனா அது வேற கதை. ஆனா நான் காதலிக்கிறேன். சும்மா வீட்டுல பார்த்தாங்கன்னு யாருக்காவது கழுத்தை நீட்டி காலம் பூரா கண்ணக் கசக்கிட்டு, பிடிக்காத உறவோட வாழ முடியாது. நான் பேசறது புரியுதா அத்தான்?”
“ம்ம்… யாருக்கு பிடிச்சாலும் இல்லாட்டாலும் நமக்கு பிடிச்சவங்களோட தான் வாழணும்! அதுக்கு, நமக்கு பிடிச்சவங்களுக்கு நம்மைப் பிடிக்கணுமே!” கூறிக் கொண்டவனின் உலகம் உடைந்து சிதறியிருக்க மனம், கசங்கி அழுதது. முகம் வலியை அப்பட்டமாக காட்டியது.
“என்ன த்தான்? ஏன் என்ன ஆச்சு?”
நா தழுதழுக்க கேட்டான். “என்னைப் பிடிக்குமா அலர்விழி உனக்கு?”
“உங்களப் பிடிக்கறதுக்கு என்ன அத்தான்? ரொம்பவே பிடிக்குமே. நீங்க எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் அத்தான்.”
“எனக்கும் உன்ன பிடிக்கும் அலர்விழி. இன்ஃபேக்ட் சித்திக்கு அப்புறம் ஒரு பொண்ண பிடிக்கும்னா அது நீ தான். ஆனா கண்டிப்பா வெறும் ஒரு ஃப்ரெண்டா இல்ல…”
அவள் கண்கள் விரிய, “இது நானே இல்ல அலர்விழி! எனக்கு ஏத்த பொண்ணு தான் வாழ்க்கை துணையா வேணும்ன்னு நினைச்ச நான்… என்னைக்கு உன்ன விரும்ப ஆரம்பிச்சேனோ, அன்னைக்கே உனக்கு ஏத்தவனா என்னை மாத்த ஆரம்பிச்சேன். காலியா இருந்த மனசு பூரா நீ மட்டும் தான். என் மனச பார் அதுல இருக்கற காதல பார்ன்னு உங்கிட்ட காட்டுறதுக்கு முன்னமே கண்ணாடிக் குவள மாதிரி கீழ விழுந்து சிதறிடுச்சு.
என்ன அதிர்ச்சியா இருக்கா அலர்விழி? நான் உன்னதான் விரும்பறேன். நீ தான் என்னோட முதல் காதல், கடைசிக் காதலும் நீ தான். மறக்க முடியும்ன்னு தோணல. நீ தூர இருக்கும் போது கூட மனசுக்குள்ள ரொம்ப நெருக்கமா இருந்த, இப்போ என் பக்கத்துல நிக்கிற, ஆனா ரொம்ப தூரம் விலகித் தெரியற!
என்ன ஆச்சுன்னு கேட்டியே… காலம் பூரா உன் கூடவே வாழப் போறேன்னு கனவு கண்டது வெறும் கனவாப் போச்சு! அதனால வலிக்குது அலர்விழி. ஆரோக்யமான இதயம் கூட இப்பிடி வலிக்கும்ன்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்.
எனக்கு என் காதலையும் காட்டத் தெரியல என் வலிய விளக்கவும் தெரியல… இந்த வலியோட எப்படி வாழப் போறேன்னும் தெரியல!” கண்ணோரம் வழிந்த நீரோடு புன்னகைத்துச் சென்றவன் முதுகை வெறித்து நின்றவளுக்கு மூச்சு விடுவதே பாரமாய் போனது.
“ஓய்… கால் வலிக்குதுன்னு சொன்ன? இன்னும் படுக்கப் போகாம வாசல்ல நின்னு யாருமே இல்லாத காரிடர என்ன வேடிக்கை?” கேட்டுக் கொண்டே பாயல் வீட்டு வாசலுக்கு வந்த எபி கையில் வலி நிவாரணி தைலம்.
“விழி?” சிலையாய் சூன்யத்தை வெறித்து நின்றிருந்தவளை உலுக்க, உணர்வுக்கு மீண்டவள், “மனோ… மனோ” என்றாளே தவிர வார்த்தை வரவில்லை.
“என்ன டி? என்ன ஆச்சு? ஏன் இப்டி நிக்கிற? உள்ள வா…” என்றவனைக் கட்டி அணைத்தவளின் கண்கள் அருவியாய் மாற, “மனோஓஓஓ…” என்று கதற ஆரம்பித்தாள்.
“விழி… டேய்… விழி… என்ன டி ஆச்சு? ஏன் அழற? யாருக்கு என்ன ஆச்சு?” பதறிப் போனான்.
பிரவீன் பேசிய அனைத்தும் மீண்டும் மீண்டும் அவளைத் தாக்க, மூச்சு முட்டியது. அன்றைய இரவு மூவருக்கும் உறங்கா இரவாகிப் போனது. அவளைத் தோள் தாங்க மனோ இருக்க, தனித்துப் போனான் பிரவீன். கனலை வாரி தலையில் குவித்த காதல், பிரவீனிற்கு சுகிக்கவில்லை. காதல் சுகமானது என்று யார் கூறியது?