37.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

இரவு உணவு முடியவும் சோஃபாவில் அமர்ந்திருந்த மனோவின் மடியில் படுத்து இரண்டு வாரக் கதைகளை பேசினாள். சுருள் முடியை அவன் இழுத்து விட, அது ஸ்ப்ரிங் போல் மீண்டும் சுருண்டு வந்து நெற்றியில் விழுந்தது. அவளுக்குப் பேச எப்படிச் சளைப்பதில்லையோ அது போல அவனுக்கும், அவள் நூடுல்ஸ் கற்றைகளை இழுத்து விட்டு விளையாடச் சலிப்பதில்லை. 

மனோவின் விரல்கள் அவள் தலை வருட, கையசைத்து, விழிகள் உருட்டிக் கதை பேசினாள். அவள் பேச்சில் மதிமயங்கினான், என்றும் போல்! மனோ வீட்டிற்கு வெளியே இருக்கும் நாவல் பழத்தை ருசித்து, பவழமல்லி மணத்தில் மயங்கி, நித்தியமல்லி பந்தலுக்குள் நுழைந்து, எஸ்தர் கையால் பூ சூடி, யமுனா கொடுத்த காபி அருந்தி, பால்ராஜோடு ஷேர் மார்க்கெட் விவாதித்து, பிள்ளைகளை தாத்தா பாட்டியிடம் படுக்க வைத்து, பால்கனி தனிமையில் கணவன் கைவளைவில் நிலவு காய்ந்து… என்று இரவு முழுவதும் அவர்கள் வாழப் போகும் வாழ்வைக் குறித்தும், அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் பேசியே நேரம் கடத்தினாள். 

எப்பொழுது இமைகள் நான்கும் மூடியதென்று இருவருக்கும் தெரியாது. இன்பமான நிறைவான நிமிடங்கள் அவை. பொக்கிஷமாய் உள்ளுக்குள் இறங்கியிருந்தது. சூரியன் வெளிவந்து சில மணி நேரம் கழித்து பெண்ணவள் கண் விழிக்க, கண்டதோ அமர்ந்தே உறக்கத்திலிருந்த மனோவை தான். ஏன் என்று கேட்க ஆள் இல்லாத தனிமையிலும் கண்ணியம் காக்கும் காதலன் கிடைப்பதெல்லாம் வரம் தான். 

கன்னத்தில் முத்தம் பதித்து காபியை நீட்டியவளை ஆசை சொட்டப் பார்த்தான்.  ஒரு மிடறுக்குப் பின், “நல்லா தான் இருக்கு” என்றான், குளித்து ஈரக் கூந்தலோடு தன்னை இடித்துக் கொண்டே அமர்ந்தவளைக் கண்டு. 

காபியை சுவைத்தாள். “ஏன் மனோ… எப்பவும் போல தானே இருக்கு” 

அவளைப் பார்த்துக் கொண்டே, “காபி இல்ல. இப்பிடி நீ கொடுக்கிறது!” என்றான். 

“அதுக்கென்ன மனோ… இனிமேல் இப்படியே கொடுத்திட்டாப் போச்சு!” 

இரண்டு நிமிடங்கள் காபியோடு சென்றது.  “இதெல்லாம் கொடுமை தெரியுமா?” காபியை மெல்ல உறிஞ்சினான். 

“எது? நான் போட்ட காபியக் குடிக்கிறதா?” 

வாரங்கள் இரண்டு பார்க்கவில்லை என்றதும் காதல் ஜோடிகளுள் தாபம் எட்டிப் பார்த்திருக்க ஆசையை அணை போட முடியவில்லை இருவருக்கும். 

கடைசி சொட்டு காபியை உறிஞ்சியவளிடம், “பக்கத்திலேயே உன்ன வச்சுகிட்டு, ‘நான் உத்தமன்’னு ஆக்ட் விடுறது…” என்றான் பெருமூச்சோடே.

