கேலியும் கும்மாளமும் போதவில்லை என்று பாயலோடு மூன்று வயதிற்குட்பட்ட குட்டி வாண்டுகள் வந்திருக்க, பிள்ளைகளோடு பிள்ளைகளாக மாறி ஆட்ரேயும், எபியும் விளையாட, சத்தம் காதை அடைத்தது.
பிள்ளைகள் படுக்கையறைக்குள் ஒளிந்து விளையாட ஆரம்பிக்கவும், ‘ப்ச்’ என்ற பிரவீனின் சலிப்பிற்கு எபி விளையாட்டை முடித்துக் கொண்டான். அறைக்குள் அமர்ந்திருந்த பிரவீனுக்கு இம்சையான மனநிலை. உள்ளே எழுந்த கூச்சலில் அமர முடியாமல், வெளியே வந்து விட்டான்.
விளையாட்டு வாக்கில் ஒரு குட்டிப் பெண், கதவை உள்பக்கம் பூட்டிக் கொள்ள, பயத்தில் உள்ளிருந்து குழந்தை அழ ஆரம்பித்தாள். அங்கு, (பெரும்பான்மை) கதவுகளில் தாழ்ப்பாள் இருக்காது என்பது ஒரு ஆறுதல்.
சத்தம் கேட்டு வந்த மனோ, கதவின் நிலைக்கால் மேலிருந்து குட்டி ஆணி போன்ற எதையோ எடுத்து, குமிழுக்குள் இருக்கும் துவாரத்தில் விட்டுத் திருக, பூட்டு திறக்கவும் கதவு திறந்து கொண்டது.
“இது ஒரு வசதி இந்த ஊர்ல. தனித் தனிப் பூட்டும் இல்ல… அதுக்கு தனியா சாவியும் இல்ல. வீட்டுக்குள்ள இருக்க எல்லா கதவுக்கும் ஓரே சாவி!” என்று கூறிக் கொண்டே சிறுமியைத் தூக்கிய அலர்விழி, பிள்ளையின் அழுகை நின்றதும், “பாயல் மூணையும் கொண்டு விட்டுட்டு வா, நாம சாப்பிட உக்காருவோம்” என்று பிள்ளைகளை அனுப்பி வைத்தாள்.
உணவு வகைகள் மேசையை நிரப்ப, அனைவரும் தங்களுக்கு வேண்டியதைத் தட்டில் எடுத்துக் கொண்டு மேசையைச் சுற்றி அமர்ந்தனர்.
பிரவீன் மட்டும் எதையும் போட்டுக் கொள்ளாமலிருக்க, “சாப்பிடுங்க டாக்” என்றவள், மனோவிற்கும் மருத்துவனுக்கும் இடையே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
“நீயே எனக்கு பறிமாறேன் அலர்விழி” என்றவனைப் பார்த்த எபி நீண்ட மூச்சை இழுத்து விட்டு அலர்விழியை பார்த்தான். பெண் களைப்பாய் தெரிந்தாள்.
அமர்ந்தவள் எழப்போக, “நீ உக்கார். நான் வைக்கிறேன்” கூறிக் கொண்டே எபி பிரவீனுக்குப் பரிமாற ஆரம்பித்தான். ‘இத வைக்கவா… போதுமா… இன்னும் வைக்கவா’ என்று ஒவ்வொரு வகையாகப் பரிமாறும் போதும் அருகில் இருந்த்தவளை வஞ்சனையே இல்லாமல் உரச, பிரவீனுக்கு ஏன் தான் கேட்டோமோ என்றாகிப் போனது. அலர்விழியைப் பார்த்தான். ஒருவன் தன்னை உரசி நிற்பதைக் கூட உணராமல் தட்டில் மூழ்கியிருந்தாள்.