“உங்க மடியில படுத்துக்கிட்டு எந்த நினைப்பும் இல்லாமத் தூங்கி எழுந்திருக்கேன். நீங்க உத்தமன் தான் சந்தேகமே இல்ல. ஆனா என் சந்தேகம் எல்லாம்… நீங்க அவன் இல்லியே?” அவள் சிரித்துக் கொண்டே ஓட… “ஏய் எங்க டி ஓடுற? என்னைப் பார்த்து என்ன சொன்ன? நான் அவனா…? இங்க வா, நான் யாருன்னு காட்டுறேன்…” அவனும் சிரித்துக் கொண்டே விரட்ட,

“தோடா வந்துட்டார் மன்மதனோட வாத்தியார் எனக்கு பாடம் எடுக்க…” ஆட்டம் காட்டியவளை எட்டிப் பிடித்தவனின் பிடி உடும்புப் பிடியாகப் போக பெண்ணின் சிரிப்பொலி சிணுங்கலாக மாறியது.

அணைப்பிற்குள் இருந்தவளிடம், “ரொம்ப மிஸ் பண்ணினியாடி?” எனக் கன்னம் வருட, “ம்ம்ம்” என்றவளின் பதில் வெளி வராமலே போனது. காபி மணம் நாடி நரம்பெல்லாம் சென்று அணுஅணுவாக மனோ என்று அவளுக்குள்ளும் விழி என்று அவனுக்குள்ளும் பச்சை குத்தியது. அணைப்பும் முத்தமும் போதவில்லை, இருவர் மனமும் எதை எதையோ தேடியது. ஒருவருக்குள் ஒருவர் புதைந்து போக மனம் ஏக்கம் கொண்டது.

நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் காதலையும் தாண்டிய உணர்வு எழ, ‘முத்தத்தோடு இதை நிறுத்த முடியாது’ என்று தோணவும், எழுந்த இன்ப உணர்வுக்குக் கடிவாளமிட்டு, பிரிய மனமே இல்லாமல் ஏக்கப் பெருமூச்சோடே அன்றைய நாளைத் தொடங்கினர்.

முன்தினமே இரண்டு நாட்களுக்கு வேண்டிய சாமான்களை வாங்கி அடுக்கியிருக்க, குளிர்சாதனப் பெட்டி பல வகை உணவுகளால் நிரம்பி வழிந்தது. 

வீட்டை அலர்விழி பரபரப்பாக ஒதுக்க ஆரம்பிக்க, “எதுக்கு இப்போ அத எல்லாம் எடுத்து வைக்கிற? பார்க்க நல்லாத் தானே இருக்கு?” எனக் கேட்டவனிடம், “பாயல் கூட சுத்துமே குட்டீஸ், அதுங்க எல்லாம் வருது. இத எடுக்காத அத எடுக்காதன்னு குழந்தைங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. அது தான். ஆமா, நீங்க எதுக்கு பொண்ணு பார்க்கப் போற ரேஞ்சுக்கு கிளம்பி நிக்கறீங்க?” பதில் கேள்வி கேட்டாள் பெண்.

“என் ஃப்ரெண்ட் வினய் லிட்டில் இண்டியாக்கு வந்திருக்கானாம். வரியான்னு கேக்கறான். ஒரு மணி நேரத்துல வந்திடுவேன். போட்டா விழி?” என்றவனை முறைத்தாலும், “அது தான் கிளம்பியாச்சே அப்புறம் என்ன ‘போட்டா’ன்னு கேள்வி? வீட்டுக்கு கெஸ்ட் வர நேரம் நீங்க பண்ற வேலை இருக்கே… சட்டுன்னு வரணும். வரும் போது டபுள் சாக்லேட் குக்கீஸ்சும், மைலோவும் வாங்கிட்டு வாங்க. அப்படியே கலரிங் புக்கும், கலர்சும்!”

வினய்யை பார்த்து விட்டு வரும் வழியில் பிள்ளைகளுக்கு வாங்கவென ‘வால்மார்ட் சூப்பர் மார்கெட்’ முன் வண்டியை நிறுத்தினான். உள்ளே, சாமான்களை எடுத்து ட்ராலியில் அடுக்கிக் கொண்டிருக்க, “எபி…” என்று சூறாவளியாய் ஓடி வந்தாள், கைக்குள் அடங்க மறுக்கும் தேகமுடைய மார்கரீட்டா, அவன் கல்லூரித் தோழி. 