மனோவின் வலது பக்கம், இலக்கியா அமர்ந்திருக்க, “அத எடு இலக்கி… குழம்ப ஊத்தேன்… நம்ம ஃபேவரைட் ஐட்டம் நல்லா வந்திருக்கு, இத சாப்பிட்டுப் பார்த்தியா? வைக்கவா சாப்பிடுறியா? வெக்கப் படாத இலக்கி, வேணுங்கிறத போட்டுக்கோ இலக்கி” என்று அவளை உரிமையோடு வேலை வாங்கிக் கொண்டும்(?), அவன் விருப்பத்தைத் திணித்துக் கொண்டும்(?) இருப்பதாக தோன்றிய பிரவீன், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
வழக்கம் போல் மார்க், மௌனமாக அலர்விழியின் சமையலை ரசித்து உள்ளே தள்ளிக் கொண்டிருக்க, இவனோ, “ஆட்ரே, நீ போன தரம் கேட்டியே எங்க ஊரு மீட் பால்ஸ், உனக்காகவே பண்ணினா, ட்ரை பண்ணு” என்று ஒரு இருக்கை தள்ளியிருந்த ஆட்ரேக்கு அலர்விழியை இடித்துக் கொண்டு இவனே மட்டன் கோப்தாவை வைக்க, பார்த்த பிரவீனிற்கு பற்றிக் கொண்டு வந்தது.
‘ஒருத்தன் வேணும்னே மேல தேச்சுட்டே நிக்கிறான், சொரணையே இல்லாம எப்டி பல்ல காமிச்சுட்டு அசையாம உக்காந்து இருக்கா?’ பிரவீன் வாய்க்குள் இறங்கிய உணவு பற்களுக்கிடையே அரைந்து… கூழாகி… மையாகிக் கொண்டிருந்தது. மூளை கொதி நிலைக்குச் சென்றது.
ஒரே வயதை ஒத்த நண்பர்கள் கூட்டம், நீ…நான் என்ற எந்த பாகுபாடுமில்லாது ஒவ்வொருவருக்குள்ளும் ஒட்டுதல் அதிகம் என்பதால் கலகலப்பான குடும்பச் சூழல் அங்கு. அமர்ந்திருந்த அனைவரும் ஒவ்வொரு நொடியையும், எதிரில் இருந்த உணவையும் முழுமையாக அனுபவிக்க, மருத்துவனால் மட்டும் அவர்களோடு ஒட்ட முடியவில்லை. காரணம்? காரணம் என்று எதுவும் இல்லை. அவன் அப்படித்தான். தாமரை இலை போல நீரில் ஒட்டாமலே வாழ்ந்து பழகியவன். அலர்விழி இல்லை என்றால் இப்படிப்பட்ட மக்களோடு அவனாவது… பழகுவதாவது!
எப்பொழுதும் இதுபோன்ற சிறிய விடயங்கள் எல்லாம் அவனைத் தாக்காது. கண்டு கொள்ளாமல் கடந்து விடுவான். ஆனால் இம்முறை அவனால் அவனாக இருக்க முடியவில்லை. காரணம்… அலர்விழி! ஏனோ அவனைக் கவனிக்க வேண்டிய அவன் அத்தை மகள் கூட அவள் தட்டில் தான் கவனமாக இருந்தாள். அவனுக்கு பார்த்துப் பார்த்து பரிமாற வேண்டாமா? அவள் கவனம் அவன் மேல் சுத்தமாக இல்லை. வாய் திறந்து ஏதேனும் கேட்டால், அவளை இடித்துக் கொண்டு எபெனேசர்!
“இது செம டேஸ்ட் மார்க். எனக்கு ரெசிப்பி வேணும்” என்று ஸ்பெகட்டி மேல் ஊற்றியிருந்த மரினாரா சாஸ்சை நக்கிக் கொண்டே அலர்விழி கேட்க, மார்க்கை முந்திக் கொண்டு, “ஹே… எனக்குத் தெரியும்! நான் சொல்லித் தரட்டா?” கேட்டவன் பார்த்த பார்வையில் ‘அடுக்களைப் பாடங்கள்’ எல்லாம் இவளுக்கும் நினைவில் வர ‘போடா வெக்கம் கெட்டவனே’ என்று அவனுக்கு மட்டுமே புரியும்படி குறும் புன்னகையோடே வாய் அசைத்தாள்.
கள்ளப் புன்னகை புரிந்தவளின் தோள் இடித்து, “இப்போ சாப்பிடு. அப்புறம் தனியா இருக்கும் போது சைட் அடி” எபி சிரிக்க…
“ஐயோடா… இந்த மூஞ்சியை தனியா வேற பார்த்து சைட் அடிக்கணுமாமே…” அவன் சிரிப்பில் அவள் கலந்து கொள்ள,
‘அவன் உண்டு அவன் வேலை உண்டு’ என்ற தோற்றத்தோடு அமர்ந்திருந்தவனால் ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை! எபியின் பேச்சு சற்றும் ரசிக்கவில்லை என்பதால், “அலர்விழி!” என்றான் மருத்துவன் சற்று சத்தமாய். அனைவர் பேச்சும் நின்று போக அனைவர் பார்வையும் அவன் பக்கம் தான்.
“என்ன ஆச்சு? ஏதாவது வேணுமா?” அவள் கேட்டு முடிக்கும் முன், “அவர் சாப்பிடுற ஐட்டம் தான் அவர் முன்னாடியே இருக்கே, எடுத்துப்பார். நீ எனக்கு அந்த சிக்கன் டிக்கா எடு” என்று எபி ஆரம்பிக்க, விட்ட பேச்சு மீண்டும் ஆரம்பமானது.
‘வாய மூடிட்டு சாப்பிட மாட்டியாடா?’ என்று தோன்றியதைக் கேட்கவும் முடியாமல், பாறாங்கல்லாய் கனத்த உணவை விழுங்கவும் முடியாமல், இரண்டையும் சேர்த்தே மென்றான் மருத்துவன். இவனோடெல்லாம் அலர்விழி ஏன் தோழமை கொள்ள வேண்டும் என்று மனம் அவளுக்காக அடித்துக் கொண்டது! பிரவீன், எபியின் முன்னிலையில் அவன் இயல்பை அவனை அறியாமலே இழந்து கொண்டிருந்தான்.
“விழி… அந்த பாஸ்தா சாஸ்சையே நக்கிட்டு இருக்காம, எடுத்து வச்சு சாப்பிடு!” அதட்டலாகவே கூறினான், எபி. ஆனால் அவள் காதில் அதெல்லாம் விழவில்லை.
“எதையாது சாப்பிடேன் விழி! சும்மா சாஸ்ச நக்கிட்டு?” வயிற்றை நிரப்பாமல் இருந்தவளை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மனம் கேளாமல், தன் தட்டிற்கு வந்த சிக்கன் டிக்காவில் ஒன்றை அலர்விழி தட்டிற்கு மாற்ற, அதைச் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாதவனாய் மருத்துவன், “எபெனேசர், அவளுக்கு வேணும்ன்னா அவ எடுத்து வச்சுப்பா. நீங்க எதுக்கு உங்க எச்சில அவ தட்டுல வைக்கறீங்க?” என்று கடுகடுக்க, ‘ஐயோ இந்த ஆள் இவர் வாயப் பிடுங்காம இருக்க மாட்டாரா?’ அலர்விழிக்கு உடல் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது.
அவர்கள் இருவருக்குமிடையே யாரேனும் புகுந்தால் எபி கொஞ்சம் கூட பொறுத்துப் போகமாட்டான் என்பதால் அலர்விழியின் உடலில் நடுக்கம். மேசைக்கு அடியிலிருந்த எபியின் கையை, ‘எதுவும் கூறி விடாதே’ என்ற வேண்டுதலோடு இறுகப் பிடித்துக் கொண்டாள்.
‘மூடிட்டு போடா’ என்ற பார்வையோடு தட்டிலிருந்த மற்றொரு துண்டையும் அவள் தட்டிற்கு இடம் பெயர்த்து, “கைய விட்டுட்டு சாப்பிடு விழி” என்றவன், அவள் பாவம் போல் பார்த்த பார்வைக்காக தன்னை அடக்கிக் கொண்டான்.