“ஹேய்… மார்கி…” விரித்த அவள் கைக்குள் இவன் செல்ல, பட்டும் படாமலும் இருவரும் அணைத்துக் கொள்ள, அவள் அழைத்த அழைப்பின் சத்தத்தில் திரும்பிய பிரவீன் கண்களில் விழுந்தது அவர்கள் அணைப்பும், ‘இச் இச்’ என்று காற்றில் பதிக்கப் பெற்ற முத்தத்தின் சத்தமும் தான்! 

அவர்கள் அப்படித்தான். எபிக்கு பழகிப் போயிருந்தது, உடல் படாத அணைப்பும், கன்னம் தொடாத முத்தமும்! ஆனால், கண்ட காட்சி பிடிக்கவில்லை, வெளிநாட்டுத் தோழிகள் இல்லாத மருத்துவனுக்கு! அரையும் குறையுமாக ஆடை அணிந்திருந்தவளை பிரவீனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதை விட அவளை அணைத்து விட்ட இந்தியனை!  எபியை மீண்டும் பார்த்தான் மருத்துவன். பார்த்த முகம்! யாரிவன்? மண்டையைக் குடைந்தான்! தெரியவில்லை. 

அத்தனை பெரிய கடையில் இருவரும் இரு திசைக்குச் செல்ல அதன் பின் பிரவீன் கண்களில் எபி விழவில்லை. வாங்க வேண்டியவற்றை வாங்கி, “வேற ஏதாவது வேணுமா விழி…” என்று கைப்பேசியில் கேட்டுக் கொண்டே காரை நோக்கி நடக்க, “ஹே எபி…” என்ற சத்தம் வரவும், அவன் திரும்பிப் பார்க்க மார்கரீட்டா கையசைத்துக் கொண்டே ஓடி வந்தாள். 

“வேற ஒண்ணும் இல்லியே… வந்த பிறகு திரும்பவும் உப்பில்ல, புளியில்லன்னு போக சொன்னா… போக மாட்டேன். இப்போவே சொல்லிட்டேன்! மார்கி எதுக்கோ திரும்பவும் ஓடி வரா…” என்று இவன் அவளை நோக்கிச் சென்றான். வந்த வேகத்தில் அவள் கால் இடற…  பிடிக்கப் போனவன் மேல் சரிந்து விழுந்தாள். 

இவன் பிடிக்கவும் வலி தாள முடியாமல் இவன் மேல் சரிந்தே நிற்க, “எதுக்கு எவ்வளவு பெரிய ஹீல்ஸ் போடுற? நடந்திடுவியா?” என்று அவளைத் தாங்கிக் கொண்டே குனிந்து அவள் காலை பார்த்தான்.

 நடந்தது எதுவும் தெரியாதென்றாலும் அவர்கள் நெருக்கம் மட்டும் ஒருவனுக்குத் தெரிந்தது. முகம் சுளித்தான் மருத்துவன்.

“கார் ஓட்டிடுவியா? நான் வேணும்னா வீட்டுல விடவா? கார அப்புறம் வந்து யாரையாவது எடுத்துக்க சொல்லு.” இவன் கேட்க, “இடது கால் தானே… க்ளச்ச அமுக்கிற வேலை இல்ல. நானே போயிடுவேன்     ” என்று அவன் உதவியோடே உள்ளே அமர்ந்தவள், அமர்ந்த வாக்கிலேயே, அவனை மெல்ல அணைத்து, “கல்யாணத்துக்கு நான் இண்டியா வர முடியாது. இப்போவே வாழ்த்துகள். இதைக்      கொடுக்கத் தான் கூப்பிட்டேன். அலர்விழிட்ட கொடுத்திடு” என்று கையிலிருந்த குட்டி பரிசுப் பொதியை அவனிடம் கொடுத்து விடை பெற்றாள். 

சம்பாஷனை எதுவும் கேட்கவில்லை. இருந்தும், ‘வெளி நாட்டுக்கு வந்தாலே நடு ரோட்டுல கொஞ்சிக்க கூசாது போல!’ என்று நடந்த அனைத்திற்கும் அவனே அர்த்தம் கொடுத்துக் கொண்டான் பிரவீன். 