“சும்மா அலட்டிக்காம சாப்பிடுங்க பாஸ்” என்றவன் அருகிலிருந்த பச்சை சட்டினியில் முக்கி எடுத்த சிக்கன் தந்தூரியை வாய்க்குள் திணித்துக் கொண்டு இலக்கியாவிடம் விட்ட கதையைத் தொடர்ந்தான்.
பதில் கொடுக்க பிரவீன் வாய் திறக்க, “எங்களுக்குள்ள இதெல்லாம் சகஜம். இத பெருசு படுத்தாம நீங்க சாப்பிடுங்க அத்தான்” என்று முற்றுப் புள்ளி வைத்தாள்.
இப்படியாக ஆரம்பித்த ‘டாம் அண்ட் ஜெரி’ யுத்தம் இருவருக்குள்ளும் தொடர்ந்து கொண்டே போக, அலர்விழிக்கு தான் போதும் போதும் என்றாகி விட்டது.
மதிய உணவு முடிந்து ஒரு மணி நேரம் சென்றிருக்கும், பாயலும் ஆட்ரேயும் “படுத்துட்டு டீ டைம்க்கு வரோம்” என்று கிளம்பி விட, எபியோடு பேசிக் கொண்டிருந்த இலக்கியாவும், “நான் உன்னோட ரூம்ல படுக்கப் போறேன் எபி” என்ற தகவலோடு அலர்விழியின் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
வெளியே கிளம்பவிருந்த மார்க்கை நிறுத்தி, “நைட் பீட்ஸா-க்கு சீஸ் பத்தாது. டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க… நானும் வரேன் மார்க்” என்று அலர்விழி உடைமாற்ற அறைக்குள் செல்ல,
மார்க் எழுந்ததும் சோஃபாவில் கால் நீட்டி எபி படுத்துக் கொள்ள பிரவீன், “சாவி வெளியில மேட்டுக்கு அடில தானே இருக்கும்?” என்று கேட்டுக் கொண்டே, “ஒரு வாக் போயிட்டு ஒரு மணி நேரத்துல வந்திடுறேன்” என்று வெளியே கிளம்பினான்.
உள்ளே உடை மாற்ற அலர்விழி சென்றிருக்க, வெளியே இலக்கியா வந்தாள் மார்க்கோடு செல்ல. தனித்திருந்த எபி அலர்விழி இருந்த அறைக்குள் புகுந்தான்.
“என்ன டி, நீ போகல?”
“அவளுக்கு ஏதோ வாங்கணுமாம். நான் போகவான்னு கேட்டா! புண்ணியமாப் போகும்ன்னு அனுப்பி வச்சுட்டேன்”
“என்ன ஆச்சு? படுத்துட்ட? மதியம் தூங்க மாட்டியே”
“காலையில இருந்து நின்னு நின்னு காலு ரெண்டும் வலி பின்னுது மனோ. கூடவே இந்த முதுகு வேற!”
“குப்புறப் படு, முதுகை பிடிச்சு விட்டுட்டு காலப் பிடிச்சு விடுறேன்”
“வேண்டாம் மனோ” என்றாள் கதவைப் பார்த்துக் கொண்டே,
“ஒரு மணி நேரத்துக்கு யாரும் இல்ல. அப்பிடியே அவங்க வந்தாலும் நான் தான் உள்ள இருப்பேன்னு தெரியும், சோ, கதவத் தட்டாம உள்ள வர அளவுக்கு மேனர்ஸ் இல்லாதவங்க இல்ல” கூறிக் கொண்டே கதவை அடைத்து வந்தான்.
“அவன் ஒருத்தனுக்கு மட்டுமே நாலு சவுத்-இண்டியன் வெரைட்டி பூட்! எல்லாரும் ஒத்துப் போற இடத்துல எதுலயுமே சேராம… தனியா நிக்கிறான். அவனுக்கு தனி அடென்ஷன் எதிர் பார்க்குறான்!”
“பாவம் மனுஷன், வீட்டு சாப்பாடு சாப்பிட்டு மாச கணக்காகுது. வீட்டுல அம்மா கைல சாப்பிட்டே பழகியிருப்பார், அது தான் வீட்டு சாப்பாட பார்த்ததும் அம்மா ஞாபகம் வந்திருக்கும்.