வீட்டை அடைந்த எபி, மதிய உணவைத் தயார் செய்து கொண்டிருந்த அலர், மார்க்கோடு ஐக்கியமானான். மார்கரீட்டா பற்றிய பேச்சுகளோடு அவனும் உதவ ஆரம்பிக்க, பேச்சும் சிரிப்புமாக வேலை சூடு பிடித்தது. இங்கு சில வகைகளும், பாயல் வீட்டில் ஒரு சில வகைகளும் என்று பல உணவு வகைகள் தயாராகிக் கொண்டிருக்க, அழைப்பு மணி அடித்தது. 

“அடுத்த விருந்தாளியா இருக்கும்… நான் பார்க்குறேன்…” என்று எபி தான் கதவைத் திறந்தான். திறந்தவனின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் பூங்கொத்தும் சாக்கலேட்டுமாக நின்றிருந்தான் மருத்துவன். 

யார் என்று தெரியும்… அதனால் ‘வாங்க’ என்று கூப்பிட தான் எண்ணினான். ஆனால் ‘இவனா?’ என்ற பிரவீன் முகத்தில் எழுந்த நொடி நேர அதிருப்தியான முக சுளிப்பு, இவனை நிதானிக்க வைத்தது. பிடித்தமில்லா பார்வையோடு, ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதை பிரவீன் முகம் அப்பட்டமாக பிரதிபலிக்க, கடுப்பானவன்… வேண்டுமென்றே, “ஃப்ளவர் டெலிவரியா?” என்று கேட்டுக் கொண்டே வழியை மறைத்து நின்றான்.  ஒருவரை மற்றவருக்கு பிடிக்கவில்லை. முட்டிக் கொண்டது!

“யாருங்க?” கேட்டுக் கொண்டே பின்னோடு வந்தவள், வழி மறித்து நின்றவனை மெல்ல நகர்த்தி, “வாங்க டாக்டர்… அப்போவே எதிர்பார்த்தேன். நீங்க லேட்! வாங்க… உள்ள வாங்க” என்று உள்ளே அழைக்க, ஆண் மக்கள் இருவரின் பார்வையும் மோதி நின்றது. 

“இவங்க தான்… நான் சொன்னேனே டாக்டர்.பிரவீன், மாதுண்ணாவோட அத்தை வழி சொந்தம்” என்று அறிமுகப்படுத்த, மனோவிற்கு தன்னைப் பற்றி விலாவாரியாக அவனிடம் அறிமுகப்படுத்த விருப்பமில்லை. “எபெனேசர்!” என்று கை நீட்டியிருந்தான். 

வேண்டா வெறுப்பாக கைகுலுக்கியவன் பார்வை வீட்டை அளக்க, உள்ளே ஆண், பெண் என்று பேச்சுக் குரல் கேட்கவும், அவன் முகத்தில் ஒரு நிம்மதி. பார்த்து நின்ற எபி முகத்தில் நமட்டுச் சிரிப்பு. 

“உனக்காக அலர்விழி” என்று மலர்க் கொத்தோடு இனிப்பையும் நீட்டினான். நீட்டி நின்றவன் பார்வை அலர்விழியை ஊடுருவியது… அவள் முகத்தைப் படித்து விடும் நோக்கத்தோடு! 

காலியாக்கப்பட்ட மஞ்சள் பூசணியின் வயிற்றைப் பிளந்து, எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது இலையுதிர் காலத்து மலர்களும் வண்ண இலைகளும்! மஞ்சள், வெள்ளை, ஆரெஞ்சு, பர்கண்டி, மரூன் என்று பல நிற டாலியாக்கள் பெண்ணைப் பார்த்துச் சிரிக்க… “வாவ் டாக்! சென்டர் பீஸ் செம! த்தாங்க் யூ. லவ்விங் இட்” என்றாள் குதூகலம் குறையாமல். பிரவீன் முகமும் மலர்ந்தது. 