மத்தவங்கட்ட நல்லதை மட்டுமே பார்க்கிற நீங்க, அப்பிடியே இருங்க மனோ. மத்தவங்க கோணல்கள பாக்க ஆரம்பிச்சா, நம்ம பார்வையுமே கோணலாப் போய்டும்ன்னு எனக்கு சொன்னதே நீங்க தான்!”
“நான் ஒண்ணும் கம்ளெயினா சொல்லலியே!”
முதுகை அமுக்கி விட… ‘அம்மா… ஆ’ என்று வலியில் முனகிப் படுத்துக் கிடந்தவள், கால் பாதங்களைப் பிடித்து, விரல்களை இழுத்து விடவும், “உங்கள எனக்கு தெரியாதா மனோ?” என்று வாய் திறந்தாள்.
“அவர்ட்ட பர்ஸ்னல் எல்லாம் பேசறது இல்ல மனோ. ஜஸ்ட் ஒரு ரிலேட்டிவ் அவர்! சோ ஃப்ரெண்டிலி டாக் மட்டும் தான்.”
“அவன், உங்கிட்ட கொஞ்சம் ஓவராப் போற மாதிரி இல்ல?”
“புரியலியே பா”
“அவனுக்கு உன்ன பிடிக்குதோன்னு ஒரு சந்தேகம்! எதுக்கும் நீ கமிட்டெட்ன்னு அவன் காதுல போட்டு வை”
“ஹ ஹ ஹா… நீங்க வேற. அவர் லெவலே வேற! நம்மள எல்லாம் அவர் மதிக்கக் கூட மாட்டார் மனோ. அவர் ஒரு டைப்!”
“அத்தன பேர் முன்னாலேயும் ஓவரா சௌண்ட் விடுறான்? அவனுக்கும் உனக்குமான உறவ நிலை நாட்ட ட்ரை பண்ணின மாதிரி இல்ல?”
“விரல் நகத்துல கூட சாப்பாடு பட விடமாட்டார். அவருக்கு இது எல்லாம் பழக்கமில்ல பா! போயிட்டு போகுதுன்னு விடறீங்களா? மல்லுக்கு நிக்கறீங்க! அவர் சொல்ல சொல்ல வேணும்னே பாதி சாப்பிட்ட சிக்கன் துண்ட என் தட்டுல வைக்கிறீங்க… பெரிய தை பீஸா கடிச்சு அவர வெறுப்பேத்துறீங்க!” எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வைத்தாள்.
“என் எச்சில உன் தட்டுல வைக்காதன்னு இவன் எனக்கு ஆடர் போடுவானாமா? ‘எச்சில தட்டுல என்ன உதட்டுலயே வைப்பேன் நீ யாரு டா அத கேக்க’ன்னு, ரைமிங்கா அடிச்சு விட்டிருக்கணும்! நான் தான்… பொழச்சு போகட்டுமேன்னு விட்டுட்டேன்.”
“ஹ ஹ ஹா…”
“என்ன டி சிரிப்பு?”
“எச்சில் பட்டு ஏதாவது நோய் வந்துடும்ன்னு பாவம் டாக்டர் பயந்துட்டார்! அது ஒரு குத்தமா?”
“என் எச்சில் பட்டா உனக்கு நோய் வருமோ? எங்க பாப்போம்” அவன் பெண் முகத்தை நோக்கி நெருங்க…
முகத்தில் அரும்பிய புன்னகையோடு, “அய்ய… ரொம்ப ஆசை தான்…” அவனைத் தள்ள, ‘நீ தள்ளி… நான் போவேனா’ என்று அவன் நெருங்க, “வீடு பூரா ஆட்கள் இருக்கும் போது தான் இவருக்குக் கொஞ்சறதுக்கு மூட் வரும்! போங்க அந்தப் பக்கம்” தலையணையை அவன் மேல் விட்டெறிந்து இருவருக்குமான இடைவெளியை அதிகப் படுத்தினாள்.