முதல் பார்வையிலேயே எபி கண்டு கொண்டான் மருத்துவனை. பிரவீன் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பும், அவன் ஆனந்தமும் சரியாகப் படவில்லை எபிக்கு! இந்த வீட்டில் மருத்துவனின் நிலையை உணர்த்த விரும்பியிருப்பான் போலும் “விழி, நம்ம வீட்டுக்கு கெஸ்டு வந்திருக்காங்க… கையிலிருக்கிறத அந்த டேபிள்ள வச்சுட்டு, ரூமைக் காட்டு! லக்கேஜ வச்சுட்டு, ஃப்ரெஷ் ஆகிட்டு வரட்டும். நீ குடிக்க என்ன வேணும்ன்னு கேட்டு கவனி… நான் சமையலைப் பார்க்கப் போறேன்” என்று உள்ளே செல்ல, “இந்த ரூம் யூஸ் பண்ணிக்கோங்க டாக்…” என்றவளுக்கு எபி கூறியதில் ஒன்றும் தவறாகத் தோன்றவில்லை. 

ஆனால் ‘நம்ம வீடு’, ‘கெஸ்ட்’ என்ற வார்த்தைகளால், பிரவீன் முகம் சட்டென்று மாறியது. அவனும் அவர்கள் உறவை நிலை நிறுத்த நினைத்திருப்பான் போலும். “அத்தான்! அலர்விழி!” என்றவன் தொனியில் ஆழம் அதிகம். சென்று கொண்டிருந்த எபியின் காதில் விழுந்தது. சிரித்துக் கொண்டான்.

“ஓகே… ஓகே. டாக் இல்ல அத்தான்! போதுமா?! சாப்பாடு அல்மோஸ்ட் ரெடி… அரை மணி நேரத்துல சாப்பிட உக்கார்ந்திடலாம். நீங்க உங்க திங்ஸ்ச உள்ள வச்சுட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க, லெமனேட் குடிக்கலாம். எல்லார்ட்டயும் இன்ட்ரோ கொடுக்கிறேன்.” 

“எனக்கு கூட்டம் ரொம்ப ஆகாது அலர்விழி. நிறையப் பேர் இருக்காங்களோ?” 

“மொத்தம் ஏழே பேரு தான்! கூட்டத்தோட வாழ பழகிக்கோங்க டாக். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரோடயும் இருக்கும் போது அது தனி சந்தோஷம். இவங்க எல்லாருமே ரொம்ப ஜாலி டைப். பழகப் பழக உங்களுக்கும் பிடிக்கும் பாருங்க!” 

இரு பெரு விரல்களையும் உயர்த்திக் காட்டி மெல்லப் புன்னகைத்து, அவன் அறையை நோக்கிச் செல்லவும் அடுக்களை வந்தவள் எபியின் விலாவில் இடித்து, “உங்களுக்கு ஓவர் குசும்பு! யாருனே தெரியாத மாதிரி வெளியில் நிக்கவச்சு கேள்வி கேக்கறீங்க? இது தான் ஃப்ரெண்டு ஆகற லட்சணமா?” எனவும்,

“நானும் அவனும் ஃப்ரெண்ட்ஸா? ஹ ஹ ஹா… நல்ல ஜோக்! அவனுக்கு என்னைப் பார்த்ததும் பழைய நியாபகம் வந்திடுச்சு போல, ஜெர்க் ஆகி ஒரு கேவலமான லுக் விட்டான் பாரேன்… காண்டாகிட்டேன்! நான் ஒண்ணும் தப்பா கேக்கல டி. பூவும் கையுமா நிக்கவும் ‘டெலிவரியா’ன்னு கேட்டேன்! சிரிச்சு கிட்டே தான் கேட்டேன், அவன் தான் என்னை மொறச்சுப் பாத்தான்!”

“என்னங்க அவர் நம்மள விட வயசுல ரொம்பப் பெரியவர். கொஞ்சம் மரியாதை…” அவள் முடிக்கும் முன் இவன் பார்வையில் முறைப்பு ஏறியிருக்க, எழுந்த கோபத்தை உள்ளுக்குள் விழுங்கி, கண்களை இறுக மூடித் திறந்தவன், “அவனுக்காக எங்கிட்ட வக்காலத்து வாங்கிறது இது தான் கடைசியா இருக்கட்டும் விழி.” என்றவன் நடுக் கூடம் சென்றுவிட, இவளுக்குத் தான் ‘கண்ணைக் கட்டுதே! ஆரம்பமே இப்படியா…’ என்றிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top